டெல்லி அரியணைக்காக அக்பருக்கு எதிராகவே கிளர்ச்சி செய்த மகன் ஜஹாங்கீர் – என்ன நடந்தது தெரியுமா?
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி ஹிந்தி
-
அக்பரின் கடைசி நாட்கள், அவருக்கு நெருக்கமான பலருடைய மரணத்தின் துக்கத்தில் கழிந்தது. அந்த நேரத்தில் அவரது தாயார் ஹமிதா பானோ பேகம் மற்றும் இரண்டு மகன்கள் காலமானது மட்டுமின்றி அவரது மூத்த மகன் சலீம் அவருக்கு எதிராகக் கிளர்ச்சியும் செய்தார்.
தனது நவரத்தினங்களில் ஒருவரான பீர்பால் பழங்குடியினரால் கொல்லப்பட்டபோது அக்பர் இரண்டு நாட்கள் வரை உணவையோ தண்ணீரையோ தொடவில்லை. தனது தாயின் வற்புறுத்தலின் பேரில் அவர் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தார்.
“அக்பரின் இரு மகன்கள் முராத் மற்றும் தானியால், அதீத மது பழக்கம் காரணமாக மிக இளம் வயதிலேயே உயிரிழந்தனர். அவரது மூன்றாவது மகன் சலீமும் குடிப் பழக்கம் உள்ளவர். அவர் அக்பருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தது மட்டுமல்லாமல் அவரது நெருங்கிய ஆலோசகரான அபுல் ஃபசலையும் கொல்ல வைத்தார்.”
“ஒரு தந்தையாகத் தான் தோல்வியடைந்தது அக்பரின் மிகப்பெரிய துக்கமாக இருந்தது,” என்று எம்.எம்.பர்க், அக்பரின் வாழ்க்கை வரலாறான ‘அக்பர் தி கிரேட் முகல்’ புத்தகத்தில் எழுதுகிறார்.
அபுல் ஃபசல் கொலையால் அதிர்ச்சி
அபுல் ஃபசல் இறந்த செய்தியை ஷேக் ஃபரித் பக்ஷி பேக், அக்பரிடம் தெரிவித்தார். இந்தச் செய்தியைக் கேட்ட அக்பர் அலறியபடி தரையில் மயங்கி விழுந்தார்.
இதன் தாக்கம் அவரிடம் நீண்ட நாட்கள் இருந்தது. பல நாட்கள் மிகவும் சோகமாக இருந்தார். “சலீம் அரசனாக விரும்பியிருந்தால் அவன் என்னைக் கொன்றிருக்க வேண்டும். அபுல் ஃபசலின் உயிரைக் எடுத்திருக்கக்கூடாது,” என்று அபர், வாக்யா-இ-அசத் பேக் என்ற புத்தகத்தை எழுதிய அசக் பேக்கிடம் கூறியிருக்கிறார்.
“அன்று அக்பர் முகச்சவரம் செய்யவில்லை. நாள் முழுவதும் அழுதபடி இருந்தார். அவர் பல நாட்கள் தொடர்ந்து துக்கத்தில் இருந்தார். சலீமின் செயல்களுக்காக அவரைத் திட்டியபடி இருந்தார்,” என்று அசத் பேக் எழுதியுள்ளார்.
அபுல் ஃபசலுக்கு பிறகு இனாயத்துல்லா, ‘அக்பர்நாமா’ என்ற அக்பரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி முடித்தார். “இந்த குற்றத்திற்காக சலீமை அக்பர் மன்னிக்கவே இல்லை,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
தந்தை – மகனிடையே மோசமடைந்த உறவு
சலீமுடன் அக்பரின் கருத்து வேறுபாடுகள் அவர் இறப்பதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.
அக்பர் தனது முதல் காஷ்மீர் பயணத்தின்போது அந்தப்புரப் பெண்களை அழைத்து வரும் பொறுப்பை சலீமிடம் ஒப்படைத்தார். ஆனால் மோசமான சாலை என்ற சாக்கு சொல்லி சலீம் தனியாகத் திரும்பினார்.
“இது உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் அக்பர் தனது அந்தப்புர பெண்களுக்காக மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்தார். கோபம் தலைக்கேறிய அக்பர் கொட்டும் மழைக்கு நடுவே குதிரையில் ஏறி அந்தப் பெண்களை அழைத்து வரப் புறப்பட்டார். சலீம் தன் முன் வரக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டார்,” என்று அபுல் ஃபசல் ‘அக்பர்நாமா’வில் எழுதுகிறார்.
அதே ஆண்டு ஜூலை 9ஆம் தேதி அக்பருக்கு பயங்கர வயிற்று வலி ஏற்பட்டது.
“வலி தாங்க முடியாத நிலையில் அக்பர், தனக்கு விஷம் கொடுத்ததாகத் தனது மகன் மீது குற்றம் சாட்டினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அக்பர் மீண்டும் காஷ்மீருக்கு சென்றபோது முன் அனுமதி இல்லாமல் அவரது கூடாரத்திற்குள் நுழையும் துணிச்சல் சலீமுக்கு ஏற்பட்டது.
கோபமடைந்த அக்பர், சலீம் தன் கண்பார்வையில் வரக்கூடாது என்று மீண்டும் கட்டளையிட்டார். ஆனால் சிறிது காலம் கழித்து அக்பர் சலீமை மன்னித்தார்,” என்று அபுல் ஃபசல் குறிப்பிட்டுள்ளார்.
அக்பரின் பல உத்தரவுகளை மீறிய சலீம்
கடந்த 1599 மே 2ஆம் தேதி அக்பரின் மகன் முராத் இறந்தபோது அவருக்குப் பதிலாக சலீமை தென்னிந்தியா மீதான படையெடுப்பிற்கு அனுப்ப அக்பர் முடிவு செய்தார். ஆனால் சரியான நேரத்தில் சலீம் வராததால் அக்பர் தனது இரண்டாவது மகன் தானியாலை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அக்பரும் தானே தெற்கு நோக்கிச் செல்ல முடிவு செய்தார். முகலாயர்களை எதிர்த்த மேவார் ராணாவை கட்டுப்படுத்தும் பொறுப்பையும் அக்பர் சலீமிடம் கொடுத்தார். ஆனால் இந்த முறையும் சலீம் அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. அவர் அஜ்மீரிலேயே தங்கினார், அதற்கு மேல் முன்னேறிச் செல்லவில்லை.
சலீம் அலகாபாத் செல்ல முடிவு செய்தார். தலைநகர் ஆக்ராவில் அக்பர் இல்லாததை சாதகமாகப் பயன்படுத்தி அரியணையைக் கைப்பற்ற முயன்றார்.
அலகாபாத்தை அடைந்ததும் கருவூலத்தின் ஒரு பகுதியை சலீம் கைப்பற்றி தன்னைப் பேரரசராக அறிவித்துக் கொண்டார். அசீர்கட்டை கைப்பற்றிய பிறகு அக்பர் அகமத் நகரையும் தாக்க விரும்பினார். ஆனால் சலீமை சமாளிக்கும் பொருட்டு உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்தார்.
சலீமுக்கு அக்பரின் எச்சரிக்கை
கடந்த 1602ஆம் ஆண்டு மார்ச் மாதம் அக்பரை சந்தித்து தனது மரியாதையை வெளிப்படுத்த விரும்புவதாக அக்பருக்கு சலீம் செய்தி அனுப்பினார். ஆனால் அக்பருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் சலீமை சந்திக்க மறுத்துவிட்டார்.
சிறிது நாட்கள் கழித்து சலீம் 30 ஆயிரம் வீரர்களுடன் ஆக்ரா நோக்கி வருவதாக செய்தி வந்தது.
“அலகாபாத்துக்கு திரும்புவதுதான் உனக்கு பாதுகாப்பு. நீ உண்மையிலேயே எனக்கு சேவை செய்ய விரும்பினால் தனியாக அரசவையில் ஆஜராக வேண்டும் என்று சலீமுக்கு அக்பர் ஒரு வலுவான செய்தியை அனுப்பினார். சலீமுக்கு விஷயம் புரிந்தது. அவர் இட்டாவாவில் இருந்து அலகாபாத் திரும்பினார்.
சலீமை அதிகார மையத்தில் இருந்து விலக்கி வைக்க அக்பர் அவரை வங்காளம் மற்றும் ஒரிஸாவின் ஆளுநராக நியமித்தார். ஆனால் சலீம் அங்கு செல்ல மறுத்துவிட்டார்,” என்று அபுல் ஃபசல் எழுதியுள்ளார்.
அக்பரிடம் மன்னிப்பு கேட்ட சலீம்
இதற்கிடையில் அக்பரின் தாய் ஹமிதா பேகமும், அத்தை குல்பதன் பேகமும் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பதற்றத்தை நீக்குவதற்கான முயற்சியைத் தொடங்கினர்.
சலீமை மன்னிக்கும்படி அக்பரிடம் கோரிக்கை விடுத்தனர். அக்பர் இந்த இருவர் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அவர் தனது மனைவிகளில் ஒருவரான சல்மா சுல்தான் பேகத்தை, சலீமை தன்னிடம் அழைத்து வர அனுப்பினார்.
“அவருடன் தனது மகன் சலீமுக்காக ஒரு யானை, ஒரு குதிரை மற்றும் ஆடையை அக்பர் பரிசாக அனுப்பினார். சலீம் சல்மாவுடன் ஆக்ராவுக்கு அருகே வந்ததும் அவர் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தனது பாட்டி தன்னுடைய கைகளைப் பிடித்தவாறு அரசர் முன் தன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் மன்னரின் காலடியைத் தான் வணங்க விரும்புவதாகவும் சலீம் கூறினார்.”
“அடுத்த நாள் இளவரசர் சலீம் அக்பரின் காலில் தலை வைத்து மன்னிப்புக் கேட்டார். அக்பர் அவரை ஆரத்தழுவி சலீம் அன்பளிப்பாக அளித்த 350 யானைகள் மற்றும் 12 ஆயிரம் பொற்காசுகளையும் ஏற்றுக் கொண்டார்,” என்று அபுல் ஃபசல் எழுதுகிறார்.
சலீமின் மனதை அமைதிப்படுத்த அக்பர் தனது தலைப்பாகையைக் கழற்றி மகனின் தலையில் வைத்தார். தன்னுடைய வாரிசு சலீம் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை இது உணர்த்தியது.
அக்பரின் தாய் ஹமிதா பானோவின் மரணம்
ஆனால் 1604 வாக்கில் சலீமின் கிளர்ச்சி பற்றிய செய்தி மீண்டும் அக்பரின் காதுகளை எட்டியது. இம்முறை சலீமை கட்டுப்படுத்தும் பணியில் தானே இறங்குவதாக முடிவு செய்தார்.
கனமழை காரணமாக அவர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் அவரது தாயார் ஹமிதா பானோ உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக செய்திகள் வந்தன. அக்பர் மீண்டும் ஆக்ரா திரும்பினார்.
“அக்பர் தனது தாயின் அருகில் அமர்ந்திருந்தார். அவரிடம் பலமுறை பேச முயன்றும் எந்தப் பதிலும் வரவில்லை. உலகின் தலைசிறந்த மாமன்னர் தனது தாயுடன் கடைசி முறையாகப் பேச முடியவில்லை.
கடந்த 1604ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஹுமாயூனின் மனைவியும் அக்பரின் தாயுமான ஹமிதா பானோவின் உயிர் பிரிந்தது. அக்பர் தனது தலைமுடியையும் மீசையையும் மழித்தார். தலைப் பாகையைக் கழற்றிவிட்டு, துக்க ஆடைகளை அணிந்தார்,” என்று இனாயத்துல்லா ‘அக்பர்நாமா’வில் எழுதுகிறார்.
வயிற்று வலி காரணமாக மோசமடைந்த அக்பரின் உடல்நிலை
இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நிர்வாகத்தின் மீதான அக்பரின் பிடி பலவீனமடையத் தொடங்கியது. அக்பரின் தலைமுடி நரைத்து இருந்ததையும், முகத்தில் சோகக் கோடுகள் தெளிவாகத் தெரிந்ததையும் அக்பரின் அந்தக் காலப் படங்களில் பார்க்க முடிந்தது.
அக்பரின் உடல்நிலை, 1605 செப்டம்பர் 22ஆம் தேதி வயிற்று வலியால் மோசமடைந்தது. அவரது மருத்துவர் ஹக்கீம் அலி ஜிலானி அழைக்கப்பட்டார். எந்த மருந்தையும் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு நாள் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது என்று மருத்துவர் அக்பரிடம் கூறினார்.
மறுநாள் அவருக்கு குடிக்க சூப் மட்டுமே கொடுக்கப்பட்டது. அவர் நோய்வாய்ப்பட்டிருந்த சமயம் முழுவதும் அவரது பேரன் குஸ்ரோ அவருக்கு அருகிலேயே இருந்தார். அக்பருக்கு என்ன நோய் என்று அவரது மருத்துவர் ஹக்கீம் அலியால் கண்டுபிடிக்க முடியவில்லை.
“நோய்வாய்ப்பட்ட ஆரம்ப நாட்களில் அக்பர் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு தரிசனம் கொடுக்கும் சடங்கைச் செய்தார். ஏனென்றால் தான் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதை அவர் பொது மக்களுக்குத் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் பின்னர் அவர் படுத்த படுக்கையாகிவிட்டார்.
ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் அவர் அரச கட்டளைகளை எழுத வைக்கும் பணியைத் தொடர்ந்தார். பத்து நாட்களுக்குப் பிறகு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரது உடல் பலவீனமடைந்தது,” என்று இனாயத்துல்லா ‘அக்பர்நாமா’வில் குறிப்பிடுகிறார்.
சலீமின் இடத்தில் குஸ்ரோவை அரியணையில் அமர்த்த திட்டம்
அக்பரின் கடைசி நாட்களில் அவரது நெருங்கிய கூட்டாளிகளான மான் சிங் மற்றும் அஜீஸ் கோகா, அக்பரின் வாரிசை தேர்வு செய்ய அரசவைக் கூட்டத்தை அழைத்தனர்.
அக்பரின் உணர்வுகள் சலீமுக்கு சாதகமாக இல்லை என்பதை அந்த இருவரும் சபையில் நினைவுபடுத்தினர்.
அசத் பேக் தனது ‘வாக்யா-இ-அசத் பேக்’ என்ற புத்தகத்தில், “சலீமை தனது வாரிசாக்க அக்பர் விரும்பவில்லை என்று கூட்டத்தில் இருந்தவர்களிடம் மான் சிங்கும் அஜீஸும் கூறினர். அவர்கள் சலீமுக்கு பதிலாக குஸ்ரோவின் பெயரை முன்மொழிந்தனர். ஆனால் அக்பரின் மற்றோர் அரசவை உறுப்பினர் சயீத் கான் ஃபராஹா, சலீமை ஆதரித்து கூட்டத்தை விட்டு வெளியேறினார்,” என்று எழுதுகிறார்.
யமுனை ஆற்றின் மறுகரையில் சலீம் தனது முகாமை அமைத்திருந்தார். இரா முகோடி தனது ‘அக்பர் தி கிரேட் முகல்’ புத்தகத்தில்,“ சலீம் அரியணைக்கு உரிமை கோருவதற்கான வாய்ப்பை அகற்ற ராஜா மான் சிங் முயன்றார். சலீம் படகில் ஆக்ரா கோட்டைக்கு வந்தபோது அவரைக் கைது செய்யவும் முயற்சி செய்யப்பட்டது.
ஆனால் கோட்டைக்குள் நுழைந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்று சலீமுக்கு ஏற்கெனவே செய்தி கிடைத்துவிட்டது. அவர் படகில் தனது மாளிகைக்கு திரும்பிச் சென்றுவிட்டார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சலீமின் பக்கம் திரும்பிய ஆதரவு
சலீம் தனது எதிர்காலம் குறித்த முடிவுக்காகத் தனது மாளிகையில் காத்திருந்தார். மாலைக்குள் சூழல் சலீமுக்கு சாதகமாக மாறியது. முதலில் ஷேக் ஃபரித், சயீத் கான் பராஹா ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தனர்.
அதன்பிறகு அக்பரின் அரசவையினர் அவருக்கு ஆதரவாகக் குவிந்தனர். அரியணை ஏறிய பிறகு குஸ்ரோவோ, சலீமை ஆதரிக்காதவர்களோ தண்டிக்கப்படமாட்டார்கள் என்று சலீமிடம் சயீத் கான் வாக்குறுதி பெற்றார்.
அவரை எதிர்த்த மிர்ஸா அஜீஸ் கோக்காவும் மாலையில் அவரை வாழ்த்த வந்தார். ஆனால் சலீம் அவரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளவில்லை. குஸ்ரோவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மான் சிங் உறுதியாக நம்பியபோது அவரே குஸ்ரோவை சலீமிடம் அழைத்து வந்தார்.
அக்பரின் மரணம்
மான் சிங்கும் அஜீஸும் குஸ்ரோவுக்கு முடிசூட முன்முயற்சி எடுத்ததாக எந்தக் குறிப்பும் இல்லை.
மூனிஸ் ஃபரூக்கி தனது ‘தி பிரின்ஸ் ஆஃப் தி முகல் எம்பயர்’ புத்தகத்தில், “அக்பர் தனது ஆட்சியின் இறுதி வரை முகலாய சிம்மாசனத்தின் மீதான சலீமின் உரிமைகோரலை எப்படியாவது முறியடிக்க முயன்றார்,” என்று எழுதியுள்ளார்.
சலீம் அக்பரின் படுக்கையறைக்குள் நுழைந்தபோது அவருக்கு மூச்சு இருந்தது. தந்தை சைகை செய்ததைத் தொடர்ந்து சலீம், அக்பரின் கிரீடம் மற்றும் ஆடைகளை அணிந்து, அக்பரின் வாளைத் தனது இடுப்பில் தொங்கவிட்டார்.
இந்த வாள் முகலாய பேரரசை நிறுவியரும், அக்பருடைய தாத்தாவுமான பாபருடையது. தான் இறப்பதற்குச் சில காலத்திற்கு முன்பு அவர் இதைத் தனது மகன் ஹுமாயூனுக்கு கொடுத்தார்.
சலீம் தனது தந்தையின் காலில் தலை வைத்து வணங்கினார்.
“முகலாய ஆட்சியின் சின்னங்களை அணிந்திருந்த சலீமை அக்பர் தனது கண்களால் பார்த்தார். புதிய ஆட்சியாளரின் முன் தனது அரசவையினர் தலை குனிந்து வணங்குவதையும் அவர் கண்டார். அதன் பிறகு அவருடைய கண்கள் நிரந்தரமாக மூடின. அந்த நாள் 1605 அக்டோபர் 27,” என்று அசத் பேக் எழுதுகிறார்.
அப்போது அக்பருக்கு வயது 63. அவர் 49 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தார்.
“அக்பர் சலீமுக்கு அதிகாரத்தின் சின்னங்களாக கிரீடம், உடை, வாள் ஆகியவற்றைக் கொடுத்தது மட்டுமின்றி, தஸ்பீஹ் (தொழுகை மணிமாலை) மற்றும் தாயத்து போன்ற சில தனிப்பட்ட பொருட்களையும் அவரிடம் ஒப்படைத்தார்,” என்று பார்வதி ஷர்மா அக்பரின் வாழ்க்கை வரலாறான ‘அக்பர் ஆஃப் ஹிந்துஸ்தான்’, என்ற நூலில் எழுதியுள்ளார்.
தந்தை இறந்த ஒரு வாரத்திற்குப் பிறகு 36 வயதான சலீம் அரியணையில் அமர்ந்தார். அவருடைய பெயர் இனி சலீமோ அல்லது அக்பர் அவரைச் செல்லமாக அழைத்த ‘ஷேக் பாபா’வோ அல்ல.
இந்தியாவின் சிம்மாசனத்தில் அமர்ந்த இவரின் புதிய பெயர் நூருதீன் முகமது ஜஹாங்கீர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு