தங்கம் வாங்கும் 6 வழிமுறைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பழங்காலம் தொட்டே இந்தியாவில் தங்க நகைகள் வாங்கும் வழக்கம் உள்ளது

தீபாவளி பண்டிகை சமயத்தில் பட்டாசு, இனிப்புகள், பலகாரம் போன்றவற்றை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அதே போன்று பலர் தங்கம் வாங்குவதிலும் கவனம் செலுத்துவர்.

தங்கத்தின் மீதான இந்தியர்களின் காதல் உலகம் அறிந்த ஒன்று. உலகின் மொத்த தங்க இருப்பில் 11 சதவீதம் இந்தியா வசமுள்ளது.

ஏதோ ஒரு துறையில் வேலையில் இருந்தாலும் சரி, வியாபாரம் செய்பவராக இருந்தாலும் சரி, நமது வருமானத்தில் சிறிது பணத்தையேனும் சேமிக்க வேண்டும். அப்படி சேமித்த பணத்தை முதலீடு செய்ய பயன்படுத்துகிறோம். இந்தியாவில் பெரும்பாலும் சேமிக்கும் பணத்தை தங்கம் வாங்குவதில் முதலீடு செய்கின்றனர்.

பழங்காலம் தொட்டே இந்தியாவில் தங்க நகைகள் வாங்கும் வழக்கம் உள்ளது. இங்கு தங்கத்தின் மீதான முதலீடு வீணாகாது என்று நம்பப்படுகிறது.

தங்கம் வாங்கும் 6 வழிமுறைகள்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தங்க ஆபரணங்களை அணிந்து அழகு பார்க்கும் அதே சமயம் அவை நமக்கு கஷ்ட காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பண்டிகை, குடும்ப நிகழ்வுகள், திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு பல குடும்பங்கள் தங்கம் வாங்குவது வழக்கம்.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு பல வழிகள் உள்ளன. தங்கமாக வாங்கி வைப்பது பாரம்பரிய முறை என்றாலும் தற்போது பல வழிகள் வந்துவிட்டது.

தங்கத்தில் முதலீடு செய்யும் பிற வழிகள் என்ன? அதிலிருந்து எப்படி பணத்தைத் திரும்பப் பெறுவது என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்..

1. நகைகள்

தங்கம் வாங்கும் 6 வழிமுறைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மக்களுக்கு நகைகளுடன் ஒரு உணர்வுபூர்வமான உறவு உருவாக்கப்படுகிறது.

தங்கம் வாங்குவதில் மிகவும் பிரபலமான வழி நகைகளாக வாங்குவதுதான். தங்க நகைகளை வாங்குவதால் சில நன்மைகள் மற்றும் சில தீமைகளும் உள்ளன.

நகைகளாக வாங்கி வைப்பதில் இருக்கும் முதல் பயன் நீங்கள் அதைப் பயன்படுத்தலாம். எனவே நம் முதலீட்டை ஒரு அலமாரியில் அல்லது லாக்கரில் வைக்க முடியாது.

நகைகளை வாங்குவதில் உள்ள முக்கிய பிரச்னை, தங்கத்தை நகையாக வாங்கும் போது 10 சதவீதத்துக்கும் அதிகமாக செய்கூலி, சேதாரம் செலுத்த வேண்டியிருக்கும்.

இது தவிர நகை வாங்குவதற்கு 3% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

ஆனால், மக்களுக்கு நகைகளுடன் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உருவாகிறது. பொருளாதார ரீதியாகக் கடினமான சூழ்நிலை ஏற்படும் போது பலரின் முதல் தேர்வு நகைகளை விற்பதும், அடகு வைப்பதும் தான்.

எனவே இந்த சூழலை கருத்தில் கொண்டு, மக்கள் நகைகளை விற்க வருகையில் நகைக்கடைக்காரர்கள் குறிப்பிட்ட சதவீதத்தை கழிக்கின்றனர்.

2. தங்கம் (Physical Gold)

தங்கத்தில் முதலீடு செய்வதற்கான மற்றொரு வழி தங்கக் கட்டிகள், நாணயங்கள் அல்லது பிஸ்கட் வடிவில் வாங்கி வைப்பது. இதற்கு செய்கூலி, சேதாரம் செலுத்த வேண்டியதில்லை. தங்கத்தின் தூய்மைக்கான உத்தரவாதத்துடன் கிடைக்கிறது.

ஒவ்வொரு தங்க நாணயமும் பிஐஎஸ் தர குறியீட்டை (BIS) கொண்டுள்ளது. இந்த நாணயங்கள் நகைக்கடைகள், வங்கிகள் மற்றும் இ-காமர்ஸ் இணையதளங்களில் கிடைக்கும். ஆனால் இதற்கும் 3% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

3. டிஜிட்டல் தங்கம்

தங்கத்தை டிஜிட்டல் வடிவிலும் வாங்கலாம். இதில் நீங்கள் ஆன்லைன் தளத்திலிருந்தும் தங்கத்தை வாங்க வேண்டும். டிஜிட்டல் தங்கத்தை பல கட்டண செயலிகளில் இருந்தும் வாங்க முடியும்.

டிஜிட்டல் தங்கம் வாங்குவதில் இருக்கும் நல்ல விஷயம் என்னவென்றால், 50 ரூபாய், 100 ரூபாய் என்ற சிறிய தொகையில் இருந்தே நாம் தங்கம் வாங்க முடியும். நாம் செலுத்தும் பணத்துக்கு ஏற்ற மதிப்பில் தங்கம் நம் டிஜிட்டல் கணக்கில் சேரும்.

டிஜிட்டல் முறையில் தங்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கவும் விற்கவும் முடியும். இதற்கு 3% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

டிஜிட்டல் தங்கமாக இருப்பதால் அதை பாதுகாத்து வைத்து கொள்ள வேண்டும் என்ற பயம் தேவையில்லை. சில நகைக்கடைக்காரர்கள் நீங்கள் வாங்கிய டிஜிட்டல் தங்கத்தை கடையில் தங்கமாக மாற்றிக் கொள்ளும் விருப்பத்தையும் வழங்குகிறார்கள்.

4. தங்கப் பத்திரத் திட்டம்

தங்க பத்திரம் என்பது தங்கத்தில் முதலீடு செய்ய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட திட்டம். இதில், நாம் வாங்கும் தங்கப் பத்திரத்திற்கு அரசு உத்தரவாதம் அளிக்கப்படுவதால் பணத்தை இழக்கும் அபாயம் இல்லை.

தங்கத்தின் விலை அதிகரிக்கும் போது, ​​நிலையான வட்டியுடன் லாபம் கிடைக்கும்.

ஒவ்வொரு காலகட்டத்திற்கு பிறகும் இத்தகைய தங்கப் பத்திரங்கள் அரசாங்கத்தால் விற்பனைக்குக் கொண்டுவரப்படும். இரண்டாம் நிலை சந்தையில் (secondary market) இருந்தும் தங்கப் பத்திரங்களை வாங்கி கொள்ளலாம்.

தங்கம் வாங்கும் 6 வழிமுறைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தங்கத்தை டிஜிட்டல் வடிவிலும் வாங்கலாம்.

5. தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதி (ETF)

கோல்ட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் (தங்க ETF) என்பது ஒரு திறந்தநிலை பரஸ்பர நிதித் திட்டமாகும். இது 99.5% தூய்மையான தங்க கட்டியில் முதலீடு செய்யும் முறையை உள்ளடக்கியது.

இதன் மூலம் பங்குகளைப் போல் நீங்கள் தங்கத்தை வாங்கவும், விற்கவும் செய்யலாம். ஏனெனில், ஒரு நிறுவனத்தின் பங்குகளைப் போலவே, இந்த தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதியும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் இந்த தங்க ETFகளை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும்.

இந்த வகை முதலீட்டின் நன்மை என்னவென்றால், தங்கம் திருட்டு போய்விடுமோ என்ற பயம் தேவையில்லை.

6. தங்க சேமிப்புத் திட்டம்

பல நகைக் கடைகளில் தங்க சேமிப்புத் திட்டம் வழங்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை அவர்களிடம் செலுத்த வேண்டும்.

உங்கள் சேமிப்புத் திட்டத்தின் முடிவில், நகைக்கடைக்காரர் ஒரு மாத தவணையை அல்லது போனஸை சேர்த்து, இந்த மொத்தத் தொகையைப் பயன்படுத்தி நீங்கள் தங்கத்தை வாங்கலாம் என்னும் சலுகையை கொடுப்பார்கள். ஒவ்வொரு மாதமும் கொஞ்சம்கொஞ்சமாக சேமித்து இறுதியில் நகையாக வாங்குவதால் பலர் இத்திட்டத்தில் முதலீடு செய்கின்றனர்.

இவை தங்கத்தில் முதலீடு செய்வதற்கான வழிகள். ஆனால் எந்த முதலீடும் ஆபத்தை உள்ளடக்கியது தான். எனவே, நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்றி கவனமாகச் சிந்தித்த பின்னரே முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.