2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், போத்திராஜ். க
  • பதவி, பிபிசி தமிழுக்காக

2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் டி20 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடுகிறார் என்று அந்த அணி தற்போது அறிவித்துள்ளது. இது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. ஆனால், அதில் புதிய சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடருக்காக அணிகளின் உரிமையாளர்கள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்து, மற்ற வீரர்களை விடுவிக்கும் காலக்கெடு இன்று (அக்டோபர் 31) முடிகிறது. இதன்படி, ஐ.பி.எல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை ஐ.பி.எல் நிர்வாகத்திடம் முறைப்படி அறிவித்தன.

இதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தின் இறுதியில் அல்லது டிசம்பர் மாதத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நடத்தப்படும். அந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியிடம் இருக்கும் கையிருப்புத் தொகைக்கு ஏற்ப வீரர்களை ஏலத்தில் வாங்கும்.

இந்தத் தக்கவைப்புப் பட்டியல் மற்றும் விடுவிப்பு பட்டியலுக்குப்பின் ஒவ்வொரு அணியிலும் 6 கிரிக்கெட் வீரர்கள் மட்டும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மற்ற வீரர்கள் அந்தந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐ.பி.எல் ஏலத்தில் புதிய வீரர்கள் வாங்கப்படுவார்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2025 ஐ.பி.எல் சீசனுக்கு புதிய விதிகள்

கடந்த 2024 சீசனைவிட 2025 ஐ.பி.எல் சீசனில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன.

சர்வதேசக் கிரிக்கெட் விளையாடாத வீரர்களின் நிலை, அவர்களின் ஊதியம், ஏலத்தில் பங்கேற்று தேர்வான பின் பங்கேற்காத வீரர்களுக்கு தடை விவரம், வீரர்களுக்கான புதிய போனஸ், அணிகளின் கையிருப்பு தொகை அதிகரிப்பு, ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க வாய்ப்பு என்பன உள்பட பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய விதிகளின்படி ஐ.பி.எல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்களின் அணி வீரர்கள் பட்டியலில் 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம். இந்த தக்கவைப்பு பட்டியலில் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் (உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள்) இருக்கலாம். அதிகபட்சமாக 2 சர்வதேச போட்டியில் விளையாடாத (uncapped) வீரர்கள் இருக்கலாம்.

2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம், Getty Images

புதிய விதியும் சி.எஸ்.கே-வும்

கேப்டு (capped) இந்திய வீரர் ‘அன்கேப்டு வீரராக’ மாற முடியும் என்பதுதான் இந்த விதியின் உச்ச அம்சமாகும். இந்த விதி தோனிக்காகவே உருவாக்கப்பட்டது என்று விமர்சனங்கள் எழுந்தன.

அதாவது சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று அனுபவமுள்ள, ஓய்வு பெற்ற ஒரு வீரர் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 அணியில் பங்கேற்காமல் இருந்தால், பி.சி.சி.ஐ மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெறாமல் இருந்தால் இந்த விதிகளின்படி அவர் ‘அன்கேப்டு வீரராக’ மாறுவார். இந்த விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே செல்லும்.

இந்த விதியின் கீழ்தான் சி.எஸ்.கே அணி எம்.எஸ்.தோனியை 2025-ஆம் ஆண்டு சீசனில் அன்கேப்டு வீரராகத் தக்கவைத்துள்ளது. ஆனால், கடந்த சீசனில் வாங்கிய அளவு தோனிக்கு ரூ.12 கோடிக்கும் அதிகமாக ஊதியம் நிர்ணயிக்கப்படாது, அன்கேப்டு வீரருக்கான ரூ.4 கோடி மட்டுமே வழங்கப்படும். இந்த விதியால் தோனியின் ஊதியம் குறைந்துள்ளது.

2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே

சி.எஸ்.கே தக்கவைப்பு, பர்ஸ் விவரம்

2025 -ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை மட்டும் தக்கவைத்துள்ளது. இதன்படி, ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), மதீஷா பதிரண (ரூ.13 கோடி), ஷிவம் துபே (ரூ.12 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி) எம்.எஸ்.தோனி (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

சி.எஸ்.கே அணியிடம் தக்கவைப்பு வீரர்கள் தவிர்த்து தற்போது ரூ.55 கோடி கையிருப்பு இருக்கிறது. ஆர்.டி.எம் விதியின்படி ஒரு அன்கேப்டு வீரர் அல்லது கேப்டு வீரரை ஏலத்தில் வாங்கலாம்.

டேவன் கான்வே, ரச்சின் ரவிந்திரா, தீபக் சஹர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோரை சிஎஸ்கே அணி நிர்வாகம் விடுவித்துள்ளது. ஆர்டிஎம் விதி மூலம் தீபக் சஹர், டேவன் கான்வே இருவரில் ஒருவரை சிஎஸ்கே நிர்வாகம் ஏலத்தில் எடுக்கலாம்.

2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி கேபிடல்ஸ் அணியில் அக்ஸர் படேல் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் தக்கவைப்பு, பர்ஸ் விவரம்

டெல்லி கேபிடல்ஸ் அணி அதன் கேப்டன் ரிஷப் பந்தை விடுவித்துள்ளது. புதிய கேப்டனை ஐ.பி.எல் ஏலத்துக்குப்பின் அறிவிக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில் அக்ஸர் படேல் (ரூ.16.50 கோடி), குல்தீப் யாதவ் (ரூ.13.50 கோடி), டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் (ரூ.10 கோடி), அபிஷேக் போரல் (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தற்போது ரூ.73 கோடி கையிருப்பு தொகையாக உள்ளது. இந்த தொகைக்கு ஏற்ப ஏலத்தில் புதிய வீரர்களை வாங்கும்.

கடந்த சீசனின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த், டேவிட் வார்னர், ஆன்ரிச் நோர்க்கியா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா தக்கவைக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் யார் தக்கவைக்கப்பட்டுள்ளனர்?

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் மாற்றத்திலிருந்து பெரிய குழப்பத்தில் சிக்கி தவித்து வருகிறது. முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அணி மாறுவாரா அல்லது தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ரோஹித் சர்மா(ரூ.16.30 கோடி), ஹர்திக் பாண்டியா (ரூ.16.35 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ.16.35கோடி), ஜஸ்பிரித் பும்ரா (ரூ.18 கோடி), திலக் வர்மா (ரூ.8 கோடி) ஆகிய வீரர்களைத் தக்கவைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் தற்போது ரூ.45 கோடி மட்டுமே கையிருப்பு உள்ளது. இதற்கு ஏற்றார்போல் வீரர்களை வாங்கும். ஆர்.டி.எம் கார்டைப் பயன்படுத்தி ஒரு அன்கேப்டு வீரர்களை மட்டும் தக்கவைக்கலாம்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்டகாலம் இருந்த இஷான் கிஷன், டிம் டேவிட் ஆகியோர் தக்கவைக்கப்படாமல் விடுவிக்கப்பட்டனர்.

2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சஷாங் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்

பஞ்சாப் கிங்ஸ் பல வீரர்களுக்கு கல்தா

பஞ்சாப் கிங்ஸ் அணி ஐ.பி.எல் தொடங்கிய சீசனில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் கேப்டனை மாற்றுவதும், ஏலத்தில் வீரர்களை புதிதாக விலைக்கு வாங்குவதும் என பெரிய எதிர்பார்ப்புடன் இயங்கும். அந்த வகையில் 2025 சீசனுக்கு 2 வீரர்களை மட்டுமே அந்த அணி தக்கவைத்துள்ளது.

கடந்த சீசனில் அதிரடியாக பேட் செய்த சஷாங் சிங் (ரூ.5.5 கோடி), பிரப்சிம்ரன் சிங் (ரூ. 4 கோடி) ஆகியோர் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்திடம் ரூ.110 கோடி கையிருப்பு உள்ளதால், ஏலத்தில் அதிகமான வீரர்களை விலைக்கு வாங்கலாம்

பஞ்சாப் அணியில் கடந்த சீசனில் இருந்த ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், சாம் கரன், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன் போன்ற நட்சத்திர வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த சீசனும் ஆர்சிபி அணியில் விளையாடுகிறார் விராட் கோலி

ஆர்.சி.பி அணிக்கு மீண்டும் கோலி கேப்டனா?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுகிறது ஆனால், இதுவரை அந்த கனவு நனவாகவி்ல்லை. ஆர்சிபி அணி பல முறை ஏலத்தில் வீரர்களை மாற்றினாலும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆர்.சி.பி அணிக்கு இந்த முறை விராட் கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பல்வேறு ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதற்கு ஏற்றார்போல் விராட் கோலி (ரூ.21 கோடி) தக்கவைக்கப்பட்டுள்ளார். ரஜத் பட்டிதர் (ரூ.11 கோடி), யாஷ் தயால் (ரூ.5 கோடி) தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஆர்சிபி அணியிடம் தற்போது ரூ.83 கோடி கையிருப்பு உள்ளதால், ஏலத்தில் புதிய வீரர்களை வாங்கும். ஆர்.டி.எம் வாய்ப்பு மூலம் 3 வீரர்களை எடுக்கவும் முடியும். 3 கேப்டு வீரர்கள், ஒரு அன்கேப்டு,2 கேப்டு வீரர்களை ஆர்டிஎம் மூலம் வாங்கலாம்.

ஆர்சிபி அணி தங்கள் அணியில் இருந்த மேக்ஸ்வெல், முகமது சிராஜ், கேமரூன் க்ரீன், டூப்பிளசி ஆகியோரை அந்த அணி விடுவித்துள்ளது. இதில் ஆர்டிஎம் மூலம் சிராஜ், டூப்பிளசி,மேக்ஸ்வெல் வரலாம்.

2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராஜஸ்தான் அணியில் விளையாட இருக்கிறார் சஞ்சு சாம்சன்

அஸ்வின், சஹலுக்கே இந்த நிலையா?

ராஜஸ்தான் அணியும் பல அதிர்ச்சிக்குரிய முடிவுகளை வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பில் எடுத்துள்ளது. அந்த வகையில் அஸ்வின், சஹல், பட்லர், போல்ட் ஆகியோர் தக்கவைக்கப்படவில்லை.

மாறாக கேப்டன் சஞ்சு சாம்ஸன் (ரூ.18கோடி), ஜெய்ஸ்வால் (ரூ.18 கோடி), ரியான் பராக் (ரூ.14 கோடி), துருவ் ஜூரெல் (ரூ.14 கோடி), ஷிம்ரன் ஹெட்மயர் (ரூ.11 கோடி), சந்தீப் ஷர்மா (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தற்போது ரூ.41 கோடி மட்டுமே கையிருப்பு உள்ளது. ஆர்டிஎம் மூலமும் எந்த வீரரையும் வாங்க முடியாது. இதனால் ஏலத்தில் புதிதாக வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சாளர்களை வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

‘கருப்பு குதிரைகளை’ தக்கவைத்த சன்ரைசர்ஸ்

இளம் வீரர்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிக்கும் சன்ரைசர்ஸ் அணி, கடந்த சீசனில் கலக்கலாகச் செயல்பட்டது. குறிப்பாக கிளாசன், அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் கூட்டணி ஐ.பி.எல் தொடரில் சாதனைகளைக் குவித்தது. இந்த ஆண்டும் அதன் சாதனைகள் தொடர வேண்டும் என்பதால் அவர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கிளாசன் (ரூ.23 கோடி), பாட் கம்மின்ஸ் (ரூ.18 கோடி), அபிஷேக் ஷர்மா (ரூ.14 கோடி), டிராவிஸ் ஹெட் (ரூ.14 கோடி), நிதிஷ் குமார் ரெட்டி(ரூ.6 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

சன்ரைசர்ஸ் அணியிடம் ரூ.45 கோடி கையிருப்பு உள்ளது. இந்த தொகைக்கு ஏற்றார்போல் வீரர்களை ஏலத்தில் எடுக்கும். ஆர்.டி.எம் கார்டு மூலம் ஒரு அன்கேப்டு வீரரை மட்டும் தக்கவைக்க முடியும்

புவனேஷ்வர் குமார் மற்றும் தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குஜராத் அணியில் சுப்மான் கில்

குஜராத் அணியில் ஷமி இல்லை

கடந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 5 வீரர்களைத் தக்கவைத்துள்ளது. கேப்டன் சுப்மான் கில் (ரூ.16.50 கோடி), ரஷித் கான் (ரூ.18 கோடி), சாய் சுதர்ஷன் (ரூ.8.50 கோடி), ராகுல் திவேட்டியா (ரூ.4 கோடி), ஷாருக்கான் (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் கையிருப்பாக ரூ.69 கோடி இருக்கிறது. ஆர்டிஎம் வாய்ப்பு மூலம் ஒரு அன்கேப்டு வீரரை வாங்கலாம்.

காயத்தால் கடந்த சீசனில் விளையாடாத வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிர்ச்சி

நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனையே தக்கவைக்காமல் விடுவித்து அதிர்ச்சியளித்துள்ளது. அந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யரை விடுவித்துள்ளது கொல்கத்தா அணி. கடந்த 2014 சீசனில் இருந்து அணியில் நீடித்துவரும் ஆந்த்ரே ரஸல் விடுவிக்கப்படுவார் எனத் தகவல் வந்தநிலையில் அவர் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

மாறாக ரிங்கு சிங் (ரூ.13 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ.12 கோடி), சுனில் நரேன் (ரூ.12 கோடி), ஆந்த்ரே ரஸல் (ரூ.12 கோடி), ஹர்சித் ராணா (ரூ.4 கோடி), ராமன்தீப் சிங் (ரூ.4 கோடி).

கொல்கத்தா அணியிடம் இன்னும் ரூ.51 கோடி கையிருப்பு உள்ளது. இந்த தொகையை வைத்து ஏலத்தில் வீரர்களை வாங்கும்.

அந்த அணியில் இருந்து நட்சத்தி வீரர்கள் ஸ்ரேயாஸ் அய்யர், மிட்செல் ஸ்டார்க், பில் சால்ட், வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்டார்க் கடந்த சீசனில் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை அதனால் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், பில் சால்ட், வெங்கடேஷ் சிறப்பாக பேட் செய்த நிலையில் அவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2025 IPL, CSK, தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் களமிறங்க இருக்கிறார் வருண் சக்ரவர்த்தி

லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் நிலவரம்

லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி புதிய கேப்டனை அறிவிக்கும் எனத் தெரிகிறது. அந்த அணியின் கேப்டனாக நீடித்த கே.எல்.ராகுலை விடுவித்துள்ளது. அதேசமயம், நிகோலஸ் பூரன் (ரூ.21 கோடி), ரவி பிஸ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ.11 கோடி), மோசின் கான் (ரூ.4 கோடி), ஆயுஷ் பதோனி (ரூ.4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

லக்னெள அணியிடம் கையிருப்பாக ரூ.69 கோடி இருக்கிறது. அந்த அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், குயின்டன் டீ காக், க்ருனல் பாண்டியா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.