சிங்களப் பேரினவாத மகாவம்சமும் தமிழர்களின் உரிமை மறுப்பும்

by wamdiness

சிங்களப் பேரினவாத மகாவம்சமும் தமிழர்களின் உரிமை மறுப்பும் சிங்கள, பெளத்த பேரினவாதத்தை முதன்மைப்படுத்தும் மகாவம்ச மனோநிலையிலிருந்து, சிங்கள ஆட்சியாளர்கள் யாரும் மாறப்போவதுமில்லை, சிங்கள பெளத்த அடிப்படைவாதம் அதற்கு அனுமதிக்கப்போவதுமில்லை. இதனை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மாவீரர்நாள் உரையில் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் தெளிவான சிந்தனை எச்சரிக்கை யின் பின்னரும் ஜே.வி.பி யின் அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான பெளத்த பேரினவாத அரசை வரவேற்றுக் கொண்டாட நினைக்கும் தமிழர்களை என்னவென்று சொல்வது? தற்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கப்போவதில்லை என ஜேவிபி அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

அதாவது பயங்கரவாத தடை ச் சட்டத்தை (PTA) நீக்குவதாக அளித்த வாக்குறுதியிலிருந்து ஜேவிபி பின்வாங்கியுள்ளது அதே நேரம் அரசியல் பழிவாங்கலுக்காக PTA ஐ பயன்படுத்தமாட்டோம் என புது கதையொன்று சொல்கின்றது. 1979 இல் ஒரு தற்காலிக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த PTA, 1982 இல் நிரந்தரமான சட்டமாக்கப்பட்டது. இந்த PTA மூலம் தமிழ் பேசும் மக்கள் மீதான தன்னிச்சையான கைதுகள், நியாயமற்ற விசாரணைகள் மற்றும் சித்திரவதைகள் அங்கீகரிக்கப்பட்டன. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தரவுகளின்படி குறைந்தது 84% PTA கைதிகள் கைது செய்யப்பட்ட பின்னர் சித்திரவதைகளை அனுபவிக்கின்றார்கள். அதே போல 90% க்கும் அதிகமான PTA கைதிகள் சிங்கள மொழியில் ஆவணங்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.இது போதாதென்று PTA கைதிகளுக்கு சட்ட உதவியும் கூட மறுக்கப்படுகின்றது. 2018 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி 29 தமிழ் அரசியல் கைதிகள் 5 முதல் 10 ஆண்டுகள் வரை எவ்வித விசாரணைகளு மின்றி PTA யின் கீழ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்தனர். அதே காலத்தில் 11 தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகளின்றி 10 முதல் 15 ஆண்டுகள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அதாவது PTA எதுவித நீதியான முறைமைகளுமின்றி தடுத்துவைக்கின்றமை உட்பட்ட மிக அநீதியான முடிவுகளுக்கு இடம்கொடுத்திருக்கிறது. கடந்த 1 மாத காலப்பகுதியில் குறைந்தது 5 தமிழ் பேசும் தேசிய செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினாரால் விசாரணை என அழைக்கப்பட்டுள்ளார்கள். சமநேரத்தில் திருகோணமலையில் தமிழ் பேசும் மக்களை அச்சுறுத்திய பாணமுரே திலகவன்ச தேரர் மீது ஜேவிபி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை உண்மையில் PTA ஐ இனப்பாகுபாட்டுடன் தமிழ் பேசும் மக்கள் மீது மட்டும் ஏவி விடப்பட்டிருக்கிறது என்பதற்கு ஜேவிபி யின் ஒரு மாத கால ஆட்சியே சான்றாக இருக்கின்றது. ஆகவே PTA ஐ நீக்காமல் இருந்தால் நெறிதவறிய முடிவுகளும் அநீதிகளும் கட்டமைக்கப்பட்ட வகையில் தொடர்ந்து கொண்டே இருக்கும் .

ஆனால் ஜேவிபி ஒருபோதும் எங்களுக்கு நீதி வழங்க போவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள இவ் PTA விவகாரத்தில் ஜேவிபி யின் திருகுதாளம் ஒரு சான்றாக இருக்கும். எனவே வருகின்ற பாராளமன்றத் தேர்தலில் சிங்களப் பேரினவாதக் கட்சிகளின் வேட்பாளர்களை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்கவேண்டும் இந்நடவடிக்கையின் ஊடாக சிங்கள தேசியப்பயங்கரவாதத்தை ஒட்டுமொத்தத் தமிழர்களும் எதிர்த்து நிராகரிக்கிறார்கள் என்ற செய்தியை உலகளாவிய ரீதியில் தெரிவாகப் பதிவு செய்ய முடியும். தமிழீழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் கவனயீர்ப்பு நடவடிக்கையாகவும் இதனை உலகின்கண்களில் பதிவு செய்யலாம். ஆகவே அன்பார்ந்த தமிழீழ மக்களே வடக்குக் கிழக்கில் போட்டியிடும் பேரினவாத சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களை முற்றாக நிராகரித்து, தமிழர்கள் நாம் தனிச்சிறப்பான தேசிய இனம் என்னும் கோட்பாட்டு உண்மையை உறுதிப்படுத்துவோம்

அனைத்துலகச்  சிந்தனைப்பள்ளி.

தொடர்புடைய செய்திகள்