குஜராத் மீனவர்கள் கடலில் அதிக மீன்களைப் பிடிக்க டால்பின்கள் உதவுவது எப்படி?
- எழுதியவர், லக்ஷ்மி பட்டேல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
குஜராத்தில், கட்ச் முதல் பாவ்நகர் வரையிலான கடற்கரை ‘டால்பின்களின் வீடு’ என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தில் டால்பின்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
குஜராத் வனத்துறை நடத்திய ‘2024 டால்பின் கணக்கெடுப்பு’ தரவுகளின்படி, 4,087 சதுர கி.மீ கடலோரப் பகுதியில் 680 டால்பின்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியப் பெருங்கடல் ஹம்பேக் டால்பின்களும் குஜராத்தின் கடலோரப் பகுதியில் காணப்படுகிறது.
குஜராத்தில் டால்பின்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உட்பட பல முயற்சிகள் வனத்துறையால் மேற்கொள்ளப்பட்டன.
மீனவர்கள் கடலின் ஆழ்பகுதிகளில் மீன்களைப் பிடிக்க டால்பின்கள் மிகவும் உதவிகரமாக உள்ளன. எனவே, குஜராத் மீனவர்கள் டால்பின்களைக் கொல்வதோ, பிடிப்பதோ இல்லை, அதை அவர்கள் புனிதமானதாகக் கருதுகிறார்கள்.
மீனவர்களுக்கு டால்பின்கள் எவ்வாறு உதவுகின்றன?
மங்கரோல் பண்டாரின் ‘தரியாலால் படகு சங்கத்தின்’ தலைவர் ஜெதாபாய் கோசியா, 35 ஆண்டுகளாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
பிபிசியிடம் பேசிய ஜெதாபாய், “டால்பின்கள், மீனவர்களால் மிகவும் மதிக்கப்படுகின்றன. மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது டால்பின் மீன்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. டால்பின் மீன்கள் தனியாக பயணிப்பதில்லை” என்றார்.
“மற்ற மீன்கள் டால்பின்களுடன் இணைந்து குழுவாக பயணிக்கும். ஆனால் அந்த மீன்கள் கடலின் மேற்பரப்பில் காணப்படுவதில்லை. டால்பின்கள் விளையாடும் போது கடலின் மேற்பரப்பில் குதிப்பதைக் காணலாம். எனவே டால்பின் மீன்கள் இருக்கும் பகுதியில் வலைகள் அல்லது கயிறுகள் போடப்படுகின்றன. இதனால் மீனவர்களுக்கு அதிகளவிலான மீன்கள் கிடைக்கின்றன.” என்று ஜெதாபாய் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “சூரை மீன்கள் (Tuna) 50 முதல் 60 கிலோ வரை இருக்கும். சூரை மீன்கள் டால்பின்களைச் சுற்றியே செல்லும். டால்பின்கள் தென்படும் இடங்களில் சூரை மீன்களை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். சூரை மீன் மட்டுமல்ல, மற்ற மீன்களையும் கண்டுபிடிக்க டால்பின்கள் உதவுகின்றன.” என்றார்.
இருப்பினும், டால்பின்களிடம் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும். டால்பின்கள் பெரிய துடுப்புகளைக் கொண்டுள்ளன. அந்தத் துடுப்பு ஒரு சிறிய படகில் மோதினால், படகில் பெரும் சேதம் ஏற்படும்.
மனுபாய் தண்டேல் என்ற மீனவர் கூறுகையில், “எங்களுக்கு டால்பின்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அரசு தடை விதிக்கும் முன் கூட நாங்கள் டால்பின்களை பிடித்ததில்லை. தவறுதலாக வலையில் டால்பின்கள் சிக்கினால் கூட, வலைகளைக் கிழித்து அவற்றை காப்பாற்றுகிறோம். கடலில் டால்பின்கள் நமக்கு மிகவும் முக்கியம்.” என்றார்.
குஜராத் வனத்துறை கூறுவது என்ன?
கட்ச் மேற்குப் பிரிவின் துணை வனப் பாதுகாவலர் யுவராஜ் சிங் ஜாலா, பிபிசியிடம் பேசுகையில், “கட்ச் வளைகுடாவில் ஆழமற்ற பகுதிகள் இருப்பதால் டால்பின்களை வேட்டையாடும் பெரிய மீன்கள் வேட்டையாட அங்கே வருவதில்லை. எனவே டால்பின்கள் இனப்பெருக்கம் செய்வதற்கும், அவற்றின் குஞ்சுகளை வளர்ப்பதற்கும் மிகவும் சாதகமான சூழல் இங்கு உள்ளது.” என்கிறார்.
”டால்பின்களை பாதுகாத்து, அதன் எண்ணிக்கையை அதிகரிக்க, வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பல்வேறு முயற்சிகளால், டால்பின்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.” என்று அவர் கூறினார்.
குஜராத் மாநிலத்தின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கட்ச் வளைகுடாவின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் தேசிய பூங்கா மற்றும் கடல் சரணாலயத்தின் (ஓகாவிலிருந்து நவல்கி வரை நீண்டுள்ள) 1,384 சதுர கிமீ பரப்பளவில் அதிகபட்சமாக 498 டால்பின்கள் உள்ளன.
கட்ச் வளைகுடாவின் வடக்குப் பகுதியில், கட்ச் வட்டத்திற்குட்பட்ட 1,821 சதுர கி.மீ பரப்பளவில் 168 டால்பின்களும், பாவ்நகரின் 494 சதுர கி.மீ கடற்கரையில் 10 டால்பின்களும், மோர்பியின் 388 சதுர கி.மீ.யில் 4 டால்பின்களும் காணப்பட்டன. ஆக மொத்தம் 4,087 சதுர கிமீ கடல் பகுதியில் சுமார் 680 டால்பின்கள் தென்பட்டுள்ளன.
டால்பின்கள் பற்றிய கூடுதல் விவரங்களை அளித்து, மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் முகேஷ் படேல் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், “இந்தியப் பெருங்கடல் ஹம்ப்பேக் டால்பின்கள் குஜராத்தின் கடலோரப் பகுதியில் காணப்படுகின்றன. ஹம்ப்பேக் டால்பின்கள் பெரும்பாலும் அரபிக்கடலில் காணப்படுகின்றன. இது அதன் தனித்துவமான நீளமான முதுகுத் துடுப்பு அல்லது வால் மூலம் அடையாளப்படுத்தப்படுகிறது. டால்பின்கள் அடிக்கடி அலைகளில் குதித்து விளையாடுவதைக் காணலாம். அதன் கவர்ச்சியான உடலும், ‘பாட்டில்’ வடிவ வாயும் அவற்றை எளிதில் அடையாளம் காண உதவுகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு ‘கங்கை டால்பின்’ என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 5, 2009 அன்று இந்திய அரசு டால்பினை இந்தியாவின் ‘தேசிய நீர்வாழ் விலங்கு’ என்று அறிவித்தது.
குஜராத் மீனவர்களின் மீன்பிடி முறைகள்
பிபிசியிடம் பேசிய ‘வெராவல் பிடியா கர்வா சமாஜ் படகு சங்கத்தின்’ தலைவர் ரமேஷ்பாய் டல்கி, “ஆழ்கடலில், டால்பின்களைச் பின்தொடர்ந்து சென்று மீன்பிடிக்கப்படுகிறது. டால்பின்கள் வெளியே வரும் போது பிற மீன்களுக்கான வலை வீசப்படுகிறது. சூரை (Tuna) மீன்கள் இந்த வலையில் விழுகின்றன.” என்று கூறுகிறார்.
மீன்பிடி முறைகளைப் பற்றிப் பேசுகையில், “குஜராத் மாநிலத்தில் 4 முதல் 5 முக்கிய ஆழ்கடல் மீன்பிடித்தல் முறைகள் பின்பற்றப்படுகின்றன” என்று ரமேஷ்பாய் கூறுகிறார்.
இழுவை மீன்பிடி முறையில் (Trawling) ஆழ்கடலில் வலைகளை விட்டு, படகில் கட்டி இழுத்துச் செல்லப்படும். அதில் மீன்கள் கிடைக்கும். அதுவே வலை மீன்பிடி முறையில் (Net Fishing), கடலில் வலை வீசிய பிறகு, படகில் கட்டி வைக்கப்படுகிறது. அது இழுத்துச் செல்லப்படாது. பிறகு குறிப்பிட்ட நேரத்தில் வலையை படகிற்குள் இழுக்கிறார்கள்.
இது தவிர, லைன் ஃபிஷ்ஷிங் (Line Fishing) முறை மிகவும் ஆபத்தானது. இந்த மீன்பிடி முறையில் கடலில் விளக்குகளை போட்டு தண்ணீர் சூடாக்கப்படுகிறது. இதில் சிக்கும் மீன்கள் இறந்து விடும், பின் வலைகள் மூலம் அவை வெளியே இழுக்கப்படுகின்றன. இந்த மீன்பிடி முறையில் மீன்களுடன் குஞ்சுகளும் இறக்கின்றன. இந்த மீன்பிடி முறை ‘மான்ஸ்டர் ஃபிஷ்ஷிங்’ (Monster fishing) என்றும் அழைக்கப்படுகிறது.
“இந்த மீன்பிடி முறை குஜராத்தில் பின்பற்றப்படவில்லை. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது. ” என்று ரமேஷ்பாய் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.