அமெரிக்க அதிபர் தேர்தல்: அரபு அமெரிக்கர்களின் ஆதரவு கமலா ஹாரிஸ், டிரம்ப் இருவரில் யாருக்கு?
- எழுதியவர், ரபீட் ஜபூரி, மிச்சிகனில் இருந்து
- பதவி, பிபிசி அரபி
அமெரிக்க அதிபர் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், மிச்சிகனின் அரபு அமெரிக்க சமூகம் ஒரு குழப்பத்தில் மூழ்கியுள்ளது எனக் கூறலாம்.
இங்குள்ள 15 தேர்வாளர் வாக்குகள் (Electoral votes, தேர்தலின் முடிவை தீர்மானிப்பதில் முக்கியம் என்று கருதப்படுபவை) சமநிலையில் இருப்பதால், பல அரபு அமெரிக்கர்கள் முன்னெப்போதையும் விட சிக்கலானதாக உணரும் ஒரு முடிவை எடுக்கும் தருணத்தில் இருக்கிறார்கள்.
கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இடையே யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற முடிவு அவர்களுக்கு அவ்வளவு எளிதானது அல்ல. உள்நாட்டுப் பிரச்னைகள், மத்திய கிழக்கு மோதல்கள் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று நினைக்கும் வாக்காளர்களுக்கு இது மிகவும் சிக்கலானது.
இரு வேட்பாளர்களுக்கும் இடையிலான போட்டியை நவீனகால வரலாற்றில் மிக நெருக்கமான ஒன்றாக கருத்துக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் தற்போது தேசிய வெகுஜன வாக்குகளில் முன்னிலையில் உள்ளார்.
எனினும், அமெரிக்கத் தேர்தல்களில் அடிக்கடி நடப்பதைப் போல, தேர்வாளர் குழு முறையே இறுதியில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும். எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாயலாம் என்று கருதப்படும் முக்கியமான மாகாணங்களில் மிச்சிகனும் ஒன்று என்பதால் இதன் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இங்குள்ள அரபு அமெரிக்கர்கள், குறிப்பாக அதிக அரபு மக்கள்தொகை கொண்ட டியர்பார்ன் போன்ற நகரங்களால், வாக்குகளை திசை திருப்ப முடியும். இந்த இடங்களில் பொதுவாக வெற்றி தோல்வி மிகச் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
மாறுபட்ட, பிளவுபட்ட சமூகம்
மிச்சிகனில் உள்ள அரபு அமெரிக்கர்கள் அனைவரும் ஒரே விதமாக வாக்களிக்கக் கூடியவர்கள் என்று கூற முடியாது. மாகாணம் முழுவதிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கையில், அரசியல் சார்புகளும், முன்னுரிமைகளும் மிகவும் வேறுபடுகின்றன. இவை அவர்களுடைய மாறுபட்ட கலாசாரப் பின்னணிகள் மற்றும் அமெரிக்க உள்நாட்டு, வெளியுறவுக் கொள்கை பற்றிய அவர்களுடைய கண்ணோட்டங்கள் இரண்டையும் பிரதிபலிக்கின்றன.
டியர்போர்னில் உள்ள பொருளாதார மற்றும் சமூக சேவைகளுக்கான அரபு சமூக மையத்தில் அரபு அமெரிக்க சமூகங்களுக்கான தேசிய அமைப்பை இயக்கும் ரிமா மெரூஹ், அரபு வாக்குகளைத் துல்லியமாக எண்ணுவது சிரமமானது என்று பிபிசியிடம் கூறினார்.
“அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அரேபியர்களை ஒரு தனித்துவமான இனக் குழுவாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இதனால் அவர்களின் எண்ணிக்கையைக் கூறுவது கடினம். ஆனால் மிச்சிகனில் குறைந்தது 300,000 அரபு அமெரிக்க வாக்காளர்கள் இருக்கின்றனர்,” என்று மெரூஹ் மதிப்பிடுகிறார்.
இந்த எண்ணிக்கைகளைப் புரிந்துகொள்ள மிச்சிகனில் கடந்த ஆண்டுகளில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். டிரம்ப் 2016இல் மிச்சிகனில் வெறும் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2020இல் ஜோ பைடன் இந்த மாகாணத்தைக் கைப்பற்றியபோது, 100,000 வாக்குகள் வித்தியாசம் இருந்தன.
எனவே அரபு வாக்காளர்கள் மிச்சிகனின் வாக்காளர்களில் ஒரு சிறிய பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அத்தகைய நெருக்கமான போட்டியில் அவர்களால் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்.
பாரம்பரியமாக, அரபு அமெரிக்க வாக்காளர்கள் ஒரு பிரச்னையை மையப்படுத்தி அணி திரண்டதில்லை என்றாலும், இந்தத் தேர்தல் வித்தியாசமானது என்கிறார் மெரூஹ்.
காஸா போருக்குப் பிறகு, ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல அரபு அமெரிக்கர்கள் கவனம் செலுத்தும் ஒரு முக்கியப் பிரச்னையாக மத்திய கிழக்கு விவகாரம் உள்ளதாகக் கூறுகிறார் மெரூஹ்.
எனினும் எதிர்காலத்தின் பாதை எப்படி இருக்க வேண்டும் என்பதில் அரபு வாக்காளர்களுக்கு வெவ்வேறு கருத்துகள் இருக்கின்றன. டிரம்பின் “அமெரிக்கா முதலில்” நிலைப்பாடு அந்தப் பிராந்தியத்தில் போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பும் சிலர் அவரை ஆதரிக்கின்றனர்.
மற்றவர்கள் ஹாரிஸ் ராஜ்ஜீய ரீதியாக ஈடுபடுவதற்கும் நீண்டகால தீர்வுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளதாக வாதிடுகின்றனர். இதுபோக, பசுமைக் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டெயினை ஆதரிக்கும் ஒரு குழு உள்ளது. இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவு குறித்த அவரது விமர்சனம் அவர்கள் மத்தியில் ஆழமாக எதிரொலிக்கிறது.
மத்திய கிழக்கு கொள்கை குறித்த போராட்டம்
கமலா ஹாரிஸ் அரபு சமூகத்துடன் நட்புறவுடன் இருக்க முயன்று வருகிறார். மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் கொண்டு வருவதை நோக்கிச் செயல்படுவதாக உறுதியளித்தார். அதே நேரத்தில் இஸ்ரேலுக்கு ஜனநாயகக் கட்சியின் நீண்டகால ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், அவர் பாலத்தீனியர்களின் உரிமைகள் குறித்தும் பேசியுள்ளார். பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு, கண்ணியம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுவொரு நுணுக்கமான நிலைப்பாடு, ஆனால் சாம் அப்பாஸ் போன்ற வாக்காளர்களை இதன் மூலம் ஈர்ப்பது கடினமான காரியம்.
தனது பரபரப்பான டியர்போர்ன் உணவகத்தில் அமர்ந்து பேசிய அப்பாஸ், பல அரபு அமெரிக்கர்களின் விரக்தியை வெளிப்படுத்துகிறார். மத்திய கிழக்கில் சிந்தப்படும் ரத்தத்திற்கு பைடனும் ஹாரிஸும் நேரடியாகப் பொறுப்பாவதாக அவர் கூறுகிறார். அவருக்குத் தெரிந்த அனைவரும் ஹாரிஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள்.
இந்தத் தேர்தல் ஒரு குழப்பத்தை உண்டாக்கியுள்ளதாக அப்பாஸ் கூறுகிறார். “இரண்டு தீமைகளில் குறைந்த தீமை” ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார் அவர். அவர் யாருக்கு வாக்களிப்பார் என்பது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் தேர்தல் நாளில் தனது முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.
மறுபுறம், டிரம்ப். அவரது குடியேற்றக் கொள்கை முஸ்லிம்-விரோத, அரபு-விரோத அணுகுமுறையாக பலரால் பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் சார்பு நிலைப்பாடு மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவருக்கு நெருக்கமான உறவுகள் இருந்தபோதிலும், ஆச்சர்யப்படும் எண்ணிக்கையிலான அரபு அமெரிக்கர்களின் ஆதரவை டிரம்பால் வென்றெடுக்க முடிந்தது.
அவர் அதிபராக இருந்தபோது போர்கள் எதுவும் வெடிக்கவில்லை என்ற அவரது கூற்று, அவர் பதவியில் இருந்திருந்தால் யுக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று அவர் வலியுறுத்தியது, மோதல்கள் வேண்டாம் என்று நினைப்பவர்களிடம் எடுபட்டுள்ளது.
தனது அரபு நாட்டு சம்பந்தி மசாத் பவுலோஸை குறிப்பிட்டு டிரம்ப் பேசி வருகிறார். மசாத் பவுலோஸின் மகன், டிரம்பின் மகள் டிஃப்பனியை திருமணம் செய்துள்ளார். விரைவில் பிறக்கவிருக்கும் தனது பேரக்குழந்தை பாதி அரபு பின்னணியை கொண்டிருக்கும் என்பதை அவர் வெளிப்படையான பெருமிதத்துடன் குறிப்பிட்டு வருகிறார்.
மாறும் விசுவாசம்
ஜனநாயகக் கட்சி மீது உண்டாகியுள்ள விரக்தி, அரபு அமெரிக்க சமூகத்திற்குள் இன்னும் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது. முதலில் பைடனை கைவிடுங்கள் என்றும், இப்போது கமலா ஹாரிஸை கைவிடுங்கள், என்ற பெயரிலும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு பிரசாரம் வேகம் எடுத்துள்ளது.
அரபு மற்றும் முஸ்லிம் பிரச்னைகளுக்கு உதட்டளவில் சேவை செய்வதாகவும், அதே நேரத்தில் மத்திய கிழக்கில் வன்முறை தொடர்வதற்கு ஜனநாயகக் கட்சி, உடந்தையாக இருப்பதாகவும் அந்த பிரசாரத்தின் நிறுவனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரசாரத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஹசன் அப்தெல் சலாம், இந்த எதிர்ப்பு ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு எதிரானது அல்ல, ஆனால் ஜனநாயகக் கட்சியின் இஸ்ரேல் சார்பு நிலைப்பாட்டிற்கான பதிலடி என்று வாதிடுகிறார்.
“இரண்டு அரசியல் கட்சிகளும் வெறுக்கத்தக்கவை என்ற முடிவுக்குத் தாங்கள் வந்துள்ளதாக,” அவர் கூறுகிறார், முஸ்லிம் அமெரிக்கர்கள் வாக்களிக்க அணிதிரள வேண்டும், ஆனால் அவர்கள் “இரண்டு அரசியல் கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்.
டிரம்புக்கு ஆதரவாக தராசுகளை சாய்க்கும் அபாயம் இருந்தாலும்கூட, இந்தக் குழு பசுமைக் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டெய்னை வழிமொழிந்துள்ளது. அரபு மற்றும் முஸ்லிம் குரல்களைப் புறக்கணித்தமைக்கு ஜனநாயகக் கட்சியினர் பொறுப்பேற்க வேண்டும் என்று அப்தெல் சலாம் கூறுகிறார்.
ஏமன்-அமெரிக்க அரசியல் ஆர்வலரும் ரியல்-எஸ்டேட் முகவருமான சமாரா லுக்மேன் நீண்டகாலமாக ஜனநாயகக் கட்சியை ஆதரித்து வருகிறார். இருப்பினும், இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு வாக்களிக்க அவர் முடிவு செய்துள்ளார்.
அரபு அமெரிக்க சமூகத்தினர் மத்தியில் டிரம்பின் பிரசார அணுகுமுறையை அவர் சுட்டிக்காட்டுகிறார். டிரம்பின் பிரசாரக் குழுவினரால் தனிப்பட்ட முறையில் அவர் தொடர்பு கொள்ளப்பட்டார். பிரசார பேரணிகளுக்கு மத்தியில் முன்னாள் அதிபர் டிரம்பை அவர் சந்தித்தார். அந்தச் சந்திப்பு, டிரம்ப் மீதான பார்வையை வெகுவாக மாற்றியுள்ளதாகக் கூறுகிறார்.
அந்த உரையாடலின்போது டிரம்ப் “மனிதாபிமானத்தை” வெளிப்படுத்தியதாக அவர் கூறுகிறார். அரசியல்ரீதியாக, டிரம்ப் எந்தவித தூண்டுதலும் இல்லாமல், “மத்திய கிழக்கில் போரை நிறுத்த” வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியபோது, காஸாவில் நடந்து வரும் போர் குறித்த சமாராவின் சொந்தக் கவலைகளை டிரம்ப் முன்கூட்டியே கணித்திருந்ததைப் போல் இருந்தது என அவர் ஆச்சர்யப்பட்டார்.
தனக்குத் தெரிந்த பல அரபு அமெரிக்கர்களின் வாக்குகளுடன் சேர்ந்து தனது வாக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருக்கும் என்று அவர் நம்புகிறார். அதுகுறித்துப் பேசியபோது, “இதுவொரு தண்டனை வாக்கு,” என்று சமாரா கூறினார்.
அரபு வாக்காளர்களை கமலா ஹாரிஸ் வெல்ல முடியுமா?
மிச்சிகனில் டிரம்புக்கான ஆதரவு அதிகரித்து வந்தாலும், ஜனநாயகக் கட்சி விட்டுக் கொடுக்கவில்லை. பல அரபு அமெரிக்கர்களிடையே வலுவான ஆதரவைப் பெற்றிருந்த கட்சி அது. குறிப்பாக செப்டம்பர் 11 தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்தின் மீதான பாதிப்புகளுக்குப் பின்னர் ஜனநாயகக் கட்சி இந்த சமூகத்தினரிடம் ஆதரவு பெற்று வந்தது.
மிச்சிகனில் உள்ள ஜனநாயக கிளப்பின் தலைவரான சமி காலிதி, அரபு வாக்காளர்களை வெல்ல கமலா ஹாரிஸுக்கு இன்னமும் நேரம் இருப்பதாக நம்புகிறார்.
“காஸாவை மீண்டும் கட்டியெழுப்பவும், பாலத்தீனியர்களுக்கு அதிக மனிதாபிமான உதவிகளைக் கொண்டு வரவும்” ஹாரிஸ் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். “காஸாவை மீண்டும் ஆக்கிரமிப்பதில்” கமலா ஹாரிஸுக்கு உடன்பாடு இல்லை எனவும், அது அரபு அமெரிக்க வாக்காளர்களை ஈர்ப்பதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார்.
அரபு அமெரிக்கர்களுக்குத் தேவையான மற்றும் தகுதியான அங்கீகாரத்தை வழங்கும் ஒரே அரசியல் அமைப்பு ஜனநாயகக் கட்சி மட்டுமே என்று காலிதி கூறுகிறார். மத்திய கிழக்கிற்கான கமலா ஹாரிஸின் அணுகுமுறை அதிபர் பைடனின் அணுகுமுறையில் இருந்து வேறுபடுவதாகவும் அரபு அமெரிக்கர்களுக்கு மிகவும் சாதகமானது என்றும் அவர் நம்புகிறார்.
எவ்வாறாயினும், சமூகத்தில் பலருக்கு அவரது கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து தெரியாது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆகையால், இந்தச் சமூகத்துடன் ஈடுபாடு மற்றும் தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஜனநாயகக் கட்சி தொடர வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதையும் காலிதி வலியுறுத்துகிறார்.
விரக்தி மற்றும் அக்கறையின்மை
ஆனால் சிலருக்கு, அரசியல் கட்சிகள் எவ்வளவு முயன்றாலும், அது ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. பாலத்தீன-அமெரிக்க கலைஞரான ஜெனைன் யாசின் வாக்களிப்பதை முற்றிலுமாகப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, இஸ்ரேல் மீதான அமெரிக்க கொள்கை ஒரு சமரசத்திற்கு இடமில்லாத பிரச்னை. பாலத்தீனியர்களுக்கு எதிரான ஒரு “இனப்படுகொலை”யை இரண்டு வேட்பாளர்களும் ஆதரிப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
இந்தத் தேர்தலில் இருந்து விலகியிருக்க யாசின் எடுத்துள்ள முடிவு பல அரபு அமெரிக்கர்களால் உணரப்படும் ஆழ்ந்த விரக்தியைப் பிரதிபலிக்கிறது.
அரபு அமெரிக்கர்களைப் பொறுத்தவரை, “பாலத்தீனமே எங்கள் முழு பிரச்னை” என்பதை ஜனநாயகக் கட்சியினர் புரிந்து கொள்ளவில்லை என்கிறார் அவர். மேலும் பாலத்தீனர்களுக்கு அதே உரிமைகளைக் கோராதபோது, “கருக்கலைப்பு, பெண்கள் உரிமைகள், இனப்பெருக்க நீதி குறித்து அக்கறை காட்டுவதாக” கூற முடியாது என்பதையும் ஜனநாயகக் கட்சி புரிந்து கொள்ளவில்லை என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், எதிர்காலம் குறித்த நம்பிக்கை தெரிவதாக அவர் கூறுகிறார். இளம் தலைமுறை மத்தியில், இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்க கொள்கைகளுக்கு எழும் எதிர்ப்புக் குரல் அதற்கான குறியீடாக இருப்பதாகவும் ஜெனைன் யாசின் குறிப்பிடுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு