பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக ஊழல் மோசடி நிறைந்த ஒருவரை நியமித்துள்ளமையானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது என ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவில் ஆலோசகரான வி.சகாதேவன அண்மையில் பனை அபிவிருத்திச்சபை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.எனினும் டக்ளஸ் தேவானந்தாவுடன் முரண்பட்ட நிலையில் கட்சியிலிருந்து வெளியேறிய நிலையிலேயே சகாதேவனிற்கு புதியபதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க ஊழலை ஒழிப்போம் ஊழல் வாதிகளுக்கு தமது அரசில் எந்தவொரு இடத்திலும் பதவி நிலை வழங்கப்படாது என கருத்தை முன்வைத்தே ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் தனியார் நிறுவனங்களில் பதவிநிலை வகித்து பல்வேறு வகைகளில் பல கோடிகளை ஊழல் மோசடிகளை செய்தவர் என கூறப்படுகின்றது.
அந்தவகையில் ஒரு மோசடி மிக்க நபரை பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமித்தமையானது ஜனாதிபதி அனுரவின் கருத்தை அல்லது அவரது நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன் அவருக்கு வாக்களித்த மக்களையும் விசனமடைய செய்துள்ளதெனவும் சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.