- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
2025ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் அளித்துள்ளன. இதில் இந்திய வீரர்கள், பேட்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், குறைந்த அளவு வெளிநாட்டு வீரர்கள், பந்துவீச்சாளர்கள், அன்கேப்டு வீரர்கள்(சர்வதேச போட்டியில் பங்கேற்காதவர்கள்) மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஐபிஎல் சீசனைவிட இந்த சீசனில் ஒவ்வொரு அணியின் பர்ஸ் தொகையும் ரூ.20 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் சர்வதேச போட்டியில் விளையாடாத கேப்டு வீரர் அன்கேப்டு வீரராக தேர்ந்தெடுக்கலாம் உள்ளிட்ட புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இருப்பினும், ஐபிஎல் டி20 தொடர் என்பது பேட்டர்கள் ஆதிக்கம் செய்யும் தொடர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் பேட்டர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளித்து ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ளன. வெளிநாட்டு பேட்டர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட உள்நாட்டு வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் இந்த தக்கவைப்பில் அணி நிர்வாகங்கள் வழங்கியுள்ளன.
சில வீரர்கள் கடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் இந்த சீசனில் ஊதியத்தைக் குறைத்தும் அணியில் நீடிக்கிறார்கள். ஏனென்றால், ஏலத்துக்கு அனுப்பப்படாமல் தக்கவைப்பில் இருப்பதால் அணி நிர்வாகத்துக்காக இதனை அவர்கள் செய்துள்ளனர்.
அதேபோல, கடந்த ஐபிஎல் ஏலத்தில் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட கேப்டு வீரர்கள், அன்கேப்டு வீரர்கள் சிலருக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் ஊதியம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2025ம் ஆண்டுக்கான ஏலம் குறித்த உறுதியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. வீரர்கள் ஏலத்தில் இன்னும் பல சுவாரஸ்யங்கள் நடந்தேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம்
2025 ஐபிஎல் சீசனுக்காக வீரர்கள் தக்கவைப்பில் ஒவ்வொரு அணியும் உள்நாட்டு வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன. 46 வீரர்கள் தக்கவைப்பு பட்டியலில் இருந்தாலும் அதில் 10 வீரர்கள் மட்டுமே வெளிநாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகள் மட்டுமே 2 அல்லது அதற்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துள்ளன. சன்ரைசர்ஸ் அணி 3 வெளிநாட்டு வீரர்களையும், கொல்கத்தா அணி 2 வீரர்களையும் தக்கவைத்துள்ளன. ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இந்திய வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளன.
பேட்டர்கள் ஆதிக்கம்
அதிகமான அளவு பேட்டர்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளன. இந்த தக்கவைப்பில் 28 பேட்டர்கள், 11 பந்துவீச்சாளர்கள்(இதில் 8 வேகப்பந்துவீச்சாளர்கள்), 7 ஆல்ரவுண்டர்கள் அடங்குவர்.
பந்துவீச்சாளர்களைத் தக்கவைப்பதில் வெளிநாட்டு வீரர்களுக்கே அணிகள் முக்கியத்துவம் அளித்துள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சந்தீப் சர்மாவை தக்கவைத்துள்ளது. இவர் அன்கேப்டு இந்திய வீரர் ஆவார், ராஜஸ்தான் அணி 6 வீரர்களைத் தக்கவைத்ததில் இவரும் ஒருவர். சன்ரைசர்ஸ் அணி கம்மின்ஸ்(வெளிநாட்டு வீரர்), மும்பை அணி பும்ரா, சிஎஸ்கே அணி மதிஷா பதிராணா என தலா ஒரு பந்துவீச்சாளருக்கே முக்கியத்துவம் அளித்துள்ளன.
லக்னெள அணி பந்துவீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து மயங்க் யாதவ், ரவி பிஸ்னோய், மோசின் கான் ஆகியோரைத் தக்கவைத்துள்ளது. கொல்கத்தா அணி ஹர்சித் ராணா, வருண் சக்ரவர்த்தி, ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஆந்த்ரே ரஸல், சுனில் நரைனைத் தக்கவைத்துள்ளது.
அன்கேப்டு வீரர்கள் பக்கம் சாய்ந்த 8 அணிகள்
சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாத அன்கேப்டு வீரர்களுக்கு 8 அணிகள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன. மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டும் அன்கேப்டு வீரர்களை தக்கவைக்கவில்லை.
இதில் கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச போட்டியில் விளையாடாத வீரரும் அன்கேப்டு வரிசையில் வருகிறார். அதன்படி எம்எஸ் தோனி அன்கேப்டு வீரராக சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா, பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ், லக்னெள அணிகள் தலா 2 உள்நாட்டு வீரர்களை தக்கவைத்துள்ளன. டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகள் ஒரு அன்கேப்டு வீரரை மட்டும் தக்கவைத்துள்ளன. இதன்படி 12 அன்கேப்டு வீரர்கள் ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ளன.
சுழற்பந்துவீச்சாளர்களின் நிலை என்ன?
ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பில் ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஸ்னோய் ஆகிய 3 பேர் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர். சாஹல், அஸ்வின், தீக்சனா, ராகுல் சஹர் ஆகியோர் தக்கவைக்கப்படவில்லை.
சுனில் நரைன், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரஷித் கான் ஆகியோர் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் வரிசையில் வருவார்கள் என்பதால் ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சார்கள் பட்டியலில் இடம் பெறமாட்டார்கள். அந்த வகையில் முழுநேர சுழற்பந்துவீச்சாளர்களை தக்கவைப்பது குறைந்துள்ளது.
தக்கவைப்பில் 5 கேப்டன்கள் இல்லை
அதிர்ச்சிக்குரிய வகையில் 5 அணிகளின் நிர்வாகங்கள் தங்களின் கேப்டன்களையே தக்கவைப்பு பட்டியலில் இருந்து நீக்கிவிட்டன. லக்னெள, டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி ஆகியவை கேப்டன்களையே நீக்கிவிட்டன.
ஆர்சிபி அணி மீண்டும் விராட் கோலியை கேப்டனாக்க விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்கத்தா, டெல்லி, பஞ்சாப் அணிகள் ஏலம் முடிந்தபின் புதிய கேப்டன்களை அறிவிக்க உள்ளன. ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், டூப்பிளசிஸ், எய்டன் மார்க்ரம், ஸ்டீப் ஸ்மித், நிதிஷ் ராணா ஆகியோர் ஏலத்தில் மூலம் எடுக்கப்பட்டு கேப்டனாக்கப்பட்டால் அவர்களின் மதிப்பு அதிகரிக்கும். இவர்களுக்கு ஏற்கெனவே கேப்டன் அனுபவம் இருப்பது கூடுதல் மதிப்பாகும். இவர்கள்தவிர ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் ஏலத்தில் உள்ளனர்.
ஊதிய குறைப்பில் சிக்கிய வீரர்கள்
கடந்த ஐபிஎல் சீசனில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, தக்கவைப்பு மூலம் சில வீரர்கள் ஊதியக் குறைப்பைச் சந்தித்துள்ளனர். கொல்கத்தா அணியில் கடந்த சீசனில் ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்ட ரஸலுக்கு ஊதியம் ரூ.12 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. ராகுல் திவேட்டியாவுக்கு ரூ.9 கோடியிலிருந்து ரூ.4 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் ஷாருக்கானுக்கு ரூ.7.40 கோடி ஊதியத்திலிருந்து ரூ.4 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் ரூ.12 கோடி ஊதியம் பெற்ற தோனி அன்கேப்டு வீரராக ரூ.4 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர, ரோஹித் சர்மா, சுனில் நரேன், அக்ஸர் படேல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்கள் ஊதியக் குறைப்பை சந்தித்துள்ளனர்.
ஜாக்பாட் அடித்த வீரர்கள்
தக்கவைப்பில் சில அன்கேப்டு வீரர்கள் மற்றும் கேப்டு வீரர்களின் ஊதியம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக துருவ் ஜூரெல் கடந்த சீசன் ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டிருந்தார். அவரது ஊதியம் தக்கவைப்பில் ரூ.14 கோடியாக உயர்ந்துள்ளது. அவரது ஊதியம் ஏறக்குறைய 7000 சதவீதம் அதாவது 70 மடங்கு அதிகரித்துள்ளது.
சிஎஸ்கே வீரர் பதிரணாவின் ஊதியம் ரூ.20 லட்சத்தில் இருந்து, தக்க வைப்பின் மூலமாக ரூ.13 கோடியாக உயர்ந்துள்ளது. இது 65 மடங்கு அதிகம் ஆகும். ரஜத் பட்டிதர், மயங்க் யாதவ் ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டநிலையில் அவர்களின் ஊதியம் தக்கவைப்பில் ரூ.11 கோடியாக அதிகரித்துள்ளது.
தமிழக வீரர் சாய் சுதர்சன், சஷாங்க் சிங் ஆகியோர் ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு கடந்த சீசனில் வாங்கப்பட்ட நிலையில் தக்கவைப்பு மூலம் சுதர்சனுக்கு ரூ.8.50 கோடியும், சஷாங்க் சிங்கிற்கு ரூ.5.50 கோடியும் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.