இலங்கை, இந்தியா உட்பட உலகெங்கிலும் செரிந்து வாழும் இந்துக்களினால் இன்றைய தினம் உற்சாகத்துடன் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தப் பண்டிகை தமிழ் மாத கணக்கீட்டின்படி பெரும்பாலான வருடங்களில் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது.
சில வருடங்களில் மட்டும் அமாவாசைக்கு முந்தைய தினம் கொண்டாடப்படுகிறது.
ஆங்கில நாட்காட்டியின்படி, ஒக்டோபர் 17 முதல் நவம்பர் 15 க்கு உட்பட்ட நாட்களில் தீபாவளி பண்டிகை அமைகிறது.
இந்துக்கள் மட்டுமல்லாது, சமணர்கள், சீக்கியர்கள் போன்றவர்களும்கூட இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை குறித்துப் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.
அதில் ஒன்று, ராமரோடு தொடர்புடையது. அதாவது ராமர் தனது 14 வருட வனவாசத்தை முடித்துக் கொண்டு, லட்சுமணன், சீதாவுடன் அயோத்திக்கு திரும்பிய தினத்தை அந்நாட்டு மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடினர். அதுவே தீபாவளி தினம் என்ற ஒரு கதை வழக்கில் இருக்கிறது.
மற்றொரு கதையில், பெரும் அட்டகாசம் செய்து வந்த நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தபோது, தான் இறந்த தினத்தை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமென அந்த அசுரன் கேட்டுக் கொண்டதாகவும், அதன்படியே தீபாவளி கொண்டாடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால், பண்டிதர் அயோத்திதாசர் தீபாவளி பண்டிகை பௌத்தப் பண்டிகை; அதை பிராமணர்கள் திருடிக் கொண்டார்கள் என்கிறார்.
இது தவிர மேலும் பல கதைகளும் தீபாவளி பண்டிகையின் தோற்றம் குறித்து எடுத்துரைக்கின்றன.
எவ்வாறெனினும் தீபாவளி நாளில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து எண்ணெய் வைத்து வெந்நீரில் குளித்த பின் குடும்ப வழக்கத்திற்கு ஏற்ப புத்தாடைகளை சுவாமி முன்பு படைத்து அதன் பின்பு புது துணியை உடுத்திக் கொள்ளலாம்.
அதனை தொடர்ந்து வீட்டில் அதிக அளவில் விளக்குகளை ஏற்ற வேண்டும் அவரவர் வசதிக்கேற்ப எண்ணிக்கையில் விளக்குகளை ஏற்றலாம்.
நல்லெண்ணெய் ஊற்றி விளக்குகளை இயற்றிய பின் சுவாமி படங்களுக்கு மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும் செய்து பூஜை செய்ய வேண்டும்.
படையலுக்கு வீட்டில் செய்யும் பலகாரங்களை எது வேண்டுமானாலும் வைக்கலாம் . அதிரசம், முறுக்கு மட்டுமின்றி இனிப்பு வகைகள் வீட்டில் செய்யும் பலகாரங்களை படையலாக வைக்கலாம்.
அத்தோடு புது துணியும் படையல் ஆக வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் அதனையும் சேர்த்து வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஜை வழிபாடுகளின் பின்னர், வீட்டிலுள்ள பெரியவர்களின் கால்களின் வீழ்ந்து ஆசீர் வாதம் பெற்றதன் பின்னர் எந்தப் பிரச்சினையும் இல்லாது பட்டாசுகளை வெடித்து நல்லபடியாக தீபாவளி கொண்டாட வேண்டும்.
தீபாவளி பண்டிகை நாள் அன்று தீப ஒளி ஏற்றி வைப்பதன் மூலம் இருள் அகலுகிறது. ஆலயங்களில் மட்டுமல்ல, வீடுகளிலும் தீபங்களை ஏற்றி ஒளி வீச செய்து, பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இதன் மூலம் வாழ்க்கையில் சூழ்ந்திருக்கும் துன்ப இருள் நீங்கி ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்பது ஐதீகம்.