ஸ்பெயின் வெள்ள அனர்த்தம்: மன்னர் மற்றும் இராணி மீது சேற்றை வீசிய மக்கள்!!

by guasw2

ஸ்பெயினின் வலென்சியாப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இதுவரை 214 பேர் கொல்லப்பட்டனர். மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் வெள்ள அனர்த்தத்தைப் பார்வையிடச் சென்ற அந்நாட்டின் அரசர் மன்றும் இராணி மீது  கோபமடைந்த மக்கள் சேறு மற்றும் பிற பொருட்களைக் கொண்டு வீசினர்.

முகம் மற்றும் ஆடைகளில் சேறு பூசப்பட்ட நிலையில், மன்னன் ஃபெலிப்பே மற்றும் இராணி லெடிசியாவும் பின்னர் மக்களை ஆறுதல்படுத்துவதைக் காண முடிந்தது.

கோபமடைந்த மக்கள் அரச குடும்பத்தைக் கொலைகாரன் மற்றும் அவரது வருகை அவமானம் எனக் கூச்சலிட்டனர்.

ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் வலென்சியன் பிராந்திய அரசாங்கத்தின் தலைவர் கார்லோஸ் மசோன் ஆகியோர் இந்த விஜயத்தில் அரச குடும்பத்துடன் இணைந்தனர். பிரதமர் பைபோர்டா நகரத்தின் வழியாக நடந்து வந்தபோது ஏற்பட்ட சலசலப்பை அடுத்து அவரும் அங்கிருந்து வெளியேறினார்.

வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வலென்சியா மாகாணத்தில் உள்ள மற்றொரு நகரமான சிவாவிற்கு அரச குடும்பம் செல்ல எண்ணியிருந்தனர். மக்களின் எதிர்ப்பால் அந்த வருகையும் ஒத்திவைக்கப்பட்டது

வெள்ளத்திற்குப் பின்னர் அதிகாரிகளிடமிருந்து போதிய எச்சரிக்கை மற்றும் போதிய ஆதரவு இல்லாததால் மக்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் இன்னும் இறந்து கொண்டிருக்கிறார்கள். என்னால் இதை இனி தாங்க முடியாது. அசர அதிகாரிகள் எங்களை இறக்க விட்டுவிட்டார்கள். நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம்: எங்கள் வணிகங்கள், எங்கள் வீடுகள், எங்கள் கனவுகள் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டோம் என்று அந்த மக்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

மக்களின் கோபத்தையும் விரக்தியையும் நாங்கள் புரிந்து கொண்டோம் என அரச குடும்பத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கில்  மன்னர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்