தீபாவளி: தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க முடியாதது ஏன்?

தீபாவளி 2024 தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம்

பட மூலாதாரம், Getty Images

தீபாவளியை முன்னிட்டு அரசு என்னதான் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்கினாலும், சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலை செய்பவர்கள், தனியார் பேருந்துகளில் அதிகக் கட்டணம் செலுத்திச் சொந்த ஊர்களுக்கு திரும்பும் நிலை தொடரத்தான் செய்கிறது.

தனியார் பேருந்து முன்பதிவு செயலிகளிலும் கட்டணம் மிக அதிகமாகவே இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அக்டோபர் 28 துவங்கி 3 நாட்களுக்கு, அதாவது அக்டோபர் 30 வரை சென்னையின் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து தீபாவளிக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 300 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இந்த மூன்று நாட்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அரசுப் பேருந்துக் கட்டணம் எவ்வளவு?

தீபாவளி 2024 தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை திரும்பும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு நவம்பர் 2, 3 தேதிகளில் 100 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

தனியார் பேருந்து முன்பதிவுச் செயலிகளில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணங்களையும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் வசூலிக்கப்படும் கட்டணங்களையும் பார்த்தது பிபிசி தமிழ்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் சென்னையில் இருந்து திருச்சி செல்ல ஒரு இருக்கைக்கான கட்டணம் ரூ.401 ஆகும். ஒரு படுக்கைக்கான கட்டணம் ரூ.612 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று சென்னையில் இருந்து மதுரைக்கு குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படும் பேருந்தில் ஒரு படுக்கைக்கான கட்டணம் ரூ.869 என்றும், ஓர் இருக்கைக்கான கட்டணம் ரூ.565 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதியுடன் சென்னையில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் பேருந்தில் ஓர் இருக்கைக்கான கட்டணம் ரூ. 630 ஆகும். ஆனால் பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் முன்பதிவு முழுமையடைந்து ஓரிரு இருக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.

தீபாவளி 2024 தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம்

பட மூலாதாரம், https://www.tnstc.in/

படக்குறிப்பு, தீபாவளிக்கு முந்தைய தினம் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல அரசால் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் டிக்கெட் விலை

தனியார் பேருந்துக் கட்டணம் எவ்வளவு?

அதுவே, ஒரு தனியார் பஸ் முன்பதிவுக் செயலியில் தீபாவளிக்கு முந்தைய தினம், அதாவது அக்டோபர் 30-ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கான கட்டணம் ரூ.1,500-இல் இருந்து துவங்குகிறது.

கீழ் தளத்தில் உள்ள ஒரு படுக்கைக்கான கட்டணம் ரூ.2,019 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில் ஒரு படுக்கைக்கான கட்டணம் ரூ.1,719-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருக்கைகளைப் பொருத்தமட்டில் ஒரு இருக்கைக்கு ரூ.1,199 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவைக்குச் செல்லும் பேருந்து ஒன்றில் கீழ் தள படுக்கைக்கான கட்டணம் ரூ.3,148 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு இருக்கைக்கான கட்டணம் ரூ.1,530-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பேருந்தில் ஒரு படுக்கைக்கான கட்டணம் ரூ.3,399 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணங்கள் அனைத்தும், தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் கீழ், தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பட்டியலில் இருப்பதைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கிறது.

உதாரணத்திற்கு, கோவை செல்லும் ஏ.சி ஸ்லீப்பர் பேருந்துகளில் கட்டணமாக ரூ.2,460 என்று அந்த பட்டியலில் உள்ளது. ப்ரீமியம் ஸ்லீப்பர் பேருந்துகளுக்கான கட்டணமாக ரூ.2,880 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இதுபோன்றச் செயலிகளில் ஏ.சி ஸ்லீப்பர் பேருந்துக் கட்டணம் ரூ.3,000 ரூபாயை நெருங்கியுள்ளது.

‘சாமானியர்களால் ஈடுகட்ட இயலாத விலை’

சேலத்தைச் சேர்ந்தவர் 27 வயதான கோகுல கிருஷ்ணன். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பேருந்துக் கட்டண உயர்வால் இந்த முறை சொந்த ஊர் செல்வது சிரமம் என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“பொதுவாகவே செமி ஸ்லீப்பர் பேருந்தில் பயணிப்பேன். சொந்த ஊர் சென்று திரும்ப ரூ.1,000 இருந்தால் சரியாக இருக்கும். ஆனால் தீபாவளிக்கு இன்னும் போனஸ் ஏதும் அறிவிக்கவில்லை. அதனால் தீபாவளிக்கு முதல் நாள் வரை வேலை பார்க்கலாம் என்று நினைத்தேன். அதனால் ரயில் டிக்கெட்டுகள் எதுவும் முன்பதிவு செய்யவில்லை,” என்றார்.

“தற்போது செமி ஸ்லீப்பரில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.2,000-த்தை நெருங்கிறது. ஊர் சென்று திரும்ப ரூ.4000 வரை ஆகிவிடும். இது என்னுடைய மாத சம்பளத்தில் 10%. என்னால் இந்த தீபாவளிக்கு ஊர் சென்று திரும்ப இயலுமா என்று தெரியவில்லை. பேருந்து நிலையத்திற்கு சென்று அரசுப் பேருந்தில் இடம் கிடைத்தால் அதில் ஏறிச் செல்ல வேண்டியதுதான்,” என்று கூறுகிறார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப்படிப்பை மேற்கொண்டு வரும் திருநாவுக்கரசு, பொருளாதார ரீதியாக இது சாதாரண மனிதர்களுக்கு எத்தகைய சிக்கலை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

“சென்னையில் ரூ.60,000 சம்பாதித்தாலும் கூட அதற்கு ஏற்ற செலவீனங்கள் அவர்களுக்கு உண்டு. கடன், மாத பட்ஜெட், தீபாவளிக்காக எடுக்கப்படும் புத்தாடைகள் போன்றவையும் இதில் அடங்கும்.  இந்தச் சூழலில் ரூ.4,000-ரூ.5,000 கொடுத்து சொந்த ஊர் சென்று திரும்புவது என்பது கூடுதல் சுமை தான்,” என்கிறார்.

தீபாவளி 2024 தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாதாரண நாட்களில் விலை குறைவாகவும், பண்டிகைக் காலங்களில் விலை கூடுதலாகவும் இருப்பதற்கான காரணங்கள் என்ன? இதனை அரசால் ஏன் ஒழுங்குமுறைப்படுத்தவில்லை?

கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

கூடுதல் விலை நிர்ணயம் குறித்து கேட்டபோது, தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முகமது அஃப்சல், கூடுதல் விலை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்று கூறினார்.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட விலையையே நாங்கள் இப்போதும் வசூலித்து வருகின்றோம். போட்டி காரணமாக நாங்கள் பல சமயம் குறைவான கட்டணத்திற்கே பேருந்துகளை இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது,” என்று கூறினார்.

மேலும், “சுங்கக் கட்டணம் மற்றும் வரிகள் போன்றவை உயர்ந்திருக்கின்றன. ஆனால் அதற்கேற்ற வகையில் எங்களால் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த இயலவில்லை,” என்றார்.

செயலிகளில் தன்னிச்சையாக விலையை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றனவா என்று கேட்டபோது, “அவர்களால் அப்படிச் செய்ய இயலாது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வாயிலாக நிர்ணயிக்கும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும்,” என்று கூறினார் அஃப்சல்.

தனியார் பேருந்து கட்டணம் உயர்வாக இருப்பது ஏன்?

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இவ்வாறு தெரிவித்த போதிலும் பல்வேறு தனியார் செயலிகளில் விலை உயர்வாகவே இருக்கிறது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மாறன், “எங்கள் சங்கத்தின் அநேக உறுப்பினர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலைப்படியலையே பின்பற்றுகின்றனர். ஆனால் சில நிறுவனங்கள் இது போன்ற சமயங்களில் கட்டணங்களை உயர்த்தும் போக்கும் நடைபெறுகிறது. ஆனால் அதனைக் குறைக்கும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்,” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசால் கட்டுப்படுத்த முடியாதது ஏன்?

ஆனால் தனியார் பேருந்துச் செயலிகளில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணம் சாமானியர்களுக்கு ஏற்றதாக இல்லை. சில செயலிகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவது காண முடிந்தது.

இது தொடர்பாகத் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவங்கரிடம் பிபிசி தமிழ் பேசியது.

“சென்னையில் இருந்து திருச்சி சென்ற பேருந்தில் ரூ.4,000 வரை கட்டணம் வசூலிப்பதாக எங்களிடம் புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து நாங்கள் அந்தச் செயலிக்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மேற்கொண்டு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது தமிழக அரசு,” என்று கூறினார்.

“களத்தில் ஆய்வு செய்யும் அதிகாரிகள் மூலமாக உடனடியாகக் கூடுதலாகச் செலுத்தப்பட்டக் கட்டணங்களை வாங்கி பொதுமக்களிடம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதே நிகழ்வு தொடர்கதையாகும் பட்சத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்ட அபராதம் விதிக்கப்படும்,” என்று சிவசங்கர் கூறினார்.

அரசால் இந்த விலையை கட்டுப்படுத்த இயலாத சூழல் குறித்து கேள்வி எழுப்பிய போது, “அரசுப் பேருந்துகள் மற்றும் ஸ்டேஜ் கேரியேஜ் அனுமதியைப் பெற்று இயங்கும் வாகனங்களில் மட்டுமே மாநில அரசுகளால் விலையை நிர்ணயம் செய்ய இயலும். ஆனால் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் இந்தியா முழுவதும் பயணிக்கும் மக்களின் போக்குவரத்தை அரசால் மட்டுமே நிர்வகிப்பது கடினமான செயல்,” என்றார்.

“இந்தச் சூழலில் தான் டூரிஸ்ட் பெர்ட்மிட்டுகளில் இயங்கும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இது தான் தொடர் நிகழ்வாக இருக்கிறது,” என்றார்.

“அவர்கள் நிர்ணயிக்கும் விலை குறித்துத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில் சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர்கள் நிர்ணயித்த கட்டணத்தில் இருந்து 20% விலைக்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோன்ற புகார்கள் அதிகமாக எழவில்லை. எழும் போது அங்கேயே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

தீபாவளி 2024 தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம்

பட மூலாதாரம், @sivasankar1ss/x

படக்குறிப்பு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுடன் நேரில் சென்று ஆய்வு செய்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்

மாற்றங்கள் சாத்தியமா?

இதில் இரண்டு தரப்பு சூழலையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும், என்று கூறுகிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன்.

“ஒன்று பொதுமக்களுடையது. பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர் செல்ல கூடாது என்று கூற முடியாது. அதற்காக பணம் செலவழிக்க வேண்டாம் என்றும் சொல்ல இயலாது.

“மற்றொரு பக்கம் பேருந்து இயக்குபவர்கள் தரப்பு. அனைத்து நாட்களிலும் இந்தக் கட்டணத்திற்கு அவர்கள் பேருந்துகளை இயக்குவது இல்லை. தீபாவளி ‘சீசனுக்கு’ பேருந்துகளில் கூட்டம் இருப்பது போல் இதர நாட்களில் இருப்பதில்லை. பல நாட்கள் குறைவான பயணிகளைக் கொண்டே இயக்கப்படுவதால் ஏற்படும் நஷ்டத்தை இந்தக் காலத்தில் அவர்கள் ஈடுசெய்ய முயல்கின்றனர். இந்த இரண்டு தரப்பிற்கும் ஒரு சமநிலையை அரசு உருவாக்க வேண்டும்,” என்கிறார்.

“மக்களால் ஏற்றுக்கொள்ள இயலும்படியான ஒரு கட்டணத்தை அவர்களை நிர்ணயிக்க வைக்க அரசு முன்வர வேண்டும். அரசும் தனியார் பேருந்துகளுக்கு இணையாக ஸ்லீப்பர், செமி ஸ்லீப்பர், ஏ.சி பேருந்துகள், போன்றவற்றை அதிக எண்ணிக்கையில் இயக்கும் போது மக்களும் சிரமமின்றி பயணிப்பார்கள்,” என்கிறார் நாகப்பன்.

இந்தத் தீபாவளிக்கு சென்னையிலிருந்து எத்தனை பேருந்துகள்?

அரசால் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் தீபாவளியை முன்னிட்டு பேருந்து நிலையங்களில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை அக்டோபர் 27-ஆம் தேதி இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுடன் நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

சென்னையில் உள்ள கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 3,408 ஆகும். தீபாவளிக்காக 4,250 பேருந்துகளும், 2,000 ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“தனியார் பேருந்துகள் அரசு கட்டுப்பாட்டில் தான் இயக்கப்பட உள்ளன. அவர்கள் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. அதற்கான டிக்கெட்டுகளை அரசு தான் வழங்க உள்ளது. அரசுப் பேருந்து நடத்துநர் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார். எனவே கட்டுப்பாடாக இயக்கப்படும்,” என்றார்.

“வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தைத் திருப்பி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இணை மற்றும் துணைப் போக்குவரத்து ஆணையர்கள் மற்றும் இதர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அனைத்துப் பேருந்துகளிலும் ஆய்வுகள் மேற்கொள்வார்கள்,” என்றார்.

“தனியார் பேருந்துச் செயலிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளோம். கூடுதலாக விலை நிர்ணயிக்கும் பேருந்துகள் நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும்,” என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் 1800 425 6151, 044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என்று தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு