தீபாவளியன்று இந்தியா ஒளிர்வதை காட்டும் நாசா புகைப்படமா இது? உண்மை என்ன?
- இந்தப் படத்தைப் பார்த்தீர்களா?
ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு இந்த படம் சமூக ஊடகங்களில் ஆச்சரியத்தக்க அளவில் பார்வைகள், கிளிக்குகள், கருத்துகளைப் பெற்று வைரலாகி வருகிறது. ஆனால் இந்தப் படம் எல்லோரும் நினைப்பதைப் போல் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
தீபாவளிப் பண்டிகையின் போது ஒளிரும் இந்தியாவின் செயற்கைக்கோள் படம் என்ற பெயரில் தொடர்ந்து ஆன்லைனில் வெளிவந்து, உலகின் பெரும்பாலான பகுதிகளில் பரவலான கவனத்தை ஈர்க்கிறது. இருப்பினும், இந்தப் படத்தின் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. இது உங்கள் சமூகத்தில் நீங்கள் பார்ப்பதைக் குறித்து கேள்வி கேட்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதுடன், சமூக வலைதளங்களில் காணும் அல்லது கேட்கும் எல்லாவற்றையும் முழுமையான உண்மையாக ஏற்றுக்கொள்வது குறித்த கேள்வியையும் எழுப்புகிறது.
- இந்த படம் இவ்வளவு கவன ஈர்ப்பைப் பெறுவது ஏன்?
தீபாவளியின் போது, பல இந்துக்கள் தங்கள் வீடுகள், கடைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை தியாஸ் (களிமண் விளக்குகள்) மற்றும் பிற விளக்குகளால் அலங்கரிப்பார்கள்.
இதனால், தீபாவளி அன்று இரவு இந்தியா முழுவதும் விளக்குகள் பரவியதைக் காட்ட சிலர் இந்தப் படத்தை எடுத்துப் பயன்படுத்துகின்றனர்.
- படம் உண்மையில் எதைக் காட்டுகிறது?
இந்தப் படம் உண்மையில் அமெரிக்காவில் செயல்படும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் (NOAA) உருவாக்கப்பட்ட பல்வேறு படங்களின் கலவையாகும். 1992 மற்றும் 2003 க்கு இடையில் நகரங்களில் காணக்கூடிய ஒளியின் மாற்றத்தை எடுத்துக்காட்டுவதன் மூலம், இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சியை முன்னிலைப்படுத்துவதை இப்படங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தன.
படத்தில் வெள்ளை நிறத்தில் தெரியும் பகுதிகள் 1992 ஆம் ஆண்டுக்கு முன் காணப்பட்ட நகர விளக்குகளைக் காட்டுகின்றன. நீல நிறங்கள் 1992 இல் தோன்றிய விளக்குகளைக் குறிக்கின்றன. அதே நேரத்தில் பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள் முறையே 1998 மற்றும் 2003 இல் தோன்றியவற்றைக் குறிக்கின்றன.
- தீபாவளி இரவில் இந்தியா உண்மையில் எப்படி இருக்கும்?
தீபாவளி ‘விளக்குகளின் திருவிழா’ என்று அழைக்கப்பட்டாலும், துரதிர்ஷ்டவசமாக, இந்த விழாவில் பயன்படுத்தப்படும் விளக்குகள் விண்வெளியில் இருந்து படம்பிடிக்க முடியாத அளவுக்கு மிகவும் சிறிதாக இருக்கின்றன.
“தீபாவளியின் போது வைக்கப்படும் விளக்குகளால் வெளிப்படும் எந்த கூடுதல் ஒளியும் மிகவும் நுட்பமானது. அது விண்வெளியில் இருந்து பார்க்கும் போது அது கண்ணுக்கு தெரியாத வகையில் மிகவும் சிறிதாக இருக்கும்” என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில், தீபாவளி இரவில் இந்தியா எப்படி இருக்கிறது என்று படம் பிடித்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.