பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிம

by wp_fhdn

இலங்கை மக்களில் நூற்றுக்கு 58 வீதமானவர்கள் பாராளுமன்ற முறையை அனுமதித்துள்ள நிலையில் பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை. சிலிண்டருக்கு வாக்களித்தால் மாத்திரமே பாராளுமன்ற முறைமையை பாதுகாத்துக்கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து புதன்கிழமை (30) தம்புள்ளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆரம்பமாக பாராளுமன்றத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் நூறுவீதம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கிறார். நூற்றுக்கு 42வீதம் உள்ளவருக்கு நூற்றுக்கு நூறுவீதம் எவ்வாறு வழங்க முடியும். அநுரகுமார எங்கு கணிதம் கற்றார் என எனக்கு தெரியாது.

ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ் நாடுகள் தேர்தல் நடத்தின. எதிர்க்கட்சியை நீக்கிவிட்டு தங்களின் பங்கை அதிகரித்துக்கொண்டார்கள். அவ்வாறான முறையை எங்களுக்கு செய்ய முடியாது. நூற்றுக்கு 42 வீதம் என்றால் அந்த கணக்குதான் அதனைவிட குறைந்தாலும் அதிகரிக்கப்போவதில்லை.

எமது நாட்டின் அரசியலமைப்பின் மூன்றாம் நான்காம் உறுப்புரையின் கீழ் இறையாண்மை இருப்பது மக்களுக்காகும். வாக்கு அதிகாரம் அதில் ஒரு பகுதி. ஜனாதிபதி தேர்தலில் தான் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களித்து வாக்குரிமையை பெற்றுக்கொள்கிறோம். பாராளுமன்ற தேர்தலில் தான் விரும்பும் கட்சிக்கு வாக்களித்த பின்னர், மூன்று விருப்பு வாக்கு இருக்கிறது. ஐராேப்பிய நாடுகள் பலவற்றில் இந்த முறைமை இருக்கிறது.

ஆனால் திசைகாட்டி சொலவது என்ன? கட்சிக்கு வாக்களிக்குமாறு தெரிவிக்கிறார்கள் ஆனால் விருப்பு வாக்கு தொடர்பில் எதுவும் தெரிவிப்பதில்லை. இதன் மூலம் அவர்கள் மறைமுகமாக தெரிவிப்பது, கட்சியை தெரிவு செய்யும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்குகிறோம். வேட்பாளர்களை தெரிவு செய்யும் அதிகாரத்தை டில்வின் சில்வாவுக்கும் அரசியல் சபைக்கும் எடுத்துக்கொள்கிறார்கள்.

இது ஜனநாயகமா? வேட்பாளரை தெரிவு செய்யும் மக்கள் ஆணையை டில்வின் சில்வா எவ்வாறு எடுத்துக்கொள்ள முடியும். பாராளுமன்றத்துக்கு சென்று தங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு முடியுமான நபர்கள் தொடர்பில் மக்களுக்கே தெரியும்.

அத்துடன் பாராளுமன்றம் திருடர்களின் குகை என்கிறார்கள். அவ்வாறு தெரிவிப்பதற்கு அநுரகுமாரவுக்கு உரிமை வழங்கியது யார்.? அவர்களின் வீதம் நூற்றுக்கு 42 வீதமாகும். பாராளுமன்றம் தொடர்பில் நம்பிக்கை இருப்பதாக நூற்றுக்கு 58 வீதமான மக்கள் தெரிவிக்கிறார்கள். பாராளுமன்றத்தில் கை வைப்பதற்கு திசைகாட்டிக்கு இருக்கும் உரிமை என்ன? ஜனாதிபதியை நிர்வகிப்பது பாராளுமன்றமாகும். அவ்வாறான ஒரு இடத்தை திருடர்களின் குகை என ஜனாதிபதி எவ்வாறு தெரிவிக்க முடியும்.

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வலவுக்கு எதிராக காவிந்த ஜயவர்த்தன  பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையை முன்வைத்தார். ஆனால் அதன் பின்னர் அவர் ஓகஸ்ட் 31ஆம் திகதி கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை வழக்கு தாக்கல் செய்தார். இவர் திருடரா இல்லையா? என்பதை வழக்கு மூலம் முடிவு செய்ய வேண்டும்.

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான பாராளுமன்ற விவாதத்தை நிறுத்த நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.  உயர் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் எமக்கு தீர்மானமொன்றை எடுக்க முடியும் என்றே நாங்கள் தெரிவித்தோம். உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர்  இந்த விவாதத்தை நடத்தலாம் என்று கூறியிருந்தோம். அது சட்ட ரீதியிலான முறையாகும்.

ஏதாவது ஒரு சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு சென்றால் பாராளுமன்றம் அந்த தீர்ப்புக்கு அமையவே நடவடிக்கை எடுக்கிறது. அதற்கு மத்தியில் சட்டமா அதிபர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக  வழக்கு தொடுத்தார். யாருக்கு எதிராக வழக்கு தொடுத்தீர்கள் என எனக்கு கேட்டிருக்கலாம். ஆனால் நான் எதுவும் செய்ய முற்படவில்லை.

மேலும் முன்னாள் ஜனாதிபதிகளின் வீடுகளை நீக்குவதாக தெரிவிக்கிறார்கள். எனக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை. நான் இருப்பது அரச வீட்டில் அல்ல. இவர்கள் தெரிவிப்பது போல் எனது கஜு சாப்பாடு, எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கிய 16 குடைகளை வழங்குவதை நிறுத்துவது போன்ற விடயங்களால் 120 கோடி மீதமாகி இருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை வீட்டில் இருந்து அகற்றுவதற்கு இவர்கள் எதற்காக முற்படுகிறார்கள்? அவரின் கனவரை கொலை செய்தது மக்கள் விடுதலை முன்னணியாகும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததால் மஹிந்த ராஜபக்ஷ்வின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களின் சிறப்புரிமைகளை அவ்வாறே வழங்குங்கள். எனது விடயங்களை நீக்கிவிடுங்கள்.

பாராளுமன்றத்துக்கு கை வைப்பதற்கு செல்ல வேண்டாம் என்றே நான் தெரிவிக்கிறேன். அவ்வாறு செயவதாக இருந்தால் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். எனவே அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.

தேர்தலில் சிலிண்டருக்கு வாக்களித்தால் மாத்திரமே இந்த பாராளுமன்ற முறையை பாதுகாக்க முடியும். எமது முறைமையின் பிரகாரம் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் அனுபவமுள்ளவர்கள் மற்றும் பழையவர்களும் இருக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்