இரட்டை வேடமிட்டு மக்களை ஏமாற்றும் ஜனாதிபதி அநுர – நிமல் லான்சா

by adminDev2

இரட்டை வேடமிட்டு மக்களை ஏமாற்றும் ஜனாதிபதி அநுர – நிமல் லான்சா  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரட்டை வேடமிட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார். தேர்தல் மேடைகளின் பேசும் அநுர ஒருவராகவும், ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து பேசும் அநுர வேறொருவராகவும் இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.

கட்டான பிரதேசத்தில் திங்கட்கிழமை (4) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பலமான எதிர்க்கட்சியை கட்டியெழுப்பும் நோக்கில் நாம் செயற்படுகின்றோம். வெற்றி பெற்றவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அன்றி, தோல்வியடைந்த கட்சிக்காக இவ்வளவு மக்கள் கட்டான பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளமை வழமைக்கு மாறானது. தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவார்கள் என்று எண்ணிவிடக் கூடாது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியை எதிர்பார்க்க முடியாது.

எழுபத்தைந்து வருடங்களின் சாபம், அமைச்சர்கள் கொள்ளையடித்ததாகவும், மோசடி செய்ததாகவும், ஊழல் செய்தாகவும் அநுரகுமார கூறியதை மக்கள் நம்பினர். ஆனால் தற்போது அந்த நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை ஜனாதிபதி அநுர நன்றாக அறிவார்.

தேர்தல் மேடைகளில் பேசிய அநுரவுக்கும், ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து கொண்டு பேசும் அநுரவுக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுகிறது. தற்போது அவர் இரட்டை வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இதனால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். அன்று ஊழல் மோசடிகளை பிரதான பேசு பொருளாகக் கொண்டிருந்தவர் இன்று அவை தொடர்பில் எதுவும் பேசுவதில்லை.

ஜனாதிபதி கதிரையில் இருக்கும் போதே அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து முன்னாள் ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றார். மேடைக்கு செல்லும் போது, சர்வதேச நாணய நிதியம் ஒப்பந்தத்தை திருத்துவதாகக் கூறும் அவர், நடைமுறையில் அதை செயற்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்றார்.

தொடர்புடைய செய்திகள்