அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்பின் அதிகம் அறியப்படாத பக்கங்கள்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் முழுவதும், இரண்டு அதிபர் வேட்பாளர்களின் பலதரப்பட்ட புகைப்படங்கள் அமெரிக்க வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. அந்த வேட்பாளர்கள் மேடைகளில் இருந்து பேசுவது, பேரணியில் கூட்டத்தை நோக்கி கையசைப்பது மற்றும் விமானத்தின் படிக்கட்டுகளில் இருந்து இறங்குவது போன்ற புகைப்படங்கள்.
ஆனால், இந்தக் கட்டுரையில், அதிகம் அறியப்படாத புகைப்படங்கள் வழியாக, அந்த இரண்டு வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பின்னணி குறித்த ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தை நாம் காணப் போகிறோம்.
மேலே உள்ள புகைப்படம், வெள்ளை மாளிகை என்றால் என்ன என்பதை டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் புரிந்து கொள்வதற்கு முன்பே, அவர்களுக்கு மூன்று வயதாக இருக்கும்போது எடுக்கப்பட்டது.
பல்லாண்டுக்கால இடைவெளியில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹாரிஸ் தனது இளம் பருவத்தை கலிஃபோர்னியாவின் ஓக்லாந்தில் கழித்தார். குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் நியூயார்க் பெருநகரத்தின் குயின்ஸில் வளர்ந்தார்.
கமலா ஹாரிஸ் (கீழே உள்ள இடதுபக்க படத்தில், இடமிருந்து முதலில் இருப்பவர்) மற்றும் அவரது சகோதரி மாயா (நடுவில்) ஆகியோர் இந்தியாவை சேர்ந்த அவர்களின் தாய் ஷியாமளா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப்பட்டார்கள். ஷியாமளா கோபாலன் ஹாரிஸ், ஒரு புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மற்றும் சமூக ஆர்வலர்.
டொனால்ட் டிரம்பின் தந்தை பிரெட் டிரம்ப், ஜெர்மனியில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் மகன். அவரது தாயார் மேரி ஆன் மெக்லியோட் டிரம்ப், ஸ்காட்லாந்தில் பிறந்தவர். டிரம்பின் பெற்றோர், அவரை 13 வயதில் நியூயார்க் ராணுவ அகாடமியில் சேர்த்தனர்.
கமலா ஹாரிஸ் கனடாவின் மாண்ட்ரீயலில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஐந்து ஆண்டுகள் படித்தார். அவரது தாயார் அங்குள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பிக்கும் பணியை மேற்கொண்டார்.
பின்னர் கமலா ஹாரிஸ் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள, முதன்மையான மற்றும் பழமையான கறுப்பின கல்லூரிகளில் ஒன்றான ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.
டொனால்ட் டிரம்ப், ‘நியூயார்க் ராணுவ அகாடமியில் 1959ஆம் ஆண்டில் தொடங்கி ஐந்து ஆண்டுகள், தனக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், தனது தலைமைத்துவ திறன்களை வடிவமைக்க அது உதவியதாகவும்’, ஒருமுறை தெரிவித்திருந்தார்.
பின்னர் வியட்நாம் போரில் அவர் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால் கல்வி காரணங்களுக்காகவும், ஒருமுறை எலும்பு முறிவு ஏற்பட்டதாலும் அது ஒத்தி வைக்கப்பட்டது.
சிறு வயதிலிருந்தே, ஹாரிஸின் தாயார் சிவில் உரிமைகள் இயக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அவருக்குக் கற்பித்து வந்தார். கமலா ஹாரிஸ், 2004இல் வாஷிங்டனில் நடைபெற்ற ‘வருடாந்திர மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சுதந்திர அணிவகுப்பில்’ கலந்துகொண்டார்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் பள்ளியில் பட்டம் பெற்ற டிரம்புக்கு, அவரது தந்தைக்குப் பிறகு குடும்ப வணிகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கான ஆதரவு குடும்பத்திடம் இருந்து கிடைத்தது.
கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவுக்கு திரும்பினார், அங்கு அவர் மாநிலத்தின் குற்றவியல் நீதி அமைப்பின் உச்சிக்கு விரைவாக உயர்ந்தார். அதன் அட்டர்னி ஜெனரலாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் மூலம் கிடைத்த உந்துதலை, 2016இல் அமெரிக்க செனட் சபைக்கு வெற்றிகரமாகப் போட்டியிடப் பயன்படுத்திக் கொண்டார்.
அமெரிக்க செனட் சபையில் கமலா ஹாரிஸ் நுழைந்த அதே நேரத்தில், அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்த டிரம்ப், முதல் முறையாக வெள்ளை மாளிகைக்குள் அடியெடுத்து வைத்தார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கமலா ஹாரிஸ் ஒரு மந்தமான அதிபர் பிரசாரத்தை நடத்தினார். இருப்பினும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடனால், துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இருவரும், டிரம்ப் மற்றும் மைக் பென்ஸை தோற்கடித்து வெற்றி பெற்றனர்.
டிரம்பின் அதிபர் பதவிக் காலத்தின் முடிவிலும், பைடன்-ஹாரிஸ் பதவிக் காலத்தின் தொடக்கத்திலும், கொரோனா ஊரடங்குகள், கட்டாய முகக்கவசம் போன்ற உத்தரவுகள், மினியாபோலிஸ் பகுதியில் ஜார்ஜ் ஃப்லாய்ட் காவல்துறையால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக அமைதியின்மை போன்ற பிரச்னைகளை அமெரிக்கா சமாளித்துக் கொண்டிருந்தது.
துணை அதிபராக முத்திரை பதிக்க கமலா ஹாரிஸ் சில நேரங்களில் போராட வேண்டியிருந்தது. ஆனால் 2022இல் அமெரிக்க உச்சநீதிமன்றம் கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்தபோது, தான் உரக்கப் பேசவேண்டிய விஷயம் எது என்பதை அவரால் உணர முடிந்தது.
கருக்கலைப்பு உரிமைகள் இயக்கத்திற்கான வெள்ளை மாளிகையின் சாம்பியனாக கமலா ஹாரிஸ் மாறியதில், அதிபர் பைடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
அதேநேரம், பழமைவாதத்தை நோக்கிய உச்சநீதிமன்றத்தின் நகர்வுக்கும் கருக்கலைப்பு தொடர்பான முடிவுக்கும் காரணமாக இருந்தவர் டிரம்ப்தான்.
டிரம்ப், ஓவல் அலுவலகத்தில் இருந்த காலத்தில், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றியதோடு மட்டுமல்லாது குடியேற்றத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுத்தார்.
துணை அதிபராக ஹாரிஸ் தனது முதல் சர்வதேச பயணமாக 2021இல் குவாத்தமாலாவுக்கு சென்றார். மெக்ஸிகோவுடனான அமெரிக்காவின் தெற்கு எல்லையை அடையும் லத்தீன் அமெரிக்க புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் பொறுப்பின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் இருந்தது.
அவர் பதவியில் இருந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்திய வெளியுறவுக் கொள்கை தொடர்பான பிரச்னைகளில் யுக்ரேன் மற்றும் காஸா போர்கள் மற்றும் மிகவும் குழப்பமான ஒரு சூழலில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகளைத் திரும்பப் பெற்றது ஆகியவை அடங்கும்.
அமெரிக்க அதிபராக டிரம்பின் முதல் வெளிநாட்டு பயணம் 2017இல் சௌதி அரேபியாவுக்கு சென்றதுதான். அமெரிக்க தொழில்துறையை ஊக்குவிப்பது, சர்வதேச போர்களில் இருந்து தனது நாட்டை விலக்கி வைப்பது தொடர்பான கருத்துகளை டிரம்ப் ஆதரிக்கிறார்.
கமலா ஹாரிஸ், டக் எம்ஹாஃப் (கீழே உள்ள புகைப்படம்) என்பவரை மணந்தார். டக் எம்ஹாஃப், கமலா ஹாரிஸின் சார்பாகத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். எம்ஹாஃப்பின் முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகளான, கோல் (இடதுபுறம் இருப்பவர்), எல்லா (வலதுபுறம் இருப்பவர்) ஆகியோரை தாயாக இருந்து கவனித்துக் கொள்வதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்பின் பல்வேறு குடும்ப உறுப்பினர்கள் அவரது அரசியல் வாழ்க்கையில் பங்கு வகித்துள்ளனர். இருப்பினும் அவரது மனைவியும், முன்னாள் ‘முதல் அமெரிக்க பெண்மணியுமான’ மெலனியா டிரம்ப் 2024 பிரசாரத்தில் அவருக்கு ஆதரவாகத் தோன்றுவது குறைவாகவே உள்ளது.
டிரம்பின் முதல் மனைவி இவானாவுடன், டிரம்புக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். டொனால்ட் ஜூனியர் (கீழே உள்ள படத்தில் இடதுபுறத்தில் இருந்து இரண்டாவது), இவான்கா (வலதுபுறத்தில் இருந்து இரண்டாவது) மற்றும் எரிக் (வலதுபுறத்தில் கடைசியாக).
அவரது இரண்டாவது மனைவி மார்லா மேப்பிள்ஸுடன் அவருக்கு டிஃப்பனி (இடதுபுறத்தில் கடைசியாக) என்ற மகள் உள்ளார். அவர் தனது மூன்றாவது மனைவி மெலனியாவை (இடதுபுறத்தில் மூன்றாவதாக) 2005இல் மணந்தார், இவர்களுக்கு பரோன் என்ற ஒரு மகன் உள்ளார்.
கமலா ஹாரிஸ், 2024 அதிபர் பந்தயத்தில் கிட்டத்தட்ட தாமதமாகவே நுழைந்தார். போட்டியிலிருந்து விலகிய ஜோ பைடனுக்கு பதிலாக அவர் அதிபர் வேட்பாளராக ஆக்கப்பட்டார்.
அமெரிக்காவின் ஒரு பெரிய மற்றும் முக்கியக் கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின மற்றும் ஆசிய-அமெரிக்க பெண் என்ற வரலாற்றை அவர் படைத்தார். இல்லினாயின் சிகாகோவில் நடந்த ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் அவர் உரையாற்றினார்.
டொனால்ட் டிரம்ப் இந்தத் தேர்தலில், குடியரசுக் கட்சியில் இருந்து மூன்றாவது முறையாக அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் என்ற அரிய பெருமையைப் பெற்றார். விஸ்கான்சின், மில்வாக்கியில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் பேசினார்.
பென்சில்வேனியாவில் பிரசாரத்தின்போது அவர் மீது நடத்தப்பட்ட ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய பின்னர், காதில் கட்டுப்போட்ட நிலையில் மில்வாக்கியில் அவர் உரையாற்றினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு