ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகு, சீனாவிடம் நெருங்கும் வங்கதேசம்; இந்தியாவின் திட்டம் என்ன?
- எழுதியவர், தேப் பானி மஜும்தார் மற்றும் பத்மஜா வெங்கடராமன்
- பதவி, பிபிசி கண்காணிப்பு
வங்கதேசத்தின் இடைக்கால அரசுக்கும் சீனாவுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருகிறது.
சீன தூதர் யாவ் வென், வங்கதேசத்தில் ‘தலையிடாமை கொள்கையை’ வலியுறுத்தி வருகிறார். ‘வறுமையற்ற, ஜனநாயக நாடாக’ வங்கதேசத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்து, அவர் நாட்டை விட்டு வெளியேறியதால், முகமது யூனுஸ் ஆகஸ்ட் 8-ஆம் தேதி அன்று அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த வன்முறைகள் குறித்து மேற்கத்திய நாடுகள் விமர்சனங்கள் தெரிவித்தன. ஆனால், ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டு வெளியேறிய அடுத்த நாளே சீனா, ‘சமூக ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது’ பற்றி மட்டுமே கருத்து தெரிவித்திருந்தது.
சீனாவின் ராஜ்ஜீய செயல்பாடுகள்
வங்கதேசத்தில் சீனாவின் ராஜ்ஜீய செயல்பாடுகளுக்குச் சீன தூதர் யாவ் வென் தலைமை தாங்குகிறார். ஷேக் ஹசீனா பதவி விலகுவதற்கு முக்கிய காரணமாக இருந்த மாணவர் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் அவர் சந்திப்புகளை நடத்தி வருகிறார்.
இது தொடர்பாக, அவர் வங்கதேச தேசியவாத கட்சியை (BNP) தொடர்பு கொண்டு, ‘உள்கட்சி ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தைகளை’ அதிகரிப்பதாக உறுதியளித்தார்.
ஷேக் ஹசீனா அரசால் தடை செய்யப்பட்ட வங்கதேசத்தின் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சித் தலைவர்களை செப்டம்பர் 2-ஆம் தேதி அன்று யாவ் வென் சந்தித்தார். அப்போது அவர் அக்கட்சியை ‘ஒழுக்கமுள்ள கட்சி’ என்று விவரித்தார். மேலும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியும் ‘பரஸ்பர பேச்சுவார்த்தையைத்’ தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தது.
டாக்கா ட்ரிப்யூன் செய்தித்தாளின் படி, ‘2010-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு எந்த நாட்டிலிருந்தும் ஒரு தூதரக அதிகாரி கூட ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் அலுவலகத்திற்கு வரவில்லை’.
‘ஷேக் ஹசினாவின் கட்சியான அவாமி லீக்கின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்பட்ட சீனா, தற்போது வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது குறித்து ஆலோசித்து வரும் சில நாடுகளுள் ஒன்றாக இணைந்துள்ளதாக’ அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சீன அரசுக்குச் சொந்தமான ‘குளோபல் டைம்ஸ்’ செய்தித்தாளின்படி, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல், யாவ் வென் வங்கதேச இடைக்கால அரசின் பல ஆலோசகர்களையும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் ஷபிஃகுர் ரஹ்மானையும் சந்தித்துள்ளார்.
‘தீவிர ராஜ்ஜீய உறவு’ என்பது வங்கதேசத்தில் அரசியல் மாற்றங்கள் இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கும் இடையேயான நிலையானதாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“நாங்கள் வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் அந்நாட்டின் மற்ற துறைகளுடன் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புகிறோம்,” என்று செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று, சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
முகமது யூனுஸ் – சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு
செப்டம்பர் 25-ஆம் தேதி, முகமது யூனுஸ் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியை சந்தித்தார்.
வங்கதேசத்தில் விரைவாகவே ஸ்திரத்தன்மை வரும் என்று வாங் யி நம்பிக்கை தெரிவித்ததாகச் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும், “இருநாட்டு உறவுகளை முன்னெடுத்துச் செல்ல வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது,” என்றும் அந்த அமைச்சகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இதற்கிடையில், முகமது யூனுஸ் இரு நாட்டு உறவுகளின் ‘புதிய அத்தியாயத்தை வரவேற்பதாகவும்’ மற்றும் இரு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பை அதிகரிக்க அழைப்பு விடுத்ததாகவும் வங்கதேசத்தின் ‘BDNews24’ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அக்டோபர் 10-ஆம் தேதி, சீன தூதர் யாவ் வென் வங்கதேசத்தின் மாணவர் இயக்கத்தின் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் ‘தைரியம் மற்றும் விவேகத்தைப்’ பாராட்டினார் என்று குவாஞ்சா என்ற சீன வலைதளம் WeChat என்னும் தளத்தில் சீன தூதரகத்தின் ஒரு பதிவை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.
இந்த மாணவர்கள் சீனாவின் ‘உண்மையான நம்பகமான நட்பிற்காக’ நன்றி தெரிவித்தனர் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வளர்ப்பதில் பங்களிப்பதாகவும் அவர்கள் உறுதி அளித்ததாக ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மாணவர்களுடனான உறவை மேம்படுத்தும் ஒரு பகுதியாக, சீனாவைச் சேர்ந்த மருத்துவக்குழு ஒன்று டாக்கா மருத்துவமனைகளுக்குச் சென்று 160 நோயாளிகளைப் பரிசோதித்தது. இது குறித்து யாவ் வென் கூறுகையில், “போராட்டத்தின் போது, காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு முன்னுரிமை வழங்குவது என்ற இரு நாடுகளின் முடிவை பிரதிபலிக்கிறது,” என்றார்.
சீனாவின் தூதரக அதிகாரிகள் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை வங்கதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்குச் சென்று நிவாரண பொருட்களை வழங்கினர். இந்த குழு 11,000 பேரைச் சந்தித்து, 20,000 டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம் ரூபாய்) பிரதமரின் நிவாரண நிதிக்கு அளித்தது. மேலும் ஒரு லட்சம் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 84 லட்சம் ரூபாய்) வங்கதேசத்தின் செஞ்சிலுவை சங்கத்திற்கு வழங்கியது.
2 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம்
வங்கதேசத்தின் எதிர்கால வளர்ச்சியில் சீனா நம்பிக்கை வைத்து, இடைக்கால அரசு அமைக்கப்பட்ட போது சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் அந்த நாட்டில் 85 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 715 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளதாக அக்டோபர் 1-ஆம் தேதி அன்று வங்கதேச செய்தித்தாளான ‘தி டெய்லி ஸ்டாரில்’ சீன தூதர் அயோ வென் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் மாதத்தில் இருந்து வங்கதேசத்தின் இறக்குமதிக்கு 100% வரி விலக்கு கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 4 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 3.4 கோடி ரூபாய்) மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்குவதாகவும், மேலும் பெல்ட் அண்ட் ரோடு முன்னெடுப்பின் கீழ், சீனா ஏழு ரயில்வே, 12 நெடுஞ்சாலைகள், 21 பாலங்கள் மற்றும் 31 மின்சாரம் மற்றும் எரிசக்தி திட்டங்களை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சீனாவிற்கும் சிட்டகாங் துறைமுகத்திற்கும் இடையே ஒரு புதிய நேரடி கடல் வழி பாதை செப்டம்பர் மாதத்தில் இருந்து செயல்படத் தொடங்கியது. மேலும் ஜியாங்சி மற்றும் டாக்கா இடையே விமான சரக்கு கொண்டு செல்ல மட்டுமே ஒரு பாதையும் திறக்கப்பட்டுள்ளது.
வங்கதேசம், தனது ஜவுளித் தொழிலுக்காக 70% மூலப்பொருட்களுக்கு சீனாவைச் சார்ந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 2022-23 ஆண்டில் 24 பில்லியன் டாலர்களாக (இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது, இதில் இறக்குமதி மட்டுமே 22.9 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1.9 லட்சம் கோடி ரூபாய்) ஆகும்.
கடன் வழங்குவதற்காகச் சீனா அதிக வட்டி விகிதம் விதிக்கும் என்ற கவலைகளுக்கு மத்தியில், வங்கதேசத்தின் இடைக்கால அரசு அக்டோபர் 14-ஆம் தேதி சீனா தலைமையிலான பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டமைப்பின் (Regional Comprehensive Economic Partnership – RCEP) உதவியைப் பெறுவதற்கான முதல் படியை எடுத்தது. இதனால் வங்கதேசத்தின் ஏற்றுமதி 3.26 பில்லியன் டாலராகவும் (இந்திய மதிப்பில் சுமார் 27,400 கோடி ரூபாய்), அந்நிய நேரடி முதலீடு 3.36% ஆகவும் அதிகரிக்கக்கூடும் என்று டெய்லி ஸ்டார் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
ராணுவ உறவுகள்
வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பயணத்தில், சீனக் கடற்படையை சேர்ந்த குய் ஜிகுவாங் மற்றும் ஜிங் கங்ஷன் ஆகிய கப்பல்கள் அக்டோபர் 12-ஆம் தேதியன்று வங்கதேசத்தின் சிட்டகாங் நகருக்குச் சென்றதாக ‘டாக்கா ட்ரிப்யூன்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாட்டுக் கடற்படை அதிகாரிகளும் ‘பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில்’ வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்தியதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தின் வெளியுறவுத்துறை ஆலோசகர் முகமது தௌஹீத் ஹுசைன் அக்டோபர் 14-ஆம் தேதியன்று பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க அழைப்பு விடுத்தார் மற்றும் ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதில் சீனாவின் உதவியை நாடியதாகவும் இது ‘ஆழமான ஒத்துழைப்புக்கான வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு’ என்று யாவ் வென்-ஐ மேற்கோள்காட்டி ‘பிரதோம் அலோ’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீன ஊடகங்கள் கூறுவதென்ன?
நியூயார்க்கில் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளின்கனை முகமது யூனுஸ் சந்தித்து, ‘வங்கதேசத்தை மாற்றுவதற்கான செயல்பாடுகளை வலுக்கட்டாயமாகச் செய்வதற்கான’ அமெரிக்காவின் நோக்கத்திற்கு எதிராக எச்சரித்தார் என்று அக்டோபர் 7-ஆம் தேதி குவாஞ்சா தளத்தில் வெளியான ஒரு செய்திக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 13-ஆம் தேதி அன்று, ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையின் சீன மற்றும் ஆங்கிலப் பதிப்புகள், சீன கடற்படைக் கடற்படையின் வருகையைப் பற்றிய இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை விமர்சித்தன. “சீனா மற்றும் வங்கதேசம் இடையே சாதாரண ராணுவப் பரிமாற்றங்கள் குறித்த இந்திய ஊடகங்களின் ஊகங்கள் மற்றும் எச்சரிக்கையான அணுகுமுறை, அதன் இலாப-இழப்புக் (zero-sum mentality) கண்ணோட்டத்தை பிரதிபலிக்கிறது,” என்றும் குறிப்பிட்டிருந்தது.
வங்கதேசம் RCEP-இல் இணைவதற்கான முயற்சி குறித்து அக்டோபர் 17-ஆம் தேதி அன்று ‘குளோபல் டைம்ஸ்’ செய்தித்தாளில் வெளியான கட்டுரையில், “விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க வங்கதேசம் ஒப்புக்கொண்டதால், இந்தியா அதனை தடுக்க முயற்சிக்கின்றது. மேலும் வங்கதேசத்திற்கு யாருடன் வேண்டுமானாலும் ஒப்பந்தம் கொள்ள முழு உரிமை இருக்க வேண்டும்,” என்றும் தெரிவித்துள்ளது.
வங்கதேசம் RCEP-இல் இணைது குறித்த மற்றொரு ‘குளோபல் டைம்ஸ்’ செய்தியில், “வங்கதேசத்திற்கு இந்தியா வர்த்தக ரீதியாக ஒரு முக்கிய நட்பு நாடாக இருந்தாலும், அந்நாடு அதன் வர்த்தக பரிமாற்றத்தை பல்வகைப்படுத்துவது அவசியம்,” என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்திய ஊடகங்கள் கூறுவதென்ன?
இந்திய அரசு வட்டாரங்கள், யாவ் வென் ஜமாத்-இ-இஸ்லாமியுடன் நடத்திய சந்திப்பு விசித்திரமானது என்று கூறியுள்ளதாக ‘நியூஸ்18’ ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
“பிராந்தியச் செயல்பாடுகளில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை இந்தியாவால் புறக்கணிக்க முடியாது,” என்று ‘ஃபர்ஸ்ட் போஸ்ட்’ செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
RCEP-இல் இணையுமாறு வங்கதேசத்தின் இடைக்கால அரசை வற்புறுத்துவதன் மூலம் சீனா ஒரு படி மேலே சென்றுள்ளது என்று ‘தி ஷில்லாங் டைம்ஸின்’ செய்தி ஒன்று குறிப்பிட்டுள்ளது. அதேசமயம், ‘டெக்கான் ஹெரால்டு’ நாளிதழில் வெளியான ஒரு செய்திக்கட்டுரையில், வங்கதேசத்திற்கு சீனா வழங்கிய 6 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 50,000 கோடி) கடன், வங்கதேச அரசின் மீது அதன் செல்வாக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
“அதானி குழுமம் உட்பட வங்கதேசத்தில் உள்ள இந்திய வணிகங்கள் நிலுவைத் தொகையை திரும்பி செலுத்துமாறு கோரியுள்ளன, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இந்த ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய உள்ளது,” என்று ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் நம்பிக்கையைப் பெறும் நோக்கில் முகமது யூனுஸின் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் வாங் யீ இடையேயான சந்திப்பை குறிப்பிட்டு, “இந்தியா இந்த குறியீடுகளை உற்று நோக்க வேண்டும், புதிய யதார்த்தத்தை பக்குவமான, நடைமுறை ரீதியாகவும் கையாள வேண்டும்”, என்றும் குறிப்பிட்டுள்ளது.
சீனக் கடற்படையின் வருகை குறித்து, “ஷேக் ஹசீனாவின் இந்தியாவுடன் நெருக்கம் கொண்டதன் காரணமாக தற்போது புதிய அரசாங்கம் இந்தியாவுக்கு எதிரான குறியீடுகளை வழங்கும்போது, வங்கதேசத்தில் சீனா தனது செல்வாக்கத்தை மேம்படுத்த முயற்சி செய்யலாம்”, என்று மனி கண்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.