ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (29) பயணிகள் பஸ் ஒன்று, மேம்பாலத்தின் சுவருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததுடன், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராஜஸ்தானின் சலாசரில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பஸ், சிகார் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மங்கர் என்ற இடத்தை அடைந்ததும், அங்குள்ள மேம்பாலத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.
விபத்தில் காயமடைந்தவர்கள் லக்ஷ்மங்கர் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் ராஜஸ்தான் பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.