வரலாறு படைத்த நியூசிலாந்து – 24 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரில் ‘ஒயிட் வாஷ்’ ஆன இந்திய அணி

இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது நியூசிலாந்து அணி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று நியூசிலாந்து அணி புதிய வரலாறு படைத்தது.

இதுபோன்ற வரலாற்று வெற்றியை நியூசிலாந்து அணியினர் இந்திய மண்ணில் இறங்கியபோது நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

புனே டெஸ்ட் போட்டியைப் போன்று இந்த ஆட்டமும் 3 நாட்களில் முடிந்துள்ளது. மும்பை வான்ஹடே மைதானத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி. 147 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி, 29.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 25 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி 106 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியின் விளிம்பில்தான் இருந்தது. ஆனால், கடைசி 4 விக்கெட்டுகளை 15 ரன்களுக்குள் இழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் தொடரின் ஆட்டநாயகனாக இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்திய அஜாஸ் படேல் மற்றும் தொடர் நாயகனாக நியூசிலாந்து பேட்டர் வில்யங்(244 ரன்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நியூசிலாந்து புதிய வரலாறு

நியூசிலாந்து அணி, இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்து, வெற்றி பெற்றது இதுவே முதல்முறை.

பெங்களூரு, புனே டெஸ்ட் போட்டிகளின் வெற்றியால் முதல்முறையாக டெஸ்ட் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

இப்போது மும்பையில் கிடைத்த வெற்றியால், முதல்முறையாக இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்துள்ளது.

முதல்முறையாக ஒயிட் வாஷ்

இந்திய அணி முதல்முறையாக உள்நாட்டில் 2 டெஸ்ட் போட்டிகளுக்கும் அதிகமான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆவது இதுதான் முதல்முறை. இதற்கு முன் கடைசியாக 2000ஆம் ஆண்டில் மறைந்த ஹன்சி குரோனியே கேப்டன்சியில் இந்தியா வந்த தென் ஆப்பிரிக்கா அணியிடம் 2-0 என்ற கணக்கில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகியிருந்தது.

அப்போது இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக இருந்தார். அதன்பின் 24 ஆண்டுகளுக்குப் பின் ரோஹித் சர்மா கேப்டன்சியில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகியுள்ளது. ஆனால், இது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்

India vs New Zealand Test Match

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள்தான் முக்கியக் காரணம். 3வது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் நம்பிக்கை பேட்டர்கள் பெரிதாக யாரும் ரன் குவிக்கவில்லை. ஆனால், அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ஈஷ் சோதி ஆகியோர் இந்திய ஆடுகளத்தை நன்கு பயன்படுத்தினர். இரு இன்னிங்ஸிலும் சேர்த்து அஜாஸ் படேல் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

புனே டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு அந்த அணியின் மிட்செல் சான்ட்னர் சுழற்பந்துவீச்சாளரின் பங்கு துருப்புச்சீட்டாக இருந்தது. புனே டெஸ்டில் சான்ட்னர் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவர் இந்தப் போட்டியி்ல் பங்கேற்கவில்லை.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்சை அமைத்து இந்திய அணி தன்னுடைய சுழற்பந்துவீச்சின் பலத்தை வெளிநாட்டு அணிகளிடம் காண்பித்து வந்தது.

ஆனால், இந்த முறை இந்திய அணியின் ஆயுதத்தையே எடுத்து அவர்களைத் தாக்கும் வித்தையை நியூசிலாந்து அணி பயன்படுத்தியுள்ளது.

இலக்கு அடைய முடியாத அளவுக்கு இருந்ததா?

டெஸ்ட் போட்டியில் 147 ரன்கள் வெற்றி இலக்கு எளிதாக அடைந்துவிடக்கூடிய இலக்குதான். விராட் கோலி, ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, கில், ரிஷப் பந்த், சர்ஃபிராஸ் கான், ஜடேஜா போன்ற வலிமையான பேட்டர்களை வைத்திருக்கும் இந்திய அணியால் எளிதாக வெல்லக் கூடிய இலக்கு தான் இது.

டி20 போட்டிகளில் 20 ஓவர்களில் 200 ரன்களுக்கும் மேல் சேஸ் செய்துள்ள இந்திய அணி 80 ஓவர்களில் 147 ரன்களை சேஸ் செய்யாமல் வீழ்ந்துள்ளது.

இந்திய அணிக்கு கெளதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக வந்தபின் இந்திய அணி சந்திக்கும் மாபெரும் தோல்வி இது. வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 என வென்றாலும், இந்தத் தொடரை 3-0 என இந்திய அணி இழந்துள்ளது.

அதேபோல இலங்கைக்கு எதிராகவும் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது. இதிலிருந்து இந்திய அணியினர் டி20 ஆட்டத்தின் பாணியில் இருந்து பழமையான டெஸ்ட் ஆட்ட பாணிக்கு இன்னும் வர முடியாமல் தவிப்பதாகவும் விவாதிக்கப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்வது கடினம்

India vs New Zealand Test Match

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்ததைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்குச் சரிந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணி 14 டெஸ்ட் போட்டிகளில் 5 தோல்வி, 8 வெற்றிகள், ஒரு டிரா என 98 புள்ளிகளுடன், வெற்றி சதவீதம் 58.33 ஆகக் குறைந்துவிட்டது.

இதற்கு முன் ஆஸ்திரேலிய அணியின் 62.50 சதவீதத்தைவிட அதிகமாக இருந்தது. டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆன பிறகு இந்திய அணியின் வெற்றி சதவீதமும் குறைந்துவிட்டது.

இதனால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்வதும் கடினமாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை குறைந்தபட்சம் 4-0 அல்லது 5-0 என்று வென்றால் மட்டுமே இந்திய அணி 3வது முறையாக பைனலுக்கு முன்னேற முடியும்.

ஆனால், ஆஸ்திரேலிய அணியை சொந்த மண்ணில் வைத்து 5-0 என்று வெல்வது சாத்தியமானது அல்ல.

இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கும் நிலையில் இந்த டெஸ்ட் தொடர் தோல்வி இந்திய அணிக்குப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

ரிஷப் பந்த் மட்டுமே நம்பிக்கை

India vs New Zealand Test Match

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி 147 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கியது. இதில் ரிஷப் பந்த்(64) ஒருவர் மட்டுமே அரைசதம் அடித்தார். ரோஹித் சர்மா(11), வாஷிங்டன் சுந்தர்(12) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

இதில் குறிப்பாக சீனியர் பேட்டர்கள் எனக் கூறப்படும் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் பெரிதாக எந்த ரன்னும் சேர்க்கவில்லை. கடைசி டெஸ்டில் இருவருமே சொதப்பலாக பேட் செய்து சொற்ப ரன்களையே சேர்த்தனர்.

டி20 போட்டியில்கூட 200 ரன்களை எளிதாக சேஸ் செய்து சாதனை படைத்த இந்திய அணி, 3 நாட்கள் வரை, 240 ஓவர்கள் வரை மீதம் இருந்தும், 147 ரன்களை சேஸ் முடியாமல், 29.1 ஓவர்களில் சுருண்டுள்ளது.

147 ரன்கள் இலக்கு

India vs New Zealand Test Match

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்து அணி நேற்றைய 2வது நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்ஸில் 43.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து, 143 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இன்று காலை ஆட்டம் தொடங்கியவுடன் அஜாஸ் படேல் 8 ரன்களில் ஆட்டமிழக்கவே நியூசிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 45.5 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 147 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆடுகளம் 3வது நாளில் இருந்து சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும், நாட்கள் செல்லச் செல்ல சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால், தொடக்கத்திலேயே நியூசிலாந்து அணி அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ் ஆகியோருக்கு பந்துவீச வாய்ப்பளித்தது.

ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் ஜோடி, 147 ரன்கள் வெற்றி இலக்கை விரைவாக அடையும் நோக்கில் களமிறங்கினர். ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா(11) இந்த முறையும் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்து, ஹென்றி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி 3வது ஓவரிலேயே வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கில் ஒரு ரன்னில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். 4வது விக்கெட்டுக்கு வந்த விராட் கோலி(1) இந்த முறையும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். அஜாஸ் படேல் பந்துவீச்சில் மிட்ஷெலிடம் கேட்ச் கொடுத்து கோலி விக்கெட்டை பறிகொடுத்தார்.

India vs New Zealand Test Match

பட மூலாதாரம், Getty Images

கிளென் பிலிப்ஸ் பந்துவீ்ச்சில் கால்காப்பில் வாங்கி ஜெய்ஸ்வால் (5) ரன்னில் பெவிலியன் திரும்பினார். சர்ஃபிராஸ் கான் ஒரு ரன்னில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ரச்சினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சொந்த மண்ணில் சர்ஃபிராஸ் கான் இரு இன்னிங்ஸிலும் மோசமான பேட்டிங்கை பதிவு செய்தார். 8 ஓவர்களுக்குள் இந்திய அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

இந்திய பேட்டர்களின் பதற்றத்தையும், கவனமாக பேட் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தையும் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்தி, ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் மட்டுமே வீசினர். கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் ஒரு பந்தைத் தவறாக ஆடினாலும், விக்கெட் வீழ்ந்துவிடும் என்ற ரீதியில் இந்திய பேட்டர்கள் பதற்றமாக டிஃபென்ட்ஸ் செய்து விக்கெட்டை இழந்தனர்.

ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா கூட்டணி மட்டும் ஓரளவுக்கு நிலைத்து ஆடி 41 ரன்கள் சேர்த்தது. இதுதான் அதிகபட்ச பார்ட்னர்ஷிப். முதல் இன்னிங்ஸில் ஆடியதைப் போன்று அதிரடியாக பேட் செய்த ரிஷப் பந்த், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகள் உள்பட 48 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ரிஷப் பந்த் களத்தில் இருந்தவரை இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால், ரிஷப் பந்த் 64 ரன்கள் சேர்த்த நிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிளென்டலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் ஆட்டமிழந்த பின், இந்திய பேட்டர்கள் அடுத்த 15 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தனர்.

‘ஜீரணிக்க முடியாத தோல்வி’

India vs New Zealand Test Match

பட மூலாதாரம், Getty Images

டெஸ்ட் தொடரை இழந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “டெஸ்ட் தொடரையும், போட்டியையும் இழந்தது சாதாரணமான விஷயமில்லை. இதை ஜீரணிக்க முடியாது. நாங்கள் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்தத் தொடர் முழுவதும் நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடினர்,” என்று கூறினார்.

தாங்கள் ஏராளமான தவறுகளைச் செய்துவிட்டதாகக் கூறிய ரோஹித் சர்மா, “முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸ்களில் போதுமான ரன்கள் குவிக்கவில்லை. இந்த ஆட்டத்தில் 28 ரன்கள்தான் முன்னிலை பெற்றோம். எளிதான இலக்குதான் அதைக்கூட அடைய முடியவில்லை. அணியாக நாங்கள் தோற்றுவிட்டோம்,” என்றார்.

மேலும், “எங்களுக்கு இது உண்மையில் துர்அதிர்ஷ்டமான டெஸ்ட் தொடராக அமைந்தது. ஒரு கேப்டனாக நான் சிறப்பாகச் செயல்படவில்லை. ஓர் அணியாக நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம்,” எனத் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு