by adminDev2

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரின் கருத்துக்கள் மாறுபட்டதாக காணப்படுகின்றது : நாமல் ராஜபக்ஷ ! on Monday, November 04, 2024

”கடந்த சில நாட்களாக விஜித ஹேரத் மற்றும் பிரதமர் ஆகியோரின் கூற்றுக்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றதாகவே காணப்படுகின்றது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தல் நிலவரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அண்மைக்காலமாக ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரின் கருத்துக்கள் மாறுபட்டதாகவே காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் இவர்களினால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியானது சில காரணிகளை முன்வைத்தே மக்களின் நம்பிக்கையை வெற்றிகொள்ள எண்ணுகின்றது.

அதாவது அரசியல்வரப்பிரசாதங்களை இல்லாது செய்தல் மற்றொன்று கள்வர்களை கைது செய்தல் போன்ற விடயங்களையே முன்னிறுத்தியுள்ளனர்.

இவ்வாறான விடயங்களை முன்னிறுத்தியே நல்லாட்சி அரசாங்கமும் ஆட்சிக்கு வந்தது. பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்குவந்த அரசாங்கம் பொருளாதாரம் கல்வி சுகாதாரம் ஆகிய துறைகளில் நிலவும் பிரச்சினைக்கு இதுவரை தீர்வினை முன்வைக்கவில்லை.

ஜனாதிபதியும் இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு எந்தவொரு வேலைத்திட்டத்தினையும் முன்வைக்கவில்லை” இவ்வாறு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்