இந்தியா-சீனா இடையில் எட்டப்பட்ட எல்லை ரோந்து ஒப்பந்தம் களத்தில் என்ன மாற்றம் கொண்டுவரும்?
- எழுதியவர், அபினவ் கோயல்
- பதவி, பிபிசி பத்திரிகையாளர்
கிழக்கு லடாக்கில் உள்ள இந்தியா-சீனாவுக்கு இடையேயான நிர்ணயிக்கப்படாத எல்லைக்கோடு (Line of Actual Control – LAC, எல்.ஏ.சி) தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கைகளின்படி, இரண்டு ராணுவப் படைகளும் டெப்சாங் மற்றும் டெம்சோக் ஆகிய இரண்டு இடங்களுக்குத் திரும்பிவிட்டன. மேலும் இந்த மோதல் புள்ளிகளில் (confrontation points) ரோந்துப்பணி விரைவில் தொடங்கப்படும்.
ஏ.என்.ஐ செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி, வியாழன் அன்று (அக்டோபர் 29) இந்தியாவும் சீனாவும் தீபாவளியின் போது எல்.ஏ.சி பகுதியில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டன.
கொல்கத்தாவில் வணிகர்கள் மற்றும் தொழில்துறை வணிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இந்தியாவுக்கான சீனத் தூதர் சு ஃபெய்ஹாங், “சீனாவும் இந்தியாவும் உறவுகளின் புதிய கட்டத்திற்குள் நுழைகின்றன. இரு நாடுகளும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை அனுபவிக்க உள்ளன,” என்று கூறினார்.
இருதரப்புப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல இந்தியாவுடன் இணைந்து பணியாற்றச் சீனா தயாராக உள்ளது என்று கூறினார்.
2020-இல் உச்சத்தை எட்டிய பதற்றம்
பி.டி.ஐ செய்தி முகமையின் ஒரு கேள்விக்கு பதிலளித்திருந்த சீனத் தூதர், இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, எதிர்காலத்தில் இருநாட்டு உறவுகள் வலுவடைந்து முன்னேறும் என்று கூறினார்.
2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்களும், பல சீன ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்தை எட்டியது.
தற்போது இந்த நிர்ணயிக்கப்படாத எல்லைக்கோடு (எல்.ஏ.சி.) ஒப்பந்தத்தின் நோக்கம் என்ன? இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மீண்டும் சரியான பாதையில் செல்கிறதா? மற்ற பகுதிகளில் உள்ள எல்லைப் பிரச்சனைகளும் ஒவ்வொன்றாகத் தீர்க்கப்படுமா?
பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் இந்தியா-சீனா ஒப்பந்தம்
கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி, இந்தியாவும் சீனாவும் படைகளைத் திரும்பப் பெறுவது மற்றும் ரோந்து பணியைத் துவங்குவது குறித்து ஒப்பந்தம் செய்தன.
ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோதி புறப்படுவதற்கு முன்னதாக ‘படைகளின் ரோந்துப்பணி’ தொடர்பான ஒப்பந்தத்தை இந்தியா அறிவித்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை ஆதரிக்கும் நோக்கில் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இருநாட்டுத் தலைவர்களும் நேருக்கு நேர் உரையாடினர்.
இந்தச் சந்திப்பு குறித்து டெல்லியில் இருந்த ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், “இந்த உச்சி மாநாடு இரு பெரும் வல்லரசு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரித்துள்ளது,” என்று கூறினார்.
“இரு நாடுகளின் எல்லையில் 2020-ஆம் ஆண்டுக்கு முன் நிலவிய சூழ்நிலையை இந்த ஒப்பந்தம் மீட்டெடுக்கும்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.
அதாவது 2020-ஆம் ஆண்டு இந்திய வீரர்கள் எந்த அளவுக்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டார்களோ அதே அளவுக்கு அவர்கள் இப்போது மீண்டும் ரோந்துப் பணியில் ஈடுபட முடியும்.
இந்த ஒப்பந்தத்தால் என்ன மாற்றம் வரும்?
லடாக்குடன் சேர்த்து, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை சீனா உரிமை கொண்டாடுகிறது. ஆனால் தற்போது எட்டப்பட்ட ஒப்பந்தம் லடாக்கை மட்டுமே உள்ளடக்கியது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வானில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் 20 இந்திய வீரர்கள் உள்படப் பல சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். அதன் பிறகு பதற்றம் அதிகரித்தது.
“2020-ஆம் ஆண்டு நடந்த மோதலுக்குப் பிறகு பதற்றம் அதிகரித்தது. ஆனால் 2022-ஆம் ஆண்டில், இந்தியாவும் சீனாவும் கல்வான் மற்றும் பாங்காங் சோ (Pangong Tso) ஏரியில் பிரச்னையைத் தீர்த்தன,” என பாதுகாப்பு நிபுணர் ஏர் கொமடோர் அஷ்மிந்தர் சிங் பாஹ்ல் (ஓய்வு) கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவிற்கு டெப்சாங் மற்றும் டெம்சோக் மிகவும் முக்கியம். டெப்சாங் 900 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு சமவெளிப் பகுதி. அங்கு டாங்கிகள் பயன்படுத்தப்படலாம். இந்தியா ஏற்கனவே அவ்வாறு செய்திருக்கிறது.
“அங்கு இந்தியாவின் தௌலத் பேக் ஓல்டி (Daulat Beg Oldi) விமான ஓடுதளம் உள்ளது. நாங்கள் அங்கு போர் விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களைத் தரையிறக்கியுள்ளோம். எனவே அங்கு அமைதியை மீட்டெடுப்பது ஒரு வரலாற்று நடவடிக்கையாகும்,” என்றார்.
பாஹ்ல் மேலும் கூறுகையில், “மே 2020-க்கு முன், இந்திய வீரர்கள் எளிதாக ரோந்துப் புள்ளிகள் (Patrolling Points) 10, 11, 11A, 12, 13 மற்றும் Y சந்திப்பு ஆகியப் பகுதிகளுக்கு ரோந்து செல்ல முடியும். ஆனால் பின்னர் சீனா அதை ஆக்கிரமித்து அங்கு தற்காலிக கட்டமைப்புகளை உருவாக்கியது. ஆனால் தற்போது எட்டப்பட்ட ஒப்பந்தத்திற்கு பிறகு நாங்கள் மீண்டும் அங்குரோந்து செல்ல முடியும்,” என்றார்.
சீனாவை நம்ப முடியுமா?
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை விளக்கிய பாஹ்ல், “இப்போது இந்தியா மற்றும் சீனாவின் படைகள் டெப்சாங் மற்றும் டெம்சோக்கிற்கு ரோந்து செல்லலாம். ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்கள் மட்டுமே செல்ல முடியும். 15 முதல் 20 பேர் வரை செல்லலாம். இது தவிர, மோதல் ஏற்படும் சூழல் ஏற்படாமல் இருக்க, பரஸ்பரம் தகவல் தெரிவித்து ரோந்து பணி மேற்கொள்ளப்படும்,” என்றார்.
“சீனா தான் கட்டியிருந்த தற்காலிகக் கட்டமைப்புகளை அகற்றியுள்ளது. ஆனால் இடையக மண்டலம் (buffer zone) எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதில் இன்னும் தெளிவு இல்லை,” என்றார்.
“படைவீரர்களை திரும்பப் பெறுவது முதல் படியாகும். அதன் பிறகு, எல்லையில் இருந்து ராணுவத்தை குறைக்கும் அல்லது அகற்றும் செயல்முறை (demilitarization) நிகழும்,” என்று அவர் கூறினார்.
இது நடந்தால், இந்தியா தனது வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க முடியும். அவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். ஏனெனில் வீரர்களை எப்போதும் எச்சரிக்கையாக வைத்திருப்பது கடினமான ஒன்று.
பாதுகாப்பு நிபுணர் மேஜர் ஜெனரல் எஸ்.பி.சின்ஹாவும் (ஓய்வு) இதே கருத்தை கூறினார். சீனா பின்வாங்குவது இதுவே முதல் முறை என்று அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “இருந்தாலும், சீனாவை நம்ப முடியாது. சீனா அதன்படி இரண்டு படிகள் முன்னோக்கி சென்று, ஒரு படி பின்வாங்கும். இதைச் செய்யும்போது அது தொடர்ந்து முன்னேறுகிறது,” என்றார்.
சின்ஹா கூறுகையில், “இது சீனாவின் விரிவாக்கக் கொள்கை, இது மா சே துங் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. அதனால் சீனாவை எளிதில் நம்ப முடியாது,” என்றார்.
ஒப்பந்தத்தின் நோக்கம் என்ன?
கிழக்கு லடாக்கில் இருக்கும் டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகள் குறித்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பின்னணியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முக்கியப் பங்கு வகித்ததாகக் கருதப்படுகிறது.
பாதுகாப்பு நிபுணர் பாஹ்ல் கூறுகையில், “பிரிக்ஸ் கூட்டமைப்பில் முக்கியமாக மூன்று பெரிய நாடுகள் உள்ளன – இந்தியா, சீனா, மற்றும் ரஷ்யா. இந்தியாவும் சீனாவும் நட்புறவு கொள்ளாவிட்டால், பிரிக்ஸ் இல்லாமல் போகும் என்பதை அதிபர் புதின் அறிவார். இரு நாடுகளையும் நண்பர்களாக்க அவர் விரும்புகிறார். இதன் மூலம் அமெரிக்காவிற்கு சவால் விடும் மாற்று சக்தியை உருவாக்க நினைக்கிறார்,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்தியா, சீனா, மற்றும் ரஷ்யா ஒன்றிணைந்து அமெரிக்காவை சிக்கலில் தள்ளக்கூடிய ஒரு உலக ஒழுங்கை உருவாக்குகிறது. யுக்ரேன் போரின் காரணமாக, ரஷ்யாவின் சொத்துக்கள் பெரிய அளவில் முடக்கப்பட்டுள்ளன. மேலும் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கூட்டமைப்பின் பிரத்யேக நாணயம் இருக்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பின் தனி நாணயம் வர வேண்டும், வர்த்தகம் அதில் செய்யப்பட வேண்டும் என்பதே அதன் குறிக்கோள்,” என்கிறார்.
“அதே சமயம், எல்லா இடங்களிலும் எல்லைக் கட்டுப்பாட்டைத் தளர்த்த முடியாது என்பது சீனாவுக்கும் தெரியும்,” என்று பாதுகாப்பு நிபுணர் எஸ்.பி சின்ஹா நம்புகிறார்.
அவர் மேலும் கூறுகையில், “தைவான் மற்றும் இந்தியாவுடன் ஒரே நேரத்தில் சீனா தனது எல்லையைத் திறந்து வைத்திருப்பது கடினம். மேலும் அது இந்தியாவுடன் நல்ல எல்லை உறவைக் கொண்டிருந்தால், அது அமெரிக்காவை எதிர்க்க முடியும்,” என்றார்.
லடாக்கில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது முக்கியக் கேள்வி.
இதுகுறித்து பாஹ்ல் கூறுகையில், “சீனா, அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடுகிறது. அதனை ‘தெற்கு திபெத்’ என்று அழைக்கிறது. ஆனால் தற்போதைய ஒப்பந்தம் இந்தப் பகுதிக்கானது அல்ல. இந்த ஒப்பந்தம் லடாக்கிற்கு மட்டுமே செய்யப்பட்டது. ஆனால் இங்கு அமைதி மீட்சியின் விளைவை எதிர்காலத்தில் கிழக்கு இந்தியாவில் காணலாம்,” என்கிறார்.
காலங்காலமாக நிலவும் எல்லைத் தகராறு
இந்தியா சீனாவுடன் 3,488 கி.மீ., நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த எல்லை லடாக், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக செல்கிறது.
இந்த எல்லை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவை
- மத்தியப் பிரிவு – இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட்
- கிழக்குப் பிரிவு – சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம்
இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை முழுமையான எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை. ஏனெனில், இரு நாடுகளுக்கும் இடையே பல பகுதிகள் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
மேற்குப் பிரிவில் அக்ஸாய் சின் மீது இந்தியா உரிமை கோருகிறது. ஆனால் இந்தப் பகுதி தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1962-ஆம் ஆண்டு இந்தியா உடனான போரின்போது, சீனா இந்தப் பகுதி முழுவதையும் கைப்பற்றியது.
மறுபுறம், கிழக்குப் பிரிவில் அருணாச்சல பிரதேசத்தின் மீது சீனா உரிமை கொண்டாடுகிறது. அது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறுகிறது. திபெத்துக்கும் அருணாச்சல பிரதேசத்துக்கும் இடையே உள்ள மெக்மஹோன் எல்லைக் கோடும் சீனாவால் அங்கீகரிக்கப்படவில்லை.
கடந்த 1914-ஆம் ஆண்டு பிரிட்டிஷ்-இந்தியா மற்றும் திபெத்தின் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தைச் செய்துகொண்டபோது அதில் தான் பங்கேற்கவில்லை என்பது சீனாவின் நிலைப்பாடு. திபெத் சீனாவின் ஒரு பகுதியாக இருப்பதால், திபெத் தானாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று சீனா கூறுகிறது.
உண்மையில் 1914-இல் திபெத் ஒரு சுதந்திரமான, ஆனால் பலவீனமான நாடாக இருந்தது. ஆனால் சீனா ஒருபோதும் திபெத்தை ஒரு சுதந்திர நாடாகக் கருதவில்லை. 1950-இல் சீனா திபெத்தை முழுமையாகக் கைப்பற்றியது.
மொத்தத்தில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மெக்மஹோன் எல்லைக் கோட்டை சீனா ஏற்கவில்லை. மேலும் அக்ஸாய் சின் மீதான இந்தியாவின் உரிமை கோரலையும் நிராகரிக்கிறது.