அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தொடங்கியது வாக்குப்பதிவு - சமீபத்திய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

[இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப் படுகிறது.]

இன்று (நவம்பர் 5) அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. அமெரிக்கர்களில், 8.1 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏற்கெனவே வாக்களித்துள்ளனர். ஆனால் இன்னும் ஏராளமான மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஓஹையோ, மேற்கு விர்ஜீனியா மற்றும் வட கரோலினாவில் இந்த முறை அதிக வாக்குப் பதிவு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 11 அமெரிக்க மாகாணங்களில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

முடிவுகளைத் தீர்மானிக்கும் மாகாணங்களில் ஒன்றான வட கரோலினாவில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. சமீபத்திய ஹெலென் சூறாவளியால் இந்த மாகாணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தச் சூறாவளிக்குப் பலியானோரின் மொத்த எண்ணிக்கையில் பாதிப் பேர் வட கரோலினாவை சேர்ந்தவர்கள்.

கடந்த 2020இல், டொனால்ட் டிரம்ப் 2 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றார். 2022இல், அமெரிக்காவில் வாக்களிக்க சுமார் 16.1 கோடி மக்கள் பதிவு செய்திருந்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடிய மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் நடந்த ஒரு பேரணியில் வாக்காளர்களுக்கான தனது இறுதி பிரசார உரையை வழங்கினார் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ். தனது பிரசாரத்தை ‘ஆற்றல், நம்பிக்கை, மகிழ்ச்சியுடன்’ முடிக்க விரும்புவதாக அவர் கூறினார்.

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முடிவுகளைத் தீர்மானிக்க வல்ல மாகாணங்களில் மற்றொன்றான மிச்சிகனில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டார். அங்கு உரையாற்றியபோது, தனது எதிரியை (கமலா ஹாரிஸ்) ‘தீவிர இடதுசாரி பைத்தியம்’ என்று குற்றம் சாட்டினார்.

கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகிப்பது யார்?

கமலா ஹாரிஸ் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் பந்தயத்தில் நுழைந்ததில் இருந்து தேசிய கருத்துகணிப்புச் சராசரியில் டிரம்பை விட சிறிய அளவில் முன்னிலை வகிக்கிறார். மேலும் அவர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இரண்டு வேட்பாளர்களின் சமீபத்திய தேசியக் கருத்துகணிப்புச் சராசரிகள் கீழே காட்டப்பட்டுள்ளன. புள்ளிகள், அருகிலுள்ள முழு எண்ணுக்குத் திருத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தொடங்கியது வாக்குப்பதிவு - சமீபத்திய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், இந்தத் தேர்தலில், அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் தோல்வி அடைவதற்கும் கூட வாய்ப்பு உள்ளது.

ஏன்?

ஏனென்றால், அமெரிக்காவில் அதிபர் என்பவர் நேரடியாக வாக்காளர்களால் (பொது மக்களால்) தேர்வு செய்யப்படுவதில்லை. மாறாக ‘தேர்வாளர் குழு’ (Electoral college) என்ற குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

யாருக்கு வெற்றி என்பதை மக்களின் வாக்குகள் நேரடியாகத் தீர்மானிக்காது. இந்த வாக்குப்பதிவு, தேசிய அளவிலான போட்டி என்பதற்குப் பதிலாக மாகாண அளவிலான போட்டியாக இருக்கும்.

ஒரு வேட்பாளர் அதிபர் பதவிக்கு வெற்றிபெற, பெரும்பான்மையான தேர்வாளர் குழு வாக்குகளைப் (270 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளை) பெற வேண்டும். வெற்றி பெற்றவரின் துணை அதிபர் வேட்பாளரே, துணை அதிபராக பொறுப்பேற்றுக் கொள்வார்.

கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தின் முதல் சில வாரங்களில் தனது கருத்துகணிப்பு எண்ணிக்கையில் சற்று ஏற்றத்தைக் கண்டார். ஆகஸ்ட் மாத இறுதியில் சுமார் நான்கு சதவீத புள்ளிகளில் முன்னிலை பெற்றார்.

செப்டம்பர் 10ஆம் தேதி இரு வேட்பாளர்களுக்கிடையில் நடந்த அதிபர் தேர்தலுக்கான விவாதத்தை சுமார் 7 கோடி மக்கள் பார்வையிட்டனர். செப்டம்பர் மாதம் வரை இந்த எண்ணிக்கை நிலையானதாக இருந்தன.

கடந்த சில நாட்களாக அவர்களின் புள்ளிவிவரங்களின் இடைவெளி மிகவும் நெருணக்கமானதாக இருக்கிறது. கீழே உள்ள கருத்துக்கணிப்பு டிராக்கர் விளக்கப்படம், ஒவ்வொரு வேட்பாளருக்கும் கருத்துக்கணிப்பின் சராசரிகளைக் காட்டும் போக்குக் கோடுகளுடன் தனிப்பட்ட வாக்கெடுப்பு முடிவுகளைக் காட்டும் புள்ளிகள் இடம்பெற்றுள்ளன.

கமலா ஹாரிஸின் வெற்றிக்காக சிறப்பு பூஜை

கமலா ஹாரிஸின் வெற்றிக்காக, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் இன்று அதிகாலை (நவம்பர் 5) சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டதாக பிபிசி செய்தியாளர் சாரதா தெரிவித்தார்.

கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தாவின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகே இருக்கும் துளசேந்திரபுரத்தில், தர்ம சாஸ்தா ஆலயத்தில் இந்தச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தர்மா சாஸ்தா கோவிலின் முன், ஊர் மக்கள் சார்பாக கமலா ஹாரிஸின் புகைப்படம் கொண்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது. காலையில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி கோவிலில் பால் அபிஷேகம் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு துளசேந்திரபுரம் கவுன்சிலர் அருள்மொழி சுதாகரின் குடும்பத்தினர் சார்பாக அர்ச்சனை நடைபெற்றது.

துளசேந்திரபுரத்தில் சிறப்பு பூஜைகள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கமலா ஹாரிஸின் வெற்றிக்காக பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன

இந்தச் சிறப்பு பூஜையின்போது, கமலா ஹாரிஸுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில், சென்னையில் வாழும் அமெரிக்கர்கள் இருவரும், பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒருவரும் பங்கேற்றனர். அமெரிக்காவில் சியாட்டில் பகுதியை சேர்ந்த டெவோனி எவான்ஸ், இந்தத் தேர்தலில்தான் முன்கூட்டியே வாக்களித்துவிட்டு வந்ததாக பிபிசி தமிழ் செய்தியாளர் சாரதாவிடம் பேசும்போது தெரிவித்தார்.

“இந்தத் தேர்தல் மிகவும் கடினமாக இருந்தது. நான் வாக்களித்து விட்டேன். எங்கள் வேலை முடிந்தது. இப்போது கமலாவின் இந்த ஊருக்கு வருவது மிகுந்த மகிழ்ச்சியையும், அமைதியையும் தருகிறது” என்றார். அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார்.

‘கமலா ஃப்ரீக்கிங் ஹாரிஸ்’ (Kamala Freaking Harris) என்று எழுதிய டி-ஷர்டுகளை அவரும் அவரது நண்பர்கள் இருவரும் அணிந்திருந்தனர்.

கமலா ஹாரிஸின் குடும்பத்தினர் சார்பாக கோவிலுக்கு இந்த முறை யாரும் வரவில்லை என்றாலும், ஊர் மக்கள் சார்பாக கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக சிறப்பு பூஜை நடத்தியதாக துளசேந்திரபுரம் கவுன்சிலர் அருள்மொழி சுதாகர் தெரிவித்தார்.

அவர், “கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவது ஊர் மக்கள் அனைவருக்கும் முக்கியமானது. நாங்கள் அனைவரும் அவரது வெற்றிக்காக மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

கமலா ஹாரிஸ், துளசேந்திரபுரம்

படக்குறிப்பு, டெவோனி எவான்ஸ் (இடதுபுறம் இருப்பவர்) இந்தத் தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்துவிட்டு வந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்

ஏழு முக்கிய மாகாணங்களில் முந்துவது யார்?

அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகியவை வெள்ளை மாளிகை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் முக்கியமான மாகாணங்கள்.

இரு கட்சிகளின் பிரசாரக் குழுக்களும் இந்த மாகாணங்களில் பிரசாரங்களை வேகப்படுத்தின. இந்த மாகாணங்களில் முந்துவது யார்?

இறுதி பிரசார உரையில் கமலா ஹாரிஸ் கூறியது என்ன?

இறுதி பிரசார உரையில் கமலா ஹாரிஸ் கூறியது என்ன?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது இறுதி பிரசார உரையை பென்சில்வேனியா மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான பிலடெல்பியாவில் நிகழ்த்தியுள்ளார்.

‘நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும், அனைத்து தரப்பு மக்களையும் தனது பிரசாரம் ஒன்றிணைத்தது’ என்று பல வாரங்கள் தொடர்ந்த தனது பிரசார பயணத்தை அவர் விவரித்திருந்தார். அத்தகைய பிரசார பயணத்தின் முடிவாக தனது உரையை அவர் வழங்கியுள்ளார்.

“நாம் ஏதோவொன்றைப் பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம், எதற்கும் எதிராக அல்ல. நமது பிரசாரத்தை எவ்வாறு தொடங்கினோமோ, அதே உற்சாகத்துடனும், நம்பிக்கை உணர்வுடனும், மகிழ்ச்சியுடனும் முடிக்கிறோம்.” என்று கமலா ஹாரிஸ் கூறினார்.

இளம் மற்றும் புதிய வாக்காளர்களுக்கு அவர் ஒரு வழக்கமான வேண்டுகோளை விடுத்தார். “குறிப்பாக உங்களிடம் நான் சொல்கிறேன், நான் உங்கள் சக்தியைப் பார்க்கிறேன், உங்களைப் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.” என்றார்.

இன்றைய தேர்தலில் அவர் வெற்றி பெற வேண்டுமானால் அவருக்கு அதிக எண்ணிக்கையில் ஆதரவளிக்க இளம் வாக்காளர்கள் தேவை என்பதை துணை அதிபர் கமலா ஹாரிஸ் நன்றாகவே அறிவார்.

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “நீங்கள் கமலாவுக்கு வாக்களித்தால், இன்னும் நான்கு ஆண்டுகள் துன்பம், தோல்வி மற்றும் பேரழிவு ஏற்படும்” என்று டிரம்ப் எச்சரித்தார்

இறுதி பிரசார உரையில் டிரம்ப் கூறியது என்ன?

டிரம்ப், மிச்சிகன் மாநிலத்தின் கிராண்ட் ராபிட்ஸில் உள்ள வான் ஆண்டெல் அரங்கத்தில், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது இறுதி பிரசார உரையை வழங்கினார். தனது பிரசார பயணத்தின் முக்கிய கருப்பொருளாக இருந்த பொருளாதாரம் மற்றும் குடியேற்றம் குறித்தே மீண்டும் டிரம்ப் வலியுறுத்தினார்.

ஒரு சட்ட அமலாக்க அதிகாரியை அல்லது ஒரு அமெரிக்க குடிமகனைக் கொல்லும் எந்தவொரு புலம்பெயர்ந்தவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது உட்பட அவரது சில தேர்தல் வாக்குறுதிகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

முன்னாள் அதிபர் டிரம்ப், தனது உரையின் பெரும்பகுதியை கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனை விமர்சிப்பதிலும், கடந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் செய்ததைக் குறித்து விமர்சிப்பதிலும் செலவிட்டார். ‘அமெரிக்கா எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்னையையும் சரிசெய்வது’ என்ற தனது லட்சியத்தையும் அவர் மேற்கோள் காட்டி பேசினார்.

“விரைவில் ஒரு சிறந்த தேர்தல் முடிவை நாம் பெறப் போகிறோம் என்று நினைக்கிறேன். மிச்சிகனில் நாம் வெல்லப் போகிறோம் என்று நினைக்கிறேன்.” என்று அவர் கூடியிருந்த ஆதரவாளர்களிடம் கூறினார்.

பேரணியின் முடிவில், டிரம்பின் பிள்ளைகள் அவருடன் மேடையில் தோன்றினர். மக்கள் அனைவரும் டிரம்புக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

“இறுதியில், உங்கள் வாக்குகளால் நாங்கள் கமலா ஹாரிஸை விரட்டப் போகிறோம், அமெரிக்காவைக் காப்பாற்றப் போகிறோம். நாங்கள் வரிகளையும் பணவீக்கத்தையும் குறைப்போம், விலைவாசியைக் குறைப்போம், உங்கள் ஊதியங்களை உயர்த்துவோம். ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை அமெரிக்காவிற்கும் மிச்சிகனுக்கும் மீண்டும் கொண்டு வருவோம். அதில் பெரும்பாலானவை எனக்கு பிடித்த வார்த்தையைப் பயன்படுத்தும் – ‘வரி’” என்று டிரம்ப் உற்சாகமாக கூறினார்.

ரஷ்ய அதிபர் புதினுடன் டொனால்டு டிரம்ப் (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் புதினுடன் டொனால்டு டிரம்ப் (கோப்புப் படம்)

‘அமெரிக்க தேர்தலுக்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல்’

அமெரிக்கப் புலனாய்வுச் சமூகம் (The US intelligence community) திங்களன்று வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் “அமெரிக்காவின் தேர்தல் ஒருமைப்பாட்டிற்கு ரஷ்யா மிகத் தீவிரமான ஒரு அச்சுறுத்தல்,” என்று விவரித்துள்ளது.

இது தேசியப் புலனாய்வு இயக்குநர் அலுவலகம் (ODNI), ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ – FBI) மற்றும் சைபர் செக்யூரிட்டி மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் (CISA) ஆகியவற்றால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை.

“குறிப்பாக ரஷ்யாவுடன் தொடர்புடையவர்கள், தேர்தலின் சட்டபூர்வமான தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும், தேர்தல் செயல்முறை குறித்து வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கும், அரசியல் வேறுபாடுகள் காரணமாக அமெரிக்கர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என பரப்புவதற்கும், வீடியோக்கள் மற்றும் போலி கட்டுரைகளை உருவாக்குவதாக,” புலனாய்வு சமூகம் கூறுகிறது.

முன்கூட்டியே வாக்களிக்கும் முறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்கூட்டியே வாக்களிக்கும் முறைபடி (Early voting) பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை 81,379,684

முன்கூட்டியே வாக்களித்த 8.1 கோடி அமெரிக்கர்கள்

அமெரிக்காவின் முன்கூட்டியே வாக்களிக்கும் முறைபடி (Early voting) பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 8.1 கோடியைத் தாண்டியுள்ளது என்று புளோரிடா பல்கலைக்கழக தேர்தல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

இது மொத்த முன்கூட்டியே வாக்களிக்கும் முறைபடி (Early voting) பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை 81,379,684 என்று கூறுகிறது.

இதில், 44,402,375 பேர் (4.4 கோடி பேர்) நேரில் வாக்களித்துள்ளனர். 36,977,311 தபால் வாக்குகள் திருப்பி அனுப்பப்பட்டன

கடந்த அதிபர் தேர்தலில் (2020), கொரோனா பெருந்தொற்று பலரை நெரிசலான வாக்குச் சாவடிகளிலிருந்து விலக்கி வைத்தபோது, இந்த ஆண்டின் முன்கூட்டியே பதிவான வாக்குகள் என்பது 2020-இல் பதிவான 10.15 கோடி வாக்குகளை விட மிகவும் குறைவு. இருப்பினும், 2016 (4.72 கோடி) அல்லது 2012ஆம் ஆண்டில் (4.62 கோடி) முன்கூட்டியே பதிவான வாக்குகளை (Early voting) விட அதிகமாகும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.