புற்றுநோய் பிரிவுக்கான கட்டிடத்தை நிர்மாணிக்க புரிந்துணர்வு உடன்படிக்கை காலி, கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கான பத்து மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்கிழமை (05) கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கான பத்து மாடி கட்டிடம் நிர்மாணிப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் கலர்ஸ் ஒப் கரேஜ் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நிர்மாண வேலைகளுக்கான ஆள்பலம் இலங்கை இராணுவத்தினால் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி.மஹிபால, மஹேல ஜயவர்தன மற்றும் டயான் கோமஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கொஸ்தா, சட்ட ஆலோசகர் எயார் கொமடோர் சுரேகா டயஸ் உட்பட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், ஆழுர் மற்றும் ஊழுஊ அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.