அமெரிக்கா: டிரம்ப் மீண்டும் அதிபராக வந்தால் ரஷ்யாவுக்கு சிக்கலா? ரஷ்ய மக்கள் கூறுவது என்ன?

அமெரிக்கா: டிரம்ப் மீண்டும் அதிபராக வந்தால் ரஷ்யாவுக்கு சிக்கலா? ரஷ்ய மக்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க்
  • பதவி, ரஷ்ய ஆசிரியர், மாஸ்கோ

உங்களுக்கு ஒரு சிறிய அறிவுரை: ஒரு விஷயம் கொண்டாடப்படுவதற்கு மிகவும் தகுதியானது என்பதை நீங்கள் உறுதியாக நம்பினாலன்றி அதற்கென அதிகளவில் ஷாம்பெயின் வாங்க வேண்டாம்.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரஷ்ய அதிதீவிர தேசியவாத அரசியல்வாதியான விளாதிமிர் ஷிரினோவ்ஸ்கி, டொனால்ட் டிரம்பின் வெற்றியால் மிகவும் உற்சாகமடைந்தார். இந்த வெற்றி அமெரிக்க-ரஷ்ய உறவுகளை மாற்றுமென்று அவர் உறுதியாக நம்பினார்.

இதை அவர் ரஷ்ய நாடாராளுமன்றத்தின் கீழவையான டுமாவில் கேமராக்களுக்கு முன்பாக 132 ஷாம்பெயின் பாட்டில்களை திறந்து கொண்டாடினார். இதுபோலக் கொண்டாடியது அவர் மட்டும் அல்ல.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டிரம்ப் 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் பெற்ற ஆச்சர்யமான வெற்றிக்கு அடுத்த நாள், ரஷ்யா அரசின் தொலைக்காட்சி சேனலான ஆர்.டி.யின் தலைமை ஆசிரியர் மார்கரிட்டா சிமோனியன், தனது கார் ஜன்னலில் அமெரிக்க கொடியுடன் மாஸ்கோவை சுற்றிவர விரும்புவதாக ட்வீட் செய்திருந்தார்.

டிரம்பின் வெற்றியைக் கொண்டாட தான் ஒரு சுருட்டு புகைத்ததாகவும், ஒரு பாட்டில் ஷாம்பெயின் குடித்ததாகவும் ஒரு ரஷ்ய அதிகாரி சொன்ன தருணத்தை என்னால் மறக்கவே முடியாது.

ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை டிரம்ப் நீக்குவார் என்ற எதிர்பார்ப்புகள் ரஷ்யாவில் அதிகமாக இருந்தது. யுக்ரேனில் இருந்து பிரிக்கப்பட்ட கிரைமியன் தீபகற்பம்கூட ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவியது.

“டிரம்பின் சிறப்பு என்னவென்றால், அவர் ரஷ்யாவில் மனித உரிமைகள் குறித்து ஒருபோதும் பிரசங்கம் செய்யவில்லை” என்கிறார் ’நெசவிசிமயா கெஸெட்டா’ செய்தித்தாளின் உரிமையாளரும் தலைமை ஆசிரியருமான கான்ஸ்டான்டின் ரெம்சுகோவ்.

ஆனால், இந்த எல்லா எதிர்பார்ப்புகளும் மாயமாக மறைய அதிக நேரம் எடுக்கவில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தல், டிரம்ப், ரஷ்யா

படக்குறிப்பு, விளாதிமிர் ஷிரினோவ்ஸ்கி

அதிபர் புதின் ஆதரவு யாருக்கு?

“அந்த நேரத்தில் ரஷ்யாவிற்கு எதிராக டிரம்ப் கடுமையான தடைகளை விதித்தார்,” என்று ரெம்சுகோவ் நினைவு கூர்ந்தார். மேலும், டிரம்பின் பதவிக் காலம் பலருக்கும் ஏமாற்றம் அளித்ததாகவும் அவர் கூறினார்.

அதனால்தான் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய அதிகாரிகள் இரண்டாவது முறையாக டிரம்ப் பதவிக்கு வருவது பற்றி மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர்.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிஸுக்கு விளாதிமிர் புதின் தனது ஆதரவை அளித்துள்ளார். இருப்பினும் புதின் அளித்த இந்த ஆதரவை “ரஷ்யா கேலி செய்வதாக” (ட்ரோலிங் செய்வதாக) பரவலாகக் கூறப்பட்டது.

கமலா ஹாரிஸின் ‘வசீகரமான’ சிரிப்பு தனக்குப் பிடித்திருப்பதாக புதின் கூறினார். ஆனால் பிரசாரத்தின் போது கமலா ஹாரிஸ் அல்ல, டிரம்ப் கூறியதுதான் புதின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது என்பதைப் புரிந்துகொள்ள நீங்கள் ஓர் அனுபவமிக்க அரசியல் பண்டிதராக இருக்க வேண்டிய அவசியமில்லை.

யுக்ரேனுக்கான அமெரிக்க ராணுவ உதவியின் அளவைப் பற்றிய டிரம்பின் விமர்சனம், ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு புதினை குற்றம் சாட்டுவதில் காணப்பட்ட அவரது தயக்கம் மற்றும் அதிபர் விவாதத்தின்போது யுக்ரேன் போரில் வெற்றி பெற வேண்டும் என்று வெளிப்படையாக அவர் கூற மறுத்தது ஆகியவை இதற்கான உதாரணங்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தல், டிரம்ப், ரஷ்யா

இதற்கு மாறாக யுக்ரேனுக்கு ஆதரவு அளிப்பது அமெரிக்காவின் “மூலோபாய நலனுக்கு” ஏற்றது என்று கமலா ஹாரிஸ் வாதிட்டார். கமலா ஹாரிஸ் புதினை “கொலைகார சர்வாதிகாரி” என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய அரசு தொலைக்காட்சியும் அவரைப் பற்றி அவ்வளவாக பாராட்டிப் பேசவில்லை. கேலியாகப் பேசக்கூடிய ரஷ்யாவின் செய்தி தொகுப்பாளர்களில் ஒருவர் சில வாரங்களுக்கு முன்பு, கமலா ஹாரிஸின் அரசியல் திறன்களை முற்றிலும் நிராகரித்தார். கமலா ஹாரிஸ் டிவி சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதுதான் நல்லது என்று அவர் பரிந்துரைத்தார்.

ரஷ்யாவுக்கு இருக்கும் சாதகமான சூழல்

ரஷ்யாவுக்கு மிகவும் சாதகமாக இருக்கக்கூடிய மற்றொரு முடிவு – மிகவும் நெருக்கமான தேர்தல், அதைத் தொடர்ந்து வரும் அதன் முடிவுகள். அமெரிக்காவில் தேர்தலுக்குப் பிறகு குழப்பம் நிலவும் பட்சத்தில் யுக்ரேன் போர் உள்ளிட்ட வெளிநாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு அந்த நாட்டிடம் குறைவான நேரமே இருக்கும்.

பராக் ஒபாமாவின் கீழ் அமெரிக்க-ரஷ்யா உறவுகள் மோசமடைந்தன, டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் கீழ் அது மிக மோசமான நிலைக்குச் சென்றன. ஜோ பைடன் ஆட்சியின் கீழ் இது ‘மிகவும் மோசமடைந்து வருகின்றன’ என்று வாஷிங்டனுக்கான ரஷ்ய தூதரக அதிகாரியான அனடோலி அன்டோனோ குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல், டிரம்ப், ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 1987இல் கோர்பச்சேவுடன் ரீகன்

அமெரிக்கா முழு பழியையும் ரஷ்யா மீது சுமத்துகிறது. ஜெனீவாவில் புதின் மற்றும் பைடனின் உச்சிநிலை சந்திப்பு நடந்த எட்டு மாதங்களில் ரஷ்ய அதிபர் யுக்ரேனில் முழு அளவிலான ரஷ்ய படையெடுப்பிற்கு உத்தரவிட்டார்.

பைடன் நிர்வாகம் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. ரஷ்யாவுக்கு எதிரான போரை இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக யுக்ரேன் சமாளித்து வருவதில் அமெரிக்க ராணுவ உதவி முக்கியப் பங்கு வகிக்கிறது. யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கிய மேம்பட்ட ஆயுதங்களில் ஆப்ராம்ஸ் டாங்கிகம் ஹிமார்ஸ் ராக்கெட் அமைப்புகளும் அடங்கும்.

உலகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என்று இருநாடுகளும் உறுதியளித்த காலம் ஒன்று இருந்தது என்பதை இப்போது நம்புவது கடினமாக இருக்கிறது.

கடந்த 1980களின் பிற்பகுதியில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனும், ரஷ்ய அதிபர் மிக்கேல் கோர்பச்சேவும் அவரவர் நாடுகளின் அணு ஆயுதங்களைக் குறைப்பதில் புவிசார் அரசியல் பங்களிப்பை வழங்கினர். அந்த இரு தலைவர்களுமே அணு ஆயுதக் குறைப்பைக் காட்டிலும், ரீகன் தனக்குத் தெரிந்த அரைகுறையான ரஷ்ய மொழியில் ரஷ்ய பழமொழிகளை கோர்பச்சேவுக்கு சொல்வதில் அதிகம் மகிழ்ந்தார்கள்.

அமெரிக்கா – ரஷ்யா உறவும், வாத்து சிலையும்

அமெரிக்க அதிபர் தேர்தல், டிரம்ப், ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

கடந்த 1991ஆம் ஆண்டில், சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணிகளான ரைசா கோர்பச்சேவ், பார்பரா புஷ் இருவரும் மாஸ்கோவில் ஓர் அசாதாரண நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்தனர். அது ஒரு தாய் வாத்து, தனது 8 வாத்துக் குஞ்சுகளுடன் இருப்பது போன்ற ஒரு சிலை.

இது பாஸ்டன் பொதுத் தோட்டத்தில் உள்ள ஒரு சிற்பத்தின் பிரதிபலிப்பாகும். சோவியத் மற்றும் அமெரிக்க குழந்தைகளின் நட்பின் அடையாளமாக அது மாஸ்கோவிற்கு வழங்கப்பட்டது. இது இன்றும் மாஸ்கோ மக்களிடையே பிரபலமாக உள்ளது.

இந்த நினைவுச் சின்னத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரஷ்யர்கள் நோவோடெவிச்சி பூங்காவிற்கு இன்றும் வருகிறார்கள். ஆனால் இந்த “வாத்து ராஜதந்திரத்தின்” பின்னணி ஒரு சிலருக்கே தெரியும்.

அமெரிக்க-ரஷ்ய உறவுகளைப் போலவே இந்த வாத்துகளும் சில பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன. ஒரு சமயம், அவற்றில் சில திருடப்பட்டதால், அவை மாற்றப்பட வேண்டியிருந்தது.

ரஷ்ய மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

அமெரிக்கா மற்றும் அமெரிக்க தேர்தல்களைப் பற்றி ரஷ்யர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய, நான் மாஸ்கோவிற்கு சென்றேன்.

“அமெரிக்கா காணாமல் போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இகோர் கூறினார்.

“உலகில் நிறைய போர்கள் தொடங்க அந்த நாடு காரணமாக உள்ளது. சோவியத் காலத்தில் அமெரிக்கா எங்களுக்கு எதிரியாக இருந்தது. இப்போதும் இருக்கிறது. யார் அதிபராக இருந்தாலும் பரவாயில்லை,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல், டிரம்ப், ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்கா ரஷ்யாவின் பரம எதிரி. இது பெரும்பாலும் இங்குள்ள அரசு ஊடகங்கள் உலகிற்கு முன்வைக்கும் கண்ணோட்டம். ‘இகோர் ரஷ்ய தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்ப்பதால் கோபமாக இருக்கிறாரா அல்லது அவருக்கு அதிக மீன்கள் கிடைக்கவில்லை என்பதால் அவருக்கு கோபமா?’ அது தெரியவில்லை.

ஆனால், நான் இங்கு பேசிய பெரும்பாலான மக்கள் அமெரிக்காவை ஒரு தீய எதிரியாகப் பார்க்கவில்லை.

“அமைதி மற்றும் நட்புக்கு நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன்,” என்கிறார் ஸ்வெட்லானா. “ஆனால் அமெரிக்காவில் உள்ள என் நண்பர் இப்போது எனக்கு அழைத்துப் பேசவே அஞ்சுகிறார். ஒருவேளை அங்கு பேச்சு சுதந்திரம் இல்லையா அல்லது ரஷ்யாவில் பேச்சு சுதந்திரம் இல்லையா… எனக்குத் தெரியவில்லை,” என்றார் அவர்.

“இரு நாடுகளும், இரு நாட்டு மக்களும் நண்பர்களாக இருக்க வேண்டும். போர் இல்லாமல் இருக்க வேண்டும். யாரிடம் அதிக ஏவுகணைகள் உள்ளன என்ற போட்டி இருக்கக்கூடாது. எனக்கு டிரம்பை அதிகம் பிடிக்கும். அவர் அதிபராக இருந்தபோது பெரிய போர் எதுவும் இல்லாமல் இருந்தது,” என்று நிகிதா தெரிவித்தார்.

ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கும் பொதுவான விஷயம் ஒன்று உள்ளது – இரு நாடுகளின் அதிபர்கள் எப்போதும் ஆண்களாகவே இருந்துள்ளனர். இது மாறுவதை ரஷ்யர்களால் எப்போதாவது நினைத்துப் பார்க்க முடியுமா?

“ஒரு பெண் அதிபரானால் அது நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்று மெரினா கூறுகிறார்.

“ரஷ்யாவில் ஒரு பெண் அதிபருக்கு வாக்களிப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன். அது சிறப்பாக இருக்கும் என்றோ அல்லது மோசமானது என்றோ நான் சொல்லவில்லை. ஆனால், நிச்சயம் அது ஒரு மாறுதலாக இருக்கும்,” என்கிறார் மெரினா.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.