புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தி தேவைகளுக்கு ஒத்துழைப்பளிக்க சீனா தயார்! இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தித் தேவைகளை சீன அரசாங்கம் முழுமையாகப் பரிசீலித்து, பொருத்தமான பயிற்சித் திட்டங்களின் செயற்திறனை மேம்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் புதன்கிழமை (30) இரவு நடைபெற்ற சீன உதவிப்பயிற்சி மற்றும் பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், சீன – இலங்கை மனித வள ஒத்துழைப்பின் நன்மைகளைக் கொண்டாடவும், சீன – இலங்கை நட்புறவு என்றும் நிலைத்திருப்பதை வாழ்த்துவதற்காகவும், சீன உதவிப் பயிற்சி பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வு முதற்தடவையாக நடைபெறுகின்றது.
சீன பழமொழி “ஒரு மனிதனுக்கு ஒரு மீனைக் கொடுங்கள் ,நீங்கள் அவருக்கு ஒரு நாள் உணவளிக்கிறீர்கள்; ஒரு மனிதனுக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுங்கள், நீங்கள் அவருக்கு வாழ்நாள் முழுவதும் உணவளிக்கிறீர்கள்” என்று கூறுகின்றது.
சீனாவின் வெளிநாட்டு உதவி பயிற்சி என்பது ஜனாதிபதி ஷி ஜின்பிங்கால் வரையப்பட்ட உலகளாவிய வளர்ச்சியை செயற்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கையாகும்.
அத்துடன் மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலத்துடன் ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.
சீனாவின் வெளிநாட்டு உதவிப் பயிற்சியானது, பகிர்தல் ,ஆலோசனை, இணைக் கட்டுமானம் ஆகிய விடயங்களை கடைப்பிடிக்கிறது, நாடுகளுக்கு நிர்வாக அனுபவத்தைப் பரிமாறிக் கொள்வதற்கான தளத்தை உருவாக்குகிறது.
சீன நவீனமயமாக்கலின் வெற்றிகரமான அனுபவத்தை முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறது. 1950 இல் சீனா வெளிநாட்டு உதவிப் பயிற்சித் திட்டங்களைத் ஆரம்பித்ததில் இருந்து, வளரும் நாடுகளுக்கு 510,000க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரையில் பயிற்சி அளித்துள்ளது.
சீன அரசாங்கம் இலங்கையின் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சீனாவில் சுமார் 13,000 இலங்கையர்கள் இதுவரையில் பயிற்சிகளிலும், கற்கைகளிலும் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிக்குள் 1,000 இற்கும் மேற்பட்ட இலங்கைப் பங்கேற்பாளர்கள் பயிற்சிக்காக சீனாவுக்குச்சென்றுள்ளனர், பொது முகாமைத்துவம், விஞ்ஞான ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம், வர்த்தகம், கல்வி, சுகாதாரம், விவசாயம், வனவியல், உட்பட 17 முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாக பயிற்சிகள் மற்றும் கற்கைகள் காணப்படுகின்றது.
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முதன்மையான உற்பத்தி சக்தியாகவும், திறமையே முதன்மை வளமாகவும், புதுமை முதன்மையான உந்து சக்தியாகவும் இருப்பதை நாம் வலியுறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது இந்த நோக்கமானது கல்வி மற்றும் திறமை வளர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
சீன அரசாங்கம் வளரும் நாடுகளுடன் மனித வள ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதோடு ‘குளோபல் சவுத்’ வளர்ச்சியடைவதையும் புத்துயிர் பெறுவதை ஊக்குவிப்பதில் உறுதியுடன் இருப்பதோடு உலகளாவிய முன்னேற்றத்திற்கு வலுவான உத்வேகத்தை அளிக்கின்றது.
புதிய ஆண்டில், இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தித் தேவைகளை சீன அரசாங்கம் முழுமையாகப் பரிசீலித்து, பொருத்தமான பயிற்சித் திட்டங்களின் செயற்திறனை மேம்படுத்துவதுடன், மேலும் பங்கேற்பாளர்களை சீனாவுக்குச் சென்று கல்வி கற்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், சுமூகமான வேலைச்சூழல்,மகிழ்ச்சியான குடும்பம் நீடிப்பதற்கு வாழ்த்துவதோடு சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நிரந்தர நட்புறவை நான் விரும்புகிறேன் என்றார்.