ஐக்கிய ஜனநாயக குரல் பலருக்கும் தலைவலியாக மாறியுள்ளது- ரவி குமுதேஷ்

by wamdiness

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க வக்கு எதிரான மனு, உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நாடாளுமன்றம் செல்வதில் எந்தவொரு சட்டச் சிக்கலும் இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ரவிகுமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இதனை வெளிக்கொண்டுவந்த மனுதாரர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியானது, மக்களுக்கு அன்றி பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

இதனால்தான், இன்று பல்வேறு விமர்சனங்களுக்கு கட்சி முகம் கொடுத்து வருகிறது.

நாம் நீதிமன்றங்களை நம்பினோம். இந்த நம்பிக்கையை நீதிமன்றம் மீண்டும் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க தேர்தலில் போட்டியிடுவதால் மனித உரிமை மீறப்படுவதாகத் தெரிவித்தே, அவரது வேட்பு மனுவை நிராகரிக்குமாறுக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், நீதிமன்றமோ இதனால் யாருடைய மனித உரிமையும் பாதிக்காது என குறித்த மனுவை நிராகரித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நடைபெறாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.

எமது கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தேர்தலில் களமிறங்கியபோதும், தேர்தல் ஆணைக்குழுவில் அவருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அப்போதும் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளுக்கு இணங்கவே அவர் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

இதனால், அவர் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே அனைத்து செற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார் என்பது மீண்டும் ஒருமுறை தெரியவந்துள்ளது.

இதனையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.இதன் ஊடாக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நாடாளுமன்றுக்கு செல்ல எந்தத் தடையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்த தரப்பினருக்கு நாம் இவ்வேளையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அவர்களால்தான் இவை இன்று வெளியே வந்துள்ளன என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்