மனிதர்களின் தோல் முதுமை அடைவதை தள்ளிப்போட வழிகாட்டும் புதிய ஆய்வு
- எழுதியவர், பல்லப் கோஷ்
- பதவி, அறிவியல் நிருபர்
முதுமைக் காலத்தில் ஏற்படக்கூடிய அறிகுறிகளை, இனி வரும் காலங்களில் தாமதப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்டெம் செல்லில் (stem cell) இருந்து மனித உடல் எவ்வாறு தோலை உருவாக்குகிறது என்பதை ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது. மேலும், ஆய்வகத்தில் சிறிய அளவுகளில் மனிதத் தோலை உற்பத்தியும் செய்துள்ளது.
இந்த ஆய்வு, மனித உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு செல்லாக எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்வதற்கான ஒரு பகுதியாக உள்ளது.
முதுமை தோற்றத்திற்கு எதிராகப் போராடுவதுடன், மாற்று அறுவை சிகிச்சைகளுக்கும் வடுக்களைத் தடுப்பதற்கும் செயற்கைத் தோலை உருவாக்குவதற்கும் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்படலாம்.
மனித உயிரணு அட்லஸ் திட்டம்
மனித உயிரணு அட்லஸ் திட்டம் (Human Cell Atlas Project) உயிரியலில் மிகவும் முக்கியமான ஆராய்ச்சித் திட்டங்களில் ஒன்று. சர்வதேச அளவிலான இந்த ஆய்வு கேம்பிரிட்ஜில் உள்ள வெல்கம் சாங்கர் (Wellcome Sanger) ஆய்வு மையத்தைச் சார்ந்தது.
திட்டத் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் முஜ்லிஃபா ஹனிஃபா (Muzlifah Haniffa) கூறும்போது, “இது நோய்களுக்குத் திறம்பட சிகிச்சையளிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும். மேலும், புதிய வழிகளைக் கண்டறிந்து நீண்ட காலத்திற்கு நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும், ஒருவேளை நம்மை இளமையாகவும்கூட வைத்திருக்கலாம்,” என்கிறார்.
“தோல் செல்களை நாம் திறன்படக் கையாள முடிந்து, வயது முதிர்வதைத் தடுக்க முடிந்தால், நமக்கு தோலில் குறைவான சுருக்கங்களே உருவாகும்” என்கிறார் வெல்கம் சாங்கர் மையத்தின் பேராசிரியர் ஹனிஃபா.
“வயதாகும்போது, செல்கள் அதன் ஆரம்ப வளர்ச்சியிலிருந்து எப்படி முதிர்ச்சியான நிலைக்கு மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தால், ‘உடல் உறுப்புகளுக்கு எவ்வாறு புத்துணர்வு அளிப்பது, இதயத்தை இளமையாக வைத்திருப்பது எப்படி, சருமத்தை இளமையாக்குவது எப்படி’ ஆகியவற்றுக்கான பதிலை நம்மால் கூற முடியும்” என்று கூறுகிறார் அவர்.
அதுபோன்ற ஒரு கண்டுபிடிப்பிற்கு இன்னும் சற்று காலம் தேவைப்படும். ஆராய்ச்சியாளர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மனித வாழ்க்கையின் ஆரம்ப வளர்ச்சிக் கட்டத்தில் கருவிலுள்ள தோல் செல்கள் எவ்வாறு உருவாகின்றன என்ற அவர்களின் புரிதலில் மிகச் சமீபமாகத்தான் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
முட்டை கருவுற்றவுடன் மனித செல்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், மூன்று வாரங்களுக்குப் பிறகு, குறிப்பிட்ட மரபணுக்கள் ‘ஸ்டெம் செல்கள்’ என்று அழைக்கப்படும் செல்களுக்குள் இயங்குகின்றன. உடலின் பல்வேறு கூறுகளை உருவாக்குவதில் எப்படி நிபுணத்துவம் பெறுவது, ஒன்றாக இணைவது என்ற வழிமுறைகளை அனுப்புகிறது.
உடலின் மிகப்பெரிய உறுப்பான தோலை எந்தெந்த இடங்களில் எந்த நேரங்களில் வடிவமைக்க எந்த மரபணுக்கள் இயக்கப்படுகின்றன என்பதை ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ரசாயனங்கள் மூலம் இணைத்து நுண்ணோக்கியின் கீழே பார்க்கும்போது அவை சிறிய விளக்குகள் போல் இருக்கும்.
ஆரஞ்சு நிறமாக மாறும் மரபணுக்கள் தோலின் மேற்பரப்பை உருவாக்குகின்றன. மஞ்சள் நிறத்தில் உள்ள மற்றவை அதன் நிறத்தைத் தீர்மானிக்கின்றன. மேலும் பல மரபணுக்கள், முடியை வளர்க்கும் பிற அமைப்புகளை உருவாக்கி, நம்மை வியர்க்க வைத்து, வெளி உலகத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.
மனித தோலை உருவாக்குவதற்கான வழிமுறைத் தொகுப்பை உருவாக்கியுள்ள ஆராய்ச்சியாளர்கள் அதை நேச்சர் (Nature) ஆய்விதழில் வெளியிட்டுள்ளனர். இந்த வழிமுறைகளைப் படிக்க முடிவது, உற்சாகம் அளிக்கக்கூடிய பல வழிகளைத் திறக்கிறது.
இதில் சிலவற்றை விஞ்ஞானிகள் ஏற்கெனவே அறிந்துள்ளனர். உதராணமாக, கருவின் தோல் வடுக்கள் இல்லாமல் குணமடைகிறது.
புதிய அறிவுறுத்தல் தொகுப்பில் இது எவ்வாறு நிகழ்கிறது என்பதற்கான விவரங்கள் உள்ளன, மேலும் இதை பெரியவர்களின் தோலில் பிரதிபலிக்க முடியுமா என்பதைச் சோதித்துப் பார்ப்பது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம், இது அறுவை சிகிச்சை முறைகளில் பயன்படுத்தப்படலாம்.
இதில் ஒரு முக்கிய வளர்ச்சி, நோய் எதிர்ப்பு செல்கள் தோலில் ரத்த நாளங்களை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர், பின்னர் ஆய்வகத்தில் இதை அவர்களால் ஒரு மாதிரி அமைப்பு மூலம் உறுதி செய்ய முடிந்தது.
ஸ்டெம் செல்களில் இருந்து செயற்கையான தோலை வளர்ப்பதற்குச் சரியான நேரத்தில் மற்றும் சரியான இடங்களில் மரபணுக்களைச் செயல்படுத்த மற்றும் செயலிழக்கச் செய்ய ரசாயனங்களைப் பயன்படுத்தினார்கள். இதுவரை, தோலின் சிறிய பகுதிகள் வளர்க்கப்பட்டுள்ளன, அவற்றில் சிறிய முடிகள் முளைத்துள்ளன.
பேராசிரியர் ஹனிஃபாவின் கூற்றுப்படி, இந்த நுட்பத்தை முழுமையாக்குவதே ஆய்வின் இறுதி நோக்கம்.
“மனித தோலை எவ்வாறு உருவாக்குவது என்பது உங்களுக்குத் தெரிந்தால், தீக்காயமடைந்த நோயாளிகளுக்கு அதைப் பயன்படுத்தலாம், அது திசுக்களை மாற்றுவதற்கான ஒரு வழி,” என்று அவர் கூறுகிறார்.
“மற்றோர் உதாரணம் என்னவென்றால், நம்மால் முடியின் நுண்குமிழ்களை உருவாக்க முடிந்தால், தலையில் வழுக்கை உள்ளவர்களுக்குப் புதிய முடிகளை உருவாக்க முடியும்” என்கிறார்.
’10 கோடி செல்களின் ஆய்வு’
பரம்பரை தோல் நோய்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்கும், சாத்தியமான புதிய சிகிச்சைகளை சோதிக்கவும் இந்த தோல் செல்களை பயன்படுத்தலாம்.
மரபணுக்களை செயல்படுத்துவது மற்றும் செயலிழக்கச் செய்வதற்கான வழிமுறைகள், வளரும் கரு முழுவதும் அனுப்பப்படும். குழந்தை பிறந்த பிறகு தொடர்ந்து முதிர்ச்சி வரை நமது பல்வேறு உறுப்புகள் மற்றும் திசுக்களை வளர்ச்சியடைச் செய்கிறது.
மனித உயிரணு அட்லஸ் திட்டத்தின் கீழ் செயல்பட்ட எட்டு ஆண்டுகளில், விஞ்ஞானிகள் மனித உடலின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 கோடி செல்களை ஆய்வு செய்துள்ளனர்.
இந்த விஞ்ஞானிகள் குழு, மூளை மற்றும் நுரையீரலின் வரைவு அட்லஸ்களை உருவாக்கியுள்ளது. மேலும், விஞ்ஞானிகள் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதயத்திற்கு வரைவு அட்லஸ்களை உருவாக்கப் பணியாற்றி வருகின்றனர்.
மனித செல் அட்லஸ் கூட்டமைப்பை நிறுவி வழிநடத்தும் விஞ்ஞானிகளில் ஒருவரான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாரா டெய்க்மேன் (Sarah Teichmann) கருத்துப்படி, தனிப்பட்ட அட்லஸ்களை ஒன்றாக இணைப்பதே இந்த ஆய்வின் அடுத்த கட்டம்.
“இது நம்ப முடியாத அளவிற்கு உற்சாகத்தை அளிக்கிறது, ஏனெனில் இது உடலியல், உடற்கூறியலில், மனிதர்களைப் பற்றிய புதிய புரிதல் குறித்த நுண்ணறிவுகளை வழங்குகிறது” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
“இது நம்மையும் நமது திசுக்கள், உறுப்புகள் மற்றும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை பாடப் புத்தகங்களில் மீண்டும் மாற்றி எழுத வழிவகுக்கும்.”
உடலின் மற்ற பாகங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதற்கான மரபணு வழிமுறைகள் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் வெளியிடப்படும். இறுதியில் மனித உடல் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பது பற்றிய முழுமையான ஒரு படம் நம்மிடம் இருக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு