காஸா போர்: பாலத்தீன மக்கள் எதிர்பார்க்கும் ஆதரவை அரபு நாடுகள் வழங்காதது ஏன்? என்ன சிக்கல்?

காஸா போர்: பாலத்தீன மக்களுக்கு ஆதரவளிக்க அரபு நாடுகள் அஞ்சுவது ஏன்? என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரபு நாடுகள் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட பாலத்தீனம் பற்றிப் பேசுகின்றன. ஆனால் வாய்மொழி ஆதரவைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.
  • எழுதியவர், போல ரோசாஸ்
  • பதவி, பிபிசி உலக சேவை

“அரேபியர்கள் எங்கே? அரேபிய மக்கள் எங்கே?”

இஸ்ரேலிய குண்டுவீச்சால் தகர்க்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளில் இருந்து தப்பிய ஒவ்வொரு காஸாவாசியும் கேட்கும் கேள்வி இதுதான்.

தங்கள் அரேபிய அண்டை நாடுகள் இஸ்ரேலிய குண்டுவீச்சில் இருந்து ஏன் தங்களைப் பாதுகாக்கவில்லை என்னும் கேள்வியை காஸா மக்கள் முன்வைக்கின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அனைவரின் பார்வையும் மத்திய கிழக்கின் பக்கம் திரும்பியது. இஸ்ரேலின் பதிலடி எவ்வளவு வலிமையாகவும் நீண்டதாகவும் இருக்கும் என்பதே அனைவரின் மனதிலும் எழுந்த கேள்வி.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் பிற அரசுகளும், மக்களும் இதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவர் என்பதும் முக்கியக் கேள்வியாக இருந்தது.

இஸ்ரேலின் பதலடி பற்றிய முதல் கேள்விக்கு இன்று வரை தெளிவான பதில் கிடைக்கவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இஸ்ரேலிய தாக்குதல்கள் காஸாவில் பேரழிவை ஏற்படுத்தியது. பாலத்தீன அதிகாரத்தின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுபடி, இதுவரை 42,500 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்போதும் தாக்குதல்களும் மரணங்களும் குறைந்தபாடில்லை.

இரண்டாவது கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி தெளிவாக உள்ளது. அரபு நாடுகளின் தலைநகரங்களில் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புகள் கிளம்பும் என்று எதிர்பார்க்கும் ஒவ்வொருவரும் ஏமாற்றமடைவார்கள்.

அரபு நாடுகளில் ஏராளமான மக்கள் பாலத்தீன மக்களை ஆதரித்து ஒற்றுமையுடன் நின்றாலும், அந்த நாடுகளில் எதிர்ப்புக் குரல் குறைவாகவே உள்ளது.

“இந்த விவகாரத்தில் அரபு அரசுகளைப் பொறுத்த வரை, அவர்களின் பதில் மிகவும் பலவீனமாக உள்ளது. அல்லது ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது” என்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியர் வலீத் காடியா பிபிசி முண்டோவிடம் கூறினார்.

இஸ்ரேல் மீது வைக்கப்படும் பாரம்பர்ய விமர்சனங்கள் மற்றும் இந்த மோதலில் மத்தியஸ்தம் செய்ய கத்தாரும் எகிப்தும் முன்வந்ததைத் தவிர வேறு எந்த வகையிலும் யாரும் பாலத்தீன மக்களுக்கு ஆதரவு வழங்கவில்லை,” என்று அவர் கூறுகிறார்.

“எந்த அரபு நாடும் இஸ்ரேலுடனான உறவை முறித்துக் கொள்ளவில்லை. இஸ்ரேல் மீதான ராஜ்ஜீய, பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆக மொத்தம், இந்தப் போரைத் தடுப்பதில் உதவக்கூடிய எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை’’ என்று வலீத் கூறுகிறார்.

இப்படியாக, பாலத்தீன பிரச்னை அதன் பிராந்தியத்தில் முக்கியத்துவத்தை இழந்தது ஏன்? மத்திய கிழக்கின் நிலைமையைக் கருத்தில் கொண்டால், இந்தக் கேள்விக்கான பதில் மிகவும் சிக்கலானது.

பொது மக்களின் கருத்துக்கும் அரசுக்கும் இருக்கும் இடைவெளி

காஸா போர்: பாலத்தீன மக்களுக்கு ஆதரவளிக்க அரபு நாடுகள் அஞ்சுவது ஏன்? என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்குவதற்கு முன்பே சௌதி அரேபியாவும் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்துவதற்கு நெருங்கிச் சென்றது.

அரபு நாடுகளின் வரலாற்றைப் பார்க்கும்போது , அரேபியர்கள் ஒரு அடையாளம், ஒரு மொழி, ஒரு மதம் எனத் தங்களை முன்னிறுத்துகின்றனர். அதே நேரம் இப்பகுதியில் ஐரோப்பிய காலனித்துவ செல்வாக்கினால் எழும் பதற்றங்களும் உள்ளன. இந்த நாடுகள் தங்களின் நலன்களுகாக ஒன்றுக்கொன்று மோதிக் கொள்கின்றன.

பாலத்தீன மக்களுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சுமூகமாக இல்லை. குறிப்பாக 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசு பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் ஏராளமான அகதிகளை வரவேற்ற நாடுகளுடன் பிரச்னைகள் எழுகிறது.

லெபனான் உள்நாட்டுப் போர் மற்றும் பாலத்தீன போராளிகளுக்கும் ஜோர்டானிய முடியாட்சிக்கும் இடையிலான மோதல்கள் பிராந்தியத்தின் மோசமான வரலாற்றை அடிக்கடி நினைவூட்டுகின்றன. ஆனால் பல காலமாக அரபு நாடுகள் ஒன்றிணைவதற்கு பாலத்தீன பிரச்னையும் ஒரு காரணமாக இருந்தது.

தோஹா இன்ஸ்டிட்யூட் ஃபார் கிராஜுவேட் ஸ்டடீஸின் பொதுக் கொள்கையின் இணைப் பேராசிரியர் திமூர் கர்முட் பிபிசியிடம் கூறுகையில், “இந்தக் காலக்கட்டத்தில் இஸ்ரேலிய அரசு முன்னாள் காலனித்துவ சக்திகளின் விரிவாக்கமாகவே பார்க்கப்படுகிறது. அவர்கள் மத்திய கிழக்கில் இருந்து வெளியேறினாலும், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இப்போது அமெரிக்கா உள்பட அவர்களின் நலன்களைப் பாதுகாக்க இஸ்ரேலை ஒரு முகவராகப் பயன்படுத்துகின்றனர்” என்று விவரித்தார்.

கடந்த காலங்களில் எகிப்து, சிரியா, ஜோர்டான் போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக நடத்திய போர்களில் தேச நலன்கள் இருந்தன. அதில் பாலத்தீனர்களும் பாதுகாக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அத்தகைய போர் இப்போது கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. எகிப்து மற்றும் ஜோர்டான் பல ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இஸ்ரேலுடனான உறவுகள் பிராந்தியத்தில் விரும்பத் தகாத ஒன்றாக இருந்தபோதிலும், மொராக்கோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகியவை இஸ்ரேலுடன் ராஜ்ஜீய உறவுகளை நிறுவியுள்ளன.

ஹமாஸ், இஸ்ரேலுக்கு இடையிலான போர் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்குவதற்கு முன்பே சௌதி அரேபியா இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்துவதற்கு நெருங்கிச் சென்றது.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் இஸ்ரேலிய ஆய்வு மையத்தைச் சேர்ந்த இயக்குநர் டோவ் வாக்ஸ்மேன் கருத்துப்படி, “பல காலமாக மற்றும் சமீபத்திய மோதலின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை, ஒவ்வொரு அரபு நாடும் அதன் சொந்த நலன்களைப் பாதுகாத்து வருகின்றது. அவர்கள் பாலத்தீனர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். அவர்களுடன் நிற்கின்றனர். அவர்களின் உணர்வுகளைப் பொய் எனச் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் தங்கள் தேசிய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்” என்றார்.

“அரபு உலகில் நிலவும் பொதுக் கருத்துகள் இஸ்ரேலுக்கு எதிராக வலுவாக உள்ளது” என்று சாதம் ஹவுஸில் உள்ள மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா திட்டத்தின் ஆராய்ச்சியாளர் இல்ஹாம் ஃபக்ரூ கூறுகிறார்.

அவர் கூறுகையில், “அரபு மக்கள் காஸாவில் பேரழிவைச் சந்தித்த மக்கள் மீது மிகுந்த அனுதாபம் கொண்டுள்ளனர். தங்கள் அரசுகள் பாலத்தீன மக்களுக்காக அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். தங்கள் நாடுகள் இஸ்ரேலுடனான ராஜ்ஜீய உறவுகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டிலிருந்து தூதர்களை வெளியேற்றுவதன் மூலம் எதிர்வினையாற்ற வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்” என்றார். ஆனால் அது இன்னும் நடக்கவில்லை.

வாஷிங்டன் டிசியில் உள்ள அரபு மைய சிந்தனைக் குழுவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு இயக்குநர் இமாத் ஹரிப் கூற்றுப்படி, அரபு அரசுகள் பாலத்தீன மக்களை நீண்ட காலத்திற்கு முன்பே கைவிட்டுவிட்டது.

அரபு நாடுகளில் நடந்த போராட்டங்கள்

காஸா போர்: பாலத்தீன மக்களுக்கு ஆதரவளிக்க அரபு நாடுகள் அஞ்சுவது ஏன்? என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2010ஆம் ஆண்டு `அரபு வசந்தம்’ (Arab Spring) என்னும் போராட்டத்திற்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறியது. மேலும் அந்த எழுச்சிகளின் தோல்வியானது இப்பகுதியை உறுதியற்ற தன்மைக்கு உள்ளாக்கியது.

ஏமன், சிரியா, இராக் போன்ற பல நாடுகள் இன்னும் உள்நாட்டுப் போர்களில் சிக்கித் தவிக்கின்றன. அரசியல் சித்தாந்தங்கள் கொண்ட, அமெரிக்காவுக்கு சவால் விடும் சக்தி வாய்ந்த இரு நாடுகளாக இருந்த சிரியா, இராக் ஆகிய நாடுகள் இன்று சர்வதேச அரசியல் களத்தில் இருந்து மறைந்துள்ளன. லிபியா காணாமல் போனது, எகிப்து பொருளாதார ஸ்திரமின்மையில் உள்ளது, சூடான் உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ளது.

திமூர் கூறுகையில், “இந்த நிரந்தரமான நெருக்கடிச் சூழலில், அரபு சமூகம் பாலத்தீன மக்களுக்கு அனுதாபம் காட்டுவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. காரணம் அரபு சமூகம் கொடுங்கோல் சர்வாதிகாரத்தின் கீழ் வாழ்கிறது.”

`அரபு வசந்தம்’ காலக்கட்டத்தில் இருந்து, இப்பகுதியில் பல நாடுகளில் போராட்டங்களுக்கு சாலைகளில் அனுமதியில்லை. முன்னர் அங்கு முடியாட்சி அரசுகள் பாலத்தீன மக்களைப் பாதுகாப்பதற்காக மக்கள் தங்கள் விரக்தியை ஆர்ப்பாட்டங்களில் வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டார்கள்.

ஆனால் இப்போது அப்படி நடக்க வாய்ப்பில்லை. இந்தப் போராட்டங்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்று அரபு அரசுகள் இப்போது அஞ்சுகின்றன.

துனிசியா, எகிப்து, லிபியா, சிரியா, பஹ்ரைன், மொராக்கோ போன்ற நாடுகளில் ஜனநாயகம் மற்றும் சமூக உரிமைகளைக் கோரி லட்சக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

காஸா போர்: பாலத்தீன மக்களுக்கு ஆதரவளிக்க அரபு நாடுகள் அஞ்சுவது ஏன்? என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, `அரபு வசந்தம்’ என்பது ஒரு வெகுஜன எழுச்சிப் போராட்டம்

திமூர் கூறுகையில், “`அரபு வசந்தம்’ என்பது ஒரு மிகப்பெரிய வெகுஜன எழுச்சி. அது பல நாடுகளின் சூழ்நிலைகளையும் முன்னுரிமைகளையும் மாற்றியது. சில பழைய அரசுகள் முடிவுக்கு வந்தன, மற்றவை தங்களுக்கும் இதேதான் நடக்கும் என்று அஞ்சின. அவர்கள் பாதுகாப்புக்காக இடதுபுறமும் வலதுபுறமும் பார்த்தார்கள். இந்தப் பிராந்தியத்தில் இஸ்ரேல் தங்களைப் பாதுகாக்கக் கூடிய நட்பு நாடு என்று கூறி அமெரிக்கா தங்களை முட்டாளாக்குவதாகப் பலர் நினைக்கத் தொடங்கினர்” என்றார்.

‘அரபு வசந்தத்திற்கு’ சில ஆண்டுகளுக்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது, ​​அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தபோது, இஸ்ரேலுடன் ராஜ்ஜீய உறவுகளை ஏற்படுத்த பஹ்ரைனும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஒப்புக்கொண்டன. மொராக்கோவும் சூடானும் பின்னர் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தன.

பதிலுக்கு, அமெரிக்கா அவர்களுக்கு உதவிகளை வழங்கியது. மேலும் மேற்கு சஹாரா மீதான மொராக்கோவின் இறையாண்மையை வாஷிங்டன் அங்கீகரித்தது.

“இஸ்ரேலுடனான அந்த நாடுகளின் உறவைப் பார்க்கும்போது, ​​இதன்கீழ் தங்கள் மக்களைக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உளவுக் கண்காணிப்பு அமைப்புகளை இஸ்ரேல் அவர்களுக்கு விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது” என்கிறார் வலீத்.

இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஒ (NSO) குழுமத்தால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் திட்டத்தைப் பயன்படுத்தி உளவு பார்த்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் மொராக்கோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், செளதி அரேபியாவையும் பாதித்துள்ளன.

நியூயார்க் டைம்ஸ் கூற்றுப்படி, ரியாத் இந்த கண்காணிப்பு அமைப்புத் திட்டத்தை 2017இல் வாங்கியது. துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள செளதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்ட பின்னர் அடுத்த ஆண்டு மென்பொருளுக்கான அணுகலைத் துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அழைத்தார், அதன் பிறகு அவர் மென்பொருளைத் திரும்பப் பெற முடிந்தது.

இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் மீதான பயம்

காஸா போர்: பாலத்தீன மக்களுக்கு ஆதரவளிக்க அரபு நாடுகள் அஞ்சுவது ஏன்? என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images

தேச நலன்களைத் தவிர, அரபு நாடுகளை பாலத்தீனப் பிரச்னையில் இருந்து விலகியிருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளிய மற்றொரு விஷயம், அந்த நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்கியதுதான்.

பேராசிரியர் வலீத் காடியாவின் கூற்றுப்படி, 1967 போருக்குப் பிறகு, யாசர் அராஃபத்தின் தலைமையில் இருக்கும்போது உருவான பாலத்தீன எதிர்ப்பின் முதல் அலை தேசியவாதமாகக் கருதப்பட்டது. ஆனால் இன்றைய எதிர்ப்பு பெரும்பாலும் மத அடிப்படையிலானது.

“இன்று பாலத்தீன நோக்கத்திற்காகப் போராடும் மக்கள் அடிப்படையில் இஸ்லாமியர்கள். அது ஹமாஸாக இருந்தாலும் சரி அல்லது ஹெஸ்பொலாவாக இருந்தாலும் சரி, அவர்களின் சித்தாந்தம் இஸ்லாத்தில் இருந்து வருகிறது.”

பிராந்தியத்தில் உள்ள பல அரசுகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய குழுவான முஸ்லிமீனுடன் (Muslimeen) ஹமாஸின் உறவுகள் அந்த அமைப்பை அச்சுறுத்தலாகக் கருத வைக்கிறது.

ஹமாஸை முஸ்லிம் சகோதரத்துவத்தின் கடைசி கோட்டையாகத்தான் பார்க்கிறேன் என்று கர்முட் கூறுகிறார், அது இன்னும் ராணுவ ரீதியாக பலமாக உள்ளது என்கிறார்.

இரானின் தலையீடு பற்றிய கவலைகள்

காஸா போர்: பாலத்தீன மக்களுக்கு ஆதரவளிக்க அரபு நாடுகள் அஞ்சுவது ஏன்? என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரபு நாடுகளை பாலத்தீனப் பிரச்னையில் இருந்து விலகியிருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளிய மற்றொரு விஷயம் அந்த நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்கியதுதான்.

இரான் உடனான ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலாவின் உறவுகள், அரபு நாடுகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, வளைகுடா நாடுகளுக்கு இஸ்ரேலைவிட இரான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

அரேபிய நாடுகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்பான கதைகள் அரசு ஊடகங்களில் பரவலாக வெளியிடப்படுகிறது. அதன்படி, ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள் இரானின் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன எனக் குற்றம் சாட்டப்படுகிறது. இவை பாலத்தீனர்களை புறக்கணிக்கும் அதே வேளையில் பிராந்திய அமைதித் திட்டங்களை நாசப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கர்முட் கூறுகிறார்.

அரேபிய நாடுகள் முழுவதிலும் உள்ள அரசு நடத்தும் பத்திரிக்கைகளில் பெரும்பாலானவற்றால் இந்தக் கதைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இது எந்தவொரு சுயாதீனமான ஊடகமும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பேராசிரியர் வலீத் கூறுகையில், “உதாரணமாக, செளதி ஊடகங்களுக்கு உண்மையான கவலை பாலத்தீனர்கள் அல்ல. ஆனால் இரான் எவ்வாறு பிராந்தியத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெறுகிறது என்பதுதான்” என்றார்.

ஹமாஸ் இப்போது இரானிடம் இருந்து ஆதரவையும் நிதி உதவியையும் பெறுவதாகக் கூறுகிறார் கர்முட். ஆனால் இந்த பாலத்தீன குழு நிறுவப்பட்டபோது, ​​அது பல அரபு நாடுகளுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தது, ஆனால் பின்னர் அரபு நாடுகள் இந்த இயக்கத்தின் வளர்ந்து வரும் சக்தியைப் பற்றிக் கவலைப்படத் தொடங்கின.

அரபு நாடுகள் தனக்கான கதவுகளை மூடிக்கொண்டபோது, ​​இஸ்ரேலுடன் போரிட யாரும் ஆயுதங்களைக் கொடுக்க விரும்பவில்லை, அவற்றைப் பெறுவதற்கு ஹமாஸ் எதையும் செய்யத் தயாராக இருந்ததாக அவர் கூறுகிறார்.

இரானிடம் இருந்து ஆதரவு பெற்று பாலத்தீனர்களைப் பாதுகாக்க முயலும் ஹெஸ்பொலா மற்றும் பிற குழுக்களுக்கும் இது பொருந்தும்.

வலீத் கூறுகையில், “இரானை தங்கள் ஆதரவாளராக முன்னிறுத்தும்போது அரபு மக்கள் கவனம் செலுத்துவதில்லை, மேலும் சில அரபு இயக்கங்கள் பாலத்தீனர்களை ஆதரிக்கவும் அவர்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக உள்ளன என்பது என் கருத்து. இதில் ஹெஸ்பொலா, ஹூத்திகள், ஏமன் மற்றும் இராக்கில் உள்ள சில ஷியா இயக்கங்களும் அடங்கும்,” என்றார்.

இன்றைய தலைமுறையினரின் போக்கு

காஸா போர்: பாலத்தீன மக்களுக்கு ஆதரவளிக்க அரபு நாடுகள் அஞ்சுவது ஏன்? என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இப்பகுதியில் உள்ள பெரும்பாலான இளைய தலைமுறையினர் பாலத்தீனர்களிடம் அனுதாபம் கொண்டுள்ளனர், ஆனால் அவர்களுக்கு மோதலின் காரணமும் வேரும் தெரியாது.

புவி மூலோபாய நலன்கள் மற்றும் அரபு நாடுகளின் நெருக்கடி தவிர, பாலத்தீன பிரச்னையும் காலப்போக்கில் மறக்கப்பட்டுவிட்டது. அரபு தேசியவாதம் போன்ற ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் உயிர்நாடியாகக் கருதப்பட்ட சித்தாந்தங்கள் இப்போது கடந்த காலத்தின் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

கர்முட் இதை விவரிக்கையில், “இப்பகுதியில் உள்ள பெரும்பாலான இளைய தலைமுறையினர் பாலத்தீனர்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு மோதலின் காரணமும் வேரும் தெரியாது. ஏனெனில் இது பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை. இன்று உலகமயமாக்கலுடன் இந்தச் சமூகமும் அடையாளமும் மாறிவிட்டது.”

புதிய தலைமைகள் மத்தியிலும் இந்த மாற்றம் நிகழ்கிறது.

“உதாரணமாக, வளைகுடா நாடுகளில், செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் போன்ற புதிய தலைமுறை தலைவர்கள் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் படித்தவர்கள். அவர்கள் பாலத்தீனத்தை ஒரு பிரச்னையாகப் பார்க்கவில்லை” என்று கர்முட் கூறுகிறார்.

இப்போது அவர்களின் முன்னுரிமைகள் மற்றும் தீர்மானங்கள் மாறிவிட்டதாக அவர் கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு