அமெரிக்க அதிபர் தேர்தல்: மக்கள் வாக்களித்தாலும், தேர்வாளர் குழு அதிபரை தேர்வு செய்வது ஏன்? எப்படி?
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. ஆனால் இந்தத் தேர்தலில், அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் தோல்வி அடைவதற்கும் கூட வாய்ப்பு உள்ளது.
ஏன்?
ஏனென்றால், அமெரிக்காவில் அதிபர் என்பவர் நேரடியாக வாக்காளர்களால் (பொது மக்களால்) தேர்வு செய்யப்படுவதில்லை. மாறாக ‘தேர்வாளர் குழு’ (Electoral college) என்ற குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்.
தேர்வாளர் குழு என்றால் என்ன?
நவம்பர் மாதம் நக்டைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பங்கேற்கும் அமெரிக்கர்களில் பெரும்பாலோர் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் அல்லது குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு வாக்களிப்பார்கள்.
ஆனால், யாருக்கு வெற்றி என்பதை அந்த வாக்குகள் நேரடியாகத் தீர்மானிக்காது. இந்த வாக்குப்பதிவு, தேசிய அளவிலான போட்டி என்பதற்குப் பதிலாக மாகாண அளவிலான போட்டியாக இருக்கும்.
அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒன்றில் வெற்றி பெறுவது என்பது, அந்த மாகாணத்தின் ‘தேர்வாளர் குழு’ வாக்குகள் எனப்படும் அனைத்து வாக்குகளையும் ஓர் வேட்பாளர் பெறுவதாகும். மொத்தம் 538 தேர்வாளர் குழு வாக்குகள் உள்ளன.
ஒரு வேட்பாளர் அதிபர் பதவிக்கு வெற்றிபெற, பெரும்பான்மையான தேர்வாளர் குழு வாக்குகளைப் (270 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளை) பெற வேண்டும். வெற்றி பெற்றவரின் துணை அதிபர் வேட்பாளரே, துணை அதிபராக பொறுப்பேற்றுக் கொள்வார்.
தேர்வாளர் குழு எவ்வாறு செயல்படுகிறது?
ஒவ்வொரு மாகாணத்தின் மக்கள் தொகை அளவைப் பொறுத்தே அதன் தேர்வாளர் குழு எண்ணிக்கை அமைகிறது.
கலிஃபோர்னியா மாகாணத்தில் தான் அதிகபட்ச தேர்வாளர் குழுக்கள் (54) உள்ளன. வயோமிங், அலாஸ்கா, வடக்கு டகோட்டா மற்றும் வாஷிங்டன் டிசி போன்ற குறைந்த மக்கள்தொகை கொண்ட சில மாகாணங்களில் குறைந்தபட்சம் மூன்று தேர்வாளர் குழுக்களே உள்ளன.
பொதுவாக ஒரு மாகாணத்தில் சாதாரண வாக்காளர்களின் (பொது மக்கள்) வாக்கெடுப்பில் வெற்றி பெறுபவர்களுக்கு, அந்தந்த மாகாணங்கள் தங்களது அனைத்து ‘தேர்வாளர் குழு’ வாக்குகளையும் வழங்குகின்றன.
உதாரணத்திற்கு, டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு வேட்பாளர் 50.1% வாக்குகளைப் பெற்றால், அவருக்கு டெக்சாஸ் மாகாணத்தின் அனைத்து தேர்வாளர் குழு (டெக்சாஸில் மொத்தம் 40 உள்ளன) வாக்குகளும் வழங்கப்படும். ஒரு மாகாணத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற வேட்பாளரும் கூட அதே எண்ணிக்கையிலான தேர்வாளர் குழு வாக்குகளையே பெறுவார்.
மக்களின் வாக்குகளை அதிகம் பெற்றும் தோல்வியடைய முடியுமா?
ஆம், முடியும். அதேபோல குறைவான மக்கள் வாக்குகள் பெற்ற வேட்பாளரும் கூட, மாகாண அளவிலான சில நெருக்கடியான போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம் அதிபராக முடியும்.
கடந்த 2016ஆம் ஆண்டு, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தனது போட்டியாளரான ஹிலாரி கிளிண்டனைவிட சுமார் 30 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றிருந்தார்.
அதேபோல, 2000ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வென்ற ஜார்ஜ் புஷ் தனது போட்டியாளரான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோரை விட 5 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றிருந்தார்.
‘தேர்வாளர் குழு’ என ஏன் அழைக்கப்படுகிறது?
இந்த தேர்வாளர் குழு’ (Electoral college) என்பது மாகாண வாக்குகளை வழங்குவதற்கு பொறுப்பான உறுப்பினர்களின் ஒரு குழுவைக் குறிக்கிறது. அவர்கள் ‘தேர்வாளர்கள்’ (Electors) என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்த முறை, அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மற்ற அனைத்து அமெரிக்க தேர்தல்களும் ஒரு எளிய மக்கள் வாக்கெடுப்பால் தீர்மானிக்கப்படுகின்றன.
தேர்வாளர் குழு உறுப்பினர்கள் தங்கள் மாகாணத்தில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமா?
சில மாகாணங்களில், பொதுமக்கள் யாரை ஆதரித்தார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், கோட்பாட்டளவில் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு தேர்வாளர் குழு’ உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும்.
ஆனால் நடைமுறையில், குழு உறுப்பினர்கள் எப்போதும் அதிக (பொது மக்களின்) வாக்குகள் பெறும் வேட்பாளருக்கே வாக்களிக்கின்றனர்.
ஒரு தேர்வாளர் குழு உறுப்பினர் தங்கள் மாகாணத்தின் ஆதரவு பெற்ற அதிபர் வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தால், அவருக்கு அந்த மாகாண தேர்தல் முடிவின் மீது நம்பிக்கையில்லை என்ற அடிப்படையில் ‘நம்பிக்கையற்றவர்’ (Faithless) என்று வர்ணிக்கப்படுவார்.
கடந்த 2016 அதிபர் தேதலில், ‘ஏழு தேர்வாளர் குழு’ வாக்குகள் இவ்வாறு முத்திரை குத்தப்பட்டன. ஆனால் அது தேர்தல் முடிவை மாற்றவில்லை.
சில மாகாணங்களில், ‘நம்பிக்கையற்ற’ தேர்வாளர்களுக்கு அபராதம் விதிக்கலாம் அல்லது அவர்கள் மீது வழக்குத் தொடரலாம்.
சமமான ‘தேர்வாளர் குழு’ வாக்குகள் பெற்றால் என்னவாகும்?
யாரும் பெரும்பான்மை வெற்றி பெறவில்லை என்றால், அமெரிக்க சட்டமியற்றுபவர்களின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபை அதிபரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கும்.
கடந்த 1824ஆம் ஆண்டில், நான்கு வேட்பாளர்கள் தேர்வாளர் குழு வாக்குகளை சமமாக பிரித்ததால், அவர்களில் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனது. அப்போது ஒருமுறை மட்டுமே இது நடந்துள்ளது.
ஆனால் தற்போதைய சூழலில், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை ஆதிக்கம் செலுத்துவதால் இது நடக்க வாய்ப்பில்லை.
‘தேர்வாளர் குழு’ முறை ஏன்?
கடந்த 1787ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது, நாட்டின் மொத்த பரப்பளவு மற்றும் அப்போது இருந்த தகவல் தொடர்பு சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, ஒரு அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்துவது சாத்தியமற்றதாக இருந்தது.
எனவே, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்வாளர் குழுவை உருவாக்கினார்கள். அதிபரைத் தேர்ந்தெடுக்க நாடு முழுவதும் மக்கள் வாக்களிப்பதை விட, தேர்வாளர் குழு மூலம் அவர்களின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதற்காக, சிறிய மாகாணங்கள் இந்த முறையை ஆதரித்தன.
மக்கள் தொகையில் அடிமைகளை பெரும்பான்மையாகக் கொண்ட தென் மாகாணங்களில் இந்த தேர்வாளர் குழு முறை பிரபலமாக இருந்தது. அடிமை மக்களால் வாக்களிக்க முடியவில்லை என்றாலும் கூட, அவர்கள் அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டனர். இது தென் மாகாணங்களுக்கு சமமற்ற அதிகாரத்தை வழங்கியது.
தேர்வாளர் குழுவின் நிறை, குறைகள் என்ன?
நிறைகள்
- சிறிய மாகாணங்கள் வேட்பாளர்களுக்கு முக்கியமானதாக இருக்கின்றன.
- வேட்பாளர்கள் நாடு முழுவதும் பயணம் செய்யத் தேவையில்லை, முக்கிய மாகாணங்கள் மீது கவனம் செலுத்தினால் போதும்.
- ஒவ்வொரு மாகாணத்திலும் ஏற்படும் பிரச்னை என்பதைக் குறிப்பாகக் கண்டறிய முடியும் என்பதால் மறு வாக்கு எண்ணிக்கை எளிதாக இருக்கும்.
குறைகள்
- மக்கள் வாக்குகளை வென்றவர் தேர்தலில் தோல்வியடையலாம்.
- பொது மக்களில் சிலர் தங்கள் வாக்குகளுக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கருதுகிறார்கள்.
- ஸ்விங் மாகாணங்கள் என அழைக்கப்படும் மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் உள்ளது.
ஸ்விங் மாகாணங்கள் என்றால் என்ன?
பெரும்பாலான மாகாணங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரே கட்சிக்கே தொடர்ந்து வாக்களிக்கின்றன.
இதனால் தான் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள், குறிபிட்ட ‘ஸ்விங் மாகாணங்களை’ மட்டும் குறிவைக்கின்றனர். இதுபோன்ற ஸ்விங் மாகாணங்களில் எந்தக் கட்சி வேட்பாளருக்கு வேண்டுமானாலும் மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தக்கூடும்.
வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 2024 அதிபர் தேர்தலில், அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை சிறந்த ஸ்விங் மாகாணங்களாக இருக்கின்றன.
போலி தேர்வாளர் என்றால் என்ன?
‘போலி தேர்வாளர்கள்’ என்ற விஷயம் 2020ஆம் ஆண்டின் போது தான் பரவலாக அறியப்பட்டது. ஏழு அமெரிக்க மாகாணங்களில் டிரம்ப் ஆதரவு குடியரசுக் கட்சியினர் சிலர், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் முயற்சியில் அவர்களுக்குச் சாதகமான ‘தேர்வாளர் குழு’ உறுப்பினர்களைத் தேர்வு செய்தனர்.
அவர்கள் சில ஆவணங்களைப் போலியாக உருவாக்கி அதில் கையொப்பமிட்டு, நாடு முழுவதும் உள்ள தேர்தல் குழு உறுப்பினர்கள் வாக்களிக்க இருந்த நாளான 2020, டிசம்பர் 14ஆம் தேதி அன்று மாகாணத் தலைநகரங்களுக்கு வந்தனர். பொதுவாக மாகாணத் தலைநகரங்களில் கூடி தான் தேர்வாளர்கள் வாக்களிப்பார்கள்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட சிலரின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதற்கான விசாரணைகள் இன்றுவரை நடந்து வருகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.