நெருக்கடியில் களமிறங்கும் இந்திய அணி, தயார்நிலையில் நியூசிலாந்து – வெற்றி யாருக்கு?

IND vs NZ Test Match - Mumbai Wankhede Stadium

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகுந்த அழுத்தம், நெருக்கடிக்கு மத்தியில் இன்று (நவம்பர்1) மும்பை வான்ஹடே மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்திய அணிக்கு அடுத்து வரக்கூடிய 6 டெஸ்ட் போட்டிகளும் முக்கியம். ஆகவே, வெற்றி அவசியம் என்ற நிர்பந்தத்துடன் இன்று களமிறங்குகிறது.

இந்திய அணிக்கு நெருக்கடி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 2 முறை தகுதி பெற்றுள்ள இந்திய அணி 3வது முறையாக முன்னேறிவிடலாம் என்று எண்ணியிருந்தது. ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது, 12 ஆண்டுகளுக்குப் பின் உள்நாட்டில் டெஸ்ட் தொடரைப் பறிகொடுத்தது என அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைச் சந்தித்த பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கனவு தள்ளிப்போயுள்ளது.

இன்று நடக்கவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டி தவிர்த்து, ஆஸ்திரேலியா சென்று அந்த அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த 6 டெஸ்ட் போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றால்தான், இந்திய அணி எந்தவித சிக்கலும் இன்றி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். ஒருவேளை ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியைச் சார்ந்திருக்க வேண்டும்.

இந்திய அணி 13 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகள், 4 தோல்விகள், ஒரு டிரா என 98 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், வெற்றி சதவிகிதம் 62 ஆகக் குறைந்துவிட்டது. இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும், இந்திய அணிக்கும் குறைந்த அளவே வித்தியாசம் இருக்கிறது. ஆதலால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும்.

அது மட்டுமல்லாமல் நியூசிலாந்து அணியும் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற 4 வெற்றிகள் மட்டுமே தேவை. இந்திய அணிக்கு எதிராக கடைசி டெஸ்டில் ஒருவேளை வெற்றி பெற்றால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுவிட்டால் நியூசிலாந்தும் பைனலுக்கு போட்டியிடும்.

ஆதலால் இந்திய அணி நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையே இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதில் இந்தியாவுக்குக் கடும் போட்டியாக உள்ளன.

ஆதலால், இந்திய அணிக்கு கடைசி டெஸ்டில் கிடைக்கும் வெற்றிதான் அடுத்தடுத்து வெற்றி நடை போடுவதற்கு ஊக்கமாக அமையும் என்பதால் மிகுந்த நெருக்கடியில் களமிறங்குகிறது.

எதிர்பாராத மோசமான ஃபார்ம்

IND vs NZ Test Match - Mumbai Wankhede Stadium

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியின் பேட்டர்கள், குறிப்பாக சீனியர் பேட்டர்கள் மோசமான ஃபார்மில் இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. கடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. தேவையான ரன்களை குவிக்காததுதான் புனே டெஸ்டில் தோல்வி அடைய முக்கியக் காரணம் என்று கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படையாகத் தெரிவித்தார்.

“பேட்டிங்கில் எதிர்பார்த்த ரன்களை குவிக்கவில்லை, மோசமாக பேட் செய்தோம். பந்துவீச்சாளர்கள் அவர்களின் பணியைச் செய்தாலும் பேட்டர்கள் ரன் குவிப்பது முக்கியம்” என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நெருங்கும் வேளையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சர்ஃபிராஸ் கான், சுப்மான் கில் போன்ற பேட்டர்கள் சிறப்பாக பேட் செய்வது அவசியமாகிறது. புனே டெஸ்டில் சான்ட்னரின் வேகம் குறைந்த சுழற்பந்துவீச்சு நுட்பத்துக்கு எதிராக இந்திய பேட்டர்களின் திறமை சறுக்கிவிட்டது.

சவாலான ஆஸ்திரேலிய ஆடுகளத்தை எதிர்கொள்வதற்கு முன், பெங்களூரு டெஸ்டில் வேகப்பந்துவீச்சுக்கு 46 ரன்களில் சுருண்ட இந்திய அணி, புனே டெஸ்டில் சுழற்பந்துவீச்சுக்கு 156 ரன்களிலும், 245 ரன்களிலும் ஆட்டமிழந்தது அதன் பேட்டிங் ஃபார்மை கவலைக்குரியதாக வைத்துள்ளது.

IND vs NZ Test Match - Mumbai Wankhede Stadium

பட மூலாதாரம், Getty Images

குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா புனே டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது, விராட் கோலி ஃபுல்டாஸ் பந்துவீச்சில் போல்டானது இருவரின் ஃபார்மையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

அது மட்டுமல்லாமல் புனே டெஸ்டில் ஜடேஜா, அஸ்வினின் பந்துவீச்சும் பெரிதாக எடுபடவில்லை. இருவரும் வழக்கமான பந்துவீச்சை மட்டுமே வெளிப்படுத்தினார்களே தவிர ஆடுகளத்திற்கு ஏற்ப தங்கள் பந்துவீச்சின் வேகத்தைக் குறைத்து, பல்வேறு பந்துவீச்சு வடிவங்களை வெளிப்படுத்த தவறவிட்டனர்.

புனே டெஸ்டில் 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து பேட்டர்கள் அதிகமான ரன்கள் குவிக்க ஜடேஜா, அஸ்வின் இருவரும் ரன்களை வாரி வழங்கியது முக்கியக் காரணம்.

மும்பை வான்ஹடே டெஸ்ட் போட்டி இந்திய அணி அடுத்த கட்டத்திற்குச் செல்ல முக்கியமானது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் கடைசி டெஸ்டுக்கு இருக்கலாம் எனத் தெரிகிறது. ஜடேஜா அல்லது வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அக்ஸர் படேல் சேர்க்கப்படலாம் என விவாதிக்கப்படுகிறது.

தயார் நிலையில் நியூசிலாந்து

IND vs NZ Test Match - Mumbai Wankhede Stadium

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்து அணி ஆசிய கண்டத்திற்குப் பயணம் செய்யத் தொடங்கியதில் இருந்து தீவிரமாக, திட்டமிட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த போதிலும் மனம் தளராமல் இந்திய டெஸ்ட் தொடரை எதிர்கொண்டது.

பெங்களூருவில் இந்திய அணி 46 ரன்களில் சுருண்டதை அந்த அணியினரே எதிர்பார்க்கவில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திய நியூசிலாந்து முதல் டெஸ்டை வென்றது. 2வது டெஸ்டில் சான்ட்னரின் பந்துவீச்சு வெற்றியை எளிதாக்கியது.

முதல்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி வென்று சாதித்தது. அந்த அணியின் அனுபவ பேட்டரும், முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியம்ஸன் இல்லாமல் இந்த மாபெரும் வரலாற்று வெற்றியை நியூசிலாந்து பெற்றுள்ளது.

இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப பந்துவீசுவது குறித்து பிரத்யேக பயிற்சிகளையும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் எடுத்துள்ளனர். குறிப்பாக இலங்கையின் ரங்கன்னா ஹிராத் இந்திய ஆடுகளங்கள் குறித்தும், அதன் தன்மை குறித்தும் துல்லியமாகக் கூறி பயிற்சி அளித்து வருகிறார்.

பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு சிறிதும் சளைக்காமல் நியூசிலாந்து அணி இருக்கிறது. நியூசிலாந்து அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது. வான்ஹடே மைதானத்தில், வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக டாஸ் அமையும்.

வான்ஹடே மைதானம்

IND vs NZ Test Match - Mumbai Wankhede Stadium

பட மூலாதாரம், Getty Images

வான்ஹடே மைதானத்தில் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 12 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது, 7 போட்டிகளில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் வென்றுள்ளன. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

கடந்த 1988ஆம் ஆண்டு ஜான் ரைட் கேப்டன்சியில் பயணம் செய்த நியூசிலாந்து அணி, இதே மும்பை வான்ஹடே மைதானத்தில் 136 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது.

ஒருவேளை கடைசி டெஸ்டிலும் நியூசிலாந்து வென்றால், 36 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மும்பையில் வெற்றியைப் பதிவு செய்யும். கடைசியாக 2021ஆம் ஆண்டில் மும்பையில் நடந்த டெஸ்டில் நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

மும்பை வான்ஹடே மைதானத்தில் இதுவரை இந்தியா- நியூசிலாந்து அணிகள் இதுவரை 3 முறை மோதியுள்ளன, அதில் 2 முறை இந்திய அணியும், ஒருமுறை நியூசிலாந்தும் வென்றுள்ளன.

ஆடுகளம் எப்படி?

IND vs NZ Test Match - Mumbai Wankhede Stadium

பட மூலாதாரம், Getty Images

மும்பை வான்ஹடே ஆடுகளம் எப்போதுமே பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. இரண்டாவது நாளில் இருந்து சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும்.

புற்கள் பெரிதாக பிட்ச்சில் இல்லை என்பதால், சுழற்பந்துவீச்சுக்கு பந்து நன்கு டர்ன் ஆகும். வேகப்பந்துவீச்சு, மிதவேகம், சுழற்பந்துவீச்சு எதுவானாலும் பந்து நன்கு பவுன்ஸ் ஆகி பேட்டர்களை நோக்கி வரும் என்பதால் ரன் குவிக்க இரு அணி பேட்டர்களுக்கும் ஏதுவாக இருக்கும்.

முதல் நாளில் பெரிதாக விக்கெட் வீழ்வது கடினமாக இருக்கும். இரண்டாவது நாளில் இருந்து ஆட்டம் மெதுவாக சுழற்பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்லத் தொடங்கும்.

டாஸ் வெல்லும் அணி யோசிக்காமல் முதலில் பேட் செய்வது உத்தமம். முதல் இரு நாட்கள் பேட்டர்களை நோக்கித்தான் பந்து வரும் என்பதால் பெரிய ஸ்கோரை அடித்துக்கொள்ள முடியும்.

அதன்பிறகு ஆடுகளத்தில் விரிசல்கள் ஏற்படும்போது, சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றாற்போல் பந்து திரும்பத் தொடங்கும். அப்போது பேட் செய்வது கடினமாக இருக்கும். சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக ஆடுகளம் மாறுவதற்கு பெரிய ஸ்கோரை அடித்துவிடுவது நல்லது.

– இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு