நிஜ்ஜார் கொலை வழக்கு: அமெரிக்க பத்திரிகையிடம் இந்திய அமைச்சர் அமித்ஷா பெயரை கூறியதாக கனடா அமைச்சர் ஒப்புதல்
கனடா குடிமக்களை அச்சுறுத்தும் அல்லது கொல்லும் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் ஒப்புதல் அளித்ததாக அந்நாட்டின் குடிமைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவிடம் கனடாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை (அக்டோபர் 29) அன்று கனடாவில் குடிமைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவின் விசாரணை ஒன்று நடந்தது.
அப்போது, அக்குழுவின் துணைத் தலைவரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரக்கேல் டான்சோ கனேடிய குடிமக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பினார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வான்கூவர் அருகே 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார்.
விசாரணையின் போது, “கனடாவில் நடக்கும் குற்றங்களில் இந்திய உள்துறை அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு சார்பாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தித்தாளிடம் தெரிவித்தது யார்?”, என்று அந்த குழுவின் துணைத் தலைவர் ரக்கேல் டான்சோ அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நத்தாலி ட்ரூயினிடம் கேள்வி எழுப்பினார்.
“இதுபோன்ற தகவல்களை பத்திரிக்கையாளர்களிடம் அரசு பகிர்ந்து கொள்ளவில்லை”, என்று நத்தாலி ட்ரூயின் பதில் அளித்தார்.
அக்டோபர் 14 ஆம் தேதி அன்று ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ என்ற அமெரிக்க செய்தித்தாளில் வெளியான ஒரு செய்திக்கட்டுரையை பற்றி ரக்கேல் டான்சோ கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்.
அந்த செய்தியில் கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டிருந்தது.
“பத்திரிகையாளருக்கு யார் அந்த தகவலை கொடுத்தது? உங்களுக்கு அது பற்றி தெரியுமா? இந்த தகவலை நீங்கள் கொடுக்கவில்லை தானே?”, என்று ரக்கேல் டான்சோ கேட்டார்.
இந்த விசாரணையியின் போது கனடாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மோரிசனும் இருந்தார்.
“மோரிசன், நீங்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியுமா? இந்த தகவலை நீங்கள் வழங்கினீர்களா?”, என்று டேவிட் மோரிசனிடம் ரக்கேல் டான்சோ கேட்டார்.
“ஆம், பத்திரிகையாளர் ஒருவர் என்னை அழைத்து இதுபற்றி கேட்டார். நான்தான் அந்த நபரைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தேன்”, என்று டேவிட் மோரிசன் பதில் அளித்தார்.
“அந்த பத்திரிகையாளர் பல்வேறு தரப்புகளிடம் இருந்து பெற்ற தகவல்களை வைத்து இது குறித்து நிறைய எழுதியிருந்தார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபரைப் பற்றி உறுதிப்படுத்தும்படி என்னிடம் கேட்டார். நான் அதை உறுதிப்படுத்தினேன்”, என்று டேவிட் மோரிசன் கூறினார்.
ஆனால் இந்திய உள்துறை அமைச்சர் பற்றி டேவிட் மோரிசன் ஏதும் கூறவில்லை.
செவ்வாய்க்கிழமை அன்று வெளிவந்த இந்த விஷயம் குறித்து கனடாவிலுள்ள இந்திய தூதரக அலுவலகமும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் கனடா முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று இந்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது.
“குற்றச்சாட்டுகள் ஆதாரமாற்றவை”
நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி முதலில் தி வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளில் வெளியான போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுகுறித்து தனது கருத்தினை தெரிவித்திருந்தது.
“இந்த செய்தி ஒரு தீவிரமான விஷயத்தில் நியாயமற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது”, என்று இந்த செய்திக்கட்டுரை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளின் நெட்வொர்க் குறித்து அமெரிக்க அரசு கவலை எழுப்பியதைத் தொடர்ந்து இந்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதைப் பற்றி ஊகங்களையும் பொறுப்பற்ற கருத்துகளையும் தெரிவிப்பது பயனுள்ளதாக இருக்காது”, என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
கனடாவில் நடந்த குற்றங்களில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம்சாட்டியது.
இந்த குற்றங்களில் கொலை, மக்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவை அடங்கும். இந்த ஏஜெண்டுகள் கனடா குடிமக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கனடா கூறியிருந்தது.
இந்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே இதுபற்றி கூடுதல் தகவல்கள் தெரிந்திருக்கும் என்று கனடா அதிகாரிகள் செவ்வாய்கிழமைக்கு முன் வெளிப்படையாக தெரிவித்து வந்தனர்.
கனடாவில் நடக்கும் பெரிய அளவிலான குற்றங்களில் இந்திய அரசின் ஏஜெண்டுகள் உடந்தையாக இருப்பதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு கனடாவின் காவல்துறை தெரிவித்த அதிர்ச்சியூட்டும் கருத்து குறித்தும் இக்குழுவில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர்.
ராயல் கனேடிய மவுண்டன் எனப்படும் கனேடிய காவல்துறையின் தலைவர் மைக் டுஹெம் செவ்வாய்கிழமையன்று இந்த குழுவிடம் சாட்சியம் அளித்தார்.
இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்கள் இந்திய அரசாங்கத்திற்காக தகவல்களை சேகரித்ததை காவல்துறையிடம் உள்ள சாட்சிகள் உறுதிப்படுத்துகின்றன என்று அவர் கூறியிருந்தார்.
கனடாவில் கொலை, மக்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் மிரட்டல் ஆகிய குற்றச் செயல்களை செய்யுமாறு அவர்கள் தூண்டியதாக மைக் டுஹெம் தெரிவித்திருந்தார்.
“இந்த வழக்கில் (நிஜ்ஜார் கொலை) இந்தியாவுக்கு பெரிய அளவில் பங்கு உள்ளது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.”, என்றுகனடாவின் அரசு செய்தி நிறுவனமான சிபிசிக்கு அளித்த பேட்டியில் மைக் டுஹெம் கூறியிருந்தார்.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், 13 கனேடிய குடிமக்களுக்கு இந்திய ஏஜென்டுகளால் ஆபத்து நிகழக்கூடும் என்று காவல்துறை எச்சரித்திருப்பதாக மைக் டுஹெம் கூறினார்.
இருநாட்டு உறவுகள் மேலும் மோசமடைய வாய்ப்பு
கனடா அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்த பிறகு இந்தியா-கனடா உறவில் மேலும் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்தும் இந்திய எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தியா அதனை மறுத்து வருகிறது.
சமீப காலமாக இந்த விவகாரத்தால் இரு நாடுகளும் தத்தமது தூதரக அதிகாரிகளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விலக்கிக் கொண்டன.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிஜ்ஜாரின் கொலைக்குப் பிறகு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தக் குற்றத்தில் இந்திய அதிகாரிகளின் தொடர்பு குறித்து கனடாவிடம் ‘உறுதியான ஆதாரம்’ இருப்பதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், கனடா அரசாங்கம் உறுதியான ஆதாரங்கள் எதையும் முன்வைக்கவில்லை.
இந்தியா இந்த குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்தது. கனடாவிடம் அதற்கான ஆதாரத்தையும் இந்தியா கேட்டது.
கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக இந்தியா அறிவித்த பிறகு, இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், “ட்ரூடோ அரசாங்கம் இந்திய அதிகாரிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரத்தையும் இந்தியாவிற்கு வழங்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தது.
தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவை களங்கப்படுத்தும் முயற்சி இது என்று இந்தியா குற்றம்சாட்டியது.
கனடா தனது நிலைப்பாட்டில் உறுதி
ஆனால், தற்போது வரை ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி வருகிறார்.
கடந்த பதினைந்து நாட்களாக தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், ட்ரூடோ தனது குற்றச்சாட்டுகளில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால் அவரிடம் ‘உரிய ஆதாரங்கள்’ இல்லை. முதன்முறையாக, இந்த விவகாரத்தில் அவர் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அவரிடம் புலனாய்வு தகவல்கள் மட்டுமே இருந்தன.
“இந்தியாவிடம் கனடா எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. இந்த வழக்கில் இந்தியாவுடன் இணைந்து பணி செய்யவே விரும்பியது. ஆனால் இந்தியா தொடர்ந்து ஆதாரங்களைக் கேட்டது” என்று வெளிநாட்டு தலையீடு ஆணையத்திடம் கனடா பிரதமர் கூறியிருந்தார்.
“ஆதாரங்கள் உங்கள் பாதுகாப்பு ஏஜென்சிகளிடமே உள்ளன” என்று மட்டும் பதிலளித்ததாக அவர் தெரிவித்தார்.
“கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறியதற்கான தெளிவான சான்றாக இது இருக்கிறது”, என்று விசாரணைக் குழுவிடம் அவர் கூறினார்.
இந்தியா-கனடா உறவில் விரிசல் ஏற்பட என்ன காரணம்?
இந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதிக்குப் பிறகு கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் கடினமான கட்டத்தை எட்டியுள்ளன.
கனடா அரசாங்கத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாததால் தனது தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதாக இந்தியா கூறியது. அதே நேரத்தில்தான், இந்தியாவின் ஆறு தூதரக அதிகாரிகளை கனடாவை விட்டு வெளியேற்றியுள்ளதாக அறிக்கை ஒன்றில் கனேடிய பிரதமர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடியாக இந்தியாவும் கனடாவின் 6 தூதரக அதிகாரிகளை இந்தியாவைவிட்டு வெளியேற்றியது.
கடந்த ஆண்டு கனடா குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றம் நிலவுகிறது. இந்த கொலையில் இந்தியாவுக்கு பங்கு இருப்பதாகக் குற்றம்சாட்டி, கனடா பகிரங்கமாக கேள்விகளை எழுப்பியது.
2023 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதியன்று கனடாவில் உள்ள குருத்வாரா ஒன்றில் வாகன நிறுத்துமிடத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நிஜ்ஜார் கனடாவின் வான்கூவரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் இருந்தார்.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார், இந்தியாவின் ஜலந்தரில் உள்ள பார் சிங் புரா கிராமத்தைச் சேர்ந்தவர். காலிஸ்தான் புலிப் படையின் தலைவராக இருந்து, உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல், ஒருங்கிணைத்தல், நிதியுதவி அளித்தல் உள்ளிட்ட போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று இந்திய அரசு கூறுகிறது.
“நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசாங்கத்தின் சாத்தியமான தொடர்பு பற்றிய குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன”, என்று செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கனேடிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கனடாவின் 40 தூதரக அதிகாரிகளுக்கான சிறப்புரிமையை இந்தியா ரத்து செய்தது. இதனால், கனேடிய தூதரக ஊழியர்களில், மூன்றில் இரண்டு பங்கு பேர் இந்தியாவை விட்டு வெளியேறி சொந்த நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு கனடா அளிக்கும் சலுகை இந்தியாவுக்கு மட்டுமல்ல, கனடாவுக்கும்கூட சரியானது அல்ல என்று இந்தியா கூறியிருந்தது.
2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் கூட, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிஜ்ஜார் கொலை பற்றியும் இந்தியாவுடனான உறவுகள் பற்றியும் மீண்டும் குறிப்பிட்டார். இந்தியா அப்போதும் மறுப்பு தெரிவித்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.