கமலா ஹாரிஸ்: அரசு வழக்கறிஞராக சாதித்தது என்ன? அதிபர் தேர்தலில் அது எப்படி பயனளித்தது?

கமலா ஹாரிஸ்: அரசு வழக்கறிஞராக சாதித்தது என்ன? அதிபர் தேர்தலில் அது எப்படி பயனளித்தது?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், லில்லி ஜமாலி
  • பதவி, பிபிசி செய்தியாளர், சான் பிரான்சிஸ்கோ

கமலா ஹாரிஸ் ஒரு அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்த ஆண்டுகள் அவர் இப்போது யார் என்பதை வெளிப்படுத்துகின்றன.

மூன்று மாதங்களுக்கு முன்பு, துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றி விவரிக்கும் வகையில் உரையாற்றினார்.

இதற்கு ஒரு நாள் முன்புதான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி, அவருக்குப் பதிலாக கமலா ஹாரிஸை ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவித்தார். சிறிதளவு நேரத்தைக்கூட வீணடிக்க முடியாத அளவுக்கு கமலா ஹாரிஸுக்கு மிகச் சொற்ப நேரமே பிரசாரம் மேற்கொள்ள இருந்தது.

அரசியலில் ஒரு பழமொழி உள்ளது: “நாம் யார் என்பதை நாமே உணர்த்த வேண்டும் அல்லது நாம் யார் என்பதை நம் எதிரிகள் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.”

கமலா ஹாரிஸ் முதன்முதலில் அமெரிக்க மக்களிடம் தனது பிரசாரத்தைத் தொடங்கியபோது, அவர் தன்னை வெள்ளை மாளிகையில் துணை அதிபராக இருந்ததை அல்லது அமெரிக்க செனட்டராக இருந்ததைத் தாண்டி, தன்னை கலிஃபோர்னியாவின் ஒரு அரசுத் தரப்பு வழக்கறிஞராக முன்நிறுத்திக் கொண்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பெண்களைத் துன்புறுத்துபவர்கள், நுகர்வோரிடம் மோசடி செய்பவர்கள், தங்கள் சொந்த லாபத்திற்காக விதிகளை மீறும் ஏமாற்றுக்காரர்கள் என எல்லா குற்றவாளிகளுக்கும் எதிராக நான் செயலபட்டேன். எனவே, நான் சொல்வதைக் கேளுங்கள்: டொனால்ட் டிரம்ப் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு தெரியும்” என்று அவர் குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்ப் பற்றிக் கூறினார்.

அறுபது வயதான அவர் தனது பிரசாரப் பேரணிகள் மற்றும் பேச்சுகளில் இந்த வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். ஏனெனில், அவர் டிரம்பின் பிரச்னைகளைத் தொடர்ந்து நினைவூட்டி வந்து இந்தத் தேர்தலை ஒரு வழக்கறிஞருக்கும் தண்டனை பெற்ற குற்றவாளிக்கும் இடையிலான போட்டியாக விவரிக்க முயல்கிறார்.

ஆனால் கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக இருந்த காலத்தை நினைவுகூர்ந்தால், அவர் தன்னை வரையறுத்துக் கொள்வதற்கான அவரது நீடித்த போராட்டத்தை வெளிப்படுத்துகிறது.

அவருடைய எதிரிகள் கூறுவது போல அவர் அரசியல் களத்திற்கேற்ப பிரச்னைகளை முன்னிறுத்தும் திறனும், மற்றவர்கள் தன்னைக் குறைத்து மதிப்பிடும்போது, கிடைத்த வாய்ப்புகளைக் கைப்பற்றும் அசாத்திய திறமையையும் அவர் கொண்டிருந்தார்.

தெருக்களில் கொலைகள் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அரசியல்

கமலா ஹாரிஸ்: அரசு வழக்கறிஞராக சாதித்தது என்ன? அதிபர் தேர்தலில் அது எப்படி பயனளித்தது?

பட மூலாதாரம், Getty Images

கமலா ஹாரிஸ் தனது சட்டப் பயணத்தை கலிபோர்னியாவின் அலமேடா கவுன்டியில் உள்ள சட்டப் பள்ளியில் தொடங்கினார்.

கடந்த 1990களில், அமெரிக்க அரசின் “போதைப்பொருள் மீதான நடவடிக்கைகளின்” மத்தியில், ஓக்லாந்தில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்தது.

ஒரு ஜூனியர் வழக்கறிஞராக இருந்த அவருக்கு, இந்தப் பணி கடினமானதாக இருந்தது. ஆனால் அங்கு எதிர்கொள்ள வேண்டிய வழக்குகளின் தீவிரமானது, ஓர் இளம், லட்சிய வழக்கறிஞருக்கு சிறந்த பணியாகப்பட்டது என்று அந்த நேரத்தில் கமலா ஹாரிஸுடன் பணியாற்றிய தெரேசா டிரெனிக் கூறினார்.

“ஒவ்வொரு நாளும் நாங்கள் எதிர்கொண்ட துக்கம் மற்றும் வேதனையின் அளவைக் கையாள்வது கடினமாக இருந்தது” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

“கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் உச்சத்தில் இருந்தது. கொலைக் குற்றங்கள் அதிகமாக இருந்தன, பட்டப் பகலில் கொலைகள் நடந்தன. ஓக்லாந்தில் இது போல நிறைய நடந்தன. ஒரு வழக்கறிஞர் இதுவரை கையாண்டிராத அளவிற்கு இது போலத் தீவிரமான வழக்குகளைக் கையாள வேண்டிய திறனை அது வளர்த்தது.”

தெரேசா டிரெனிக், கமலா ஹாரிஸ் இருவரும் ஒரே மாதிரியான வழக்குகளைக் கையாண்டனர். நீதிமன்றத்தில் கமலா ஹாரிஸ் வாதாடுவதை தெரேசா டிரெனிக் பாராட்டினார். மேலும் கமலா ஹாரிஸ் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கான அதே நீதிமன்றத்தில் வேறு அணிக்கு மாற்றப்பட்டபோதுதான் அவர் மீதான மரியாதை தெரசாவுக்கு அதிகரித்தது.

“வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளிடம் கமலா ஹாரிஸ் மிகவும் அக்கறையுடன் இருந்தார். அவர்களால் கமலாவிடம் மனம் திறந்து பேச முடிந்தது,” என்று அவர் கூறினார்.

அரசியல் உலகில் காலூன்றத் தொடங்கிய கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ்: அரசு வழக்கறிஞராக சாதித்தது என்ன? அதிபர் தேர்தலில் அது எப்படி பயனளித்தது?

பட மூலாதாரம், Getty Images

இந்தச் சமயத்தில்தான் கமலா ஹாரிஸ் உள்ளூர் அரசியல் கிங்மேக்கர் மற்றும் கலிபோர்னியா மாகாண சபாநாயகரான வில்லி பிரவுனை காதலித்தார்.

வில்லி பிரவுன், கமலா ஹாரிஸை இரண்டு மாகாண வாரியங்களுக்கு நியமித்தார் மற்றும் சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த ஜனநாயக கட்சியின் நன்கொடையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். 1995ஆம் ஆண்டு வில்லி பிரவுன் அந்நகரத்தின் மேயராக தேர்வு செய்யப்பட்டபோது அவருக்கும் கமலா ஹாரிஸுக்குமான உறவு முடிவுக்கு வந்தது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கமலா ஹாரிஸ் சான் பிரான்சிஸ்கோ மாகாண வழக்கறிஞர் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். தன்னைவிட 30 வயது மூத்தவரான வில்லி பிரவுனை அவர் காதலித்தபோது, கமலா ஹாரிஸ் அந்நகரின் சில அரசியல் பிரமுகர்களுடன் பழகத் தொடங்கினார்.

கமலா ஹாரிஸ் “ஒரு வெறுமையான விளையாட்டு” என்று விவரித்த சான் பிரான்சிஸ்கோவின் அரசியல் கட்டமைப்புதான், முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் மறைந்த செனட்டர் டியான் ஃபைன்ஸ்டீன் உட்பட நாட்டின் மிகப்பெரிய தலைவர்களின் அரசியல் வாழ்க்கையின் தொடக்கப் புள்ளியாக இருந்தது.

இவர்கள் இருவருடனும் கமலா ஹாரிஸ் நல்லுறவை உருவாக்கினார். மேலும் அரசியல் உலகில் காலூன்றத் தொடங்கினார்.

கமலா ஹாரிஸ் பகலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதடுவார், இரவில் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பது என அவர் சான் பிரான்சிஸ்கோவின் கடுமையான அரசியலில் விரைவான எழுச்சி கண்டார்.

இப்போதுதான் கமலா ஹாரிஸ் தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், குறிப்பிடத்தக்க நன்கொடையாளருமான லாரன் பவல் ஜாப்ஸை சந்தித்தார். இவர் ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2003ஆம் ஆண்டு கமலா ஹாரிஸின் சான் பிரான்சிஸ்கோ மாகாண வழக்கறிஞருக்கான பிரசாரத்திற்காக லாரன் பவல் ஜாப்ஸ் 500 டாலர்கள் நன்கொடை அளித்தார். அதில் கமலா ஹாரிஸ், அவரை வேலைக்கு அமர்த்திய நபரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் லாரன் பவல் ஜாப்ஸ், பைடன் – ஹாரிஸ் பிரசாரத்திற்கு சுமார் 1 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்ததாக பார்ச்சூன் இதழ் தெரிவித்துள்ளது. அதிபர் பதவிக்கான கமலா ஹாரிஸின் முயற்சிக்கு அவர் நேரடியாக எவ்வளவு பங்களித்தார் என்பது தெரியவில்லை, ஆனால் இந்த தொகை கணிசமானதாகக் கருதப்படுகிறது.

‘கொள்கைக்கு விதிவிலக்கு இல்லை’

கமலா ஹாரிஸ்: அரசு வழக்கறிஞராக சாதித்தது என்ன? அதிபர் தேர்தலில் அது எப்படி பயனளித்தது?

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2004ஆம் ஆண்டு ஈஸ்டருக்கு முந்தைய நாளில், சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞராக கமலா ஹாரிஸ் பதவியேற்ற நான்கு மாதங்களுக்குள், ஒரு கொலை கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் ஏ.கே-47 துப்பாக்கியைக் காட்டி 29 வயதான ஐசக் எஸ்பினோசா என்ற காவல் அதிகாரியைச் சுட்டுக் கொன்றார்.

இந்தப் படுகொலை நகரத்தையே திகைக்க வைத்தது. பல அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையின் முக்கிய உறுப்பினர்கள், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கோரி வந்தனர்.

கமலா ஹாரிஸ் மரண தண்டனையை எதிர்ப்பதை எப்போதும் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வழக்கின் முதன்மை வழக்கறிஞராக இருந்த அவர் குற்றவாளிக்கு பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனையை வழங்க முடிவு செய்தார். கொலை நடந்த 48 மணிநேரத்திற்குப் பிறகு, இறந்தவரின் மனைவியிடம் முன்கூட்டியே தெரிவிக்காமலே, மாவட்ட வழக்கறிஞராக இருந்த கமலா ஹாரிஸ் இந்த முடிவை எடுத்தார்.

“அவர் என்னை அழைக்கவில்லை, குடும்பத்தினருடன் ஆலோசிக்காமல் அவர் ஏன் கேமரா முன் அவ்வாறு சொன்னார் என்று எனக்குப் புரியவில்லை. அவர் அடக்கம் செய்யப்படும் வரை உங்களால் காத்திருக்க முடியாது என்பது போல் இருக்கிறது”, என்று இறந்தவரின் மனைவியான எஸ்பினோசா 2019ஆம் ஆண்டு சி.என்.என் சேனலிடம் கூறினார்.

கமலா ஹாரிஸ் ஒரு வேகமான பின்னடைவைச் சந்தித்தார். அந்த காவல்துறை அதிகாரியின் இறுதிச் சடங்கில் பேசிய செனட்டர் ஃபைன்ஸ்டீன், அந்தக் கொலையாளி “உரிய தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்று கூறினார். தேவலாயத்தில் இருந்து வெளியேறும்போது, கமலா ஹாரிஸ் மரண தண்டனைக்கு எதிரானவர் என்று தனக்குத் தெரிந்திருந்தால், அவர் கமலாவை ஆதரித்திருக்க மாட்டார் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

கமலா ஹாரிஸ்: அரசு வழக்கறிஞராக சாதித்தது என்ன? அதிபர் தேர்தலில் அது எப்படி பயனளித்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாவட்ட வழக்கறிஞராக இருந்தபோது, கமலா ஹாரிஸ் கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்க மாட்டோம் என்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

இதன் பிறகு “கொள்கையில் இருந்து என்றும் விலக முடியாது” என்று கமலா ஹாரிஸ் சான் பிரான்சிஸ்கோ கிரானிக்கிளில் ஒரு கட்டுரையில் தனது முடிவைப் பற்றி உறுதியாகக் குறிப்பிட்டார்.

அந்த நேரத்தில் கமலா ஹாரிஸின் இந்த முடிவை ஆதரித்த நீண்ட கால சிவில் உரிமை வழக்கறிஞர் ஜான் பர்ரிஸ், “அரசியல் ரீதியாக அவருக்கு இது நல்லதல்ல, ஆனால் இது அவரது தத்துவ நிலைப்பாடு”, என்று கூறினார்.

“அவர் தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்தார். அதற்காக அதன் விளைவுகளைக்கூட அவர் எதிர்கொண்டார். இதுவொரு சிறந்த முற்போக்கான நிலைப்பாடு” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

இந்தச் சம்பவம் அவரது அரசியல் வாழ்க்கையின் முடிவாக இருந்திருக்கலாம். ஆனால் தொழிலாளத் வர்க்க நகரமான ஓக்லாந்தில் தனது தாயுடன் மட்டுமே வளர்ந்த கமலா ஹாரிஸ் இதைப் பொருட்படுத்தாமல் இந்த அரசியல் பயணத்தை மேலும் தொடர்ந்தார்.

“அவர் ஓர் அரசியல் விலங்கா? முற்றிலும் இல்லை. அவர் இயல்பாகவே திறமைசாலியா? ஆம்” என்று 2010 மற்றும் 2014இல் கலிபோர்னியா மாகாண வழக்கறிஞருக்கான கமலா ஹாரிஸின் பிரசாரங்களை வெற்றிகரமான நிர்வகித்த பிரையன் ப்ரோகாவ் கூறினார்.

“கமலா ஹாரிஸ் அரசியலில் செயல்முறைகளைவிட இறுதி முடிவையும், மக்கள் வாழ்வில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்திலும் மட்டுமே கவனம் செலுத்தினார்” என்று அவர் கூறினார்.

கமலா ஹாரிஸ்: அரசு வழக்கறிஞராக சாதித்தது என்ன? அதிபர் தேர்தலில் அது எப்படி பயனளித்தது?

பட மூலாதாரம், Getty Images

சான் பிரான்சிஸ்கோ மாகாண வழக்கறிஞராகத் தனது முதல் முக்கிய முடிவில் இருந்து கமலா ஹாரிஸ் பல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இதேபோல ஒரு வழக்கில் மரண தண்டனையைத் தொடர மறுத்துவிட்டார். இந்த முறை, அவருடைய முடிவுக்கு என்ன எதிர்வினை வரும் என்பதை அவர் நன்றாகப் புரிந்துகொண்டார்.

டோனி போலோக்னா தனது மூன்று மகன்களுடன் சான் பிரான்சிஸ்கோவில் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தபோது, அவரது வாகனம் துப்பாக்கியால் சரமாரியாகத் தாக்கப்பட்டது. இதில் டோனி போலோக்னாவும் அவரது இரண்டு மகன்களும் கொல்லப்பட்டனர்; அவரது மூன்றாவது மகன் படுகாயமடைந்தார்.

அவர்கள் கொல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே, எம்.எஸ்-13 கும்பலின் ஆவணப்படுத்தப்படாத உறுப்பினரான எட்வின் ரமோன் உமானா என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் 49 வயதான போலோக்னாவை தனது எதிரி எனத் தவறாகக் கருதியுள்ளார்.

இந்த முறை, கமலா ஹாரிஸ் டோனி போலோக்னாவின் மனைவியிடம் தனது முடிவைக் பற்றிய கடினமான செய்தியைத் தானே தெரிவிக்க விரும்பினார், என்று டேனியல் போலோக்னாவின் வழக்கறிஞரான மாட் டேவிஸ் நினைவு கூர்ந்தார்.

“இந்த முடிவுக்கு டேனியல் மிகவும் வலுவாக, எதிர்மறையாக எதிர்வினையையாற்றுவார் என்பது ஆச்சரியமில்லை” என்று மாட் டேவிஸ் பிபிசியிடம் கூறினார்.

“அவர் தான் வருத்தமாக இருப்பதைத் தெளிவுபடுத்தினார், கமலா அவர் சொல்வதைக் கேட்டுத் தனது அனுதாபங்களை வெளிப்படுத்தினார். ஆனால் கமலா ஹாரிஸ் அவரது முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார்.”

இந்தச் சந்திப்பு மாட் டேவிஸ் மீது மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சட்டப் பள்ளியில் கமலா ஹாரிஸுடன் நட்பாக இருந்தார், மேலும் கமலா ஹாரிஸ் மாகாண வழக்கறிஞருக்காக பிரசாரம் செய்ய இருப்பதாகத் தெரிவித்தபோது, கமலா இதில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று கருதியதாக மாட் டேவிஸ் நினைவு கூர்ந்தார்.

ஆனால் அந்த வலிமிகுந்த உரையாடல், தான் கமலா ஹாரிஸை குறைத்து மதிப்பிட்டதை உணர்த்தியதாக அவர் கூறுகிறார்.

முற்போக்கு வழக்கறிஞரா?

கமலா ஹாரிஸ்: அரசு வழக்கறிஞராக சாதித்தது என்ன? அதிபர் தேர்தலில் அது எப்படி பயனளித்தது?

பட மூலாதாரம், Getty Images

அவர் வழக்கறிஞராக இருந்த சமயத்தில், பிற வழக்கறிஞர்கள் கமலா ஹாரிஸை குற்றங்களை எதிர்க்கும் கடுமையான ஒரு ‘முற்போக்கு வழக்கறிஞராக’ சித்தரிக்க முயன்றனர்.

அமெரிக்காவின் ஒரு மிகப்பெரிய இடதுசாரி சார்ந்த மாகாணத்தில் உள்ள ஒரு தாராளவாத நகரத்தில் ஒரு நடுநிலையான கருத்துடன் செயல்படுவது மிகவும் கடினம். இரு தரப்பில் இருந்து வரும் விமர்சனங்களையும் அவர் கண்டுகொள்ளவில்லை.

மாகாண வழக்கறிஞராக, அவர் “ஸ்மார்ட்-ஆன்-க்ரைம்” என்ற வழிமுறையைப் பின்பற்றினார். அதில் வன்முறை சம்பவங்களில் இல்லாத பிற குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்காமல் அவர்களுக்குப் வேலை செய்வதற்கான பயிற்சிகளை அளிப்பது, இளம் குற்றவாளிகளை சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்புவது போன்றவற்றைச் செய்தார்.

பாலியல் கடத்தலில் பாதிக்கப்பட்ட இளம் வயதினர் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்படாமல் எப்படி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்பது குறித்து அவர் கவலை கொண்டுள்ளார், என்று 2000களில் கமலா ஹாரிஸுக்கு எதிராகப் பணியாற்றிய வழக்கறிஞர் நிக்கி சோலிஸ் கூறினார்.

“மற்ற வழக்கறிஞர்கள் புரிந்துகொள்ளாத பிரச்னைகளைக்கூட கமலா ஹாரிஸ் புரிந்துகொண்டார் என்பதை நான் உணர்ந்தேன்” என்று நிக்கி சோலிஸ் கூறினார்.

கமலா ஹாரிஸ்: அரசு வழக்கறிஞராக சாதித்தது என்ன? அதிபர் தேர்தலில் அது எப்படி பயனளித்தது?

பட மூலாதாரம், Getty Images

டிரம்ப் மற்றும் அவரது வலதுசாரியினர், கமலா ஹாரிஸை “சான் பிரான்சிஸ்கோவின் தாராளவாத உயரடுக்கைச் சேர்ந்தவர்” என்று சித்தரிக்கின்றனர். இடதுசாரியினர் அவரை “கமலா தி போலீஸ்” என்று குறிப்பிட்டு கமலா ஹாரிஸ் சீர்திருத்த எண்ணம் கொண்டவர் அல்ல என்று குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் அவர், 2010ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் மாகாண வழக்கறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில், அவரது முற்போக்கான சித்தாந்தம், அவரது அரசியல் வாழ்க்கைக்கு வழிவகுத்தது.

“அவர் தேசிய அளவில் செல்வாக்கு மிக்கவர் என்ற அடையாளத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்க விரும்பினார். நிச்சயமாக அவருக்கு ஒரு சுவாரஸ்யமான எதிர்காலம் வரப் போகிறது” என்று கமலா ஹாரிஸிடம் சில மாதங்கள் மாகாண வழக்கறிஞர் அலுவலகத்தில் பணிபுரிந்த கில் டுரன் கூறினார்.

தேசிய அரங்கில், கமலா ஹாரிஸ் முத்திரை பதிக்கத் தொடங்கினார். 2012ஆம் ஆண்டு, உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, அரசு வழக்கறிஞர்கள் மற்றும் ஐந்து அமெரிக்க வங்கிகளுக்கு இடையிலான நிதித் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளில் இருந்து கமலா ஹாரிஸ் விலகிச் செல்வதாக அச்சுறுத்தினார்.

ஆரம்ப ஒப்பந்தத்தில் கலிபோர்னியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே பெறுவதாக இருந்தது. இறுதியில் கமலா ஹாரிஸ் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களை மாகாணத்திற்குப் பெற்றுத் தந்தார்.

கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தில் மக்கள் நலன்களுக்கு ஆதரவாக நிற்கத் தயாராக இருப்பதாக முன்னிறுத்தி இந்த வழக்கு குறித்துப் பல முறை குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மிகச் சமீபத்திய அறிக்கைப்படி, 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே கடன் கொடுத்தவர்களால் பறிக்கப்பட்ட கலிபோர்னியா வீட்டு உரிமையாளர்களிடம் சென்று சேர்ந்தது.

அதிபர் தேர்தலில் இருந்து வெளியேறிய கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ்: அரசு வழக்கறிஞராக சாதித்தது என்ன? அதிபர் தேர்தலில் அது எப்படி பயனளித்தது?

பட மூலாதாரம், Getty Images

கமலா ஹாரிஸ் மாகாணம் முழுவதும் பள்ளி நிறுத்தத் திட்டத்தைச் செயல்படுத்தினார். இந்தத் திட்டத்தின் மூலம் சில கவுன்டி வழக்கறிஞர்கள் பெற்றோரைக் கைது செய்யப் பயன்படுத்தினர். மேலும் கமலா ஹாரிஸ் மாகாண சிறைகளில் கூட்டத்தைக் குறைக்க உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறினார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மரண தண்டனை குறித்த தனது முந்தைய நிலைப்பாட்டை அவர் மாற்றினார். இதற்காக அவர் மாகாண வழக்கறிஞராக இருந்தபோது, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இப்போது, “கொள்கைக்கு விதிவிலக்கு இல்லை” என்ற அடிப்படையில் வன்முறைக் கொலைகாரர்களுக்கு மரண தண்டனை விதிக்க மறுத்த வழக்கறிஞர், அதைச் செய்வதற்கான அரசின் உரிமையைப் பாதுகாத்தார்.

குற்றவியல் நீதி மற்றும் சிவில் உரிமைகள் பேராசிரியரான ஹதர் அவிராம், கமலா ஹாரிஸிடம் இந்த முடிவைக் கைவிடுமாறு கோரினார். கமலா ஹாரிஸின் நிலைபாட்டை விமர்சித்தவர்களுள் இவரும் ஒருவர்.

“அநீதியான விஷயங்களைப் பாதுகாக்க உங்களுக்கு எந்தக் கடமையும் இல்லை. அவர்கள் அநியாயம் செய்தவர்கள் என்று நீங்கள் உண்மையிலேயே நம்பினால், ஒரு நிலைப்பாட்டை எடுக்க உங்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என்று கட்டாயம் நான் நினைக்கிறேன்” என்று கமலா 2019ஆம் ஆண்டு சி.என்.என். சேனலிடம் கூறினார்.

கமலா ஹாரிஸ் முதன்முதலில் ஓக்லாந்தை விட்டு வெளியேறியபோது அவருடன் பணிபுரிந்த முன்னாள் சான் பிரான்சிஸ்கோ மாகாண வழக்கறிஞர் லூயிஸ் ரென்னே, மரண தண்டனைக்கு அவர் அளித்த ஆதரவில் அவர் எதிர்கொண்ட விமர்சனங்கள் நியாயமற்றது என்று கூறினார்.

கமலா ஹாரிஸ்: அரசு வழக்கறிஞராக சாதித்தது என்ன? அதிபர் தேர்தலில் அது எப்படி பயனளித்தது?

பட மூலாதாரம், Getty Images

“நீங்கள் மாகாண வழக்கறிஞராக இருக்கும்போது, நீங்கள் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். அது உங்கள் கடமை. நான் அதை ஒரு பலவீனமாகவோ அல்லது ஒழுங்கான விமர்சனமாகவோ கருதவில்லை,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

ஆனால் கமலா ஹாரிஸ் எந்த சட்டரீதியான நடவடிக்கை அளிக்கப்பட வேண்டும் என்பதைச் சிந்தித்துத் தேர்வு செய்வார். கடந்த 2004ஆம் ஆண்டில், சான் பிரான்சிஸ்கோவின் மேயராக இருந்த கவின் நியூசோம், மாகாண சட்டத்தை மீறி, தன்பாலின திருமணங்களை அனுமதிக்க முடிவு செய்தபோது, கமலா ஹாரிஸ் சில திருமணங்களை நடத்த உதவினார். இது அவரது தொழில் வாழ்வின் “மிகவும் மகிழ்ச்சியான” தருணங்களில் ஒன்றாகும்.

கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க செனட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்தபோது, வழக்கறிஞராக அவரது பணி சிக்கலானதாக இருந்தது.

கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தில் பேசிய வார்த்தைகளின் ஒரு பகுதியாக உள்ள, “மக்களுக்காக” என்ற சொல்லை முதன்முதலில் உச்சரித்த அதே இடமான அலமேடா கவுன்டி நீதிமன்றத்தில் இருந்துதான் தனது 2020 அதிபர் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.

ஆனால் அவரது பிரசாரத்தின் மத்தியில், ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற ஒரு கறுப்பினர் கைது செய்யப்பட்டபோது காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் பிரச்னையைத் தூண்டியதோடு, குற்றவியல் நீதி சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகள் எழத் தூண்டியது.

கமலா ஹாரிஸ் இதற்கு முன்பு மரண தண்டனை மற்றும் சிறை சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது அவரது கட்சியை இடதுசாரிகள் விமர்சிக்க வித்திட்டது.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான முதன்மைப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் இருந்து வெளியேறினார்.

அதிபர் வேட்பாளராக மீண்டும் களத்தில்

கமலா ஹாரிஸ்: அரசு வழக்கறிஞராக சாதித்தது என்ன? அதிபர் தேர்தலில் அது எப்படி பயனளித்தது?

பட மூலாதாரம், Getty Images

இப்போது, டொனால்ட் டிரம்பிற்கு எதிராக கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்காக பிரசாரம் செய்யும்போது, அவர் மீண்டும் தான் வழக்கறிஞராக இருந்தபோது செய்த நன்மைகளில் கவனம் செலுத்துகிறார். அதை தற்போதைய புதிய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்துள்ளார்.

ஃபிலாய்டின் கொலைக்குப் பிறகு சான் பிரான்சிஸ்கோ உள்படப் பல நகரங்கள் முற்போக்கான காவல்துறை சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த சோதனை செய்தபோது, கொரொனா தொற்றுநோய் காலத்தில் “சாஃப்ட் ஆன் க்ரைம்” திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. குடியரசுக் கட்சியினர் சமீபத்திய ஆண்டுகளில் குற்றம் மற்றும் பொதுப் பாதுகாப்பு தொடர்பாக பிரசாரம் செய்வதில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.

கமலா ஹரிஸ் வழக்கறிஞராக இருந்தது தற்போது ஒரு பலமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டில், இடதுசாரி ஜனநாயகக் கட்சியினரை வெற்றிகொள்ள ஹாரிஸ் முயன்று கொண்டிருந்தார். தற்போது அவர், டிரம்பின் செயல்பாடுகளால் சோர்வடைந்திருக்கும் குடியரசுக் கட்சியினருக்காக இப்போது வெளிப்படையாகக் குறிவைத்து வருகிறார்.

கமலா ஹாரிஸ்: அரசு வழக்கறிஞராக சாதித்தது என்ன? அதிபர் தேர்தலில் அது எப்படி பயனளித்தது?

பட மூலாதாரம், Getty Images

இதைச் செய்ய, எல்லைப் பாதுகாப்பில் இருந்து, சுகாதாரப் பாதுகாப்பு வரை தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். இதனால் அவரது எதிர்ப்பாளர்கள் கமலா ஹாரிஸை குற்றம் சாட்டி வருகின்றனர்.

அவர் “ஒரு பச்சோந்தி” என்று துணை அதிபர் வேட்பாளர் மற்றும் ஓஹாயோ செனட்டர் ஜே.டி.வான்ஸ் ஆகஸ்ட் மாதம் சி.என்.என். சேனலிடம் கூறினார். “அவர் ஒரு விதமான பார்வையாளர்களுக்கு முன்னால் ஒரு மாதிரியும் மற்றொரு விதமான பார்வையாளர்களுக்கு முன்பாக வேறொரு மாதிரியும் நடிக்கிறார்” என்று வான்ஸ் விமர்சித்தார்.

ஆனால் இதை அரசியல் உத்தி என்றும் அரசியல் நடைமுறைவாதத்தின் அடையாளமாகவும் பார்க்கிறார், கமலா ஹாரிஸின் முன்னாள் சக ஊழியரான டுரன்.

“அவருக்கு மன உறுதி இருப்பதாக நான் நினைக்கிறேன், ஆனால் அதை மட்டும் வைத்து ஒரு பிரசாரத்தை நடத்துவது மிகவும் கடினம். நாம் இப்போது பார்க்கும் கமலா ஹாரிஸ் கருத்துக் கணிப்பு மற்றும் தேர்தல் குழுவின் மீது மட்டும் கவனம் செலுத்தும் நபராக இருக்கிறார்,” என்று அவர் கூறினார்.

ஹாரிஸ் உண்மையில் எதை நோக்கி நிற்கிறார் என்பது அவரது தொழில் வாழ்க்கை முழுவதும் அவரைத் தூண்டிய ஒரு கேள்வியாக இருந்து வருகிறது. மேலும் அதிபர் பதவிக்கான அவரது முயற்சியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ஆனால் அவரது முன்னாள் பிரசார மேலாளரான ப்ரோகாவை பொறுத்தவரை, “கமலா ஹாரிஸ் எப்போதும் தனது சொந்த விதிமுறைகளில் செயல்பட்டு வருகிறார்.”

“அவர் தனது சொந்தப் பாதையில் பயணிக்கிறார். மேலும் அவரைக் குறைத்து மதிப்பிட்ட மக்களை அவர் என்றும் பொருட்படுத்தவில்லை,” என்று அவர் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.