ஒரு குரங்கிடம் கம்ப்யூட்டரைக் கொடுத்தால், அது ஷேக்ஸ்பியரின் நாடகங்களை எழுதுமா?
- எழுதியவர், ஹன்னா ரிச்சி
- பதவி, பிபிசி நியூஸ், சிட்னி
-
குரங்கையும் தட்டச்சையும் வைத்து ஒரு பழமொழி உள்ளது.
அதாவது, வரம்பற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டால், ஒரு குரங்கு டைப்ரைட்டரில் விசைகளை அழுத்தி அழுத்தி, இறுதியில் ஆங்கில மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியரின் முழுப் படைப்புகளையும் எழுதும் என்பார்கள்.
கணிதத்தில், சம்பவங்களின் சீரற்ற தன்மையையும், சாத்தியங்களையும் விளக்கப் பயன்படும் இதனை ‘Infinite Monkey Theorem’ (‘எல்லையற்ற குரங்கு தேற்றம்’) என்று சொல்வார்கள்.
ஆனால், இப்போது இரண்டு ஆஸ்திரேலிய கணிதவியலாளர்கள், இந்த பழமொழி சாத்தியமற்றது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
‘எல்லையற்ற குரங்கு தேற்றம்’ (Infinite Monkey Theorem) என்று அறியப்படும் இந்த பழமொழி, கணிதம் சார்ந்த கற்பனைப் பரிசோதனை தொடர்பான கோட்பாடு. நிகழ்தகவு மற்றும் சீரற்ற தன்மையின் (probability and randomness) கொள்கைகளை விளக்க நீண்ட காலமாக இது பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும், சிட்னியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான ஸ்டீபன் வுட்காக் மற்றும் ஜே ஃபாலெட்டா தலைமையிலான ஒரு புதிய ஆய்வு, ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், மற்றும் கவிதைகளைகவிதைகள் தட்டச்சு செய்ய எடுக்கும் நேரம் நமது பிரபஞ்சத்தின் ஆயுட்காலத்தை விட அதிகமாக இருக்கும் என்று கண்டறிந்துள்ளது.
சிம்பன்சிகளால் வாக்கியங்கள் எழுத முடியுமா?
அதாவது கணித ரீதியாக உண்மையாக இருந்தாலும், இந்த தேற்றம் உண்மையில் ‘தவறாக வழிநடத்துகிறது’ (misleading) என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு குரங்கின் தனித்திறன்களைக் கருத்தில் கொண்டதுடன், தற்போதைய உலகளாவிய சிம்பன்சிகளின் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ஆய்வு தொடர்ச்சியான கணக்கீடுகளை மேற்கொண்டது. உலகில் தோராயமாக 2 லட்சம் சிம்பன்சிகள் இருக்கலாம் என கருதப்படுகிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு சிம்பன்சியும் கணக்கில் எடுக்கப்பட்டு, அவை அனைக்த்தும் பிரபஞ்சத்தின் இறுதி வரை ஒரு வினாடிக்கு ஒரு விசை (key) என்ற வேகத்தில் தட்டச்சு செய்தாலும் கூட அவை ஷேக்ஸ்பியரின் படைப்புகளைத் தட்டச்சு செய்ய முடியாது என்று முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஒரு சிம்பன்சி தனது வாழ்நாளில் ‘வாழைப்பழம்’ என்ற வார்த்தையை வெற்றிகரமாகத் தட்டச்சு செய்யும் வாய்ப்பு (probability) 5% ஆக இருக்கும். அதே போல், ஒரு சிம்பன்சி ஏதாவது ஒரு (random) வாக்கியத்தை உருவாக்கும் வாய்ப்பு 10 மில்லியன் பில்லியன் முறைகளில் ஒரு முறை நிகழும். (1-ஐத் தொடர்ந்து 25 பூஜ்ஜியங்கள் கொண்ட எண் அளவு.)
உதாரணமாக ‘நான் ஒரு சிம்பன்சி, அதனால் நான் இருக்கிறேன்’ (‘I chimp, therefore I am’) என்ற வாக்கியத்தை டைப் செய்யும் வாய்ப்பு இவ்வளவு அரிது என்று இந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
பிரபஞ்சம் இறக்கும் போது…
“தட்டச்சு (டைப்பிங்) வேகத்தில் முன்னேற்றங்கள் வந்தாலும், சிம்பன்சிகளின் எண்ணிக்கையில் அதிகரித்தாலும் கூட, குரங்குகளின் உழைப்பு எழுத்து படைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு சாத்தியமான கருவியாக இருக்கும் என்பது நம்பத்தகுந்ததாக இல்லை,” என்று இந்த ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட கணக்கீடுகள் ‘வெப்ப இறப்புக் கோட்பாடு’ என்னும் கருதுகோளை அடிப்படையாகக் கொண்டவை. இது பிரபஞ்சத்தின் முடிவைப் பற்றிய பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு கோட்பாடு.
வெப்ப இறப்பு என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், இதில் குறிப்பிட்ட செயல்பாட்டின் படி, பிரபஞ்சத்தின் முடிவு குளிர்ச்சியை உள்ளடக்கியது, மெதுவானது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், இந்தக் கோட்பாட்டின்படி, பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்து, தனது வெப்பத்தை இழந்து குளிர்ச்சியடையும். அதேசமயம், அதிலிருக்கும் அனைத்தும் இறந்து, சிதைந்து, இல்லாமல் போகும்.
இணைப் பேராசிரியர் வூட்காக் கூறுகையில், “இந்த ஆய்வு, குரங்கு தேற்றத்தை பிற நிகழ்தகவு புதிர்கள் மற்றும் முரண்பாடுகளுக்கு மத்தியில் வைக்கிறது. அதன்படி எல்லையற்ற வளங்கள் என்ற கருதுகோளோடு நமது பிரபஞ்சத்தின் வரம்புகளைக் கருத்தில் கொள்ளும்போது பொருத்தமில்லாத முடிவுகளை அளிக்கிறது” என்றார்.