பலர் இன்று அருச்சுனாவால் துரோகி என கூறப்பட்டதன் பின்னால் பெரும் சக்தி ஒன்று உள்ளது. அவர்கள் அருச்சுனாவிற்கு பாரிய குழி வெட்டுகின்றனர் என வைத்தியர் அருச்சுனாவின் நண்பரும் , வைத்தியரின் சுயேட்சை குழு உறுப்பினருமான சி. மயூரன் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வைத்தியர் அருச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சனைகளை வெளிக்கொண்டு வந்த கால பகுதியில் நெருக்கடிகளை சந்தித்த போது அவர் நலன் சார்ந்து நானும் எங்கள் நண்பர்கள் சிலருமே செயற்பட்டோம். தற்போது புது புதுசாக சேர்ந்து கொண்ட சிலராலேயே பிரச்சனைகள் உருவாகியுள்ளன. அதனால் மக்கள் சரியான துரோகிகளை இனம் காண வேண்டும்
அருச்சுனாவிற்கு பெயர் புகழ் வர முதலே அவரை பாதுகாக்க வேண்டும் என ஓடிக்கொண்டிருந்தோம். புகழ் , மக்கள் செல்வாக்கு வந்த பிறகு இணைந்து கொண்டவர்கள் அல்ல நாம்
தேர்தலில் நிற்க போவதாக அறிவித்த போது , நான் கேட்டேன். நீ தேர்தலில் நிற்கிறாயா ? என “ஓம். எல்லோரும் என்னை வைச்சு செய்யுறாங்க நீ வாடா .. ” என சொன்னார். அதற்கு பிறகு நான் வெளிநாட்டில் இருந்து உடனேயே இலங்கை வந்து , வேட்புமனுவில் கையெழுத்திட்டேன். அதன் பிறகு தான் பல சர்ச்சைகளுக்குள் எங்களை இழுத்து விட்டிருக்கு.
வேட்புமனு தாக்கல் செய்த 11ஆம் திகதியில் இருந்து , இன்றைக்கு 31ஆம் திகதி வரையிலான கடந்த 20 நாட்களில் அருச்சுனாவின் உண்மையான நலன்விரும்பிகளிடம் இருந்து பிரிக்கப்பட்டார்.
அருச்சுனாவின் நலன் விரும்பிகளாக இருந்த பலர் இன்று அருச்சுனாவால் துரோகி என கூறப்பட்டதன் பின்னால் பெரும் சக்தி ஒன்று உள்ளது என்பதனை நான் பகிரங்கமாக கூறுகிறேன்.
யாரோ ஓர் இருவரை நம்பி அருச்சுனா தனக்கு நல்லது நடக்கும் என நினைக்கிறார். அவ்வாறு நடந்தால் எமக்கு சந்தோசம் ஆனால் எனது பார்வையில் அருச்சுனாவிற்கு பெரும் குழி வெட்டுகின்றனர். கூட நின்று குழி வெட்டி விழுத்திய பின்னர் அவரை மீட்க போவதும் நாமே …
அருச்சுனா ஆரம்பத்தில் கையில் எடுத்துக்கொண்ட பிரச்சனை ,இன்றும் பிரச்சனையாகவே இருக்கின்றது. அந்த பிரச்சனைக்கு தீர்வு காண மக்கள் ஆர்வம் காட்டுகின்றார்கள்
எல்லோரும் என்னை கேட்கின்றார்கள் , “நீயேன் இதில வந்து நிற்கிறாய் ?” என , அருச்சுனா என் நண்பன் என்பதற்காக நான் இதில் வந்து நிற்கவில்லை. அருச்சுனா கையில் எடுத்துக்கொண்ட விடயமான ஊழல் , அநியாயம் , கவனமின்மை , இந்த விடயங்களை தீர்க்கும் முகமாகவே நான் இதற்குள் வந்தேன்.அதில் நான் உறுதியாக நிற்கிறோம் அருச்சுனா எம்மை துரோகி என அறிவித்தாலும் நாம் அவருக்காக நிற்போம் என மேலும் தெரிவித்தார்.