இந்திய அணி ஒயிட்வாஷ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, அஸ்வின் போன்ற அனுபவமான வீரர்கள் இருந்தும் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியுள்ளது
  • எழுதியவர், போத்திராஜ். க
  • பதவி, பிபிசி தமிழுக்காக

கடந்த 12 ஆண்டுகளில் 18 டெஸ்ட் தொடர்கள் வெற்றி, உள்நாட்டில் அதிகமான டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற பெருமை, உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அணியும் நிகழ்த்தியிராத சாதனை என இந்திய அணி வலம் வந்தது.

ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய கிரிக்கெட்டையே புரட்டிப் போடும் அளவுக்கு மோசமானதாக மாற்றும் என யாரும் நினைக்கவில்லை.

இந்த மோசமான தோல்விக்குக் காரணம் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

147 ரன்களைக்கூட சேஸ் செய்ய முடியாமல்…

12 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் தொடரைத்தான் இந்திய அணி இழந்துவிட்டது என்று நினைத்திருந்த நிலையில் முதல்முறையாக டெஸ்ட் தொடரில் 24 ஆண்டுகளுக்குப்பின் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. அதிலும் 3 போட்டிகள் கொண்ட தொடரை முதல்முறையாக முற்றிலும் இழந்து வரலாற்றில் மிகப்பெரிய கறையை ஏற்படுத்தியுள்ளது.

ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, அஸ்வின் போன்ற அனுபவமான வீரர்கள் இருந்தும் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. அதிலும் சுப்மான் கில், ஜெய்ஸ்வால், ரிஷப்பந்த், வாஷிங்டன் சுந்தர் என அனைவரும் ஐ.பி.எல் லீக்கில் அதிரடியாக பேட் செய்யக்கூடிய திறமையான பேட்டர்கள், இவர்கள் இருந்தும் 147 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் இந்திய அணி தோற்றது என்பது ஜீரணிக்கமுடியாததாக அமைந்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த தோல்வி ஆலோசிக்கப்பட்டு, சுயபரிசோதனை செய்யப்பட வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்

முன்னாள் வீரர்கள் சாடல்

இந்திய அணியின் இந்த வரலாற்றுத் தோல்வியை சீனியர் வீரர்கள் பலர் கடுமையாகச் சாடியுள்ளனர்.

“உள்நாட்டில் இந்திய அணியின் இந்த ஒயிட்வாஷ் வெட்கக்கேடாக இருக்கிறது,” என முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் வேதனை தெரிவித்துள்ளார்.

‘தரமான ஆடுகளங்களில் பயிற்சி தேவை’

ஹர்பஜன் சிங், எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “பந்து திரும்பக்கூடிய ஆடுகளம், அதுவே நமக்குச் சொந்த எதிரியாக மாறிவிட்டது. தரமான சுழற்பந்துவீச்சு ஆடுகளத்தில் இந்திய அணி விளையாடி பயிற்சி எடுப்பது அவசியம் என தொடர்ந்து கூறிவருகிறோம். இதுபோன்ற டர்னிங் பிட்ச்கள் ஒவ்வொரு பேட்டரையும் சாதாரணமாக மாற்றிவிட்டது,” என்று இந்திய அணியின் உண்மையைான நிலையை அம்பலப்படுத்திவிட்டார்.

‘மாஸ்டர் பேட்டர்’ சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “இந்திய அணியின் ஒயிட்வாஷ் தோல்வியை ஜீரணிக்கக் கடினமாக இருக்கிறது. இந்தத் தோல்வி ஆலோசிக்கப்பட்டு, சுயபரிசோதனை செய்யப்பட வேண்டும். டெஸ்ட் தொடருக்குச் சரியாகத் தயாராகவில்லையா, மோசமான ஷாட்கள் தேர்வா, போதுமான பயிற்சி எடுக்கவில்லையா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ஆடும் இந்திய பேட்டர்களின் திறனை உறுதியாக மேம்படுத்த வேண்டும், அதற்கு அதிக பயிற்சிகள் வழங்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் தேவையில்லாத பரிசோதனைகள் மோசமான முடிவுகளை வழங்கிவிட்டன” எனச் சாடியுள்ளார்.

நியூசிலாந்து அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்தது ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணி ஆதிக்கம் செய்ய வழிவகுத்துவிட்டது என தெரிவித்துள்ளார் அணில் கும்ப்ளே

‘சரியான பிட்ச் அமைத்திருக்கலாம்’

இந்திய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அணில் கும்ப்ளே ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் “இந்தத் தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்து இந்திய அணியினர் எந்தவிதமான ஆடுகளத்தில் சிறப்பாக ஆடக் கூடியவர்கள் என்பதைப் புரிந்து, அறிந்து அதற்கு ஏற்றார்போல் பிட்ச் அமைத்திருக்க வேண்டும். பந்து நன்றாக திரும்பக்கூடிய முதல்தரமான சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தை அமைத்தது ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணி ஆதிக்கம் செய்ய வழிவகுத்துவிட்டது,” என்றிருக்கிறார்.

மேலும், “சுழற்பந்துவீச்சில் மட்டும் இந்திய பேட்டர்கள் இந்த டெஸ்ட் தொடரில் 37 விக்கெட்டுகளை இழந்துள்ளனர். பெங்களூரு டெஸ்டில் 2வது இன்னிங்ஸ் தவிர்த்து, டாப்ஆர்டர் பேட்டர்கள் இந்த டெஸ்ட் தொடரில் முழுமையாக ஒரு செஷன் கூட பேட் செய்யவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை, வீரர்கள் களமிறங்கிய வரிசையில் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது,” எனத் தெரிவித்தார்.

ரோஹித் சர்மா, விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனியர் பேட்டர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் பேட் செய்தவிதம் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்குகிறது

சீனியர் வீரர்களின் நிலை

ஒட்டுமொத்தமாக இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்தவிதம், சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு, குறிப்பாக சீனியர் வீரர்களின் பேட்டிங் ஆகியவை பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், ஜடேஜா போன்ற சீனியர் வீரர்களின் காலத்தை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பி.சி.சி.ஐ ஆலோசிக்கும் என பல இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப்பின் இந்த சீனியர் வீரர்களின் டெஸ்ட் வாழ்க்கை குறித்து ஏதேனும் முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஏனென்றால், சீனியர் பேட்டர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் பேட் செய்தவிதம் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்குகிறது.

ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 10 இன்னிங்ஸ்களில் கேப்டன் ரோஹித் சர்மா 6 போட்டிகளில் 10க்கும் குறைவான ரன்களையே எடுத்துள்ளார்

ரோகித், கோலியின் மோசமான பேட்டிங்

குறிப்பாக ரோகித் சர்மா 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து உள்நாட்டு டெஸ்டில் 35 இன்னிங்ஸ்களில் பேட் செய்து 1,210 ரன்கள் சேர்த்துள்ளார். 4 சதங்கள் உள்பட 37 சராசரி டெஸ்ட் அரங்கில் வைத்துள்ளார். ஆனால் கடந்த 10 இன்னிங்ஸ்களில் கேப்டன் ரோகித் சர்மா 6 போட்டிகளில் 10-க்கும் குறைவான ரன்களையே எடுத்துள்ளார், 2 போட்டிகளில் 20 ரன்களுக்கும் குறைவாக எடுத்துள்ளார், இரு அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.

விராட் கோலி இதே காலகட்டத்தில் உள்நாட்டில் 25 இன்னிங்ஸ்களில் 742 ரன்கள் சேர்த்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஒரு சதம் மட்டுமே அடித்து, 30.91 சராசரி வைத்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலும் இரு சீனியர் வீரர்களும் தலா ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளனர். விராட் கோலி அதிகபட்சமாக 70 ரன்களும் ஒட்டுமொத்தத்தில் டெஸ்ட் தொடரில் 93 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

கேப்டன் ரோகித் சர்மா அதைவிட மோசமாக இந்த டெஸ்ட் தொடரில் ஒட்டுமொத்தமாக 91 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், இதில் ஒரு அரைசதம் மட்டும் அடங்கும். சீனியர் பேட்டர்கள் இருவரின் சராசரி 15 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு டெஸ்ட் தொடரில் மோசமான சராசரி ரன்கள் என்பது இந்த டெஸ்ட் தொடர்தான். இந்த தொடரில் இரு அணிகளிலும் சுழற்பந்துவீச்சாளர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினர்.

ஆனால் ரோகித் சர்மா 6 இன்னிங்ஸ்களில் 4 முறை ஹென்றி, சவுத்தி வேகப்பந்துவீச்சில் தேவையற்ற பந்தை தொட்டு ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவின் டெஸ்ட் சராசரி ரன்கள் 42.29 ஆக இருக்கும்போது, இந்த தொடரின் மோசமான பங்களிப்பு அவருக்கு பெரிய கறையாக அமைந்துவிட்டது.

விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கையில் உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மோசமான ரன் சராசரி இதுதான். கோலியின் டெஸ்ட் சராசரி 48 ரன்களாக இருந்தநிலையில் அது 47 ஆகக் குறைந்துவிட்டது.

அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அஸ்வின், ஜடேஜா இருவரின் பந்துவீச்சு வேகம் 90கிமீக்கு மேல்தான் இருந்தது

அஸ்வின் திணறுகிறாரா?

இந்தியாவில் கடந்த காலங்களில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றார்போல் உலகத் தரத்துக்கு இணையில்லாத எளிதாக உடையக்கூடிய பிட்சுகளையே அமைத்து வந்தனர். உலகத்தரத்துக்கு இணையான சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்து அதில் சீனியர் வீரர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் பந்துவீசி இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

இதனால்தான், இந்த டெஸ்ட் தொடரில் தரமான டர்னிங் பிட்சுகளை அமைத்தபோது, இந்த ஆடுகளத்தில் பந்தை டர்ன் செய்யமுடியாமல் அஸ்வின், ஜடேஜா போன்ற சீனியர் பந்துவீச்சாளர்கள் திணறியுள்ளனர்.

இதுபோன்ற தரமான டர்னிங் பிட்ச்களில் சுழற்பந்துவீச்சாளர் ஒருவர் வேகத்தைக் குறைத்து, பந்தை அதிகமாக ‘டாஸ்’ (வளைவாகத் தூக்கி வீசுதல்) செய்ய வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற ஆடுகளத்தில் பந்து நன்றாக டர்ன் ஆகும். குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு வேகம் மணிக்கு 85 கி.மீக்கு மேல் இருக்கக்கூடாது.

ஆனால், அஸ்வின், ஜடேஜா இருவரின் பந்துவீச்சு வேகம் 90 கி.மீ.க்கு மேல்தான் இருந்தது. இதனால்தான் இருவரின் பந்துவீச்சும் இதுபோன்ற ஆடுகளத்தில் எடுபடவில்லை. ஆனால், வாஷிங்டன் சுந்தர் இந்த ஆடுகளத்தை எளிதாகக் கணித்து பந்துவீச்சு வேகத்தைக் குறைத்ததால் புனே டெஸ்டில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது.

இதுபோன்ற ஆடுகளத்தில் அஸ்வின், ஜடேஜா பந்துவீசிப் பழகியிருந்தால் வேகத்தைக் குறைத்து, ஆடுகளத்தைப் புரிந்து பந்துவீசியிருப்பார்கள். ஆனால், தரமற்ற ஆடுகளத்தில் பந்துவீசி, வேகத்தைக் குறைக்காமல் பந்துவீசியதால், அதை இந்த விக்கெட்டில் மாற்றமுடியாமல் சிரமப்பட்டனர். தரமான சுழற்பந்துவீச்சுக்கு இணையான ஆடுகளத்தில் பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்ற இதே கருத்தைத்தான் ஹர்பஜன் சிங்கும் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த ஆடுகளத்தில் பந்தை டர்ன் செய்யமுடியாமல் அஸ்வின், ஜடேஜா போன்ற சீனியர் பந்துவீச்சாளர்கள் திணறியுள்ளனர்

டாப் ஆர்டர் தோல்வி, நடுவரிசையை அதிகம் நம்பியது

இந்த டெஸ்ட் தொடரில் டாப் ஆர்டர் பேட்டர்கள் ஒரு இன்னிங்ஸில்கூட 100 ரன்களைக் கடக்கவில்லை. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, கில், கோலி என யாருமே சரியாக பங்களிப்பு செய்யவில்லை. இதனால் முழுமையாக நடுவரிசை பேட்டிங்கில் ரிஷப்பந்த், சர்ஃபிராஸ்கான், ஜடேஜா ஆகியோரைத்தான் நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

டாப் ஆர்டர் பேட்டர்கள் ரன்கள் குவித்திருந்தால், நிச்சயமாக நடுவரிசைக்குச் சுமை இருந்திருக்காது. ஆனால் டாப் ஆர்டர்கள் தோல்வியால் ஒட்டுமொத்தச் சுமையும் நடுவரிசை பேட்டர்கள் மீது விழுந்து, அவர்கள் ரன் சேர்க்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகினர்.

கம்பீருடன், கேப்டன் ரோகித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணி பயிற்சியாளர் கம்பீருடன், கேப்டன் ரோஹித் சர்மா

டி20 போட்டியின் தாக்கம்

கடந்த 1980, 1990, 2000 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் இருந்த டெஸ்ட் கிரிக்கெட் முறை இப்போது இல்லை. பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் மெல்ல மறைந்து வருகிறது என்பதையே இந்த டெஸ்ட் தொடர் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. அதேநேரம், டி20 தாக்கத்திலிருந்து வீரர்கள் யாரும் மீளவில்லை.

இந்திய பேட்டர்கள் சமீப காலங்களில் டி20 போட்டிகளில் விளையாடிய அளவுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததன் விளைவாகத்தான், அவர்களால் தங்களை உடனடியாக டெஸ்ட் தொடருக்குத் தயார் செய்யமுடியவில்லை, தங்களின் பேட்டிங்கையும் மாற்றிக்கொள்ள முடியவில்லை.

தரமான டர்னிங் பிட்சுகளில் டிஃபென்ஸ் முறை பேட்டிங் மிகவும் அவசியம். ஆனால், இந்திய பேட்டர்களில் ரிஷப் பந்த் தவிர வேறு எந்த பேட்டரும் இந்தத் தொடரில் டிஃபென்ஸ் முறை ஆட்டத்தைக் கையில் எடுக்கவில்லை, அந்த ஆயுதத்தை பயன்படுத்தவில்லை. ஒருவேளை அதைச் சரியாகக் கையாளவில்லையா அல்லது பிட்சைக் கண்டு அச்சப்பட்டார்களா, விக்கெட்டை இழந்துவிடுவோம் என அதீத கவனத்துடன் ஆடினார்களா எனத் தெரியவில்லை.

ஒவ்வொரு ஷாட்டையும் டி20 போட்டியின் அணுகுமுறையில் ஆடத்தான் இந்திய பேட்டர்கள் முயன்றனர். எந்தப் பந்தில் டிஃபென்ஸ் ஆடுவது, எந்தப் பந்தை ஸ்வீப்ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப், ஃபுல்ஷாட் ஆடுவது, ஸ்ட்ரோக் வைப்பது எனத் தெரியாமல் தவறான ஷாட்கள் ஆடியுள்ளனர். இவை அனைத்தும் தீவிரமான சுயபரிசோதனைக்கு உட்படுத்தப்படும்போது தெரியவரும்.

ஜான் கென்னடி

படக்குறிப்பு, எம்.ஆர்.எப் பேஸ் பவுண்டேஷனின் பயிற்சியாளர் ஜான் கென்னடி

‘பரிசோதனைகள் தேவையற்றது’

இந்திய அணியின் ஒயிட்வாஷ் குறித்து எம்.ஆர்.எப் பேஸ் பவுண்டேஷனின் பயிற்சியாளர் ஜான் கென்னடி பிபிசி-யிடம் பேசினார். “எந்த பேட்டரை எந்த இடத்தில் களமிறக்குவது எனத் தெரியாமல் களமிறக்கினர். ஒன்டவுனில் ஆடக்கூடிய கோலியை 4-வது டவுனில் ஆடவைத்தனர். இதுபோன்ற பரிசோதனைகள் தேவையற்றவை,” என்றார்.

“இதுபோன்ற டர்னிங் டிராக் (பிட்ச்) பற்றி அஸ்வின், வாஷிங்டன் சுந்தருக்கு நன்கு தெரியும். இதில் அதிகமாகவும் ஆடிப் பயிற்சி எடுத்துள்ளனர். அதிலும் சென்னையில் இதுபோன்ற ஆடுகளம்தான் அதிகம் பயன்படுத்துவோம். அப்படியிருக்கும் போது சுந்தர், அஸ்வினை நடுவரிசையில் களமிறக்கி இருந்தால் சிறப்பாக பேட் செய்திருப்பார்கள். சுந்தர் டாப் ஆர்டரில் சிறப்பாக பேட் செய்யக்கூடியவர். அவரை 7-வது வரிசையில் களமிறக்கித் தவறு செய்துவிட்டனர்,” என்று கூறினார்.

‘அஸ்வினின் தவறான ஷாட்’

தொடர்ந்து பேசிய ஜான் கென்னடி, “அது மட்டுமல்லாமல் இந்திய அணி வெற்றிக்கு 25 ரன்கள் இருக்கும்போது அஸ்வின் அடித்த ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் மோசமான தேர்வு. இதுபோன்ற முக்கியமான கட்டத்தில் சுந்தர், அஸ்வின் இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றி பெற வைத்திருக்கலாம். ஆனால், அஸ்வின் அடித்த ஷாட் அந்த நேரத்தில் தேவையற்று, தவறானது,” என்றார்.

‘டர்னிங் விக்கெட்டில் விளையாடவில்லை’

இந்திய பேட்டர்கள் உண்மையில் இதுபோன்ற டர்னிங் டிராக்களில் பேட் செய்து பழகாதவர்கள் என்று கூறிய ஜான் கென்னடி, “உண்மையில் இப்போதுதான் தரமான ஆடுகளத்தை அமைத்துள்ளனர். அதனால்தான் பந்து நன்றாக டர்ன் ஆகியவுடன் அதை எவ்வாறு அணுகுவது எனத் தெரியாமல் இந்த பேட்டர்கள் திணறி விக்கெட்டை இழந்தனர்,” என்றார்.

“இதுபோன்ற டர்னிங் டிராக்குகளில் பேட்டர்கள் டிஃபென்ஸ் முறை ஆட்டத்தை முறையாக ஆட வேண்டும். ஆடிப் பயிற்சி எடுத்திருக்க வேண்டும் அல்லது ரிஷப் பந்த் ஆடியதைப் போல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்ய முடியாத வகையில் அதிரடியாக ஆடி அவர்களைக் குழப்பிவிட வேண்டும்,” என்றார்.

“அப்போது எப்படிப் பந்துவீசுவது எனத் தெரியாமல் பந்துவீச்சாளர்கள் குழப்படையும்போது பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால், இந்திய பேட்டர்கள் பந்து டர்ன் ஆகிவிடும் என பயந்து, அதீத கவனத்துடன் பந்தை எதிர்கொண்டு பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்ய வாய்ப்பளித்துவிட்டனர்,” என்றார்.

மேலும், “கிரிக்கெட்டில் பேட்டர்கள் பந்துவீச்சாளர்களின் கை அசைவு, அவர் ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், தூஸ்ரா, கூக்ளி வீசுகிறாரா என்பதைப் பார்த்து விளையாட வேண்டும். ஆனால், இப்போதுள்ள பேட்டர்கள் பந்தைப் பார்த்து ஆடுகிறார்கள்,” என்றார்.

“ரோகித், கோலி என அனைவருமே தரமான பேட்டர்கள்தான். ஆனால், இதுபோன்ற தரமான சுழற்பந்துவீச்சு ஆடுகளத்தில் ஆடியதில்லை என்பதுதான் கவனிக்க வேண்டியது. இதுபோன்ற விக்கெட்டை அமைக்கும்போது, இந்திய பேட்டர்களால் விளையாட முடியுமா, பந்துவீச முடியுமா என்பதை அறிந்து அமைத்திருக்கலாம்,” எனத் தெரிவித்தார் ஜான் கென்னடி.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு