கீழ்பாக்கம் மனநல காப்பகம் தனியார் வசம் செல்வதாக எழுந்த சர்ச்சை – அரசின் பதில் என்ன?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ், சென்னை
சென்னையில் 230 ஆண்டுகள் பழமையான கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை மேம்படுத்த தனி அரசு நிறுவனம் தொடங்குவது தொடர்பாக, அரசு செயலர் சுப்ரியா சாஹூ எழுதியுள்ள கடிதத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
அரசு மனநல காப்பகங்களை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவே இவ்வாறு செயல்படுவதாக, மருத்துவ சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.
ஆனால், கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை தன்னார்வலர்களுக்கும் தனியாருக்கும் தாரை வார்க்கும் எண்ணம் இல்லை என்கிறார், அமைச்சர் மா.சுப்ரமணியன்.
சுமார் 230 ஆண்டுகள் பழமையான கீழ்பாக்கம் மனநல மையத்தில் என்ன பிரச்னை? இதற்கென தனியாக அரசு நிறுவனத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளதா?
கடிதத்தில் என்ன உள்ளது?
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணிக்கு கடந்த அக்டோபர் 23ஆம் தேதியன்று கடிதம் ஒன்றை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலர் சுப்ரியா சாஹூ எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ‘மனநல காப்பகத்தின் மேம்பாட்டுக்கு தனியாக அரசு நிறுவனம் ஒன்றை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கான காரணங்களையும் சுப்ரியா சாஹூ பட்டியலிட்டுள்ளார். அதில், “மனநல காப்பகத்தின் நிர்வாகக் கட்டமைப்பு, நிதி ஒதுக்கீடு, பணியாளர்கள் நிலை, காலிப் பணியிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது 360 டிகிரி கோணத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியம் எனத் தெரிய வந்துள்ளது.”
ஆனால், “அவற்றை முன்னெடுக்கும் திறன் தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புக்கு இல்லை. உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள், கார்ப்பரேட் பங்களிப்புகள் மூலம் நிதியைத் திரட்டும் வாய்ப்புகள் மனநல காப்பகத்திற்கு உள்ளன,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதை உறுதிசெய்யும் வகையில் நிறுவன சட்டப் பிரிவு 8ன்கீழ் பதிவு செய்யப்பட்ட அரசு நிறுவனங்களைப் போன்று பிரத்யேக அரசு நிறுவனம் அமைப்பது அவசியம் எனவும் இதன் வாயிலாக காப்பகத்தின் மேம்பாட்டிற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் சுப்ரியா சாஹூ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான முன்மொழிவை மருத்துவ கல்வி இயக்குநர் அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திட்டத்திற்கு மருத்துவக் கல்வியின் கூடுதல் இயக்குநர் சாந்தாராமன் தொடர்பு அதிகாரியாகச் (Nodel officer) செயல்பட உள்ளதாகவும் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.
மருத்துவ சங்கங்கள் எதிர்ப்பு
இந்தக் கடிதத்திற்கு மருத்துவ சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “அரசு சார்பில் பிரத்யேக நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் கூறுகிறார். ஆனால், அப்படியொரு நிறுவனம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை” என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “மருத்துவக் கல்வியின்கீழ் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலே போதுமானது” என்றார்.
“வெளியில் இருந்து நன்கொடை பெற உள்ளதாக அரசு செயலர் கூறுகிறார். அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் தனித்தனி கணக்குகள் உள்ளன. நிதி உதவி செய்ய விரும்புகிறவர்கள் அந்த எண்ணுக்குப் பணம் அனுப்பலாம்.
பெரு நிறுவனங்கள் தங்களின் சி.எஸ்.ஆர் நிதியில் உணவு, உடை, கட்டடப் பராமரிப்பு ஆகியவற்றுக்குச் செலவு செய்வது வழக்கம். அந்த நிதியை அரசு முறையாகப் பராமரித்தால் போதும். இதற்கெனத் தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினாலும் இதே வேலைகள்தான் நடக்கும்” என்கிறார்.
டாஸ்மாக் நிறுவனத்தைப் போல அனைத்து மனநல மருத்துவமனைகளையும் பிரத்யேக நிறுவனத்தின்கீழ் கொண்டு வருவதுதான் அரசின் நோக்கம் எனக் கூறும் ரவீந்திரநாத், இதனால் அரசு மனநல காப்பகத்தின் நோக்கம் பயனற்றதாகிவிடும் என்று எச்சரிக்கிறார்.
இது தொடக்கப்புள்ளியாக மாறும் என கவலை
“கீழ்பாக்கம் மனநல காப்பகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து, போதிய ஊழியர்களையும் மருத்துவர்களையும் நியமிக்கும் வேலைகளைச் செய்யாமல் தனி கம்பெனியாக மாற்றுவதை ஏற்க முடியாது” என்கிறார் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கத்தின் செயலாளர் காசி.
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மனநலம் சார்ந்த சிகிச்சைக்காக மக்கள் இங்கு வருகின்றனர். பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் நிமான்ஸ் நிறுவனத்திற்கு இணையான சேவையை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அரசு மருத்துவமனையை கம்பெனியாக மாற்றியதாக முன்னுதாரணம் இல்லை,” எனத் தெரிவித்தார்.
மேலும், சுகாதாரத்துறை செயலரின் கடிதம் கடும் அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளதாகக் கூறுகிறார் மருத்துவர் காசி.
மேலும், “மனநல மருத்துவமனையை கம்பெனியாக மாற்றுவது என்பது பிற்காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் இதேபோன்று மாற்றி அதை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான தொடக்கப்புள்ளியாக இதைக் கருத வேண்டியுள்ளது” என்றார்.
இந்தக் கடிதத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் மருத்துவர் காசி வலியுறுத்துகிறார்.
தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?
அரசு செயலரின் கடிதத்திற்கு எதிர்ப்பு வலுக்கவே, “தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிகள் எதுவும் அரசுக்கு இல்லை” என மக்கள் நல்வழ்வுத்துறை செயலர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
திங்கள் (அக்டோபர் 28) அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “மருத்துமனையின் கட்டமைப்பை மேம்படுத்தும் நல்ல எண்ணத்தில் அரசு செயலர் இதை முன்னெடுத்து வருகிறார். ஆனால், தனியார் மற்றும் தன்னார்வலர்களிடம் மனநல காப்பகத்தை ஒப்படைக்கும் எண்ணம் இல்லை” என்றார்.
அதோடு, கீழ்பாக்கம் மனநல காப்பகத்திற்கு தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் மேற்கொண்டு வரும் திட்டங்களையும் அமைச்சர் மா.சுப்ரமணியன் பட்டியலிட்டார்.
“தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் 2.30 கோடி ரூபாய் செலவில் இடைநிலை பராமரிப்பு மையம் ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதோடு பரந்துபட்ட மனநல சேவைகளை வழங்குவதற்கு 40 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணியையும் தொடங்கி வைத்துள்ளார்” என்றார்.
பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் நிமான்ஸ் மருத்துவமனைக்கு இணையாகக் கட்டமைப்புகளை மேம்படுத்த முதலமைச்சர் நிதி ஆதாரம் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் குறிப்பிட்டார்.
கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “தனியாரிடம் இருந்து சி.எஸ்.ஆர் நிதிப் பங்களிப்பு வந்தால் அதை ஏற்று மருத்துவமனையை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படும்” என்றார்.
இதுகுறித்து, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹூவிடம் விளக்கம் பெற பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, அவரிடம் இருந்து பதிலைப் பெற முடியவில்லை.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சங்குமணியிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர், கடிதம் தொடர்பாக அடுத்தகட்ட முயற்சிகள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மாலையப்பனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை உருவான கதை
ஆசியாவில் மிகப் பழமையான, மிகப் பரந்துபட்ட மருத்துவமனையாக கீழ்பாக்கம் மனநல காப்பகம் அமைந்துள்ளது.
கடந்த 1794ஆம் ஆண்டில் மருத்துவர் வாலன்டைன் கனோலி (Valentine Connolly) என்பவர் கிழக்கிந்திய கம்பெனியின் மானியம் (Grant) மூலம் இதைத் தொடங்கினார். தொடக்க காலங்களில் ஆங்கிலேயே அதிகாரிகளும் போர் வீரர்களும் இங்கு சேர்க்கப்பட்டனர்.
அப்போது மனநல காப்பகத்தை ‘mental asylum’ (மனநலம் பாதித்தோர் விடுதி) என அழைத்துள்ளனர். பிறகு 1913ஆம் ஆண்டில் மனநோய் மருத்துவமனைகளை நிர்வகிக்கும் வகையில் ‘மனநல குறைபாடு சட்டம்’ (Mental Deficiency Act 1913) கொண்டு வரப்பட்டது.
உள்துறையின்கீழ் வரும் சிறைத்துறையின் கட்டுப்பாட்டிலேயே கீழ்பாக்கம் மனநல காப்பகம் இருந்துள்ளது. பிறகு, 1920ஆம் ஆண்டில் அரசு மனநல மருத்துவமனையாக மாறிய பின்னரே சுகாதாரத்துறையின் வசம் வந்துள்ளது.
கடந்த 1947 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை உள்நோயாளிகள் பிரிவு மட்டுமே இயங்கி வந்துள்ளது. அதன்பிறகு புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.
அங்கு தற்போது, வெளிப்புற நோயாளிகள், குழந்தைகள் மற்றும் வயது வந்தோருக்கான மனநல சிகிச்சை, போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையம், தீவிர மனநலம் பாதித்தோர் வார்டுகள், நீண்டகால மனநல சிகிச்சை, மனமகிழ் தெரபி, மனநலம் பாதித்தோர் இல்லம், சிறைவாசிகளுக்கான மனநல மையம் எனப் பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன.
தற்போதைய நிலவரப்படி, கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்நோயாளிகளாக சுமார் 750 பேர் உள்ளனர். தினமும் 400 முதல் 500 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்வதாக மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இங்கு பேராசிரியர் பணியில் 5 பேரும் உதவிப் பேராசிரியர்களாக 19 பேரும் பணிபுரிகின்றனர். இவர்களைத் தவிர பட்ட மேற்படிப்பு மாணவர்கள் 54 பேரும் எம்.ஃபில் கிளினிக்கல் சைக்காலஜி பிரிவில் 20 மாணவர்களும் படித்து வருகின்றனர்.
இப்போதுள்ள சூழலில், மனநல காப்பகத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அங்கு பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் 43 மனநல மருத்துவமனைகள் உள்ளன. அதில், மாநில அரசுகள் நடத்தும் மனநல மருத்துவமனைகளில் முதல் மூன்று இடங்களுக்குள் கீழ்பாக்கம் மனநல காப்பகம் இடம்பெற்றுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு