”மிகக் குறுகிய காலத்தில் தோற்றம் பெற்ற எமது கட்சியான ஐக்கிய ஜனநாயகக் குரல், நாளுக்கு நாள் பாரிய வளர்ச்சியைக் கண்டு வருவதாக” அக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
பதுளை, லுணுகல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே வடிவேல் சுரேஸ் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கொழும்பு, கம்பஹா, காலி, புத்தளம், நுவரெலியா, பதுளை ஆகிய பகுதிகள் வரை எமது கட்சியின் உரல் ஓங்கி ஒலிக்கின்றது.
அதுமட்டுமில்லாது பதுளை மாவட்டத்தின் மூலை முடுக்குகளிலும் ஒலிவாங்கி ஒலிக்கின்றது.
ஆகவே எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அதிகூடிய ஆசனங்களை பெறுவோம் என உறுதியாக நம்புகின்றேன்.
மேலும் தமிழர்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்ற வேறுபாடின்றி அனைத்து இனமக்களுக்கும் எங்களுடன் இத்தருணத்தில் கரம் கோர்த்துள்ளனர்.
இது எமது கட்சிக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும், அத்துடன் அனைவரும் எங்களுடன் இணைந்து எமது கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
நிச்சயமாக இந்த ஒலிவாங்கி சின்னம் மூலமாக சிறுபான்மை இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி எங்களுடைய அனைத்து இன மக்களையும் இணைத்துக் கொண்டு அதிகளவிலான வாக்குகளைப் பெற்று 3க்கும் அதிகமான ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்பு எங்களுக்குக் காணப்படுகின்றது” இவ்வாறு வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.