திருடர்களுடன் இணைந்து ஒருபோதும் அரசியல் பயணத்தை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தினால்தான் ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் புதியக் கட்சி ஊடாக அரசியல் செய்ய களமிறங்கியுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மஹரகம பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஏன் நாங்கள் அரசியலுக்கு வரக்கூடாது? நாம் செய்த தவறுகள் என்ன? 70 வருடங்களாக இந்த நாட்டை ஆட்சி செய்தவர்களால், நாம் எந்த பலனைக் கண்டுள்ளோம்? வங்குரோத்து அடைந்த நாடாகத்தான் நாம் இருக்கிறோம். 97 பில்லியன் டொலர் கடன் சுமையுடன் நாடு இன்று பயணிக்கிறது.
நாளைய தினம் பிறக்கவுள்ள சிசுவொன்றுக்கூட 19 இலட்சம் கடனுடன்தான் பிறக்கிறது.
இப்படியாக நாட்டை இவர்கள் சீரழிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? இதனால்தான் நாம் அரசியலுக்கு வந்தோம்.
சிலர் என்னை சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துமாறுக் கூறினார்கள். நான் மீண்டும் அரசியலுக்கு வந்தால், அரசியல்வாதிகள் என்னுடன் முரண்படுவார்கள் என்றும் கூறினார்கள்.
அதேநேரம், இவர்கள் அனைவரும் திருடர்கள் என்று நான் கூறியதைப் போன்று தைரியமாக்கூற, நாடாளுமன்றத்தில் வேறு யாரும் இல்லை என்பதையும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இதனால்தான் சிறைக்குச் செல்லக்கூட தைரியத்துடன், மக்களுக்காக மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளேன்.
உண்மையைக் கூற வேண்டிய அந்த வெற்றிடத்தை நிரப்ப என்னால் மட்டுமே முடியும் என்பதால்தான் நான் பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ளேன்” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.