இஸ்ரேல் ராணுவம் தடுத்து வைத்த பாலத்தீனர் கூட்டத்தில் இருந்த 3 வயது சிறுமி என்ன ஆனார்?
- எழுதியவர், ஃபெர்கல் கியானே
- பதவி, சிறப்புச் செய்தியாளர்
அந்த குழந்தையை ஆண்கள் அதிகமாக நிரம்பியிருக்கும் கூட்டத்தில் பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது. மிகவும் சின்னஞ்சிறிய பெண் குழந்தை, அந்த கூட்டத்தின் கடைசியில் அமர்ந்திருந்தார்.
இஸ்ரேல் ராணுவ வீரர்கள், அங்கே இருந்த ஆண்களின் உடைகளையெல்லாம் பரிசோதனைக்காக நீக்க உத்தரவு பிறப்பித்திருந்தனர். வயதானவர்களும் கூட அதற்கு விதிவிலக்கல்ல. கேமராக்களின் பக்கம் அவர்களின் பார்வை திரும்பின. இந்த புகைப்படத்தை இஸ்ரேல் ராணுவ வீரரைத் தவிர வேறு யார் எடுத்திருக்கக் கூடும் .
இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஊடகவியலாளர் ஒருவரின் டெலிகிராம் பக்கத்தில் தான் முதன் முதலாக இந்த புகைப்படம் பதியப்பட்டது.
ஆண்கள் அனைவரும் வருத்தத்தில் சோர்ந்திருந்தனர். அதில் சின்னஞ்சிறியப் பெண் குழந்தை அந்த கூட்டத்தில் இருந்து தன்னுடைய பார்வையை விலக்கி வேறெங்கோ பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தார் ஒரு பிபிசி செய்தியாளர்.
கேமராவைத் தாண்டி ஏதோ ஒன்று அந்த குழந்தையின் கவனத்தை ஈர்த்திருருக்கலாம். இல்லையென்றால் அந்த குழந்தை இஸ்ரேல் ராணுவத்தினர் வைத்திருந்த துப்பாக்கிகளையோ, இஸ்ரேல் ராணுவத்தினரையோ பார்க்க விரும்பாமல் இருந்திருக்கலாம்.
வெவ்வேறு பகுதியில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் அங்கே நிறுத்தியிருந்தனர். தாக்குதலில் நாசமடைந்த கட்டங்களுக்கு முன்பே அவர்கள் நின்று கொண்டிருந்தனர். ராணுவத்தினர், அந்த இடத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆண்களை பரிசோதனை செய்தனர்.
அவர்களின் ஆவணங்கள் பரிசோதனை செய்யப்பட்டன. ஹமாஸிற்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்கும் வகையில் ஏதேனும் அறிகுறிகள் இருக்கிறதா என்பதையும், ஆயுதங்கள் வைத்திருக்கிறார்களா என்றும் பரிசோதனை செய்தனர்.
போரின் கோரத்தால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை தனி மனிதர்களின் வாழ்வில் மிக நுட்பமாக காண முடியும். அந்த கூட்டத்தின் நடுவே அமர்ந்திருக்கும் அந்த குழந்தை, எங்கோ திரும்பியிருக்கும் அவர் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சி இந்த போர் குறித்த நிறைய கேள்விகளை எழுப்புகிறது.
ஒரு வாரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் அந்த குழந்தை யார்? அவருக்கு என்ன ஆனது?
ஒரு வாரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். நிறைய நபர்கள் காயம் அடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். தொடர் வான்வழி தாக்குதல் காரணமாக குழந்தைகள் இடர்பாடுகளில் சிக்கி இறந்திருக்கின்றனர்.
மருத்துவ வசதி, மருத்துவர்கள் பற்றாக்குறைக் காரணமாக குழந்தைகள் இறந்திருக்கின்றனர். இந்த சூழலில்தான் மனதை வருத்திக் கொண்டிருந்தது இந்த குழந்தையின் புகைப்படம்.
குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்ட பிபிசி
காஸா டுடேவுடன் இணைந்து எங்களின் பிபிசி அரபிக் சேவை, இந்த குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டது. பிபிசியையோ அல்லது இதர சர்வதேச ஊடகத்தினரையோ இஸ்ரேல் ராணுவம் காஸாவில் செய்தி சேகரிப்பதை அனுமதிப்பதில்லை. இந்த காரணத்தால் பிபிசி நம்பத்தகுந்த ‘ஃப்ரீலேன்ஸ்’ ஊடகவியலாளர்களின் குழுக்களை அதிகமாக சார்ந்திருக்கிறது.
எங்களுடன் இணைந்து பணியாற்றும் ஊடகவியலாளர்கள் குழு வடக்கில் உதவிப் பணிகளை மேற்கோண்டு வரும் நபர்களை தொடர்பு கொண்டு, அந்த புகைப்படத்தை மக்கள் புலம் பெயர்ந்த இடங்களில் காட்டி அந்த குழந்தையை தேடத் துவங்கினார்கள்.
இரண்டு நாள் வரை எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை. 48 மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஒரு குறுஞ்செய்தி எங்களின் அலைபேசிக்கு வர, மனம் நிம்மதி அடைந்தது. அந்த செய்தி, “நாங்கள் அந்தக் குழந்தையை கண்டுபிடித்துவிட்டோம்.”
மூன்று வயதான ஜூலியா அபு வர்தா உயிருடன் இருக்கிறார். ஜபாலியாவில் இருந்து தப்பித்து வந்து தஞ்சம் புகுந்திருக்கும் காஸா நகரில் ஜூலியாவின் வீட்டைக் கண்டுபிடித்தார் எங்கள் பத்திரிகையாளர். ஜூலியா தன்னுடைய அம்மா, அப்பா, மற்றும் தாத்தாவுடன் அவருடைய வீட்டில் இருந்தார்.
இஸ்ரேல் ராணுவத்தினரின் ஆளில்லா விமானங்கள் தலைக்கு மேலே எப்போதும் இரைச்சலுடன் பறந்து கொண்டிருக்க, ஜூலியா பாட்டுப்பாடும் கோழிகளின் கார்ட்டூன் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தார்.
முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு நபர் தன் மீது கவனம் செலுத்துவதை உணர்ந்த ஜூலியா ஆச்சரியம் அடைந்தார்.
அவருடைய அப்பா, அந்த குழந்தையிடம், “யாரு நீங்கன்னு சொல்லுங்க,” என்று விளையாட்டாக கேட்டார்.
அவரோ, “ஜ்ஜூலிய்ய்யா” என்று தன்னுடைய பெயரை அழுத்தமாக மழலை மொழியில் பதில் கூறினார்.
ஜூலியாவுக்கு எந்த காயமும் இல்லை. ஜம்பரும் ஜீன்ஸ் கால்சட்டையும் அணிந்திருந்தார். இரட்டை ஜடையில் அழகான பூ வேலைப்பாடு கொண்டிருந்த ‘பேண்டை’ அணிந்திருந்தார். குழந்தைகளுக்கே உரித்தான குறும்புத்தனம் அங்கே இல்லை. அவர் மிகுந்த எச்சரிக்கையுடம் இருந்தார்.
அவருடைய அப்பா முகமது, இந்த புகைப்படத்தின் கதையை எங்களிடம் பகிர்ந்து கொண்டார்.
21 நாட்களில் ஐந்து முறை இடம் பெயர்ந்த ஜூலியாவின் குடும்பம்
கடந்த 21 நாட்களில் ஐந்து முறை இடம் பெயர்ந்திருக்கிறது அவருடைய குடும்பம். துப்பாக்கிச் சூடுகளுக்கும், வான்வழி தாக்குதல்களுக்கும் இடையே அவர்கள் உயிரைக் காக்க ஓடிக் கொண்டிருந்தனர்.
நான்காவது முறையாக இடம் பெயர்ந்து தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் ஆளில்லா விமானத்தின் மூலம் எச்சரிக்கை விடுத்த நாளில் தான் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஹமாஸுக்கு எதிரான தாக்குதலில் இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருகின்ற அல் கலுஃபா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியது.
முகமதுவின் குடும்பம் கொஞ்சம் துணிகளையும், டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்ட உணவுகளையும், சில பொருட்களையும் எடுத்துக் கொண்டு வேறொரு இடத்திற்கு செல்ல தயாரானார்கள்.
ஜூலியாவின் அம்மா அமல், அப்பா முகமது, ஜூலியாவின் 15 மாத தம்பி ஹம்ஸா, தாத்தா, இரண்டு மாமாக்கள் மற்றும் அவரின் ஒரு உறவினர் அனைவரும் அல் கலுஃபா மாவட்டத்தில் இருந்து வெளியேறும் போது ஒன்றாகத்தான் இருந்தனர்.
பதற்றம் மற்றும் குழப்பத்தில் ஜூலியாவும் அவருடைய அப்பாவும் அவர்களின் குடும்பத்தில் இருந்து பிரிந்துவிட்டனர்.
“கூட்டம் மற்றும் நாங்கள் எடுத்து வந்த பொருட்களின் காரணமாக நாங்கள் பிரிந்துவிட்டோம். என்னுடைய மனைவியால் இங்கிருந்து வெளியேறிவிட முடிந்தது. ஆனால் நான் இங்கேயே தங்கிவிட்டேன்,” என்கிறார் முகமது.
அங்கிருந்து வெளியேறும் மக்களுடன் அப்பாவும் மகளும் நடக்கத் துவங்கினார்கள். வீதிகள் எங்கும் மரணம். “இறந்தவர்களின் உடல்களையும் கட்டங்களின் சேதங்களையும் நாங்கள் பார்க்க நேரிட்டது,” என்கிறார் முகமது. அந்த கோரக் காட்சிகளை ஜூலியா பார்த்துவிடாமல் தடுக்க ஒரு வழியும் இல்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த போரில், குழந்தைகள் வன்முறையில் இறந்து போனவர்களை பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது.
அப்பாவும் மகளும் அவர்களுடன் சேர்ந்து வந்த குழுவும் இஸ்ரேலின் சோதனை மையத்தை அடைந்தனர்.
“அங்கே ராணுவத்தினர் இருந்தனர். எங்களை நோக்கி வந்த அவர்கள் எங்களின் தலைக்கு மேலே துப்பாக்கியால் சுடத் துவங்கினார்கள். துப்பாக்கிச்சூட்டின் போது ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு நகர்ந்தோம்.”
உள்ளாடைகளுடன் நிற்க வேண்டும் என்று அவர்கள் கட்டளையிட்டனர். தற்கொலைப்படையினர், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை கண்டறிய இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்தும் சோதனை தான் இது.
அந்த சோதனை மையத்தில் 7 மணி நேரம் வரை தாங்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார் முகமது. அந்த புகைப்படத்தில் ஜூலியா அமைதியாக இருந்தார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு நேரிட்டதை விவரிக்கிறார் அவருடைய அப்பா.
“திடீரென கத்த ஆரம்பித்துவிட்டாள். அம்மாவிடம் போக வேண்டும் என்று என்னிடம் கூறினாள்.” என்றார் அவர்.
தற்போது அந்த குடும்பம் மீண்டும் இணைந்துவிட்டது. குடிபெயர்ந்தவர்கள் குழுக்களாக ஆங்காங்கே வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தின் இணக்கம் இங்கே இறுக்கமானது. ஜபாலியாவில் இருந்து தூரத்து சொந்தங்கள் வரும் செய்தி உடனுக்குடன் காஸா நகரம் முழுவதும் வேகமாக பரவுகிறது.
ஜூலியாவின் மீது அக்கறை கொண்ட அவரது உறவினர்கள் ஜூலியாவுக்கு ஆறுதலாக இருந்தனர். இனிப்புகளும், உருளைக்கிழங்கு சிப்ஸ்களும் அவருக்காக அங்கே எடுத்து வைக்கப்பட்டுள்ளன.
14 ஆயிரம் குழந்தைகள் இறப்பு
ஜபாலியாவில் இருந்து காஸா நகரத்திற்கு அவர்கள் வருவதற்கு ஒரு நாள் முன்பு நடந்த நிகழ்வு ஜூலியாவின் மன நிம்மதியை எவ்வாறு பாதித்தது என்று எங்களுடன் பணியாற்றும் பத்திரிகையாளரிடம் முகமது கூறினார். ஜூலியாவின் நெருங்கிய உறவினர் தான் யாஹ்யா. அவருக்கு வயது 7.
ஜூலியாவின் விளையாட்டுக் கூட்டாளி யாஹ்யா. தெருக்களில் விளையாடச் சென்றால் இவர்கள் இருவரும் தான் செல்வார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலின் போது யாஹ்யா தெருவில் நின்று கொண்டிருந்தார். இஸ்ரேலின் அந்த தாக்குதலில் யாஹ்யா கொல்லப்பட்டார்.
“வாழ்க்கை மிகவும் இயல்பாக இருந்தது. ஜூலியா ஓடிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தாள். ஆனால் இன்று, வான்வழி தாக்குதல் நடக்கும் போதெல்லாம் அதனைச் சுட்டிக்காட்டி அது விமானம் என்கிறாள். இடர்பாடுகளில் சிக்கிக் கொண்ட போது எங்களின் தலைக்கு மேலே பறக்கும் ஆளில்லா விமானங்களை அவள் சுட்டிக்காட்டுகிறாள்,” என்று கூறுகிறார் முகமது.
யுனிசெஃப் அறிக்கையின் படி இந்த போரில் இதுவரை 14 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
“குழந்தைகளால் ஆரம்பிக்கப்படாத இந்த போருக்கான விலையை தினம் தினம் அவர்கள் தான் கொடுக்க வேண்டியதாய் உள்ளது,” என்று யுனிசெஃப் செய்தித்தொடர்பாளர் ஜோனதன் கிரிக்ஸ்.
“நான் பார்த்த பெரும்பாலான குழந்தைகள் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்களை இத்தகைய சூழலில் இழந்திருக்கின்றனர்,” என்றும் அவர் கூறினார்.
காஸா பகுதியில் வாழும் அனைத்துக் குழந்தைகளுக்கும், கிட்டத்தட்ட 10 லட்சம் குழந்தைகளுக்கு மன நல உதவிகள் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை அனுமானிக்கிறது.
அவள் இழந்தது என்ன? அவள் பார்த்தது என்ன? அவள் எங்கெல்லாம் சிக்கியிருந்தாள் என்று யோசிக்கும் போது ஜூலியா போன்ற குழந்தைகளுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது என்று கூற இயலாது. வருங்காலங்களில் அவர்களின் கனவுகளில் என்ன வரும் என்றும், அவர்களின் நினைவில் என்ன பதிவாகி இருக்கும் என்று யாருக்குத்தான் தெரியும். ஆனால் வாழ்க்கை மிகவும் சோகத்துடன் முடிவடையக்கூடும் என்று தற்போது ஜூலியாவுக்குத் தெரியும்.
வான்வழி தாக்குதலின் போது, துப்பாக்கிச்சூட்டின் போது, பசி மற்றும் நோய் காலங்களில் ஜூலியாவை எப்படியும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய குடும்பம் ஒன்று அவருக்கு இருக்கிறது என்பது மட்டும் தான் ஆறுதல்.
கூடுதல் செய்திகளுக்காக ஹனீன் அப்தீன், ஆலிஸ் டோயார்டு, மூஸ் கேம்பெல் மற்றும் ருதாபா அப்பாஸ்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு