இதய நோய், பார்கின்சன் நோயை முன்கூட்டியே கண்டறிய ஸ்மார்ட் வாட்ச்கள் உதவுமா?
- எழுதியவர், டேவிட் காக்ஸ்
- பதவி, பிபிசி
நமது உடல் இயக்கம் குறித்து ஏராளமான தரவுகளை ஸ்மார்ட் வாட்ச்கள் சேகரிக்கின்றன. தற்போது இந்தக் கருவியை நம்மில் பலரும் பயன்படுத்துகிறோம்.
ஸ்விட்சர்லாந்தின் சி.ஹெச்.யூ.வி பல்கலைக்கழக மருத்துவமனையில் (CHUV University Hospital) தலைமை மயக்கவியல் நிபுணராக இருக்கும் பேட்ரிக் ஸ்காய்டெக்கர், மயக்கமருந்து அளித்து நீண்ட நேரம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையின் அனைத்து விளைவுகள் குறித்தும் அறிந்திருக்கிறார்.
அதிகப்படியான ரத்தப்போக்கு நோயாளியை அதிர்ச்சியில் தள்ளும். இதனால், திடீரென மோசமான அளவில் ரத்த ஓட்டம் குறையும். மேலும், ஆழ்ந்த மயக்கம் காரணமாக நோயாளிகளுக்குத் தீவிரமான நுரையீரல் பிரச்னைகளும் ஏற்படலாம். இது, அறுவை சிகிச்சை முடிந்து முதல் ஆறு நாட்களுக்குள் நடக்கும் மொத்த இறப்புகளில் கால் பங்கு இறப்புகளுக்குக் காரணமாக அமைகிறது.
இந்தப் பிரச்னை, நோயாளிகளின் உடலியலில் உள்ள பலவீனங்களால் ஏற்படுகிறது. இந்த பலவீனத்தைக் கண்டறிய இயலாது. ஆனால், இத்தகைய முக்கியமான சிகிச்சைகளுக்கு முன்பாக இதனை விரைவாகவும், குறைவான செலவிலும் மருத்துவமனைகளால் கண்டறிய முடிந்தால் எப்படி இருக்கும்?
அனைத்து உடல் தரவுகளையும் தரும் ஸ்மார்ட் வாட்ச்கள்
பேட்ரிக் ஸ்காய்டெக்கரும் அவருடைய சகாக்களும், அறுவைசிகிச்சைக்குப் பல வாரங்களுக்கு முன்பாகவே நோயாளிகளுக்கு மசிமோ டபிள்யூ1 (Masimo W1) எனும் ‘ஸ்மார்ட் வாட்சைப்’ (smart watch) பொருத்தி சோதனை செய்து வருகின்றனர். அந்த ஸ்மார்ட் வாட்ச் சேகரிக்கும் தரவுகளை வைத்து நோயாளியின் உடல்நலம் குறித்து மதிப்பீடு செய்கின்றனர்.
இந்த ஸ்மார்ட் வாட்ச் இதயத் துடிப்பு குறித்த தொடர் தரவுகள், சுவாசத்தின் அளவு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, மற்றும் உடலில் நீரின் அளவு (hydration) ஆகியவற்றை மருத்துவ தரத்திலான துல்லியத்துடன் தருகிறது. இந்தத் தரவுகள் ஒரு நோயாளியின் ‘டிஜிட்டல் இரட்டையர்’ எனும் விதத்தில் ஒத்த அளவாக உள்ளதாகவும் அவை உயிர்காக்க உதவும் என்றும் பேட்ரிக் ஸ்காய்டெக்கர் நம்புகிறார்.
“அறுவை சிகிச்சைக்கு முன்பாகவும் சிகிச்சைக்குப் பின்பாகவும் ஏற்படக்கூடிய விளைவுகளை முன்கூட்டியே கண்டுபிடிக்கவும் அதன் மூலம் அவற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தத் தரவுகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் அவர்.
வளர்ந்துவரும் ஸ்மார்ட் வாட்ச் சந்தை, (உலகளவில் 2027-ஆம் ஆண்டுக்குள் 40 கோடி ஸ்மார்ட் வாட்ச்கள் விற்கப்படலாம் என சில ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்) உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்கும் புதிய யுகத்தை எப்படித் திறந்துவிட்டுள்ளது என்பதற்கான ஒரு உதாரணமாகத் திகழ்கிறது. மசிமோ, ஆப்பிள், சாம்சங், வித்திங்ஸ் (Withings), ஃபிட்பிட் (FitBit) மற்றும் போலார் போன்ற நிறுவனங்கள், உறக்கம், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பில் ஏற்படும் மாறுபாடுகள், மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு நிலை (இதயம் மற்றும் நுரையீரல் எப்படிச் செயல்படுகின்றன என்பதைக் குறிக்கும் அளவு) ஆகியவற்றின் நிகழ்நேர தரவுகளை அளிக்கும் விதத்திலான ஸ்மார்ட் வாட்ச்களை வடிவமைத்துள்ளன.
இதய நோய்களை முன்கூட்டியே தெரிவிக்கும் ஸ்மார்ட் வாட்ச்கள்
லண்டனில் உள்ள மயோ க்ளீனிக் ஹெல்த்கேர் மருத்துவமனையில் இதய மருத்துவரான கோசியா வமில், சாத்தியமான உடல்நலப் பிரச்னைகள் குறித்து மருத்துவர்களுக்கு உணர்த்துவதிலும், அவர்கள் அதுதொடர்பாக விரைவாகச் செயலாற்றவும் இந்தத் தகவல்கள் ஏற்கெனவே உதவிவருவதாகக் கூறுகிறார்.
“அதிகமான நோயாளிகள் தங்கள் உடல்நலம் தொடர்பான தரவுகளைப் பெற்று, அதனைப் பிரதியாக எடுத்து, அந்த முடிவுகளை எங்களிடம் கொண்டு வருகின்றனர்,” என்கிறார் வமில். “அதை வைத்து மேலும் பரிசோதித்து, உடலில் ஏற்படும் அசாதாரணமான பிரச்னைகளை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்,” என்கிறார் அவர்.
இதுவரை பெரும்பாலான முக்கியமான ஸ்மார்ட் வாட்ச் செயலிகள் இதய நோய் தொடர்பானவையே. ஸ்மார்ட் வாட்சுடன் அமையப்பெற்ற இ.சி.ஜி அளவீடுகள், (இதயத்தின் மின்னணுச் செயல்பாடு குறித்த அளவீடுகள்) ஆரோக்கியமான 50-70 வயதுக்குட்பட்டவர்களில் மிகையான இதயத்துடிப்புகள் குறித்த நம்பகத்தன்மையான தரவுகளை வழங்குவதாக இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்தது.
இதயத்தில் வழக்கத்திற்கு மாறான மற்றும் எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல் கட்டுப்படுத்த முடியாத துடிப்புகளை ஏற்படுத்தும் ஏட்ரியல் ஃபைப்ரில்லேஷன் (atrial fibrillation) போன்ற தீவிரமான பிரச்னைகளுக்கான எச்சரிக்கை அறிகுறியாக இது இருக்கலாம்.
செயற்கை நுண்ணறிவின் பங்கு
மற்றொரு ஆய்வில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அல்காரிதம்கள் (AI algorithms), ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சின் இ.சி.ஜி அளவீடுகளைப் பயன்படுத்தி இதயம் துடிக்கும் ஒவ்வொரு முறையும் அது வெளியிடும் ரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதை (low ejection fraction) 88% துல்லியத்தன்மையுடன் கண்டறிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வித இதய நோய்களும் உள்ள நோயாளிகளிடையே இத்தகைய ஸ்மார்ட் வாட்ச் தரவுகளும் அதுகுறித்து அறிந்துகொள்ளும் தளங்களும் புரட்சியை ஏற்படுத்துபவையாக நிரூபித்துவருகின்றன.
“இதயவியல் மருத்துவமனைகளில் படபடப்பாக இருப்பதாகக் கூறும் பல நோயாளிகளைப் பார்க்கிறோம். நாங்கள் அவர்களின் மார்புப்பகுதியில் டேப்களை பொருத்தி 24 மணிநேரமும் இ.சி.ஜி-யைப் பதிவுசெய்கிறோம்,” என்கிறார் வமில்.
“பெரும்பாலும் அந்த 24 மணிநேரத்தில் நோயாளிகளிடையே படபடப்பைக் கண்டறிய முடிவதில்லை. ஆனால், ஸ்மார்ட் வாட்ச்கள் மூலம் நோயாளிகளுக்கு எப்போதெல்லாம் அறிகுறி தோன்றுகிறதோ அவர்களது வாட்சில் பொத்தானை அழுத்தி அவர்களால் இ.சி.ஜி-யை எடுத்து, எங்களிடம் காட்ட முடியும்,” என்கிறார் அவர்.
நோய்த்தடுப்புச் சிகிச்சையில் இது ஏற்கெனவே வழிகாட்டியாக உள்ளதாகவும் இதன்மூலம் வழக்கத்திற்கு மாறான இதயத்துடிப்பு அறிகுறிகளைக் கண்டறிந்து பக்கவாதத்தைத் தடுக்கும் வகையிலான ரத்த உறைவுத் தடுப்பு மருந்துகளைப் (blood thinner tablets) பரிந்துரைக்க முடியும் எனவும் வமில் கூறுகிறார். இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி டைப் 2 நீரிழிவு நோயாளிகளிடையே ஏற்படும் இதய பிரச்னைகளையும் தடுக்க முடியுமா என்பதை கண்டறிய ஆர்வமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
“நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஏன் குறைவான காலம் வாழ்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன,” என்கிறார் வமில். “எதிர்காலத்தில் இந்தத் தரவுகள் நோயாளிகளிடையே ஆரம்பநிலை அறிகுறிகள் குறித்து எச்சரித்து, அதன் மூலம் இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தை முன்கூட்டியே கண்டறியப் பயன்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்கிறார் அவர்.
நரம்பியல் பிரச்னைகளைக் கண்டறிதல்
ஆனால், இதயத்தைக் கண்காணிப்பதைத் தாண்டி ஸ்மார்ட் வாட்ச் செயலிகளை, வேறு பல விஷயங்களுக்காகவும் பயன்படுத்தலாம். 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ஒரு வாரத்திற்கு ஸ்மார்ட் வாட்ச் அளித்து அதன் தரவுகளை ஆராய்ந்து ஆய்வறிக்கை வெளியிட்டனர்.
அதன் முடிவுகள், பார்கின்சன் நோயின் அறிகுறிகள் கொண்டவர்களை, அவர்கள் மருத்துவ ரீதியாக பரிசோதிப்பதற்கு ஏழு ஆண்டுகள் முன்கூட்டியே அடையாளம் காண்பது சாத்தியம் என்பதைக் காட்டின. அவர்களது நடையில் ஏற்படும் மிக நுட்பமான அசாதாரணங்கள், ஸ்மார்ட் வாட்ச் மூலம் இயக்க சென்சார்கள் வாயிலாகக் கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வை வழிநடத்திய சிந்தியா சாண்டர், இந்த அறிகுறிகளைக் குறிப்பாகக் கண்டறிந்து, ஸ்மார்ட் வாட்ச் மூலம் உறக்கம் போன்றவற்றின் அளவீடுகளை அறிந்து இதனைக் கூறுவது சாத்தியமானது என்கிறார். பார்கின்சன் நோய் உள்ளவர்களில் தூக்கம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன.
“இயக்கம் தொடர்பான நுட்பமான மாற்றங்கள் நீண்ட காலத்திற்குப் பின்னரே தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்,” என்கிறார் சாண்டர். “லேசான உடல் செயல்பாடுகளின்போது இயக்கம் மெதுவாதல் தான் நாங்கள் பெரும்பாலும் முன்கூட்டியே கண்டறியும் அறிகுறி. இது நோயாளிகளேளாலேயே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நுட்பமானது,” என்கிறார் அவர்.
இத்தரவுகள் நோயாளிகள் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள விரைவில் பயன்படுத்தப்படலாம் என சாண்டர் நம்புகிறார். குறிப்பிடத்தகுந்த அளவில் மூளை பாதிக்கப்பட்ட பின்னர் இந்நோய் கண்டுபிடிக்கப்படுவதாலேயே, திறன் வாய்ந்த சிகிச்சைகள் கூட பலனளிக்காமல் போவதாக ஒரு கருத்து உள்ளது. ஆரம்பகட்டத்திலேயே இதை கண்டறியும்போது பாதிப்புகளை மெதுவாக்கவோ அல்லது அந்நோயிலிருந்து குணமடைவதை எளிதாக்கிறது. “ஸ்மார்ட் வாட்ச் தரவுகள் மூலம் நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிய முடியும். இதன்மூலம், நரம்பியல் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்,” என்கிறார் அவர்.
வலிப்பு நோய் உள்ளிட்ட நாள்பட்ட பிரச்னைகள் உள்ள நோயாளிகளிடையே, அவர்களுக்கு வலிப்பு ஏற்பட போவதாக முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதற்கும் விரைவில் ஸ்மார்ட் வாட்ச் தரவுகளைப் பயன்படுத்தப்படலாம் என நம்பப்படுகின்றது. வலிப்பு நோய் பாதிப்பு உள்ளவர்கள் வலிப்பு ஏற்பட்டு கீழே விழுதல் மற்றும் மோசமான விபத்துகளுக்கு ஆட்படுதல் ஆகியவை ஆபத்தானதாக கருதப்படுகின்றன.
“எப்போது வலிப்பு ஏற்படும் என்பதைக் கண்டறிவது மிகக் கடினமானது என்பது, வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னைகளுள் ஒன்று,” என குயின்ஸ்லாந்து மூளை சிகிச்சை மையத்தில் ஐலீன் மெக்கோனிகல் கூறுகிறார். “எனினும், வலிப்பை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம் இன்னும் முன்னேறவில்லை,” என்கிறார் அவர்.
ஆய்வுக்காக வடிவமைக்கப்பட்ட எம்பார்டிகா ஸ்மார்ட் வாட்சின் மாதிரி சாதனம், வலிப்பை முன்கூட்டியே கணிக்க உதவுமா என்பதைக் கண்டறிவதில் ஆர்வம் கொள்கிறார் ஐலீன். நடைபெற்றுவரும் ஆய்வு ஒன்றில், அவர் இதன் தரவுகளை செயற்கை நுண்ணறிவு அல்காரிதம்களுடன் பொருத்திப் பார்க்கிறார். இதயத் துடிப்பில் மாறுபாடுகள், தோலின் வெப்பநிலை, உடல் இயக்கங்கள் மற்றும் நரம்பியல் அமைப்புகளில் ஏற்படும் மாறுபாடுகளைப் பிரதிபலிக்கும் வகையிலான, வியர்வையால் ஏற்படும் மின்னணு கடத்துத் திறனில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இவற்றில் அடங்கும். இவற்றை ஸ்மார்ட் வாட்சால் அளவிட முடியும்.
ஸ்மார்ட் வாட்ச்களை முழுமையாக நம்பலாமா?
“வலிப்பு ஏற்படுவதற்கு முன்பானச் சில மணிநேர அளவீடுகளைக் கண்டறிவதுதான் எங்கள் இலக்கு,” என்கிறார் மெக்கோனிகல். “வலிப்புகள் எப்போது தோன்றும் என்பதை அதுகுறித்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் முன்கூட்டியே கண்டறிய வேண்டும். இதன்மூலம், மருந்துகளின் அளவு, கீழே விழுதல், வலிப்புடன் தொடர்பான காயங்களிலிருந்து தவிர்க்கும் வகையில் தினசரிச் செயல்பாடுகளைத் தழுவிகொள்ள முடியும்,” என்று குறிப்பிடுகிறார் அவர்.
ஆனால், இதில் தவறான முடிவுகளும் ஏற்படலாம் என மருத்துவர்கள் வேறுபட்ட கருத்தையும் முன்வைக்கின்றனர். ஸ்மார்ட் வாட்ச்களை அதிகப்படியாக பயன்படுத்துவது, நோயாளிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும், சுகாதார வளங்களை மேலும் வடிகட்டக்கூடும் என்ற கவலைகளும் எழுந்துள்ளன.
ஸ்மார்ட் வாட்ச்களின் எதிர்காலம் என்ன?
“தொழில்நுட்பம் பல வழிகளில் மருத்துவத்திற்கு உதவியாக உள்ளது,” என்கிறார் லண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையின் ஆலோசனை நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணர் ஜெரிமி ஸ்மெல்ட்.
“பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிவது அதில் ஒன்று. அதன்மூலம் உயிர்களைக் காப்பாற்ற முடியும். ஸ்மார்ட் வாட்ச்கள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தவறாக நோய்களைக் கண்டறிவது நோயாளிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும். இதனால், தேவையற்ற சமயங்களில் அவர்கள் பொது மருத்துவர்களை நாடுவார்கள்,” என்கிறார் அவர்.
“ஆனால் இதய நோய் உள்ளவர்களுக்கு இது தேவையானதாக உள்ளது, இதன்மூலம் உரிய நேரத்தில் பிரச்னைகளைக் கண்டறிய முடியும்,” என்கிறார் அவர்.
ஸ்மார்ட் வாட்ச்கள் இன்னும் அதிநவீனமாகி வருகின்றன. மேலும், மனித உடல் குறித்த இன்னும் அதிகப்படியான தகவல்களை வழங்கும் விதத்திலான ஸ்மார்ட் வாட்ச்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். இதனால், அதன் நோய்த்தடுப்புச் செயல்பாடுகள் இன்னும் அதிகமாகும்.
மசிமோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜோ கியானி, தங்கள் நிறுவனத்தின் அடுத்தகட்ட மேம்பட்ட ஸ்மார்ட் வாட்ச்களில் ஏற்கெனவே கவனம் செலுத்தி வருகிறார். அதாவது, அதன்மூலம், ஆஸ்துமாவைக் கண்டறிவது.
“சுவாசம் சம்பந்தமான அளவீடுகள் இதில் இருக்கும்,” என்கிறார் கியானி.
“சுவாச அளவீடுகள் மூலம், இதயத்துடிப்பு அதிகரிப்பதால் தான் உங்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாக கூற முடியும்,” என்கிறார் அவர்.
“கடந்த 50-60 ஆண்டுகளில், நம் வீடுகளில் தெர்மோமீட்டர் மட்டும்தான் இருக்கும். ஆனால், இனி அவசரச் சிகிச்சைக்குச் செல்லாமலேயே சரியான கவனிப்பைப் பெறுவதற்கு மக்களுக்கு உதவும் பலவித தகவல்களை நம்மிடம் இருக்கும்,” என்கிறார் அவர்.