நாட்டை டிஜிற்றல் மயப்படுத்தப்படும் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும்.

by adminDev2

தனது ஆட்சியின் கீழ் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் முழு நாடும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையை வேறு ஒரு நிலைக்கு உயர்த்த முடியும். தற்போதைய அரசாங்கம் டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுத்துச் செல்கிறது.

வர்த்தக சம்மேளன பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

எந்தவொரு கொடுப்பனவும் அல்லது சம்பளமும் பெறாமல் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு வழங்க வர்த்தக சபை உறுப்பினர்கள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.

காப்பீடு, வங்கி, கட்டுமானம், சுற்றுலா, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளின் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஏற்ப மக்களுக்கு வரிச்சலுகைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறைகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதில்; எரிசக்தி துறையின் சுதந்திரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இதனிடையே, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் – ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் அதிகாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

நாட்டிற்கு பொருளாதார சுதந்திரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அதற்கு நாட்டின் ஏற்றுமதியாளர்களின் முழு ஆதரவு அவசியமாகும். ஏற்றுமதி வர்த்தகத்தை எளிதாக்குவதற்கு இலங்கைச் சுங்கத்துடன் ஏனைய அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவம் மற்றும் ஏற்றுமதி தொடர்பான அரச நிறுவனங்களின் செயல்திறனை அதிகரிப்பது குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்