யாழ் மாவட்டத்தில் ஓர் ஆசனத்தையாவது பெற வேண்டுமென்ற தமிழர் தரப்புகளின் போட்டி. எதிர்க்கட்சித் தலைமையை கைப்பற்றுவதற்கான போட்டி தெற்கில். இது, தோழர் அநுர குமார அணிக்கு அறுதிப் பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக்கொடுக்கும் என்று கணிக்கப்படுகிறது.
இலங்கைத் தமிழர்களின் கலாசார தலைநகரம் என்றும் அரசியல் தலைப்பட்டணம் என்றும் புகழ்பெற்றது யாழ்ப்பாணம். தமிழரசின் நிறுவகத் தலைவர் தந்தை செல்வாவின் உருவச்சிலை, தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளின் நினைவுச் சின்னம், சிங்கள தேசத்தின் தீக்கிரையாக்கப்பட்ட பின்னரும் பீனிக்ஸ் பறவையாக எழுந்து நிற்கும் யாழ்ப்பாண பொதுநூலகம் போன்ற பல நினைவெழுச்சிகளால் நின்று நிலைத்து நிமிர்ந்து நிற்பது யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை கொண்டிருப்பது யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம். 1977ம் ஆண்டுத் தேர்தல்வரை யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், உடுப்பிட்டி, பருத்தித்துறை, காங்கேசன்துறை, உடுவில், வட்டுக்கோட்டை, ஊர்காவற்றுறை, சாவகச்சேரி, கிளிநொச்சி என பதினொரு தொகுதிகளில் தங்கள் பிரதிநிதிகளாக பதினொரு பேரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தேர்தல் மாவட்டம் இது.
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போன்று இன்று ஆறு பேரை மட்டும் தெரிவு செய்யும் நிலைக்கு இது இறங்கியுள்ளது. புலம்பெயர்ந்தவர்களில் அதிகமானவர்கள் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைவிட விடுதலைப் போராட்டத்தை ஒட்டி சிங்கள பேரினவாதத்தால் இலட்சக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதும் இதற்குக் காரணம்.
1977ல் இருந்த எண்ணிக்கையில் ஐம்பது வீதமளவுக்கு எம்.பிக்களின் எண்ணிக்கை இங்கு குறைந்திருப்பினும், இந்த மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த மாவட்டம் அனைவராலும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது. இதற்கான அடிப்படைக் காரணம் இங்கு போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் மற்றும் குழுக்களும் ஒரு ஆசனத்தையாவது தாங்கள் கைப்பற்றிவிட வேண்டுமென துடியாய்த் துடிப்பதுவே.
23 அரசியல் கட்சிகள், 21 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடினும், தாய்க்கட்சிகள் என்று கனதி கொண்ட தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரசும் கூடுதலான ஆசனங்களை யார் பெறுவது என்ற ஒருவகை பனிப்போரில் ஈடுபட்டுள்ளன. தலைவரில்லாத கட்சி என்ற பெருமை பெற்றுள்ள தமிழரசுக் கட்சி இம்முறை அனைத்துத் தரப்பினரதும் எதிர்ப்பைச் சந்தித்து வருவது பளிச்சென தெரிகிறது. முக்கியமாக இந்த அணிக்குத் தலைமை தாங்குபவரின் சுயநலப் போக்கு கட்சியை சீரழித்து நிற்கிறது.
தமிழ்த் தேசிய சார்பு வாக்குகள் இந்தத் தேர்தலில் பலவாறாக பிளவுபட்டு காணப்படுகிறது. ஒவ்வொரு தரப்பும் தாங்களே அதிகூடிய ஆசனங்களைப் பெறுவோமென்று அறிவித்து வருகின்றன. தேர்தலில் போட்டியிடுபவர்கள் எவருமே தாங்கள் தோல்வியடைவோம் என்று ஒருபோதும் சொல்வதில்லை. ஆதலால் ஆறு ஆசனங்களையும் தாங்களே பெறுவோமென்று சொல்பவர்களை எவரும் பெரிதாக நம்பப் போவதில்லை.
யாழ்ப்பாணத்தின் மூத்த பொருளாதார நிபுணர் ஒருவருடன அண்மையில் உரையாடியபோது ஒரு கணிப்பை வரைபடமாக முன்வைத்தார். தர்மலிங்கம் சித்தார்த்தன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கடந்த கால தேர்தல்களில் பிரபல்யமாக வெற்றி பெற்றவர்கள். நாடளாவிய ரீதியில் மேலோங்கி நிற்கும் அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி இப்போது யாழ்ப்பாணத்தில் வேகமாக வீச்சுப் பெறுகிறது (அண்மையில் ஒரு செவ்வியில் சுமந்திரனே இவ்வாறு குறிப்பிட்டதாக ஊடக செய்திகளில் காண முடிகிறது). வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கூட்டணி இளையோர் பட்டாளத்தை களமிறக்கியுள்ளது.
தமிழ்க் காங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனித்து நிற்கும் வெற்றி நட்சத்திரம். ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கணிசமான வாக்குகளைப் பெற்ற சஜித் பிரேமதாசவும் ஒரு ஆசனத்தை எதிர்பார்க்கிறார். (இதற்குக் காரணம் சுமந்திரன்தான்). ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு எப்போதுமே தமிழர் மத்தியில் உயர்மட்ட செல்வாக்கு உண்டு. (இதனை உருவாக்கிக் கொடுத்தவர்களும் தமிழரசுக் கட்சியினரே).
இப்படிப் பார்க்கின் சுமார் ஐந்து ஆசனங்களை தமிழரசுக் கட்சியில் போட்டியிடாதவர்கள் கைப்பற்றும் சாத்தியமுண்டு. பாவம் பார்த்து மக்கள் ஆதரவு கிடைக்குமானால் தமிழரசுக் கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைக்கலாம். இந்த அணிக்கு சுமந்திரன் தலைமை தாங்குவதால் அதுவும்கூட சந்தேகம் தான் என்று விபரமாக விளக்கமளித்தார் அந்தப் பொருளாதார நிபுணர்.
தமிழரசுக் கட்சி வேட்பாளர் தொடர்பாக முக்கியமான தகவல் ஒன்று கடந்த சில தினங்களாக கசிய ஆரம்பித்துள்ளது. இந்த அணியின் முதன்மை வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் கிளிநொச்சி சிவஞானம் சிறீதரன். இவர் தீவுப்பகுதியை பிறந்தகமாகவும், கிளிநொச்சியை புகுந்தகமாகவும் கொண்டவர். விடுதலைப் புலிகளின் முக்கிய போராளித் தலைவர்கள் இருவரின் சகோதரியை திருமணம் புரிந்தவர். போர்க்காலத்தில் வன்னிப் பகுதியில் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியவர். இவரை முதன்மை வேட்பாளராக்கினால் கட்சியின் வீடு சின்னத்துக்கு வாக்குகளை இவரது பெயர் பெற்றுக் கொடுக்கும். அதனால் கட்சிக்கு போனஸ் ஆசனம் இலகுவாகக் கிடைக்கும் எனும் அரசியல் ஆதாயம் தரும் கணிப்பினால் முதன்மை வேட்பாளராக்கப்பட்டார்.
தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் மிகுதி எட்டுப் பேரும் சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்கள். அதாவது, சுமந்திரனால் அபேட்சகர்களாக உள்வாங்கப்பட்டவர்கள். இவர்களுக்கு தனித்தனியாக அண்மையில் இரகசிய ”கட்டளை” ஆலோசனை வழங்கப்பட்டதாம். இதன்போது அவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட விடயம் பின்வருமாறு: ‘தேர்தல் பரப்புரையின்போது தமிழரசின் சின்னமான வீடுக்கு நேரே புள்ளடி இடுமாறு எடுத்துக் கூற வேண்டும். அடுத்து, விருப்பு வாக்கு என்ற இடத்தில் சுமந்திரனுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும். இதன்வழியாகவே சுமந்திரன் அதிகூடிய விருப்பு வாக்குகளால் தெரிவாக முடியும்” என்று இவர்கள் அறிவுறுத்தப்பட்டனராம்.
இந்த ஆலோசனையின் போது எழுவரில் ஒருவர் மட்டும் சற்றுக் குழப்பம் அடைந்து காணப்பட்டுள்ளார். தாம் எதற்காக இன்னொருவருக்கு விருப்பு வாக்கு போடவேண்டுமென்று கேட்க முடியும் என்பது இவரது நியாயமான கேள்வி. அதற்கு உடனடியாகவே பதில் வழங்கப்பட்டது.
‘இந்தத் தேர்தலில் எமது கட்சிக்கு ஓர் ஆசனமாவது கிடைக்க வேண்டும். உங்களில் ஒருவராலும் அந்த வெற்றியை பெறமுடியாது. நீங்கள் அனைவரும் இணைந்து ஒருவருக்கு (சுமந்திரனுக்கு) விருப்பு வாக்குகளை ஒட்டுமொத்தமாக வழங்கினால் மட்டும் அவரையாவது நாடாளுமன்றம் அனுப்பலாம்” என்பது பதிலாக இருந்தது.
அத்துடன் நிறுத்தப்படவில்லை. வரப்போகின்ற உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்களில் இதற்கான வெகுமதி (றிவார்ட்) உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் இச்சபைகளின் உறுப்பினர்களாக அல்லது தலைவர்களாக நியமிக்கப்படுவீர்கள் என்று நம்பிக்கை உறுதி வழங்கப்பட்டது. அத்துடன் நிறுத்தாது, தற்செயலாக சிவஞானம் சிறீதரன் வெற்றி பெறுவாரானால் அவர் எம்.பி பதவியை தொடர முடியாதவாறு நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் “ஓட்டை” உள்ளது என்றும் இவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளதாம்.
திருமலை, மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களிலும் சுமந்திரனின் தமிழரசு அணி பல நெருக்குவாரங்களை சந்தித்து வருகிறது. மகிந்த ராஜபக்சவின் அணியில் முன்னர் அங்கம் வகித்து, கடந்த தேர்தலில் தமிழரசு அணியில் போட்டியிட்ட சுமந்திரனின் கையாளான மட்டக்களப்பு பிரமுகர் இப்போது பாவமன்னிப்பு கேட்ட விடயத்தை ஊர்க்குருவியில் படித்தபோது, சி.வீ.கே.சிவஞானம் அவர்கள் அண்மையில் கூறியதுபோல பிசாசுடன் வைக்கின்ற சகவாசம் பலரையும் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி வருவது தெரிகிறது.
இவ்வாறான அரசியல் காலநிலையை அநுர தரப்பு தமக்கான ஆரோக்கிய பலமாக ஆக்கி வருகிறது. வடக்கிலும் கிழக்கிலும் சுமார் ஒரு டசின் ஆசனங்களையாவது பெற முடியுமென்று இவர்கள் எதிர்பார்க்கின்றனர். உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ச போன்றவர்ககள் தாமும் அரசியலில் இருப்பதாகக் காட்டிக் கொள்ள அவ்வப்போது புதிய அரசுக்கு சவால் விடுகின்றனர். ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவரான விமல் வீரவன்ச சற்று ஓரங்கட்டி நிற்பதுபோல தெரிகிறது.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தாலும் தன்னை சிங்கனாகவே காட்டிக் கொள்ள விரும்பும் ரணில், அநுர தரப்பு மீது குறைசொல்லி வருவதை தினமும் காணமுடிகிறது. சில நாட்களுக்கு முன்னர் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் ரணிலுக்குமிடையிலான சொற்போர் ஒன்று மிகப் பிரசித்தி பெற்றுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அமைச்சரவையின் தீர்மானம் எடுப்பதற்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியமென ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டிருந்தார். இலங்கையின் அரசியல் அமைப்பை ஹரிணி எங்கே கற்றுக் கொண்டார் என்பது குறித்து ஆச்சரியம் வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக அவருக்கு அரசியலமைப்பை கற்றுக் கொடுக்க தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கு சுடச்சுட பதிலளித்த பிரதமர் ஹரிணி, தேர்தலில் தோல்வியடைவது எவ்வாறு என்று ஆலோசனை கூறவே ரணில் தகுதியானவர் என்று விளாசியதோடு மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் அரசியலுக்குள் நுழைய ரணில் துடிக்கிறார் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
இவைகளைப் பார்க்கையில் ஒரு விடயம் நன்கு புலப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் ஓர் ஆசனத்தையாவது பெறவேண்டுமென தமிழ் கட்சிகளுக்கிடையே கழுத்தறுப்பு போட்டி இடம்பெறுகிறது. தெற்கில் அநுர தரப்பு அறுதிப் பெரும்பான்மையை பெறக்கூடாது என்பதிலும் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதிலும் போட்டி இடம்பெறுகிறது. இதுவே அநுர தரப்புக்கு பலம் சேர்ப்பதாக மாறிவருகிறது என்பதை இவர்கள் அறியவில்லை.