அமெரிக்காவில் கிரீன் கார்டு, எச்1பி விசாவுக்காக போராடும் இந்தியர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 2023ஆம் ஆண்டில் பத்து லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் கிரீன் கார்டுக்காக வரிசையில் காத்திருந்தனர்
  • எழுதியவர், திவ்யா ஆர்யா
  • பதவி, பிபிசி செய்தியாளர், அமெரிக்காவில் இருந்து

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க கேபிடல் ஹில் கட்டடத்தின் முன் அனுஜ் கிறிஸ்டியன் என்பவர், கையில் ஒரு போஸ்டருடன் தனியாக நிற்கிறார்.

கிரீன் கார்டுக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் வரிசையில் நிற்கிறார்கள். இந்த நிலையை மாற்ற ஏதாவது செய்ய வேண்டுமென்று அனுஜ் நினைக்கிறார்.

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்கவும் வேலை செய்யவும் அவசியமான கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் வேகமாக அதிகரித்துள்ளது. ஆனால் கிரீன் கார்டுகளின் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது.

யு.எஸ்.சி.ஐ.எஸ் (USCIS) எனப்படும் அமெரிக்க குடியேற்ற நிறுவனத்தின் கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டில் பத்து லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் கிரீன் கார்டுக்காக வரிசையில் காத்திருந்தனர்.

கிரீன் கார்டு மற்றும் விசாவுக்காக பல ஆண்டுகள் காத்திருப்பது என்பது, அமெரிக்காவில் படித்து, ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பும் லட்சக்கணக்கான இந்தியர்களின் கனவில் ஒரு பெரிய தடையாக மாறி வருகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அமெரிக்க குடியேற்றக் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்து கேள்விகளை எழுப்புவதன் மூலமும், இந்தியர்களிடையே வெவ்வேறு விசா விருப்பங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலமும் இந்த நிலையை மாற்ற முயலும் அனுஜ் உள்ளிட்ட சில இந்தியர்களை நாங்கள் சந்தித்தோம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியேற்றம் ஒரு முக்கியப் பிரச்னையாக உள்ளது. குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் இருவருமே நாட்டிற்குள் நுழைபவர்கள், குறிப்பாக மெக்சிகன் எல்லை வழியாக நுழைபவர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்று பேசுகின்றனர்.

குடியேற்ற கொள்கைகளில் இந்தியர்களுக்கு எதிராகப் பாகுபாடா?

‘குடியேற்ற கொள்கைகளில் இந்தியர்களுக்கு எதிராக பாகுபாடு’

படக்குறிப்பு, அனுஜ் இப்போது ‘ஃபேர் அமெரிக்கா’ (Fair America) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்

அனுஜ் 15 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தார், ஆனால் இன்னும் எச்1-பி விசாவில்தான் இருக்கிறார். அமெரிக்காவின் குடியேற்ற கொள்கைகள் இந்தியர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

அமெரிக்க குடியேற்ற விதிகளின்படி, ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் 1,40,000 கிரீன் கார்டுகளில் ஒவ்வொரு நாட்டிற்கும் 7 சதவீத ஒதுக்கீடு என்ற வரம்பு உள்ளது.

இத்தகைய சூழ்நிலை, இந்திய மற்றும் சீன தொழில் வல்லுநர்களுக்குப் பாதகமாக உள்ளது. ஏனெனில் மற்ற நாடுகளில் இருந்து வரும் வல்லுநர்களைவிட இவர்களின் எண்ணிக்கை அதிகம்.

“வேலை தொடர்பான குடியேற்ற விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்யும்போது, உங்கள் திறமையைவிட நீங்கள் பிறந்த இடத்திற்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இது பெரும்பாலான அமெரிக்கர்களுக்குத் தெரியாது” என்று அனுஜ் பிபிசியிடம் கூறினார்.

பல்லாண்டுக் காலமாகத் தாங்கள் கிரீன் கார்டுக்காக காத்திருப்பதாகப் பலர் எங்களிடம் தெரிவித்தனர். இது குறித்த கேள்விகளுடன் நாங்கள் யு.எஸ்.சி.ஐ.எஸ் முகமையை அணுகியபோது, அவர்கள் பதிலளிக்கவில்லை.

இந்தப் பிரச்னை மிகப் பெரியது, ஆனால் அதைப் பற்றிப் பேசுவதற்கு மிகச் சிலரே உள்ளனர்.

‘திறமையின் அடிப்படையில் கிரீன் கார்டுகள்’

எச்1பி விசா

பட மூலாதாரம், Getty Images

அனுஜின் கூற்றுப்படி, “இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் பேச பயப்படுகிறார்கள், காரணம் அவர்களே இன்னும் விசாவில்தான் உள்ளனர். எனவே மனதில் வருத்தம் இருந்தாலும், அவர்கள் வெளிப்படையாகப் பேச விரும்பவில்லை.”

அனுஜும் விசாவில்தான் இருக்கிறார், ஆனால் அவர் இதுகுறித்துப் பேச முடிவு செய்தார். அவர் தனது காரை எடுத்துக்கொண்டு, மொத்தமுள்ள 50 அமெரிக்க நாடாளுமன்ற கட்டடங்களுக்கும் சென்று இதே வழியில் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

அவர் அமெரிக்கர்களிடம் பேசி இந்த விவகாரம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பல இடங்களில், மற்ற இந்தியர்களும் இணைந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர்.

அமெரிக்கர்களும் இந்தியர்களும் அளித்த ஆதரவின் அடிப்படையில், அனுஜ் இப்போது ‘ஃபேர் அமெரிக்கா’ (Fair America) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். அதாவது ஒரு விண்ணப்பதாரரின் திறமையின் அடிப்படையில் கிரீன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும், நாடுகளுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் அல்ல என்று இந்த அமைப்பு கோருகிறது.

‘தாங்க முடியாத மனஅழுத்தம்’

டிப் படேல்

படக்குறிப்பு, டிப் படேல், ஒன்பது வயதில் தனது பெற்றோருடன் அமெரிக்காவுக்கு வந்தார்

இந்த சவாலின் மற்றோர் அம்சத்தை எதிர்த்துப் போராடி வருகிறார் சிகாகோவில் வசிக்கும் டிப் படேல்.

டிப் படேல், ஒன்பது வயதில் தனது பெற்றோருடன் அமெரிக்காவுக்கு வந்தார். இங்குள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து அமெரிக்காவில் நண்பர்களையும் பெற்றார்.

ஆனால் அவருக்கு 21 வயதானபோது, அவரது பெற்றோருக்கு கிரீன் கார்டு கிடைக்காத காரணத்தால், டிப் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவராக மாறினார்.

குடியேற்ற விதிகளின்படி, வேறு நாட்டிலிருந்து பெற்றோர் தனது குழந்தையுடன் அமெரிக்காவிற்கு வந்தால், பிள்ளைக்கு 21 வயதாகும்போது பெற்றோரிடம் கிரீன் கார்டு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்தக் குழந்தை தனது பெற்றோரின் விசாவை சார்ந்து வாழ முடியாது. அவருக்கென தனி விசா தேவை.

அமெரிக்காவில் டிப் போன்று 2.5 லட்சம் இளைஞர்கள் உள்ளனர்.

டிப் பிபிசியிடம் பேசுகையில், “கல்லூரியில் சேர்வதற்கான நேரம் வந்தபோது, அமெரிக்க பள்ளிகளில் படித்திருந்தாலும்கூட, நான் இப்போது ஒரு சர்வதேச மாணவனாகத்தான் கருதப்படுவேன் என்பதை உணர்ந்தேன். ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பதில்கூட, அதன் மூலம் நான் அமெரிக்காவில் தங்க முடியுமா அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டுமா என்ற அடிப்படையில்தான் பார்க்க வேண்டியிருந்தது. இவை அனைத்தும் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன” என்று கூறினார்.

சிலருக்கு இந்த மன அழுத்தம் தாங்க முடியாததாகிவிடும்.

அதுல்யா ராஜ்குமாரும் அவரது சகோதரரும் இந்தியாவில் பிறந்தவர்கள், டிப் போலவே இளம் வயதிலேயே தங்கள் தாயுடன் அமெரிக்காவுக்கு வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட அமெரிக்க செனட்டின் நீதித்துறை குழுவுக்கு அதுல்யா வழங்கிய அறிக்கையில், ‘மனநலப் பிரச்னைகளுடன் தொடர்ந்து போராடி வந்த அவரது சகோதரர், கல்லூரியைத் தொடங்குவதற்கு முன்பு தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக’ தெரிவித்திருந்தார்.

கிரீன் கார்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க குடியேற்ற விதிகளின்படி, ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் 1,40,000 கிரீன் கார்டுகளில் ஒவ்வொரு நாட்டிற்கும் 7 சதவீத ஒதுக்கீடு என்ற வரம்பு உள்ளது

பிபிசியிடம் பேசிய அதுல்யா, “எனது சகோதரன் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் ஒரு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள இருந்தான். ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பு அவன் தற்கொலை செய்து கொண்டான். திடீரென எங்கள் குடும்பத்தின்மீது பேரிடி விழுந்தது. பள்ளி இதழுக்காக எழுதிக் கொண்டிருந்த நான், அடுத்த 24 மணிநேரத்தில், அவனது இரங்கல் குறிப்பை எழுத நேர்ந்தது” என்றார்.

இப்போது, டிப் வேலைக்கான விசாவிலும், அதுல்யா மாணவர் விசாவிலும் இங்கு தங்கியுள்ளனர்.

இறுதியாக, ‘Improve the Dream’ எனும் அமைப்பின் முயற்சியால், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையிலும் ‘அமெரிக்காவின் குழந்தைகள் சட்டம் 2023 மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், நீண்ட கால விசாக்கள் கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு கிரீன் கார்டுக்கான உரிமை வழங்கப்படும். ஆனால் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அமி பெரா இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்தச் சட்டத் திருத்தம் அடுத்து வரும் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அமி பெரா கூறுகையில், “இந்த இளைஞர்களை நாங்கள் ‘Documented dreamers’ (வேறு நாட்டிலிருந்து குழந்தையாக பெற்றோருடன் வந்து, 21 வயதைக் கடந்தும் கிரீன் கார்டு பெறாதவர்கள்) என்று அழைக்கிறோம். இவர்கள் சட்டப்பூர்வமாக பெற்றோருடன் இங்கு வந்த குழந்தைகள். இது அவர்களின் நாடு.

அவர்கள் வளர்ந்த பிறகு அவர்களை நாடு கடத்துவது சரியல்ல. அடுத்து எந்த அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், அது குடியரசுக் கட்சியாக இருந்தாலும் சரி அல்லது ஜனநாயகக் கட்சியாக இருந்தாலும் சரி, இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

‘எச்1பி விசா கூட எட்டாக் கனியாகவே உள்ளது’

சின்மய் ஜோக்

படக்குறிப்பு, சின்மய் ஜோக், படிப்பதற்காக மாணவர் விசாவில் புனேவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்தார்

சிலருக்கு, கிரீன் கார்டுக்கான முதல் படியான, எச்1பி விசாகூட எட்டாக் கனியாகவே உள்ளது.

சின்மய் ஜோக், படிப்பதற்காக மாணவர் விசாவில் புனேவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்தார். பின்னர் அவர் வேலை தேடியபோது, அவருக்கு வேலைக்கான விசா கிடைக்கவில்லை.

சின்மய் கூறுகையில், “ஒவ்வோர் ஆண்டும் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அதற்கான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே யு.எஸ்.சி.ஐ.எஸ் இந்தத் தேர்வை லாட்டரி முறை மூலம் செய்கிறது. கடந்த ஆண்டு நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் இருந்தனர், ஆனால் 85,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டன” என்றார்.

சின்மய் அதிகபட்சம் மூன்று முறை எச்1பி விசாவுக்கு விண்ணப்பித்தார். ஆனால் விசா லாட்டரியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

இந்தியாவுக்கு திரும்புவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. அப்போது சௌந்தர்யா பாலசுப்பிரமணி என்பவர் எழுதிய ‘அன்ஷாக்ல்டு’ (Unshackled) என்ற புத்தகத்தில் இருந்து மற்றொரு வேலைக்கான விசா பற்றி அவர் அறிந்துகொண்டார்.

சௌந்தர்யா பாலசுப்பிரமணி

படக்குறிப்பு, சௌந்தர்யா பாலசுப்பிரமணி, விசா பெறுவதற்கான தனது போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ‘அன்ஷாக்ல்டு’ (Unshackled) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அதுதான் O1 விசா. எச்1பி போலன்றி, O1 விசா லாட்டரி மூலம் வழங்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக ஒருவரின் திறன் மதிப்பிடப்படுகிறது. 85,000 என்ற H1B ஒதுக்கீட்டைப் போலன்றி, O1 விசாக்களின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை. விண்ணப்பதாரர் அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்தால், விசா வழங்கப்படும்.

அமெரிக்க குடியேற்ற அமைப்பின் சிக்கல்களில் இருந்து தப்பிக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயன்றபோதுதான் சௌந்தர்யாவும் O1 விசா பற்றி அறிந்துகொண்டார்.

அதற்கான போராட்டம் தான் வேலை விசாக்களை பற்றி ஒரு புத்தகத்தை எழுத சௌந்தர்யாவை தூண்டியது. அதுமட்டுமல்லாது சௌந்தர்யா ஒரு புதிய நிறுவனத்தையும் தொடங்கினார், அதன் மூலம் இப்போது விசாவுக்கான தொழில்முறை சேவைகளை வழங்கி வருகிறார்.

சௌந்தர்யா கூறுகையில், “விசா கிடைத்த பிறகுதான், தினமும் காலையில் குடியேற்றத்தைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாகத் தங்கள் லட்சியத்தின் மீது கவனம் செலுத்த முடிகிறது என்று பலர் என்னிடம் கூறினர். குறிப்பாக புதிய நிறுவனங்களின் நிறுவனர்கள். புதியவற்றை உருவாக்குவதன் மூலமும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் நிறுவனர்கள் இந்த நாட்டிற்கு உதவுகிறார்கள். ஆனால் இதைச் செய்வதில் இருந்து அவர்களை விதிகள் தடுக்கின்றன என்பதைக்கூட அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை” என்கிறார்.

அனுஜ், டிப், அதுல்யா, சின்மய், சௌந்தர்யா ஆகியோரின் பாதைகள் வேறுபட்டவை, ஆனால் இலக்கு ஒன்றுதான்.

அமெரிக்காவிற்கு வருவது ஓரளவிற்கு எளிதானது, ஆனால் இங்கு தங்கி ஒரு வேலை மற்றும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வது கடினம்.

இருப்பினும், அமெரிக்க கனவு மிகவும் பிரகாசமானது. அதன் ஒளி அனைவரின் தைரியத்தையும் நம்பிக்கையையும் அப்படியே வைத்திருக்கிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு