தீபாவளிப் பட்டாசு வெடிக்கும் போது உங்கள் தோல், கண்கள், காதுகளைப் பாதுகாப்பது எப்படி?
- எழுதியவர், டிக்லே போப்லி
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியாவில் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. இந்த நாளில், பலகாரம், இனிப்பு என பரிமாறி மகிழ்ச்சியாக இருப்போம்.
ஆனால், தீபாவளிக்கு இன்னொரு முகம் உண்டு, அது பல சமயங்களில் பிரச்னையை ஏற்படுத்தும்.
பண்டிகைக் கொண்டாட்டத்துடன், மகிழ்ச்சியான தருணங்களை துன்பகரமானதாக மாற்றக்கூடிய அபாயங்களும் ஏற்படலாம்.
பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீ விபத்துகள், அசம்பாவிதங்கள் மற்றும் தீபாவளிக்குப் பிறகு ஏற்படும் மாசுபாடு ஆகியவை இந்த அபாயங்களில் அடங்கும். இந்த பிரச்னைகள் நாம் கவனிக்க வேண்டியவை.
மகிழ்ச்சியான, அதே சமயம் பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுவதற்கு செய்வதற்காக, தீபாவளி தினத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து பல்வேறு நிபுணர்களிடம் பிபிசி பேசியது.
அவை இந்தக் கட்டுரையில் தொகுத்தளிக்கப்படுகின்றன.
தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.
அப்படி நடக்கும் போது, பெரும்பாலும் பலர் காயத்தின் மீது ஐஸ் அல்லது டூத் பேஸ்ட்டைப் பூசுவார்கள். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, இதைச் செய்யவே கூடாது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள லார்ட் மஹாவீர் சிவில் மருத்துவமனையின் தோல் மருத்துவரான டாக்டர் ரோகித் ராம்பால் பிபிசியிடம் பேசுகையில், “பொதுவாக, தீக்காயத்தின் வலியைக் குறைக்க மக்கள் பற்பசை அல்லது ஐஸ் கட்டியை காயத்தின் மீது தடவுவார்கள். ஆனால் அவ்வாறு செய்வது மிகவும் தவறு. ஏனெனில் இந்த இரண்டு முறைகளும் நோய்த்தொற்றின் அபாயத்தை அதிகரிக்கலாம்,” என்றார்.
“ஐஸ் கட்டி மிகவும் குளிர்ந்த நிலையில் இருப்பதால், இது உண்மையில் தோல் திசுக்களைச் சேதப்படுத்தும், எனவே காயம் குணமாவதைத் தடுக்கும்,” என்றார்.
டாக்டர். ரோஹித் ராம்பாலின் கூற்றுப்படி:
- தீக்காயம் ஏற்பட்டால், காயத்தை உடனடியாகக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்
- வீட்டில் ஆண்டிபயாடிக் கிரீம் இருந்தால், அதை காயத்திற்குப் பயன்படுத்த வேண்டும்
- மூட்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். ஏனெனில் அதை அலட்சியப்படுத்துவது இயக்கக் குறைபாட்டுக்கு (mobility impairment) வழிவகுக்கும்
கண்களில் காயம் பட்டால் என்ன செய்வது?
தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கையில், கண்கள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.
நிபுணர்களின் கூற்றுப்படி, கண்களில் காயம் பட்டால், தாமதமின்றி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
பிபிசியிடம் பேசிய கண் மருத்துவரான டாக்டர். ரெபுதாமன், “பொதுவாக, மக்கள் கண்களில் ஏற்படும் காயங்களைச் சாதரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். இவ்வாறு புறக்கணித்து, காயம் கடுமையாக இருக்கும் போது சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காவிட்டால், வாழ்நாள் முழுவதும் கண்பார்வையை இழக்க நேரிடும்,” என்கிறார் அவர்.
டாக்டர் ரெபுதாமனது கருத்துப்படி, கண்களில் காயம் ஏற்பட்டால்,
- காயம் ஏற்பட்டக் கண்ணை மூடிய நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்
- மருத்துவ ஆலோசனையின்றி எந்த ‘டிராப்ஸை’யும் கண்ணில் போடக்கூடாது, கழுவவும் கூடாது
- மருத்துவ உதவி பெறுவதை தாமதமாக்கக் கூடாது. ஏனெனில் தாமதமாக்கினால் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்
பட்டாசுச் சத்தத்திலிருந்து காதுகளைப் பாதுகாப்பது எப்படி?
பட்டாசுகளால் தீக்காயம் மட்டும் ஏற்படுவதில்லை. அதிக சத்தத்தால் காது பிரச்னைகளும் உண்டாகும்.
வல்லுநர்களின் கூற்றுப்படி, காதுகளுக்கு மிக அருகில் பட்டாசு வெடித்தால் காது கேட்கும் திறனை இழக்கக் கூட நேரிடும்.
லூதியானாவில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் ‘ENT’ துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர். நவ்நீத் குமார் பிபிசியிடம் பேசுகையில், “பட்டாசுகளின் சத்தம் காதுகளில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. பல சந்தர்ப்பங்களில், கேட்கும் திறனை வாழ்நாள் முழுவதும் இழக்கும் அபாயமும் உள்ளது. அப்படி ஏதேனும் சம்பவம் நடந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்,” என்றார்.
“காதுகளில் ஏதேனும் பிரச்னை என்றதும் பலர், காதில் எண்ணெய் விடுவது, அல்லது பூண்டை வைப்பது என செய்வார்கள். ஆனால் அப்படிச் செய்யவே கூடாது. அவ்வாறு செய்வதால், தொற்று ஏற்படும் அபாயம் மட்டுமின்றி, காதுக்குள் ஈரப்பதம் அதிகரித்து, பூஞ்சை தொற்று உருவாகவும் கூடும்,” என்கிறார்.
தீபாவளியின் போது காற்றின் தரம் மோசமாக இருக்கும். சுவாச நோயாளிகள் சிரமங்களை எதிர்கொள்வர்.
அதைத் தவிர்க்க டாக்டர். நவநீத் குமாரின் ஆலோசனைகள்:
- உங்களுக்கு காது கேளாமை அல்லது காதுகளுக்கு மிக அருகில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டால், தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனையைப் பெறவும்
- சிறு குழந்தைகளை, குறிப்பாக பச்சிளம் குழந்தைகளை பட்டாசு வெடிக்கும் இடங்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு மிக அருகாமையில் பட்டாசு சத்தம் கேட்காமல் பார்த்து கொள்ள வேண்டும்
தீ விபத்தைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
தீபாவளி பண்டிகையையொட்டி, தீபங்கள் ஏற்றி, பட்டாசு வெடிக்கிறோம். இந்தச் சடங்குகள் சில சமயங்களில் தீ விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
இந்தச் சந்தர்ப்பங்களில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீயணைப்புத் துறை அலுவலகம் பகிர்ந்து கொண்டது.
பொதுமக்களுக்கு அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள்:
- அரசு உத்தரவுபடி குறிப்பிடப்பட்ட நேரத்தில் குறைவான பட்டாசுகளை வெடிக்க வேண்டும் மற்றும் ‘க்ரீன்’ (குறைவான மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள்) பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்
- உங்கள் வீடு / அல்லது பட்டாசு வெடிக்கும் இடத்தைச் சுற்றி தண்ணீர் நிரப்பப்பட்ட தண்ணீர் வாளிகளை வைக்கவும்
- வீட்டுக் கூரைகளின் மேல் குப்பைகள் அல்லது எரியக்கூடிய உலர்ந்த மரம், துணிகள், மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை திறந்த வெளியில் வைக்கக் கூடாது
- திறந்தவெளி அல்லது பூங்காவில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும், பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளுடன் பெற்றோர் இருக்க வேண்டும், பருத்தி ஆடைகளை அணிந்து மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
- இந்தச் சமயங்களில் தீயணைப்பு வாகனம் தீயணைப்பு நிலையத்திற்கு செல்லும் போதெல்லாம், அதற்கு வழிவிட வேண்டும்
- இது தவிர, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள தீயணைப்பு படை அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.