பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப் பதிவு இன்று ஆரம்பமாகிறது. நவம்பர் முதலாம் திகதி மற்றும் 4 ஆம் திகதிகளிலும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும்.
இன்று மற்றும் நவம்பர் 4ஆம் திகதிகளில் மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படை, விசேட பொலிஸ் பிரிவுகள் மற்றும் விசேட பாதுகாப்பு பிரிவுகளுக்கான தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும்.
முப்படைகள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் அடுத்த மாதம் முதலாம் மற்றும் 4ஆம் திகதிகளில் வழங்கப்படும்.
குறித்த தினங்களில் தபால்மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் நவம்பர் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் தாங்கள் பணிபுரியும் இடத்தில் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால் மூலம் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை முன்வைத்து அடையாளத்தை உறுதிப்படுத்துவது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டு, தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை அல்லது ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தகவல் உறுதிப்படுத்தல் கடிதம் என்பன பயன்படுத்தப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுளளது.