நடிகர் கவின் நடிப்பில் தீபாவளி ரிலீசாக வெளியாகியுள்ளது ‘பிளடி பெக்கர்’ திரைப்படம்.
‘டார்க் காமெடி’ வகையைச் சேர்ந்த இந்தப் படத்தில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரபலமாகிய கவின் முக்கியக் கதாபாத்திரத்தில் ‘பெக்கராக’ அதாவது பிச்சைக்காரராக நடித்துள்ளார்.
போஸ்டர்களிலும் விளம்பரங்களிலும் காணப்படும் அவரது முகம், இந்த படத்தில் கவினை வித்தியாசமான கெட்டப்பில் பார்க்க முடியும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது.
‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ போன்ற ‘டார்க் காமெடி’ திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அவரது உதவியாளராக 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்த சிவபாலன் முத்துக்குமார் இந்தப் படத்தின் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படங்களில் நடித்த ரெடின் கிங்ஸ்லி இந்தப் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
‘பிளடி பெக்கர்’ படத்தின் கதை என்ன?
படத்தின் பெயர் குறிப்பிடுவது போல ஒரு பிச்சைக்காரர் தான் இந்தக் கதையின் முக்கியக் கதாப்பாத்திரம்.
பிச்சைக்காரராக நடிக்கும் கவின் சில சந்தர்ப்பங்களால் ஒரு பெரிய பங்களாவுக்குள் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்த பங்களாவில் வசிப்பவர்களுக்கு இடையேயான சொத்து பிரச்னை, அதற்கு நடுவில் கவின் என்ன செய்கிறார், அவரை என்ன செய்ய வைக்கிறார்கள், இறந்தவரின் ஆவியுடன் பேசுவது என த்ரில்லரும் காமெடியும் கலந்ததாக இருக்கிறது இந்தப் படம்.
‘டார்க் காமெடி’ எடுபட்டதா?
குழப்பத்தில் சிரிப்பை உண்டாக்க, ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தைப் போல, பல கதாப்பாத்திரங்கள் தேவை என்று கூறும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’வின் திரை விமர்சனம், இயக்குநர் சிவபாலன் அந்தப் பணியைச் சிறப்பாக செய்ய முயன்றுள்ளார் என்று கூறுகிறது.
“டார்க் காமெடி, கவின்-கிங்ஸ்லி நடிப்பு மற்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை அவருக்குக் கை கொடுத்துள்ளது. சுஜித் சாரங்-இன் மஞ்சள் நிற சாயல் கொண்ட காட்சிகள், படத்தின் நகைச்சுவைக்குப் பங்களிக்கிறன. சில நேரங்களில் மக்களுக்கு எளிதாகப் புரிய வேண்டும் என்பதற்காக வீடியோ கேம் வடிவில் காட்சிகள் வழங்கப்படுகின்றன,” என்று இந்த விமர்சனம் கூறுகிறது.
கவின், கிங்ஸ்லி நடிப்பு எப்படி?
கவின் மற்றும் ரெடின் கிங்ஸ்லியின் நடிப்பு பாராட்டத்தக்க வகையில் உள்ளது என்று பல்வேறு ஊடகங்களும் தெரிவித்துள்ளன.
“வித்தியாசமான தோற்றத்துடன், அப்பாவித்தனம் கலந்த உடல் மொழியில் தடம் பதிக்கிறார் கவின். தன்னைச் சுற்றியிருக்கும் காமெடி களத்தின் வெற்றிடத்தை நடிப்பால் நிரப்புவது பலம்,” என்று ‘இந்து தமிழ் திசை’ தனது திரை விமர்சனத்தில் குறிப்பிடுகிறது.
மேலும், “ரெடின் கிங்ஸ்லிக்கு நகைச்சுவையைத் தாண்டியும் ஸ்கோர் செய்ய சில வாய்ப்புகள் கொண்ட கதாபாத்திரம் கிடைத்துள்ளது. சுனில் சுகதாவின் வில்லத்தனம் கவனிக்க வைக்கிறது,” என்று ‘இந்து தமிழ் திசை’ விமர்சனம் தெரிவிக்கிறது.
இதே விமர்சனம் “நடைபாதை-வாழ் மக்களின் உயிர்கள் மீதான அலட்சியத்தையும், அவர்களை வாழத் தகுதியற்றவர்களாகக் கருதும் போக்கையும் அடிநாதமாகக் கொண்ட ‘டார்க் காமெடி’ படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் சிவபாலன்,” என்றும் தெரிவித்துள்ளது.
நகைச்சுவையே அயர்ச்சி தருகிறதா?
‘தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழ் தனது வெளியிட்டுள்ள விமர்சனத்தில், ‘பிளடி பெக்கராக, கவின் அசத்தியிருக்கிறார்’ என்கிறது.
கவின், அடையாளம் காண முடியாத அளவுக்கு கதாபாத்திரத்தின் தோற்றத்தில் பொருந்தியிருக்கிறார், என்கிறது இந்த விமர்சனம். “பாசம், திமிர், ஆசை, ஆர்வம் என அனைத்திலும் கலந்துகட்டி அடிக்கிறார் கவின்,” என்றும் இந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.
“சொந்த மகன் என்று தெரியாமல், நடிக்க வந்த இடத்தில் கொலை செய்யப்படும் ரெடின் கிங்ஸ்லி, அதன் பின் தன்னுடைய இடத்திற்கு வரும் கவினிடம் ஆவியாக உரையாடுவதும், அவரை அலர்ட் செய்யும் இடங்களும் கலகலப்பானவை.” என்று கூறியுள்ளது.
மேலும், “பெரிய அளவில் பரிச்சயயம் இல்லாத கதாபாத்திரங்கள் நிறைய இருந்தாலும், அனைவரும் கவினுடன் வருவதால், அவர்களும் அடையாளம் காணப்படுகிறார்கள். முழுக்க முழுக்க காமெடியை நம்பி மட்டுமே கதையை நகர்த்துகிறார்கள். அது சில இடங்களில் கை கொடுக்கிறது. பல இடங்களில், அதுவே அயர்ச்சியை தருகிறது,” என்று குறிப்பிடுகிறது இந்த விமர்சனம்.
‘கவின் நடிப்பு சிறப்பு’ – ரசிகர்கள் சொல்வது என்ன?
இந்தப் படத்தைச் சென்னையில் பார்த்த ரசிகர்கள் கவினின் நடிப்பைப் புகழ்ந்தனர்.
நடிகர் கவின் தனது 100%-த்தை இந்தப் படத்திற்கு வழங்கியுள்ளார், என்கிறார் படம் பார்த்த ஒரு ரசிகர். “நெலசனின் உதவி இயக்குநர் இந்தப் படத்தை இயக்கியுள்ளதால், படத்தில் ‘டார்க் காமெடி’ நன்றாக அமைந்துள்ளது. நடிகர் கிங்ஸ்லி நன்றாக நடித்துள்ளார்,” என்றார்.
நடிகர் கவின் படத்தின் முதல் பாதியில் ஒரு விதத்திலும், இரண்டாம் பாதியில் நமது எதிர்பார்ப்புகளுக்கும் மிஞ்சி நடித்துள்ளதாகக் கூறுகிறார் மற்றொரு ர்பசிகர். “நடிகர் கிங்ஸ்லி துணைநடிகராக இருந்தாலும், அவர் தான் முக்கிய கதாபாத்திரமாக படம் முழுவதும் வருகிறார். படம் பார்க்க வந்த அனைவரையும் ‘பெக்கராக’ உணர வைத்துள்ளார் கவின். தீபாவளிக்கு நடிகர் கவின் நல்ல ட்ரீட் கொடுத்துள்ளார்,” என்கிறார் இந்த ரசிகர்.
‘ஜவ்வுமிட்டாய் போல இழுவை’
ஆனால், சில ரசிகர்கள் படம் அவ்வளவு சிறப்பாக இல்லை என்கின்றனர்.
“படத்தில் காமெடி என்று எதுவும் இல்லை. இதற்கு முன் கவின் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ திரைப்படமே சிறப்பாக இருந்தது. இந்தப் படம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை. படத்தில் கதை என்றே எதுவும் இல்லை,” என்கிறார் ஒரு ரசிகர்.
மற்றொரு ரசிகரோ, ‘படத்தை முழுமையாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை’, என்கிறார்.
“இந்தப் படத்தில் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பதை இன்னும் யோசித்து கொண்டே இருக்கிறேன். ஜவ்வுமிட்டாய் போல இழுப்பறியாக இருந்தது,” என்கிறார் அவர்.
சிலர் கலவையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
“படத்தில் கவின், கிங்ஸ்லிக்கு நடிக்க ‘ஸ்கோப்’ இருக்கிறது. ஸ்டார் திரைப்படம் எப்படி கவினுடைய நடிப்பு திறமை சார்ந்தே இருந்ததோ, அதே போலவே இந்த படமும் இருந்தது. ஒரே சூழலை சுற்றி படம் எடுக்கப்பட்டதால் சற்றுத் தோய்வு இருந்தது. கதாபாத்திரங்கள் இன்னும் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தால், படத்துடன் இன்னும் கூடுதலாக தொடர்புபடுத்தி பார்த்திருக்க முடியும்,” என்கிறார் மற்றொரு ரசிகர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு