அமெரிக்க அதிபர் தேர்தல்: கருணைக் கொலை செய்யப்பட்ட அணிலுக்காக கொந்தளித்த டிரம்ப்
- எழுதியவர், அனா ஃபகுய்
- பதவி, பிபிசி செய்தியாளர், வாஷிங்டன்
இன்ஸ்டாகிராமில் பிரபலமான வளர்ப்புப் பிராணியான அணில் ஒன்றை நியூயார்க் வனத்துறை அதிகாரிகள் கருணைக் கொலை செய்தது அமெரிக்கா தேர்தல் பிரசாரத்தில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.
டொனால்ட் டிரம்பின் துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி. வான்ஸ், ‘பீனட்’ என்ற அணிலின் உயிரிழப்பு தற்போதைய அமெரிக்க அரசு அளிக்கும் முக்கியத்துவங்கள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளதாக ஒரு பேரணியில் கூறினார்.
இந்த அணில் ஒரு வளர்ப்புப் பிராணியாக இங்கே இருப்பது பாதுகாப்பானதல்ல என்று சுற்றுசூழல் பாதுகாப்புத் துறையினருக்கு (DEC) அறிவிப்பு வந்ததால் அவர்கள் இந்த அணிலை கைப்பற்ற வந்தனர்.
மேலும் கைப்பற்ற வந்த ஒருவரை ‘பீனட்’ அணில் கடித்ததால், இந்த அணிலை கருணைக் கொலை செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதே இடத்தில் இருந்த ஃப்ரெட் என்ற ரக்கூனும் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப், இந்த அணில் இறந்துபோன செய்தியறிந்து கொந்தளித்தார் என்று வடக்கு கரோலினா பகுதியிலுள்ள சான்ஃபோர்ட்டில் பிரசாரத்தின்போது ஜே.டி.வான்ஸ் கூறினார்.
“எந்த அரசாங்கம் ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேற்ற குற்றவாளிகளைக் கண்டுகொள்ளவில்லையோ, அதே அரசாங்கம் நாம் வளர்ப்புப் பிராணிகளை வைத்துக்கொள்ளக் கூடாது என்று கூறுகிறது. இது கேலிக்குரிய செயல்,” என்று ஓஹாயோ செனட்டரான வான்ஸ் உரையாற்றினார்.
இந்த அணிலின் உரிமையாளர் மார்க் லாங்கோ. அக்டோபர் 30ஆம் தேதியன்று, சுற்றுசூழல் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிக படைகளுடன் தனது வீட்டிற்கு வந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
கடந்த ஞாயிற்றுகிழமை, தனது சமூக ஊடக பக்கத்தில் #justiceforpeanut என்ற ஹேஷ்டேகை பதிவிட்டு, இந்தச் செயலுக்கு சட்டரீதியான நடவடிக்கையை கட்டாயம் எடுக்கப் போவதாக மார்க் லாங்கோ கூறினார்.
இதற்காக அவர் தொடங்கிய நிதி திரட்டலில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி சேர்ந்துள்ளது.
அந்த அணிலை அரசாங்கத்தின் வரம்பு மீறலினால் இறந்த தியாகியாகத் தான் பார்ப்பதாகக் கூறியுள்ளார் வான்ஸ்.
இதை ஒரு “முன்னறிவிப்பில்லாத சோதனை” என்று, நியூயார்க்கின் நாடாளுமன்ற உறுப்பினர் நிக் லாங்வொர்தி தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நியூயார்க்கின் ஜனநாயகக் கட்சி ஆளுநர் கேத்தி ஹோசுல், ‘தவறானவற்றுக்கு முன்னுரிமை அளிப்பவர்’, என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“நியூயார்க் மாகாணத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்குகூட தங்குமிடம் உள்ளது. ஆனால் இங்கு அப்பாவி உயிரினங்கள் கொல்லப்படுகின்றன்,” என்றும் அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
நியூயார்க் சுற்றுசூழல் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மார்க் லாங்கோவின் வீட்டிற்கு புதன்கிழமை சென்றுள்ளனர்.
“காட்டுயிர்களை வீட்டில் வளர்ப்பது ஆபத்தானது என்றும் அவற்றால் ரேபீஸ் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், இது சட்டவிரோதமானது என்றும் இந்தப் பகுதி மக்களிடம் இருந்து பல புகார்கள் வந்துள்ளதாக” அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுற்றுசூழல் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு “நரகத்தில் சிறப்பு இடம் உள்ளது” என்று மார்க் லாங்கோ பதிவிட்டார்.
மார்க் லாங்கோ பீனட் என்ற அணிலை ஏழு ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளார். இவர்களின் குறும்புச் செயல்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுவந்துள்ளார். அந்தப் பக்கத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவர்களைப் பின்தொடர்கின்றனர்.
இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது குடியேற்றவர்களுக்கான விஷயத்தில் வளர்ப்புப் பிராணிகள் பற்றிப் பேசுவது இது முதன்முறை அல்ல.
இதற்கு முன்பு டிரம்ப் மற்றும் வான்ஸ் ஓஹாயோ மாகாணத்தில் ஹைதியில் இருந்து குடியேறியவர்கள் பூனையை உண்டதாக ஆதாரமற்ற குற்றசாட்டுகளை முன்வைத்தனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.