கொள்கை ரீதியான அரசியல்வாதிகளை மாத்திரமே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யுமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது வாக்காளர்களின் முழுமையான கடமையாகும். வாக்காளர்கள் தங்களது மதிப்புமிக்க வாக்குகளை தற்காலிக மானியச் சலுகைகளுக்காக அளிக்கக் கூடாது.
சட்டங்கள் இயற்றப்படும் இடம் உண்மையிலேயே சுத்தமான இடமாக இருக்க வேண்டும். பாராளுமன்றத்திற்கு புத்திஜீவிகளை தெரிவு செய்வது இன்றியமையாதது என சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இரண்டு அரசியல் கட்சிகள் மாத்திரமே இம்முறை பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இம்முறை தேர்தலில் 59 அரசியல் கட்சிகள் போட்டியிடுவதாகவும் 57 கட்சிகளின் பிரசார நடவடிக்கைகள் மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து வேட்பாளர்களின் ஒட்டுமொத்த பிரசாரம் மிகவும் குறைவாக உள்ளது. இம்முறை பொதுத் தேர்தலில் அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
வன்முறைகளும் மிகக் குறைந்த மட்டத்திலேயே பதிவாகியுள்ளன. தேர்தல் பிரசாரங்களுக்கு சமூக வலைத்தளங்களின் பாவனையும் இம்முறை குறைந்துள்ளது. இது ஒரு சிறந்த சூழ்நிலையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுடன் தொடர்புடையஇ 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஆறு வேட்பாளர்களும் அடங்குவர். இதுவரை 46 வாகனங்களை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். தேர்தல் தொடர்பாக 168 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
குற்றச் செயல்கள் தொடர்பான 30 முறைப்பாடுகளும்இ தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 138 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஆயிரத்து 259 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவற்றில் 13 முறைப்பாடுகள் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.