- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
-
அன்று காலை 6:45 மணி இருக்கும். சென்னையின் ஸ்ரீநிவாசபுரம் அருகே, அடையாற்றின் கரையோரத்தில் உடைந்த பாலம் அருகே நின்றுகொண்டிருந்தேன். அடையாற்றின் தன்மை குறித்துப் பேசிக்கொண்டே உடன் வந்த மீனவர் பாளையம், சில மீன்கள் செத்து மிதப்பதைச் சுட்டிக் காட்டினார்.
அடையாறு நதியின் மறுசீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளால் நதி தூய்மையடையவில்லை என்றும் நதியில் கழிவுநீர் தொடர்ந்து கலப்பதாகவும், முகத்துவாரம் அவல நிலையில் இருப்பதாகவும் அங்கிருந்த மீனவர்கள் கூறினர்.
இதுகுறித்து தமிழ்நாடு நகர்ப்புறக் கட்டுமான நிதி சேவைகள் துறையின் தலைவரும் சென்னை நதிகள் மீட்டுருவாக்க அறக்கட்டளை கட்டுப்பாட்டாளருமான விஜயகுமார் பிபிசி தமிழிடம் பேசியபோது, அடையாற்றை மறுசீரமைக்க இதுவரை பலகட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், தற்போது அடுத்தகட்டப் பணிகள் திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அடையாறு நதியை மறுசீரமைக்க தமிழ்நாடு அரசு இதுவரை என்னென்ன முயற்சிகளை எடுத்துள்ளது? அதற்காக எவ்வளவு நிதி செலவழிக்கப்பட்டது? அதற்குப் பலன் கிடைத்துள்ளதா?
‘சுவாசிக்க முடியாத மீன்கள்’
“இங்கு இப்போது ஓடுவது ஆற்றுநீர் இல்லை, கழிவுநீர்தான். அதில் மூச்சுவிடக்கூட முடியாமல் மீன்கள் செத்து மடிகின்றன. ஏனென்றால், ஆற்றுக்குள் இருப்பது அவ்வளவும் நஞ்சு,” என்றார் ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த மீனவர் மணி.
அடையாற்றின் மேற்பரப்பில் ஆங்காங்கே செத்து மிதந்த மீன்களையும், மேற்பரப்பில் கூட்டம்கூட்டமாகத் திரிந்துகொண்டிருந்த சின்னஞ்சிறு இறால் குஞ்சுகளையும் மணி சுட்டிக்காட்டினார்.
சுமார் 14 வயதிலேயே அடையாறு நதியில் மீன்பிடித்த அனுபவம் உடைய அவர், ஆற்றின் இப்போதைய நிலையைப் பார்க்கையில் வேதனையை அடக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
பெரும்பாலும் கடலில் மீன்பிடிக்கும் அவர், அவ்வப்போது ஆற்றிலும் மீன் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் நாராயணசாமி தோட்டத்தைச் சேர்ந்த 72 வயதான ராஜேந்திரன், முற்றுமுழுதாக அடையாற்றையே நம்பித் தனது மீன்பிடித் தொழிலைச் செய்து கொண்டிருந்தவர்.
அன்று, அடையாற்றில் மீன் வளம் குன்றிய நிலையில், அதன் முகத்துவாரத்தில் விசிறு வலை வீசி, கடலில் இருந்து ஆற்றுக்குள் வந்து செல்லும் மீன்களைப் பிடிக்க முயன்று கொண்டிருந்தார் ராஜேந்திரன்.
அவரிடம் நெருங்கிப் பேசியபோது, அவரது இடுப்பில் செருகியிருந்த பையில் வெறும் மூன்று மீன்களே இருந்தன. அதிகாலையில் இருந்து வலை வீசி, அவருக்குக் கிடைத்திருந்தது அந்த மூன்று மடவு மீன்கள் மட்டுமே.
நான்காவது மடவு மீனைப் பிடிக்க முயன்ற பிறகு, வலையைச் சரிசெய்ய கரை நோக்கி வந்த ராஜேந்திரன், “ஆற்றில் நல்ல தண்ணீர் ஓடுவதில்லை, சென்னையிலுள்ள ஆலைகள், குடியிருப்புகளின் கழிவுநீர்தான் நிரம்பி வழிகிறது. அதில் எப்படி உயிர்கள் வாழும், எப்படி பிழைப்பு நடத்துவது?” என்றார்.
ராஜேந்திரன், மணி, பாளையம் என நான் பேசிய அனைத்து மீனவர்களுமே பொதுவாக என்னிடம் முன்வைத்த கேள்வி ஒன்றுதான்: “அடையாற்றை மீட்கப் பல நூறு கோடி ரூபாயைச் செலவழித்தார்களே, அந்த பணம் என்ன ஆனது?”
அடையாறு நதியை மீட்பதால் என்ன பயன்?
ஒரு நதி கடுமையாக மாசுபட்டு, கன உலோகங்களின் அளவு அதிகமாக இருக்கும்போது மீன்கள் வாழ முடியாமல் மடியும் சூழ்நிலை ஏற்படலாம் என்கிறார், கடல் உயிரியல் ஆய்வாளரான வேல்விழி.
ஒரு நதியில், இரண்டு காரணங்களால் மீன்கள் வாழ முடியாமல் உயிரிழக்கும் வாய்ப்புகள் உள்ளதாக வேல்விழி கூறுகிறார்.
“ஆற்றில் அனல்மின் நிலையங்களின் சூடான நீர் வெளியேற்றப்பட்டால், அந்த வெப்பம் தாளாமல் மீன்கள் மடியக்கூடும். அதிகபட்சமாக நதி மாசுபட்டு, அதில் கன உலோகங்களின் அளவு அதிகமிருந்தால் மீன்கள் இறக்க நேரிடும்,” என்று விளக்கினார்.
ஒரு நதியை மீட்டெடுக்கும் முயற்சியில், அதில் கலந்திருக்கும் கழிவுநீரைச் சுத்தப்படுத்துவதும், மேற்கொண்டு கழிவுநீர் கலக்காமல் தடுக்க, சுத்திகரிப்பு செயல்முறையைப் பின்பற்றுவதும்தான், முதல் கட்டமாகச் செய்ய வேண்டியது என்று வேல்விழி வலியுறுத்துகிறார்.
இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஒரு நதியை மீட்டெடுக்க முடிந்தால், அதன்மூலம் சூழலியல் ரீதியாக மட்டுமின்றி சமூக, பொருளதார ரீதியாகப் பல்வேறு நன்மைகள் இருப்பதாகக் கூறுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சூழலியல் ஆர்வலருமான கோ.சுந்தர்ராஜன்.
“அடையாற்றை மீட்டெடுத்தால், அதை நம்பி வாழ்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அது பொருளாதாரரீதியாக ஆற்றைச் சார்ந்து வாழும் மீனவ சமூகங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்,” எனக் கூறுகிறார் அவர்.
மேலும், “அடையாற்றின் கரையோரங்களில் இருக்கும் குடியிருப்புகளை அகற்றுவதைவிட முக்கியமானது, அதன் வெள்ள வடிகால் பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது. அதைச் செய்தால், மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைக் கணிசமாகக் குறைப்பதற்கான இயற்கை செயல்பாடுகள் தானாக நடைபெறும்,” என்றும் சுந்தர்ராஜன் வலியுறுத்தினார்.
அடையாற்றை மீட்டெடுப்பதன் மூலம், அதன் கழிமுகப் பகுதியில் பல்லுயிர் வளம் பெருகுவதோடு, மக்களுக்கு ஆரோக்கியமான மீன் உணவுகள் கிடைக்கும் எனக் கூறுகிறார் ஆய்வாளர் வேல்விழி.
இவை மட்டுமின்றி, அடையாற்றை மீட்டெடுப்பது சுகாதார அடிப்படையில், சென்னை மக்களுக்குத் தற்போது மாசுபட்ட நீரினால் பரவக்கூடிய பல நோய்கள் ஏற்படாமல் தடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கும் என்கிறார் சுந்தர்ராஜன்.
ரூ.744 கோடி அடையாறு மறுசீரமைப்புத் திட்டம் என்ன ஆனது?
கடந்த 30 ஆண்டுகளாக அடையாறு நதியில், கட்டுமானக் கழிவுகள் முதல் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் வரை பலவும் கொட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், நகருக்குள் பாயும் சமூக-சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நதிகளை மறுசீரமைக்க தமிழ்நாடு அரசு சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளையின்கீழ் சென்னை நதிகள் மறுசீரமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது.
சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் கட்டுப்பாட்டாளரான முனைவர்.விஜயகுமார், பிபிசி தமிழுக்கு அளித்த தகவலின்படி, அடையாறு நதிக்காக இந்தத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட 744.6 கோடி ரூபாயில், இதுவரை 453.1 கோடி ரூபாய் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தின்கீழ், அடையாற்றுக் கரையோரப் பகுதிகளில் இருந்து 8,891 மில்லியன் டன் திடக்கழிவுகளையும், 3,505 மில்லியன் டன் குப்பைகளையும் அகற்றியுள்ளதாக சென்னை நதிகள் மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது.
அடையாறு நதி மறுசீரமைப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட நிதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து பிபிசி தமிழிடம் விவரித்த விஜயகுமார், “முதல்கட்டப் பணிகளில் ஒன்றாக, அடையாறு நதியின் எல்லைகளை வரையறை செய்துள்ளோம். இந்தப் பணியின்கீழ், ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து இதுவரை 5,122 பேர் இடம் மாற்றப்பட்டுள்ளார்கள். கூடுதலாக, 4,367 பேரை இடம் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
இந்தக் குடியிருப்புகள் இடம் மாற்றப்பட்ட பிறகு, அவற்றிலிருந்து ஆற்றில் கலக்கப்பட்ட கழிவுநீரின் விகிதம் குறைந்துள்ளதாகவும் விஜயகுமார் குறிப்பிட்டார்.
பொதுப் பணித்துறை தகவல்களின்படி, திரு.வி.க. பாலம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரையிலான 2,353 மீட்டர் நீளத்திற்கும், கோட்டூர்புரம் பாலம் முதல் சைதாப்பேட்டை பாலம் வரையிலான 2,892 மீட்டர் நீளத்திற்கும் நதியில் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது. நதியோரம் 650 மீட்டர் நீளத்திற்கு வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது.
அதோடு, ஜாஃபர்கான் பேட்டை பாலம் முதல் மணப்பாக்கம் தடுப்பணை வரை 3,334 மீட்டர் நீளத்திற்கு வண்டல் எடுக்கும் பணிகளும் 500 மீட்டர் நீளத்திற்கு வெள்ளத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், நதி மறுசீரமைப்பைப் பொறுத்தவரை, இவற்றையும் தாண்டி மிக முக்கியமான பணியாக இருப்பது கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதுதான் என்கிறார், நீரியல் ஆய்வாளர் முனைவர் ஜனகராஜன்.
ஏனெனில், “அடையாற்றில் கலக்கும் கழிவுநீரைத் தடுக்கவில்லை என்றால், இந்த வண்டல் எடுக்கும் பணி முதல் நதியின் மீட்டுருவாக்கம் வரை அனைத்திலும் செலுத்தப்படும் உழைப்புக்குப் பயன் ஏதும் இருக்காது” என்று அவர் கூறுகிறார்.
அடையாற்றை நஞ்சாக்கும் கழிவுநீர்
கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வறிக்கை, அடையாற்றில் வாழக்கூடிய, உணவுக்காக அதிகம் பிடிக்கப்படும் ஆறு மீன் வகைகளின் உடலிலுள்ள கன உலோகங்களின் அளவை மதிப்பிட்டது.
சென்னை மாநகராட்சியில் வெளியேற்றப்படும் மாசுபட்ட நீர், கழிமுகங்களின் வண்டலில் கன உலோகங்களை அதிகமாகச் சேர்ப்பதாகவும், அவற்றின் அளவு அபாயகரமான அளவில் இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டது.
அடையாற்றில் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மீன்களின் திசுக்களில், நிக்கல், கோபால்ட், ஈயம், குரோமியம், தாமிரம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு ஆகிய கன உலோகங்கள் அதிக அளவில் காணப்பட்டதாகவும் அந்த ஆய்வு தெரிவித்தது.
மீன்களின் தசை மற்றும் கல்லீரல் திசுக்களில் குரோமியம், தாமிரம் போன்ற கன உலோகங்கள், உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள பாதுகாப்பான அளவைவிட அதிகளவில் இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
சமீபத்தில் வெளியான ஒர் ஆய்வு, “அடையாறு கழிமுகப் பகுதியில் காணப்படும் ஓட்டுமீன் வகை உயிரினங்களில் கன உலோகங்கள் இருக்கின்றன. அவற்றின் அளவு உண்ணத்தக்க அளவைவிடப் பல மடங்கு அதிகமாக இருப்பதாகவும் இவற்றில் மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளும் அடக்கம்” என்றும் கூறுகிறது.
பருவமழைக் காலங்களில் இந்த அளவு குறைவாக இருப்பதாகவும், மற்ற காலங்களில் அதிகளவில் இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
திரு.வி.க பாலத்தின் கீழே அடையாற்றுக் கரையோரமாக நடந்து சென்றபோது, ஆற்றுநீரில் கலந்திருந்த கழிவுகள், ஆங்காங்கே திட்டுத்திட்டாகத் திரண்டிருந்ததைக் காண முடிந்தது. முகத்துவாரம் வரையிலுமே இதேபோன்ற கழிவுத் திட்டுகள் ஆற்றில் திரண்டு மிதந்து கொண்டிருந்ததையும், பல்வேறு தருணங்களில் மீன்கள் செத்து கரை ஒதுங்கியதையும் காண முடிந்தது.
“சென்னையின் கழிவுநீரைச் சுமந்து செல்லும் சாக்கடையா இது?” எனக் கேட்கும் மீனவர் பாளையம், கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்தால் மட்டுமே, நதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்குப் பலன் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
அவரது கூற்றை ஆமோதிக்கும் நீரியல் ஆய்வாளர் ஜனகராஜன், “ஒரு நதியை மறுசீரமைப்பது என்றால், அதன் பழைய நிலைக்கே மீட்டுருவாக்கம் செய்வது எனப் பொருள். ஆனால், அடையாற்றைப் பொருத்தவரை அதற்கான பணிகள் எதுவும் இன்னும் செய்யப்படவில்லை,” என்றார்.
“அடையாற்றில் கலக்கும் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளின் கழிவுநீரைத் தடுத்தால் மட்டுமே, ஆறு பழைய நிலைக்குத் திரும்புவதற்கான முதல் படியையே அடைவோம்,” என்கிறார் ஜனகராஜன்.
“அதுவரைக்கும் இந்த ஆற்றில் செய்யப்படும் செலவுகள் விழலுக்கிறைத்த நீர்தான்” என்று விமர்சிக்கிறார் மீனவர் பாளையம்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என்ன ஆயின?
அடையாற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளும் அடையாறு மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்தப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை எனவும், அவை முடியும்பட்சத்தில், ஆற்றில் கலக்கும் கழிவுநீர் பெருமளவு குறையும் என்றும் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் கட்டுப்பாட்டாளர் விஜயகுமார் கூறுகிறார்.
இதுபோக, பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அதன்மூலம் ஆற்றில் கலக்கும் கழிவுகளின் அளவைக் குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுகுறித்துப் பேசியவர், “புறநகர்ப் பகுதிகளான, பம்மல், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் நிலத்தடி கழிவுநீர் கால்வாய்கள் அமைத்ததன் மூலம், அங்கிருந்து ஆற்றில் கலக்கும் கழிவுநீரின் அளவு குறைந்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உள்ளேயே சில இடங்களை அடையாளம் கண்டு, மெட்ரோ நீர் வாரியத்தின் மூலமாக, கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன,” என்று விளக்கினார்.
ரூ.61 கோடி செலவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சுத்திரிகரிப்பு நிலையங்களில் சில செயல்பாட்டிற்கு வந்துவிட்டதாகவும், மேலும் சில, இந்த ஆண்டுக்குள் செயல்பாட்டிற்கு வந்துவிடும் எனவும் விஜயகுமார் தெரிவித்தார்.
இவற்றின் மூலம் அடையாறு நதியில் கலக்கும் கழிவு நீரின் அளவு குறைக்கப்படும் எனவும், அடுத்தகட்டமாக ஒன் ரிவர், ஒன் ஆபரேட்டர் என்ற திட்டத்தின் கீழ், ஒரு புதிய நிறுவனம் தொடங்கப்பட்டு, நதி மறுசீரமைப்புக்கான அனைத்துப் பணிகளும் அதன்கீழ் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இந்தப் புதிய திட்டத்தின்கீழ், அடையாறு நதியின் தொடக்கம் முதல் முகத்துவாரம் வரை, பல்வேறு இடங்களில் கால்வாய்கள் (Trunk sewers) அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு இருப்பதாகவும், பிறகு அங்கு சுத்திகரிக்கப்பட்ட பின்னரே, அந்த நீர் ஆற்றில் திறந்துவிடப்படும் எனவும் அவர் விவரித்தார்.
விஜயகுமார் கூற்றுப்படி, இப்போதுள்ள கட்டமைப்புகளில் நாளொன்றுக்கு 80-90 எம்.எல்.டி வரையிலான கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. ஆனால், “கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களின் பணிகள் முடிவடைந்த பிறகு, சுமார் 200 எம்.எல்.டி வரையிலான கழிவுநீரைச் சுத்திகரிக்க முடியும்” என்று அவர் கூறுகிறார்.
அடையாறு நதிக்கான இந்தப் புதிய திட்டத்தின் பணிகள் நிறைவடையும் போது, நதிநீரின் தரம் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அளவீடுகளின்படி, “ஸ்கேல் 4” என்ற அளவில் இருக்கும். அதாவது, “அவற்றைக் குடிக்க முடியாது என்றாலும், அவற்றில் உயிர்ச்சூழல் ஆரோக்கியமாக இருக்கும் அளவுக்கு ஆற்றின் தரம் உயர்ந்திருக்கும்” என்கிறார் விஜயகுமார்.
அடையாறு முகத்துவாரத்தில் நிலைமை என்ன?
அடையாறு முகத்துவாரத்தில் வண்டல் எடுக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகக் கடந்த ஆண்டு அக்டோபரில் மாநில நீர்வளத்துறை தெரிவித்திருந்தது. ஆனால், அடையாறு மறுசீரமைப்புப் பணியின்போது, அடையாற்றின் முகத்துவாரம் முறையாகத் தூர்வாரப்படவோ, ஆழப்படுத்தப்படவோ இல்லையென்று மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் கட்டுப்பாட்டாளர் விஜயகுமார், “கடலோர பாதுகாப்பு மண்டலத்தின் அனுமதி வாங்கி, அதற்கென குறிப்பிட்ட திட்டம் வகுத்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் மட்டுமே முகத்துவாரப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது,” என்று கூறினார்.
பங்குனி ஆமை முட்டையிடும் காலம் உள்படப் பல்வேறு காரணங்களுக்காக மற்ற காலங்களில் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த விஜயகுமார், “இந்த மூன்று மாதங்களில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துள்ளோம். தற்போது வடகிழக்குப் பருவமழையின்போது ஆற்றில் நீரோட்டம் எப்படி இருக்கிறது என்பன போன்ற விஷயங்களையும் ஆய்வு செய்து, தரவுகளைச் சேகரித்த பிறகு, அடுத்த காலப் பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படும்,” என்றார்.
அடையாறு குறித்த தனது நினைவுகளையும் கனவுகளையும் பற்றிப் பேசிய மீனவர் பாளையம் இப்படிக் கூறினார்:
“அடையாற்றின் முகத்துவாரத்திலும், கழிமுகத்திலும் மட்டுமே ஷீலா, கோலா, வஞ்சிரம், கானாங்கெளுத்தி, மடவு என ஏகப்பட்ட மீன்களைக் கூடைகூடையாகப் பிடித்துள்ளோம். கடலில் இருந்து ஆற்றுக்குள் வந்த சுறா மீன்களும் அவ்வப்போது சிக்கியுள்ளன.”
“இந்த ஆற்றை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்தார்கள். சுருவலை, விசிறு வலை, மொடா வலை, ஓ வலை எனப் பல வகையான வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தோம். அவ்வாறான ஆரோக்கியமான நிலைக்கு இந்த ஆறு மீண்டும் திரும்புமா?”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு