ரயில் நிலைய அதிபர்கள் நேற்று (30) நள்ளிரவு முதல் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானம் மேற்கொண்டனர்.
இன்று (31) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் சேவைக்கு ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு நடைமுறைகளை சீர் செய்தல் மற்றும் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை கலந்துரையாடும் நோக்கில் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத்துடன் நேற்று காலை கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
அந்த விவாதங்களில் சாதகமான பதில்கள் கிடைக்காததால், நேற்று மாலை கூடிய ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு, மாலை 4.30 மணி முதல் ரயில் பயணச் சீட்டுக்களை வழங்கும் பணிகளில் இருந்து விலக முடிவு செய்தது.
எவ்வாறெனினும், ரயில் நிலைய அதிபர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டாலும் ரயில் சேவைகள் வழமை போன்ற இயங்குவதுடன், பயணிகள் பயணச்சீட்டு இன்றி பயணிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.