நாடாளுமன்ற தேர்தல் பரிசாக அனுர அரசு யாழ்ப்பாணத்தில் பிரதான வீதியொன்றை உயர்பாதுகாப்பு வலயத்தில் திறந்துவிட்டுள்ளது.
பலாலி வீதி – வசவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதியே 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று (01) காலை ஆறு மணி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வசாவிளான் சந்தி மற்றும் அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் ஒன்றேகால் கிலோமீற்றர் வீதி மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
1990ம் ஆண்டு பலாலியிலிருந்து முன்னேறிய இராணுவத்தால் ஆக்கிமிக்கபட்டு உயர்பாதுகாப்பு வலயமாக தற்போது வரை சுமார் ஆயிரம் ஏக்கரிற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு உள்ளது.
அவ்வாறு உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியே வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் அனுமதிக்கமைய மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் விலக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வீதியை திறந்து வைத்தமை தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் முதல் பலரும் உரிமை கோரிவருவதுடன் தமது தேர்தல் பரப்புரைக்கும் அதனையே பயன்படுத்திவருகின்றனர்.